Home பெண்ணியம்வரலாற்றில்  மறைக்கப்பட்ட பெண் போராளி  – மதுமிதா                   

தாய்வழிச் சமூகமாக இருந்த பெண்ணின் நிலை மாறி எவ்விதம் அவளிடமிருந்து உரிமை பறிக்கப்பட்டது, தந்தை வழி சமூகமாகி பண்டமாக அவள் பார்க்கப்பட்ட விதம் குறித்து ராகுல சாங்கிருத்தியாயன், கிமு 6000-த்தில் ஆரம்பித்து விரிவாகச் சொல்லப்பட்டு கிபி 1942 ஆம் ஆண்டில் முடியும் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலில் எழுதியுள்ளார்.

சமஸ்கிருத அறிஞர், பண்டித ரமாபாய் எழுதிய நூல், ‘High Caste Hindu Woman.’ கைம்பெண்களின் மறுவாழ்வுக்கான குரலாக அவரது குரல் ஒலிக்கிறது. மனு நீதி சாஸ்திரம் பெண்களுக்கு எதிராக இருப்பதை குறிப்பிட்டும், கைம்பெண்களுக்கு நிகழும் அநீதி குறித்தும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே, வலிமையாக எழுதி அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். கல்வியின் முக்கியத்துவம். கல்வியே பெண் விடுதலையை சாத்தியப்படுத்தும் அதுவும் பெண்களுக்கு மறுக்கப்படுவதை வேதனையுடன் இயம்புகிறார்.

இந் நூலினை, முனைவர் ஜா. கிறிஸ்டி பெமிலா,  ‘உயர் சாதி இந்துப் பெண்’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்துள்ளார்.

பண்டித ரமாபாய் டோங்கரே சரஸ்வதி (1858 -1922) ஆணாதிக்கம், சாதி, பெண்ணடிமைத்தனம் போன்ற சமூகக் கொடுமைகளை ஒழிப்பதற்கு உழைத்த பெண்மணிகளில் குறிப்பிடத்தக்கவர்.

சமூகப் போராளியான இவர், ஆதிக்க சாதியைச் சார்ந்த இந்துப் பெண்களின் நிலை குறித்து ஆறு இயல்களில் எழுதி 1888 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

அவருடைய வாழ்க்கை அனுபவத்தில் அவர் நேரடியாக கண்டு கேட்டு உணர்ந்த கொடுமைகளில் இருந்து, குடும்பத்திலும் ஆதரவற்ற பெண்களின் நிலை குறித்து மனமிரங்கி, சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கப் பாடுபட்ட புரட்சிப் பெண்.

கங்காமுல்லில் பிறந்தவர், பெற்றோரை உடன்பிறந்தவர்களை என்று ஒவ்வொருவராக இழந்து 24 வயதில் கணவரையும் இழக்கிறார். கைம்பெண்ணானவர் கைக்குழந்தையுடன் 1882 இல் புனே செல்கிறார். புனேயில் பெண்களுக்கான, ‘ஆரிய பெண்கள் சபை’யினை உருவாக்கி பெண்குழந்தைத் திருமணத்துக்கு எதிராகவும், பெண் கல்வி மேம்பாட்டுக்காகவும் பல முன்னெடுப்புகளைச் செய்தார். ஆங்கிலம் கற்றார். மராத்தி மொழியில் புதிய ஏற்பாட்டைக் கற்றார்.

சிசுக்கொலை, வன்புணர்வு, கருக்கலைப்பு ஆகிய கொடுஞ்செயல்களை ஆண்கள் எந்தத் தயக்கமும் குற்ற உணர்வுமின்றிச் செய்தவை என முன்வைக்கிறார். சதி இன்னும் நீங்காத காலத்தில் இந்துப் பெண்களின் இழிவான நிலையை ஒரு பெண்ணின் கடிதத்தை மொழியாக்கம் செய்து அந்தக் கொடுந்துயரை விவரமாக அளித்துள்ளார்.

1880 – 1881 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஆண்களை விட ஐம்பது லட்சம் பெண்கள் குறைவாக உள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கைக் குறைவுக்கு பெண் சிசுக்கொலைகளும், சுகாதாரக் குறைவும், பெண்களுக்குக் கொடுக்கப்படும் தரக்குறைவான சிகிச்சைகளும், மருத்துவ வசதியின்மையும் மிக முக்கியமான காரணங்களாகும்.

ஒரு தந்தை தன்னுடைய பருவத்துக்கு வராத ஒரு மகளை, பயணம் செல்கையில் அன்றுதான் சந்தித்த ஒரு முதியவருக்கு மணம் செய்து வைத்த பாதகச் செயலும் சொல்லப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளின் பிறப்புக்கு முன்பான கருக்கலைப்பு, பிறந்த பின் சிசுக்கொலை, பெண் குழந்தைகளின் குழந்தைப் பருவம், குழந்தைத் திருமணம், சமயத்திலும் சமூகத்திலும் பெண்களின் அவல நிலை, கைம்பெண்களின் துயரங்கள்,  சமுதாயத்தில் பெண்களின் நிலையில் எதிர்மறைத் தாக்கங்கள் என்று ஐந்து இயல்களில் விரிவாக எழுதியுள்ளார்.

ஆறாவது இயலில், நெஞ்சார்ந்த வேண்டுகோள் என்னும் தலைப்பில், முகத்திலறையும் உண்மையை ஓங்கி உரக்கப் பேசுகிறார்.

1881 ஆம் ஆண்டின் மக்கள் கணக்கெடுப்பில் இந்தியாவில் இரண்டு கோடியே ஒன்பது ஆயிரத்து அறுநூற்றி இருபத்தி ஆறு (2,00,09,626) கைம்பெண்கள் எல்லா சாதியிலும் வயதிலும் உள்ளனர். இதில் இருபது வயதுக்கு உட்பட்டவர்கள். ஆறு லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரத்து நூறு பேர் (6,69,100)

ஒன்பது வயதுக்குக் கீழுள்ள கைம்பெண்கள் 78,976

பத்திலிருந்து பதினான்கு வயதுக்கு இடைப்பட்டவர்கள் 2,07,388

பதினைந்திலிருந்து பத்தொன்பது வயதுக்குட்பட்டவர்கள் 3,82,736

மொத்தம்  6,69,100

இந்தியாவின் எந்த இடத்திலும் உயர் சாதி கைம்பெண்களுக்கு உறைவிடமோ, கல்வியோ பெறுவதற்காக நிறுவனங்கள் உருவாக்கப்படவில்லை.

இந்தப் பெண்களை அவர்களுடைய ஆயுள் கால  அடிமைத்தனத்திலிருந்தும் நரக வேதைனையிலிருந்தும் விடுவிக்க, இந்த நூலை வாசிக்கும் அனைவருக்குமான உருக்கமான வேண்டுகோளை முன்வைக்கிறார்.

இந்தியப் பெண்களின் சன்னமான அழுகுரல் மூடிய காதுகளுக்கு எட்டி  உலகத்துக்குத் தெரியவேண்டுமென இந்நூலினை அளித்து பெண்களின் விடுதலைக்கும் உதவி கேட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பாளருக்கு வாழ்த்துகள். மொத்தத் துயரையும் தம் எழுத்தால் நமக்குள் கடத்திவிடுகிறார். வாசிக்க இயலாமல் துக்கத்தில் மனம் அலைவுறுகிறது.

பண்டித  ரமாபாய் சாதி மறுப்புத் திருமணம் செய்த பிறகும் கிருஸ்தவராக மாறிய போதும் தன் சாதியை இழந்து விடுகிறார். வேதம், மனுதர்மத்தில் இருக்கும் பெண்ணுக்கான அநீதி குறித்த கேள்விகளையும் எந்த சமயத்திலும் நிலவும் பின்னடைவு குறித்த கேள்விகளையும் எழுப்பியதால் எந்த மதத்தினராலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்.

தலைப்பில் உயர்சாதி என்கையில் ஆதிக்க சாதியையே முன் வைக்கிறார். இந்துப் பெண் என்று இருந்தாலும் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கான முன்னேற்றத்துக்குமான வழிகளை கல்வியில், வாழ்க்கையில் என்ன? எப்படிச் செய்யலாம்? எனப் பட்டியலிட்டு அளித்துள்ளார், வரலாற்றில் மறைக்கப்பட்ட புரட்சிப் பெண்.

உண்மையை உலகின் கண்களுக்கு முன்னே அளித்த பெண் விடுதலைக்கான குரல் எழுப்பிய சமூகப் போராளிக்கு அன்றைய காலம் அங்கீகாரம் அளிக்க மறுத்துள்ளது.

இன்றும் இரண்டாம் இனமாகப் பார்க்கப்படும் பெண்களுக்கு நிலவும் அவல நிலை இந்நூலுக்கான முக்கியத்துவத்தை முன் வைக்கிறது.

Author

You may also like

Leave a Comment