கடல் அரக்கன்
மூலம்: ஆபி ஃபிலிப்ஸ் வாக்கர்
மொழியாக்கம்: சரவணன் பார்த்தசாரதி
ஆபி ஃபிலிப்ஸ் வாக்கர்: காலம்: 1867–1943 அமெரிக்காவைச் சேர்ந்தவரான ஆபி ஃபிலிப்ஸ் வாக்கர் (Abbie Phillips Walker) குழந்தைகளுக்கான கதைகளை எழுதியவர். அவர்குறித்த தகவல்கள் மிகக்குறைவாகவே கிடைத்துள்ளன. அவருடைய நித்திரை தேவனின் நேரம் (The Sandman’s Hour) எனும் நூல் மக்களால் விரும்பி வாசிக்கப்பட்டது. குறிப்பாக, குழந்தைகளைத் தூங்கச் செய்வதற்காக அமெரிக்கப் பெற்றோர் பலரும் இந்நூலில் இருந்த கதைகளை அவர்களுக்கு வாசித்துக்காட்டும் வழக்கம் கொண்டிருந்தனர். இக்கதைகளுக்கான சித்திரங்களை வரைந்தவர் - புகழ்பெற்ற ஓவியரான ரோடா கேம்பெல் சேஸ் (Rhoda Campbell Chase).
கடலுக்கு நடுவே ஒரு தீவு இருந்தது. முழுக்க பாறைகளாலான அந்தத் தீவில் ட்ராகன் போன்ற தோற்றத்தில் ஓர் அரக்கன் வாழ்ந்து வந்தான். பெரிய தலையுடன் பாம்பு போன்ற தோற்றத்தில் இருந்த அவன், வாயைத்திறந்தான் என்றால் அது ஒரு குகைபோன்று இருக்கும் என்று சிலர் கூறினார்கள்.
அவனால் கப்பலைக்கூட முழுதாக அப்படியே விழுங்கிவிட முடியும் என்றும், புயல் வீசும் இரவுகளில் அந்தத் தீவில் அமர்ந்துகொண்டு தீபோல் எரியும் தன் கண்களால் கடலை வேடிக்கை பார்ப்பதாகவும் பலரும் நம்பினார்கள்.
மாலுமிகள்கூட அந்த அரக்கனைப்பற்றி நடுக்கத்துடன்தான் பேசினார்கள். அவனது வெளித்தோற்றத்தைக் கண்டு பயந்தவர்கள் எல்லோரும் அவனைப்பற்றி இல்லாத பொல்லாத கதைகளைப் பரப்பினர். ஆனால் உண்மை என்னவென்றால் தான் இருக்கும் பாறைத்தீவில் வந்து யாரும் மோதிவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் அந்த அரக்கன் ஒளி உமிழும் கண்களோடு இரவு நேரத்தில் அங்கே அமர்ந்திருப்பதை வழக்கமாக வைத்திருந்தான்.
புயல் வீசிய இரவொன்றில் கப்பல் ஏதேனும் கவிழ்ந்து, யாரேனும் தவித்துக் கொண்டிருக்கிறார்களா என்று பார்ப்பதற்காக கடலில் நீந்திக் கொண்டிருந்தான் அந்த அரக்கன்.
மரக்கட்டையைப் பற்றியபடி சிறுவன் ஒருவன் மிதந்துகொண்டிப்பதை அவன் கண்டான். அச்சிறுவனின் பெயர் கோ-கோ, அவன் அரக்கனைக்கண்டு பயந்துபோனான். ஆனால் சற்றுநேரத்திலேயே அரக்கன் தன்னைத் தாக்க முயலவில்லை என்பதை சிறுவன் புரிந்துகொண்டான். சிறுவனைத் தன்னுடைய முதுகில் ஏற்றிக்கொண்டு பாறைத்தீவில் இறக்கிவிட்டுத் திரும்பிவிட்டான் அரக்கன். இப்போது கோ-கோ மட்டும் அந்தத் தீவில் தனித்து அமர்ந்திருந்தான். சில நிமிடங்களில் திரும்பி வந்த அரக்கன் தன் வாயை “ஆ..”வெனத் திறந்தான்.
தன்னைத்தான் அரக்கன் விழுங்க நினைக்கிறானோ என்று கருதிய கோ-கோ தலைதெறிக்க ஓடினான். ஆனால் தன்னை அந்த அரக்கன் விரட்டிவரவில்லை என்பதை உணர்ந்து மீண்டும் அரக்கனிடமே திரும்பி வந்தான்.
அவனைக்கண்ட அரக்கன் மறுபடி தன் வாயைத் திறக்க, “நீ என்னை உள்ளேபோகச் சொல்கிறாயா?” என்று கேட்டான் கோ-கோ.
அரக்கன் ‘ஆம்’ என்பதுபோல் தலையாட்ட, ‘இவன் நினைத்தால் என்னை இப்போதே விழுங்கிவிட முடியும். வேறு ஏதோ ஒரு விஷயத்திற்காகவே என்னை வாய்க்குள் நுழையச் சொல்கிறான்.’ என்று நினைத்த கோ-கோ தைரியமாக உள்ளே நுழைந்தான்.
இருந்தாலும் அரக்கன் எதற்காக வாய்க்குள் போகச்சொன்னான் என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை. உள்ளே போகப்போக ஒரே இருட்டாக இருந்தது. கடைசியாக ஓர் இடத்தில் அடுப்பு, நாற்காலி, இருக்கை ஆகியவை இருந்தன.
‘இவை எனக்கு உதவும். எனவே இவற்றை நான் வெளியே எடுத்துச் செல்லப்போகிறேன்.’ என்றபடி ஒவ்வொன்றாய் வெளியே கொண்டுவந்தான்.
அவன் எல்லாப் பொருட்களையும் வெளியே கொண்டுவந்ததும் அரக்கன் அவனிடம் எதுவுமே சொல்லாமல் கடலுக்குச் சென்றுவிட்டான். அரக்கன் திரும்பி வந்து வாயைத் திறந்தபோது அதற்குள் சில பெட்டிகள், உணவுப்பொருட்கள் அடங்கிய பீப்பாய்கள் இருந்தன. அவற்றைக் கொண்டுவந்து அங்கிருந்த குகை ஒன்றில் பத்திரப்படுத்தினான் கோ-கோ. பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்ததும், அரக்கன் அங்கேயே படுத்து உறங்கிவிட்டான்.
மாலை மங்கி இரவானது. கோ-கோ உணவைத் தயாரித்துவிட்டு, தூங்கிக்கொண்டிருந்த அரக்கனிடம் “சாப்பாடு தயார்.” என்றான். விழித்து எழுத்த அவனோ தலையை இப்படியும் அப்படியுமா ஆட்டிவிட்டுக் கடலுக்குள் குதித்தான். சில நிமிடங்களில் வாய் நிறைய மீன்களோடு திரும்பி வந்தான். அப்போதுதான் தனக்காக அந்த அரக்கன் ஒவ்வொருமுறையும் கடலுக்குள் சென்று மூழ்கிக்கிடக்கும் கப்பலில் இருந்து பொருட்களைக் கொண்டுவருகிறான் என்பதை கோ-கோ உணர்ந்தான். அவனுக்கு அரக்கன்மேல் இருந்த பயம் இப்போது முழுமையாக நீங்கிவிட்டது.
“நீ பேச முடிந்தால் நன்றாக இருக்கும்.” என்றான் கோ-கோ.
“யாருமே இப்படி விரும்பியதில்லை. இனி என்னால் பேச முடியும்.” என்று சொன்ன அரக்கன், “நான் இப்படி அரக்க உருவத்தில் அலைவதற்கு ஒரு சூனியக்காரிதான் காரணம். அவள் என்னை இப்படி மாற்றி, யாருமே இல்லாத இந்தத் தீவில் இருக்குமாறு சபித்துவிட்டாள். யாரேனும் மனதார விரும்பினால் மட்டுமே என்னால் பழைய உருவத்தை அடைய முடியும்.” என்றான்.
“நீ மீண்டும் மனிதனாக வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.” என்றான் கோ-கோ.
“இன்னொன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். ஒரு நபரால் எனக்கு அளிக்கப்பட்ட ஒரு சாபத்தை மட்டும்தான் நீக்க முடியும். நான் பேசவேண்டும் என்று நீ விரும்பினாய். நான் பேசுகிறேன். ஆனால் நான் மீண்டும் மனித உருவத்தை அடையவேண்டும் என்றால் வேறொரு நபர் அப்படி ஒரு விருப்பத்தைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் என்மீதான சாபம் நீங்கும்.” என்றான் அரக்கன்.
இப்படியே நாட்கள் ஓடின. அரக்கன் அவ்வப்போது கோ-கோவைத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு கடலில் நீந்துவான். பெரிய பெரிய அலைகள் வரும்போது பயந்துபோன கோ-கோ மெதுவாக நகர்ந்து அரக்கனின் வாய்க்குள்போய் அமர்ந்துகொள்வான். கரை திரும்பியதும் அரக்கன் வாயைத் திறக்க சிறு கீறல்கூட இல்லாமல் வெளியே வருவான் கோ-கோ.
புயலடித்து ஓய்ந்த இரவொன்றில் கடலில் ஏதோ மிதப்பதைக் கோ-கோ பார்த்துவிட்டான். உடனே அவன் அரக்கனின் முதுகில் ஏறிக்கொள்ள அவர்கள் இருவரும் மிதந்துகொண்டிருந்த பொருளை நோக்கிப் பயணமானார்கள். அவர்களது நம்பிக்கை வீண்போகவில்லை.
கோ-கோவின் வயதே உள்ள ஒரு சிறுமி பீப்பாய் ஒன்றைப் பிடித்தபடி மிதந்துகொண்டிருந்தாள். அரக்கனைப் பார்த்து முதலில் அவள் பயந்தாலும் விரைவிலேயே அவனுடைய நல்ல குணங்களைக் கண்டுகொண்டாள். இப்படியே மாதங்கள் பல ஓடிவிட்டன.
ஒருநாள் அவளும், கோ-கோவும் கடல் அரக்கனின் முதுகில் ஏறி கடலுக்குள் சவாரி செய்யத் தயாரானார்கள். அப்போது அப்பெண் அரக்கனிடம், “நீயும் எங்களைப்போல் ஒரு மனிதனாக இருக்கக்கூடாதா?” என்றாள். அவ்வளவுதான் அடுத்த நொடி அங்கே மின்னல் வெட்டியதுபோல் ஒளி தோன்றியது. அவர்கள் சுதாரிப்பதற்கு முன்னரே அரக்கன் மறைந்து இருவரும் கடலுக்குள் விழுந்தனர். அரக்கன் இருந்த இடத்தில் ஒரு கிழவர்தான் நின்றுக்கொண்டிருந்தார். அவர் அவர்கள் இருவரையும் கரைக்கு மீட்டுவந்தார்.
“நீங்கள் மனிதரானதில் மகிழ்ச்சிதான். ஆனால் இனிமேல் சாப்பாட்டிற்கு என்ன செய்யப்போகிறோம்?” என்று கேட்டான் கோ-கோ.
“இனிமேல் எதைப்பற்றியும் கவலைப்படாதே. நான் கடல் தேவன். என்மீதான சாபம் நிவர்த்தி அடைந்ததால் என்னுடைய அதிசய சக்திகள் எல்லாம் மீண்டும் கிடைத்துவிட்டன. நான் இந்தத் தீவை அழகான தோட்டமாக மாற்றிவிடுகிறேன். நீயும், இந்தச் சிறுமியும் வளர்ந்து திருமணம் செய்துகொள்வீர்கள். அப்போது கடல் தேவர்களும், கடல் கன்னிகளும் உங்களுக்கு ஒரு கோட்டையை அமைத்துத்தருவதோடு உங்களை நன்றாகவும் கவனித்துக்கொள்வார்கள். இன்றிலிருந்தே நீங்கள் எதுகுறித்தும் கவலைப்படத் தேவையில்லை.” என்றார் கடல் தேவன். பிறகு, அவர்களைத் தனது வாகனங்களான டால்ஃபின்களின்மேல் அமரச்செய்து கடலுக்குள் அழைத்துச் சென்றார்.
அதன் பின்னர் கடல் தேவன் சொன்ன விஷயங்கள் ஒவ்வொன்றாய் நடக்கத்தொடங்கின. கோ-கோவும், அந்தச் சிறுமியும் வளர்ந்து பெரியவர்களாகி, திருமணம் செய்துகொண்டு தங்களுடைய கோட்டையில் மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர்.
***********************************************************************************************************************************
தேவதைப்பூ
மூலம்: ஆபி ஃபிலிப்ஸ் வாக்கர்
மொழியாக்கம்: சரவணன் பார்த்தசாரதி
காட்டு முள்ளங்கிச் செடிகளின் மஞ்சள் நிறப்பூக்களில் மனதைப் பறிகொடுக்காதவர்கள் உண்டா? அவை முதிர்ந்து தங்கள் நிறத்தை இழந்தபிறகு, அவற்றின் பஞ்சுபோன்ற தூவிகளைக் குழந்தைகள் ஊதிப்பறக்கவிட்டு விளையாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அழகான அந்த மலர்கள் உருவான கதையை ஒரு தேவதை கூறத்தொடங்கியது.
நாமும் கேட்போம். வாருங்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் ஓரிரவு, தேவதைகள் தங்கள் தோட்டத்தில் விருந்து உண்டு நடனமாடிக்கொண்டிருந்தன. அப்போது யாரோ கூக்குரலிட்டு அழும் ஓசை கேட்டது.
தேவதைகளின் அரசி தன்னுடைய நடனத்தை நிறுத்திவிட்டு, அக்குரல் எங்கிருந்து வருகிறது என்று கூர்ந்து கவனித்தாள். “நிலத்தில் இருந்து அக்குரல் கேட்கிறது. அது யார் என்று தேடிக்கண்டறிந்து வாருங்கள்.” என்று அவர் தேவதைகளுக்கு ஆணையிட்டார்.
தேவதைகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு திசைகளில் பறந்து சென்று குரல் எழுப்புவது யார் என்று ஆராய்ந்தனர். புற்களின் நடுவே, சிங்கத்தின் பற்களைப்போன்ற இலைகள் கொண்ட ஒருவகைச் செடிகளில் இருந்துதான் அந்த அழுகுரல் எழுகிறது என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
அந்தச் செடிகள் சோகமாகப் பாடிக்கொண்டிருந்தன.
“பச்சைப்பசேல் என இருக்கிறோம் நாங்கள்!
புற்கள் சூழ, ஒருவரும் காணாமல்!
மனம் வருந்தி அழைக்கிறோம் தேவதைகளை!
அவர்கள் எங்களுக்குத் தருவார்கள் மஞ்சள் பூக்களை!”
அப்பாடலைக்கேட்ட தேவதைகள் தங்கள் அரசியிடம் சென்று இந்த விபரங்களைக் கூறினர்.
“ஏற்கனவே மஞ்சள் நிறத்தில் பூப்பூக்கும் செடிகள் நிறைய உள்ளன. இவற்றிற்கும் மஞ்சள் நிறப்பூக்களை வழங்கினால் செடிகளுக்குள் பூசல் மூளும். நான் அவற்றிற்கு வெள்ளை நிறப்பூக்களை தரத்தயாராய் இருப்பதாக கூறி, அந்தச் செடிகளின் சம்மதத்தைப் பெற்றுவாருங்கள்.” என்றார் தேவதை அரசி.
காட்டு முள்ளங்கிகளிடம் சென்ற தேவதைகள், “தேவதை அரசி உங்களுக்கு வெண்ணிறப்பூக்களை வழங்க விரும்புகிறார்.” என்றன.
“இல்லை… இல்லை… பச்சை நிற இலைகள் கொண்ட எங்களுக்கு மஞ்சள் நிறப்பூக்கள்தான் எடுப்பாக இருக்கும். மேலும் மஞ்சள் என்பது சூரியனின் நிறம். நாங்களும் சூரியனைப்போல் தோற்றமளிக்க விரும்புகிறோம்.” என்று பதிலளித்த செடிகள் மறுபடி அழுதுகொண்டே பாடத்தொடங்கின.
“துக்கத்தால் வாடுகிறோம், பாடல்கள் பாடுகிறோம்!
மஞ்சள் பூக்களை வழங்குமாறு தேவதைகளை வேண்டுகிறோம்!”
அவற்றின் ஒருமித்த குரல் ஓங்கி ஒலித்தது. இந்தச் சத்தத்தைச் சகிக்கமுடியாத தேவதைகள் தங்கள் காதுகளை மூடிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டன.
இதற்கிடையே புற்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து அரசியைச் சந்தித்தன. “மரியாதைக்குரிய அரசியாரே! அந்தச் செடிகளுக்குத் தயவுசெய்து மஞ்சள் பூக்களை வழங்கிவிடுங்கள். இரவும் பகலும் அவை எழுப்பும் சத்தத்தால் எங்களுடைய தூக்கம் கெட்டுப்போகிறது.”
“நான் என்ன செய்யமுடியும்? அவை விரும்பும் மஞ்சள் நிறத்தை எங்கிருந்து நான் பெறுவது?” என்று கேள்வி எழுப்பினார் அரசி.
“சூரியக்கதிர்களைக் கொண்டுவந்தால், அவை எதிர்பார்க்கும் நிறத்தை வழங்கிவிடலாம். ஆனால் கதிர்களை நம்மால் சேகரிக்க இயலாது. ஆகவே குட்டி பூதங்களைக் கேட்டுப்பார்ப்போம். அவர்கள் நமக்கு உதவக்கூடும்” என்றது ஒரு தேவதை.
குட்டி பூதங்களின் இருப்பிடத்தை அடைந்த தேவதைகள், “நண்பர்களே! நாளை விழும் சூரிய ஒளிக்கற்றைகளை நீங்கள் சேகரித்து, மாலையில் எங்களிடம் தர முடியுமா?” என்று வேண்டிக்கேட்டன.
தேவதைகளின் வேண்டுகோளை குட்டி பூதங்கள் ஏற்றுக்கொண்டன. துரதிஷ்டவசமாக, மறுநாள் சூரியன் அவ்வளவு ஒளிவீசவில்லை. கிடைத்த வெகுசில கதிர்களைக் கூடைகளில் சேகரித்த குட்டி பூதங்கள் தேவதை அரசியைச் சென்று சந்தித்தனர். அவர்கள் கொண்டுவந்திருந்த தங்கநிறக்கதிர்களைக் கண்ட அரசி, “இவற்றைவைத்து அந்தச் செடிகள் எதிர்பார்க்கும் நிறத்தை வழங்கமுடியாது. இன்றுமுதல் அவை இன்னும் அதிகமாகச் சத்தம்போட்டு, கூக்குரலிடப்போகின்றன.” என்றார்.
“காலத்தைப் பொறுத்து நிறத்தைப் பிரித்துக்கொள்ளச் சொல்லலாமே? மலரும்போது அந்தப் பூக்களின் நிறம் மஞ்சளாக இருக்கட்டும். சில நாட்கள் கழித்து, நம்முடைய வெண்ணிறக்குல்லாயை அவை அணிந்துகொள்ளட்டும்.” என்றது ஒரு தேவதை.
அதைக்கேட்டு முகம் மலர்ந்த அரசி, “இது நல்ல யோசனை. நீங்கள் அந்த அழுவாச்சிச் செடிகளிடம் சென்று, பருவகாலத்தின் முதற்பாதியில் அவற்றின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்றும், பிற்பாதியில் நம்முடைய பஞ்சுபோன்ற குல்லாய்களை அவை அணிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறுங்கள். இந்த ஏற்பாட்டிற்கு அவை ஒப்புக்கொள்கின்றனவா என்று கேட்டுவாருங்கள்.” என்றார்.
உடனடியாக காட்டு முள்ளங்கிகளிடம் சென்று இந்த விஷயத்தைத் தெரிவித்தன அந்த தேவதைகள். செடிகளுக்கு அந்த யோசனை பிடித்திருந்தது. ஆகவே அவை தங்கள் அழுகையை நிறுத்திவிட்டன. தேவதை அரசி தன் பறக்கும் ரதத்தில் ஏறி காடு, மலைச்சரிவுகள், தோட்டங்கள், புல்வெளிகளில் வளர்ந்துகிடந்த காட்டு முள்ளங்கிகளின்மேல் மஞ்சள்நிறக்கதிர்களைப் பாய்ச்சினார்.
மறுநாள் காலையில், மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் இந்தச் செடிகளைக் கண்ட சூரியன் ஒரு நொடி திகைப்படைந்து நின்றுவிட்டது. நாட்கள் ஓடின. பருவகாலத்தின் பிற்பகுதியில் தேவதைகள் பஞ்சுபோன்ற தங்கள் குல்லாய்களை அச்செடிகளின் காம்பில் சூட்டி அழகுசெய்தன. அதன்பிறகு காட்டு முள்ளங்கிகளின் அழுகுரல் கேட்டதேயில்லை. அவற்றைச் சுற்றியிருந்த புற்களும் சூரியன் மறைந்ததில் இருந்து உதிப்பதுவரையில் நிம்மதியாகத் தூங்கத்தொடங்கின.