தமிழாக்கம்: அபுல் கலாம் ஆசாத்
முன்ஷி பிரேம்சந்த் (1880–1936) உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசிக்கு அருகிலுள்ள லம்கி கிராமத்தில் பிறந்தார். நவீன இந்தி மற்றும் உருது இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். "நாவல் பேரரசர்" (உபன்யாஸ் சாம்ராட்) என்று புகழப்படும் இவர், இந்தியத் துணைக்கண்டத்தின் யதார்த்தவாத எழுத்துமுறைக்கு வித்திட்டவர்.
பாகம் (1)
குடிசையின் வாசலில் தகப்பனும் மகனும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்களின் முன்னே குளிர்காய்வதற்காக எரிக்கப்பட்ட விறகுக்கரி கிடந்தது. குடிசையின் உள்ளே மகனின் இளம் மனைவி புதியா பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். அவள் துடித்து எழுப்பிய வேதனைக்குரல் வெளியே அமர்ந்திருந்த அவர்களுடைய காதுகளைக் கிழித்தது. அவர்கள் இருவரும் தங்கள் காதுகளைப் பொத்தினர். குளிர்கால இரவில் அமைதியும் இருளும் நிறைந்து அந்த ஊர் உறங்கிக்கொண்டிருந்தது.
“இன்னிக்கு ராத்திரி தாங்கமாட்டா போல இருக்கு. காலைலேர்ந்து இப்படித்தான் துடிக்கிறா. உள்ள போயி பார்த்துட்டு வா” – கேசு சொன்னார்.
“செத்துதான் தொலையணும்னா ஏன் சீக்கிரமா சாகமாட்டேன்றா? உள்ள போயிப் பார்த்து என்ன ஆகப்போவுது?” – மாதவ் சலிப்பும் வெறுப்பும் சேர்ந்த தொனியில் பதில் சொன்னான்.
“நீ மனுஷனே இல்லடா. ஒரு வருஷம் அவளோட குடித்தனம் நடத்திட்டு, இப்ப நன்றிகெட்டத்தனமாப் பேசுற”
“என்னால அவ துடிக்கிறதைப் பார்க்க முடியாது”
அவர்கள் இருவரும் ஊர் முழுதும் கெட்ட பெயர் எடுத்திருந்தனர். கேசு ஒரு நாள் வேலைக்குச் சென்றால் மூன்று நாள்கள் ஓய்வெடுப்பார்; மாதவ் அவருக்கும் மேல். கொஞ்சநேரம் வேலை செய்வான், அதிக நேரம் சிலும்பியில் கஞ்சாவை அடைத்துப் புகைத்துக் கொண்டிருப்பான். அதனால் அவர்கள் இருவருக்கும் ஊரில் யாரும் வேலை கொடுப்பதில்லை. வீட்டில் கைப்பிடியளவு அரிசி இருந்தால் போதும், அவர்கள் இருவரும் வேலைக்குச் செல்வதில்லை. சாப்பிட எதுவுமே இல்லாமல் பசியால் வாடினால், ஏதாவது மரத்தில் ஏறிக் காய்ந்த கிளைகளைக் கேசு முறித்துக் கீழே போடுவார். மாதவ் அவற்றை கடைவீதிக்குச் சென்று விற்றுக் காசாக்குவான். அந்தக் காசு தீரும் வரையில் அவர்கள் ஊர் சுற்றுவர். காசு தேவைப்பட்டால், மீண்டும் மரத்தில் ஏறிக் கிளைகளை முறித்து விற்பார்கள், இல்லாவிட்டால் ஊரில் எங்காவது கூலி வேலை கிடைக்குமாவெனத் தேடுவார்கள்.
அந்த ஊரில் வேலை குறைவில்லாமல் கிடைத்தது. உழைப்பவருக்கு அங்கு நிறைய வேலை இருந்தது. ஆனால், என்றாவது ஓர் ஆள் செய்யும் வேலையை இரண்டு ஆள்களாவது செய்து வேலை முடிந்தால் சரியென்னும் கட்டாயம் நெருக்கினால்தான் ஊர் மக்கள் இவர்கள் இருவருக்கும் கூலி வேலை கொடுப்பார்கள். சும்மா இருக்கும் சாமியாராக அமர்வதற்கு அவர்கள் பயிற்சி ஏதும் பெறத்தேவையில்லை; அது அவர்களின் இயல்பு.
அவர்களுடைய வாழ்க்கை விசித்திரமானது. நான்கைந்து மண்சட்டி மண்பானைகளைத் தவிர அவர்கள் வீட்டில் ஏதும் இல்லை. கந்தலாடையால் மானத்தை மறைத்துக்கொண்டு ஊரைச் சுற்றினார்கள். எதுவுமே தேவைப்படாவிட்டாலும் அவர்களுக்கு ஊரைச் சுற்றிக் கடன் இருந்தது. அவர்களால் திருப்பித் தரமுடியாது எனத் தெரிந்தும் அவ்வப்போது ஊர்மக்கள் காசு கொடுத்தார்கள். உருளைக்கிழங்கையும், கொண்டைக்கடலையையும் வயல்களிலிருந்து திருடி வந்து சுட்டுத் தின்பார்கள். கரும்பைத் திருடி வந்து இரவு முழுவதும் தின்றுகொண்டிருப்பார்கள். கேசு இப்படியே தன் அறுபது வயசைக் கடந்துவிட்டார். அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் – அவருடைய அடியைப் பின்பற்றி இப்போது மாதவும் அப்படியே வாழ்கிறான்.
வயலிலிருந்து திருடி நெருப்பில் சுட்ட உருளைக்கிழங்குகளைச் சாப்பிட்டபடி, இப்போது அவர்கள் இருவரும் விறகுக்கரியின் முன்னால் அமர்ந்திருந்தனர். கேசுவின் மனைவி இறந்து நீண்ட நாள்களாகின்றன. சென்ற ஆண்டு மாதவுக்குத் திருமணம் நடந்தது. வீட்டுக்கு வந்த மருமகள் தனது உழைப்பில் குடும்பத்தை நடத்தினாள். மாவு அரைப்பது, புல் வெட்டுவது என ஊரில் சில வீட்டுவேலைகளைச் செய்து அங்கங்கே கிடைக்கும் சாப்பாட்டை எடுத்து வந்து அந்த இரண்டு சோம்பேறிகளுக்கும் தருவாள். அவள் வந்து இப்படிச் சேவை செய்த பின், அவர்கள் இருவருக்கும் இன்னும் திமிரும் அடாவடித்தன்மையும் கூடிவிட்டது. ஓய்வெடுப்பது தங்கள் உரிமை என நினைத்து எந்த வேலைக்கும் செல்லவில்லை. யாராவது கூலி வேலைக்கு அழைத்தால் வேண்டுமென்றே ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆள்களின் கூலி கேட்டனர். அப்படிக் குடும்பத்தை நடத்திய மருமகள் இப்போது பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்கிறாள். இவர்கள் இருவரும் வெளியே ஏதும் செய்யாமல் அமர்ந்திருக்கின்றனர். அவள் இறந்துவிட்டால் தாங்கள் இருவரும் நிம்மதியாக உறங்கலாம் எனவும் நினைத்திருக்கலாம், அவர்கள் அப்படிப்பட்டவர்கள்.
கேசு ஒரு உருளைக்கிழங்கை எடுத்து உரித்துக்கொண்டே சொன்னார், “எப்படி இருக்காள்னு போய்ப் பாருடா. பேய் பிடிச்சிருக்கும், வேற என்ன? இப்ப பூசாரியைக் கூப்பிடப்போனாலும் ஒரு ரூபாய் கேட்பான். யாரு வீட்ல காசு இருக்கு?”
தான் உள்ளே சென்றால் இந்த உருளைக்கிழங்கில் பெரும்பாதியைக் கேசு விழுங்கிவிடுவார் என மாதவுக்குத் தெரியும், அதனால், “எனக்குப் பயமாயிருக்கு” என்றான்.
“பயம் எதுக்கு? நாந்தான் இங்கே இருக்கேன்ல?”
“அப்ப நீ உள்ள போய்ப் பாரு”
“என் வீட்டுக்காரி சாகக் கிடந்தப்ப நான் மூணு நாள் அவளை விட்டு நகரல. அப்புறம் உன் வீட்டுக்காரி என்னைப் பார்த்தா தலையைக் குனிவாளா இல்லையா? அவ முகத்தையே நான் சரியாப் பார்த்ததில்ல, இப்ப இப்படிக் கிடக்கிறதைப் பார்க்கிறது சரியா? என்னை அவள் பார்த்தாள்னா கால்ல விழுந்து எழுந்திருக்க அவளால முடியுமா?”
“இப்ப குழந்தை குட்டின்னு ஆகிடுச்சுன்னா, நாட்டு மருந்து வேணும்; இஞ்சி, வெல்லம், எண்ணெய் வேணும். வீட்ல எதுவும் இல்ல”
“எல்லாம் வரும். கடவுள் குழந்தையைக் கொடுத்தா, நமக்கு இப்பக் காசே கொடுக்காதவங்களும் கூப்பிட்டுத் தருவாங்க. எனக்கு ஒன்பது குழந்தைங்க பிறந்துச்சு, வீட்ல ஒண்ணும் இல்ல. இப்படித்தான் ஒவ்வொரு வாட்டியும் எல்லாம் நடந்துச்சு”
இரவும் பகலும் உழைத்தாலும் ஏழைக் குடியானவர்களின் வாழ்க்கை நிலைக்கும், இவர்கள் இருவரின் வாழ்க்கை நிலைக்கும் பெரிய வேறுபாடு காண முடியாத சமுதாயத்தில், குடியானவர்களின் இரக்க குணத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிப் பிழைக்கக்கூடியவர்கள் இருக்கும் சமுதாயத்தில் இப்படிப்பட்ட மனநிலையுடன் சிலர் இருப்பது அதிசயம் கிடையாது. அங்கிருந்த குடியானவர்களுடன் ஒப்பிடுகையில் கேசுவின் வாழ்க்கை வசதியாக இருந்தது. குடியானவனாகக் கடுமையாக உழைத்தும் சிரமத்தில் வாழ்வதைவிட இப்படி அவர்களுடைய இரக்க குணத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் வழியை அவர் தேர்ந்தெடுத்தார். ஆனாலும், அப்படிப் பிழைக்கும் சிலர் முன்னேறிய அளவுக்கு அவரால் முன்னேற முடியவில்லை. வேலை செய்யாமல் இருந்த சிலர் ஊரில் கிராமப் பஞ்சாயத்தில் உறுப்பினராகவும் தலைவராகவும்கூட ஆகிவிட்டார்கள். அதனால் அவருக்கு ஊரில் மதிப்பு இல்லை. அதை அவர் பொருட்படுத்துவதே இல்லை. அவரால் உழைக்காமல் ஊர்சுற்றி வாழ முடிந்தது; அவரிடமிருந்து யாராலும் எந்தப் பொருளையும் பெற முடியவில்லை. இந்த இரண்டும் அவரை அப்படியே இருக்க வைத்தன.
நேற்றிலிருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்ததால் அவசர அவசரமாக இருவரும் உருளைக்கிழங்குகளைச் சூடாக விழுங்கினர். அவை ஆறுவதற்குக்கூட அவர்களிடம் பொறுமை இல்லை. சூடான கிழங்குகள் நாவைச் சுட்டன. தோலை உரிக்கும்போது கைகளில் இருந்த கிழங்கின் மேல்பகுதியில் சூடு தெரியவில்லை. ஆனால், வாயில் இட்டுக் கடித்ததும் அதன் உட்பகுதியில் இருந்த சூடு அவர்கள் நாவைச் சுட்டது. விழுங்குகையில் தொண்டையையும் உணவுக்குழாயையும் சுட்டது. வயிற்றுக்குள் சூடாக விழுந்தாலும் அங்கே அதைக் குளிர்விக்கச் சில இருப்பதால், அவர்கள் கண்களில் நீர் வழியும் அளவுக்கு வாயிலும் தொண்டையிலும் சூட்டைத் தாங்கிக்கொண்டு அவசரமாகக் கிழங்குகளை விழுங்கினார்கள்.
அப்போது கேசுவுக்கு அவர் இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த பண்ணையார் வீட்டுத் திருமண விருந்து நினைவுக்கு வந்தது. அவருடைய வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களில் அந்த விருந்தும் ஒன்று. அவருடைய நினைவில் தங்கிவிட்ட அது இன்றும் அவருக்குக் கண் முன்னே தோன்றியது.
“அதைச் சாப்பாடுன்னு சொல்ல முடியாது, அதுக்குப் பின்ன எனக்கு எங்கியும் அப்படிப்பட்ட சாப்பாடு கொடுத்துவைக்கலை. பொண்ணு வீட்டுக்காரங்க எல்லாருக்கும் பூரி பரிமாறினாங்க, எல்லாருக்கும், சின்ன ஆளு பெரிய ஆளுன்னு வித்தியாசம் இல்லை, எல்லாரும் பூரி சாப்பிட்டாங்க, அதுவும் அசல் நெய்யில சுட்ட பூரி. சட்னி, ராய்த்தா, மூணு வகை கீரைத் துவையல், காய்கறி சூப்பு, தயிரு, இனிப்பு, என்ன சொல்ல? அந்தச் சாப்பாட்ல என்னா மணம். எந்தக் கட்டுப்பாடும் இல்ல. என்ன வேணுமோ அதைக் கேட்டுச் சாப்பிட்டோம். சிலருக்குத் தண்ணி குடிக்க வயித்துல இடம் இல்லை. ஆனா, பரிமாறினவங்க தட்டுல சூடான கச்சோரி வச்சிட்டாங்க. வேண்டாம்னு சொன்னாலும் விடலியே, வச்சிட்டுப் போயிட்டாங்க. எல்லாம் சாப்பிட்டு முடிச்சு வாயைக் கழுவிட்டு வந்தா, வெத்தலைப் பாக்கு. எனக்கு வெத்தலை சாப்பிட வயித்துல எங்க இடம் இருந்துச்சு? என்னால நிக்க முடியல. சட்டுபுட்டுன்னு போயி படுத்துட்டேன். அவ்ளோ பரந்த மனசு பண்ணையாருக்கு.”
இந்த விவரிப்புகளைக் கற்பனை செய்து பார்த்த மாதவ், “இப்ப நமக்கு இப்படி யாராவது சாப்பாடு போடுவாங்களா?”
“இப்ப யாரு சாப்பாடு போடுவா? அது வேற காலம். இப்ப எல்லாம் கஞ்சனாகிட்டாங்க. கலியாணத்துக்குச் செலவு பண்றதில்லை, கருமாதிக்கும் செலவு பண்றதில்லை. ஏழைங்கள்ட்டேர்ந்து அடிக்கிற காசை எங்க வைக்குறாங்கனு கேளு. காசு அடிக்கிறதுல குறை வைக்கிறது இல்ல, செலவு பண்றதுலதான் குறை.”
“சரி, அன்னிக்கு நீ இருவது பூரி தின்னிருப்பியா அப்பா?”
“இருபதுக்கும் மேல”
“நானா இருந்திருந்தா அம்பது தின்னிருப்பேன்”
“அம்பதுக்கும் குறைவாத்தான் நான் தின்னேன். நீ அம்பது தின்னிருக்கமாட்டே. அப்ப நான் இருந்த மாதிரி இப்ப நீ இல்லை.”
உருளைக்கிழங்குகளைத் தின்றுவிட்டு, தண்ணீர் குடித்துவிட்டுத் தங்கள் வேட்டியைப் போர்வையாகப் போர்த்திக்கொண்டனர். கால்களை வயிற்றுடன் ஒட்டி வைத்து மலைப்பாம்பைப் போலச் சுருண்டு அந்த விறகுக்கரிக்கு அருகில் படுத்து உறங்கினார்கள்.
உள்ளே பிரசவ வலியால் புதியா இன்னமும் துடித்து ஓலமிட்டுக் கொண்டிருந்தாள்.
பாகம் (2)
காலையில் மாதவ் குடிசைக்குள் சென்று பார்க்கும்போது அவனுடைய மனைவியின் உடல் சில்லிட்டு இருந்தது. அவளுடைய வாயில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. இறுகிய விழிகள் மேலே செருகியிருந்தன. அவள் உடல் முழுதும் தூசி அப்பியிருந்தது. அவள் வயிற்றிலிருந்த குழந்தை இறந்துவிட்டது.
மாதவ் வெளியே ஓடிவந்து கேசுவிடம் விஷயத்தைச் சொன்னான். பின்னர் இருவரும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ‘ஓ’ வெனப் பெருங்குரலிட்டு அழத்தொடங்கினர். நேற்று இரவு பிரசவ வலிக்குச் செவிசாய்க்காத அக்கம் பக்கத்தார், அவர்கள் இருவரின் கூக்குரலைக் கேட்டு நிலையை விளங்கிக்கொண்டனர். சம்பிரதாயமாகத் துக்கம் விசாரிக்கப் புறப்பட்டு வந்தனர். அவர்கள் இருவரால் நீண்ட நேரம் தங்கள் அழுகையைத் தொடர முடியவில்லை. காரணம், பணம். பருந்துக்கூட்டில் இறைச்சியைப் போலத்தான் அவர்களிடம் பணம் இருக்கும். சவத்துணியும், விறகும் வாங்க அவர்களிடம் சல்லிக்காசு இல்லை.
தந்தையும் மகனும் அழுதுகொண்டே பண்ணையாரின் வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் இருவரின் முகத்தைக் கண்டதும் பண்ணையாருக்கு வெறுப்பு வந்தது. திருடியதற்காக, ஒப்புக்கொண்டபடி வேலை செய்யாததற்காக என எத்தனையோ முறை பண்ணையார் இவர்களை அடித்து விரட்டியிருக்கிறார்.
“என்னடா கேசு, ஏன் அழுகை? இப்பலாம் நீ இங்க வர்றதே இல்லைல்ல. இந்த ஊர்ல வாழ உனக்கு விருப்பம் இல்லைன்னு நினைக்கிறேன்.”
கேசு தரையில் தலைவைத்து அழுதுகொண்டே, “ஐயா பெரிய பிரச்சனையில இருக்கேன் ஐயா. மாதவ் வீட்டுக்காரி நேத்து ராத்திரி செத்துட்டாய்யா. நாள் பூரா துடிச்சா. ராத்திரி முச்சூடும் நாங்க அவ தலைக்குப் பக்கத்துலதான் உட்கார்ந்திருந்தோம். மருந்து எல்லாம் எங்களால முடிஞ்ச அளவுக்குக் கொடுத்தோம். எவ்வளவோ காப்பாத்த முயற்சி பண்ணோம். அவ எங்களை விட்டுட்டுப் போயிட்டாய்யா. இப்ப எங்களுக்கு ஒரு ரொட்டி கொடுக்கவும் ஆளில்லை ஐயா. மோசம் போயிட்டோம். வீடு மூழ்கிடுச்சு. நாங்க உங்க அடிமை. உங்களைத் தவிர எங்களுக்கு யாரு இருக்கா. எங்க காசு எல்லாம் மருந்துக்குச் செலவாகிடுச்சு. ஐயா மனசு வச்சாதான் பொணம் வீட்லேர்ந்து போகும். ஐயா வீட்டுக் கதவைத் தட்டாம எங்களுக்கு வேற கதி இல்லைய்யா.”
பண்ணையார் நல்லவர்தான், ஆனாலும் கேசுவுக்குக் கருணை காட்டுவது கருப்புப் போர்வைக்குச் சாயம் பிடிப்பதைப் போன்றது. அவர் மனதில் தோன்றியதைச் சொல்ல நினைத்தார். “போடா, இங்கேர்ந்து போயிடு. பொணம் வீட்ல கிடந்து அழுகட்டும். எப்படிக் கூப்பிட்டாலும் வரமாட்டே, இப்ப வந்து சுகம் விசாரிக்கிறியா? கேடுகெட்டவனே.” ஆனால், இது கோபத்தைக் காட்டும் நேரம் இல்லை. பொறுமையாக இருந்தார். இரண்டு ரூபாய்களை எடுத்து விட்டெறிந்தார். கேசுவுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தையும் பேசவில்லை. கேசு நின்ற பக்கத்திலிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டார். சுமையைக் கீழிறக்குவதைப் போல நடந்துகொண்டார்.
பண்ணையார் இரண்டு ரூபாய்களைத் தந்தது ஊரில் இருக்கும் மற்ற வியாபாரிகளும் கேசுவுக்குப் பணம் தர வழிசெய்தது. பண்ணையார் பெயரைத் தண்டோரா போட்டுச் சொல்வது போலச் சொல்லி பணம் வசூலிக்கும் கலை கேசுவுக்குத் தெரியும். சிலர் இரண்டணா தந்தனர், சிலர் நான்கணா தந்தனர். ஒரு மணி நேரத்தில் அவரிடம் கிட்டத்தட்ட ஐந்து ரூபாய்கள் சேர்ந்துவிட்டன. சிலர் அரிசி தந்தனர், சிலர் விறகு தந்தனர். மதியம் கேசுவும் மாதவும் சவத்துணி வாங்கக் கடைவீதிக்குச் சென்றனர். வீட்டில் சிலர் மூங்கில் கழிகளை வெட்டத் தொடங்கினர். நல்ல மனதுள்ள பெண்கள் சிலர் வீட்டுக்கு வந்து இறந்தவளைப் பார்த்து அவளுடைய இயலாமைகளை நினைத்துக் கண்ணீர் விட்டு அழுதனர்.
பாகம் (3)
கடைவீதிக்குச் சென்ற கேசு, “விறகுதான் நமக்குக் கிடைச்சுருச்சுல்ல, என்ன சொல்ற மாதவ்?”
“ஆமா, விறகு நிறைய இருக்கு. இப்ப சவத்துணிதான் வாங்கணும்.”
“விலை குறைவான மெல்லிசான சவத்துணியா வாங்குவோம்.”
“ஆமா, பின்ன என்ன? சுடுகாட்டுக்குப் போறதுக்கு ராத்திரியாகிடும். ராத்திரியில சவத்துணியை யாரு பார்க்கப்போறா?”
“என்ன கொடுமையான முறை இது. மனுஷி உயிரோட இருக்கும்போது நல்ல துணி கிடைக்கல, செத்த பின்ன புது சவத்துணி வேணுமா?”
“சவத்துணி பொணத்தோட சேர்ந்து எரிஞ்சிடும்”
“ஆமா, பின்ன என்ன? இந்த அஞ்சு ரூபா மொதல்லயே கிடைச்சிருந்தா அவளுக்கு மருந்து வாங்கியிருக்கலாம்.”
அவர்கள் ஒருவர் மனதை ஒருவர் நன்கு அறிந்தவர்களாதலால் இப்படியாக ஒருவர் மற்றவருக்கு ஏற்றாற்போலப் பேசிக்கொண்டு கடைவீதியில் மாலை வரையில் சுற்றிச்சுற்றி நேரத்தைக் கடத்தினர். எதேச்சையாகவோ அல்லது வேண்டுமென்றே அவர்கள் ஒரு சாராயக்கடையின் முன்னே நின்றனர். முன்பே எடுக்கப்பட்ட முடிவைப் போல இருவரும் உள்ளே நுழைந்தனர். நுழைந்த பின்னர் எதுவும் செய்யாமல் சிறிது நேரம் கடைக்குள்ளே நின்றனர். பின்னர் கேசு ஒரு சாராயப் புட்டி வாங்கி வந்தார். எள்ளுருண்டையும் வாங்கிக்கொண்டு தாழ்வாரத்தில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தனர். மது உள்ளே செல்லச் செல்ல அவர்களுக்குப் போதை ஏறியது.
“சவத்துணி போடுறதால என்ன ஆகிடும். அது எரியத்தான் போகுது. எதுவும் மருமகளோட ஒண்ணும் போயிடாதுல்ல?” – கேசு கேட்டார்.
தேவதைகளுக்குத் தன்னை நல்லவனாகக் காட்டிக்கொள்ள முயற்சி செய்வதைப் போல, மாதவ் வானத்தைப் பார்த்துப் பேசினான். “இந்த உலகத்துல பழக்கம். பூசாரிக்குப் பணம் கொட்டித் தராங்க. யாருக்குத் தெரியும்? பரலோகத்துல இதுக்குப் பலன் கிடைக்குமோ கிடைக்காதோ?”
“பணக்காரங்க காசு வச்சிருக்காங்க, தூக்கி வீசுறாங்க. நம்ம காசா வச்சிருக்கோம் தூக்கி வீச?”
“ஆனா, ஊருக்கு என்ன பதில் சொல்ல? மக்கள் சவத்துணி எங்கன்னு கேட்பாங்க.”
கேசு சிரித்தார். “மடியில கட்டி வச்ச காசு கீழே விழுந்துடுச்சு. ரொம்பத் தேடுனோம். கிடைக்கல”
மாதவும் சிரித்தான். இப்படி எதிர்பாராமல் கிடைத்த அதிர்ஷ்டத்தை நினைத்துப் பேசினான். “பாவம், என் வீட்டுக்காரி நல்லவ. செத்தாலும், நம்மை நல்லா குடிக்க வச்சா.”
அரை பாட்டிலுக்கும் அதிகமாகக் காலி செய்தனர். கேசு இரண்டு பூரிகளை வாங்கினார். கறியும், சால்னாவும், சப்பாத்தியும், ஈரலும், சோறும், மீனும் வாங்கப்பட்டது. மாதவ் சாராயக்கடைக்கு எதிரில் இருந்த கடைக்குச் சென்று அங்கிருந்து அனைத்தையும் இலைத்தட்டில் வைத்து எடுத்து வந்தான். அதற்கு ஒன்றரை ரூபாய் செலவானது. சாராயத்துக்கும் சாப்பாட்டுக்கும் போக அவர்களிடம் கொஞ்சம் பணமே மீதியிருந்தது.
இருவரும் ஒரு புலி காட்டில் தான் வேட்டையாடிய இரையைச் சாப்பிடுவதைப் போலப் பூரிகளைச் சாப்பிட்டனர். யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அச்சம் இல்லை, பெயர் கெட்டுவிடுமோ என்னும் கவலை இல்லை. இந்த நிலையை அவர்கள் இருவரும் எப்போதோ அடைந்திருந்தனர்.
“நமது ஆத்மா மகிழ்ச்சியாக இருக்கே. இதனால நமக்குப் புண்ணியம் கிடைக்கும்ல” – பெரிய தத்துவஞானியைப் போலக் கேசு பேசினார்.
மாதவ் தலையைத் தொங்கப்போட்டபடி, “கண்டிப்பா.. கண்டிப்பா கிடைக்கும். கடவுளே உனக்கு எல்லாம் தெரியும். என் வீட்டுக்காரியைச் சொர்க்கத்துக்கு அனுப்பு. நாங்க மனம்விட்டு அவளுக்காக வேண்டிக்கிறோம். இன்னிக்கு நாங்க சாப்பிட்ட சாப்பாட்டை என்னிக்கும் மறக்கமாட்டோம்”
சிறிது நேரத்துக்குப் பின் மாதவுக்குச் சந்தேகம் தோன்றியது. “ஏன் அப்பா, நாமும் ஒரு நாள் அங்க போவோம்ல?”
இந்தக் குழந்தைத்தனமான கேள்விக்குக் கேசு பதில் சொல்லவில்லை. மாதவை முறைத்துப் பார்த்தார்.
“அங்க அவ எனக்குச் சவத்துணி ஏன் கட்டலைன்னு கேட்டா என்ன செய்றது?” எனக் கேட்டான்.
“ம்ம்ம்… நான் சொல்லுவேன் உன் தலைன்னு”
“கண்டிப்பா கேட்பா”
“அவளுக்குச் சவத்துணி கிடைக்கலைன்னு நீ எப்படி நினைச்ச? என்னை மடையன்னு நினைச்சியா? நான் என்ன அறுவது வருஷமா இந்த உலகத்துல வெட்டியாவா இருந்தேன்? அவளுக்குச் சவத்துணி கிடைக்கும். நாம கொடுக்க நினைத்ததைவிட நல்ல சவத்துணி கிடைக்கும்.”
மாதவுக்கு நம்பிக்கை இல்லை. “சொல்லு யார் கொடுப்பா? நீ பணத்தையெல்லாம் சுருட்டிட்ட.”
“நான் சொல்றேன் அவளுக்குச் சவத்துணி கிடைக்கும். ஏண்டா சொன்னா கேட்கமாட்டேன்ற?”
“யாரு கொடுப்பா? ஏன் சொல்லமாட்டேன்ற?”
“இப்ப நமக்குக் காசு கொடுத்த அதே மக்கள்தான் தருவாங்க. காசா நம்ம கையில கொடுத்தா திரும்பவும் நம்ம குடிச்சுத் தீர்ப்போம், அவங்க திரும்பவும் சவத்துணி கொடுப்பாங்க”
இருள் கவிழக்கவிழ விண்மீன்கள் ஒளிர்ந்தன. சாராயக்கடையில் கூச்சலும் களியாட்டமும் அதிகமானது. சிலர் பாடினர், சிலர் ஆடினர், சிலர் நண்பர்களைக் கட்டிப்பிடித்தனர், சிலர் நண்பர்களுக்கு மதுவைப் புகட்டினர், சிலர் நாக்குழறினர். அந்தச் சூழலில் போதை இருந்தது, காற்றில் மயக்கம். இங்கு வந்து மதுவருந்துவோர் யாராயினும், மதுவை விடவும் இந்தச் சூழலை மிகவும் ரசித்தனர். வாழ்க்கை அவர்களை இங்கு அழைத்து வருகிறது, சிறிது நேரத்துக்கு அவர்கள் தங்களை மறக்கின்றனர்; தாங்கள் உயிருடன் இருக்கிறோமா, பிணமாகிவிட்டோமா, பாதி உயிர்தான் உடலில் இருக்கிறதா என அவர்களுக்குத் தெரியாமற்போகிறது.
அங்கே இந்தத் தந்தை மீதும் மகன் மீதும் அனைவரின் விழிகளும் இருந்தன. இருவரும் சாராயத்தை உறிஞ்சிப் போதையை ரசித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் கவலை இல்லாத மனிதர்கள். முழுப்புட்டியையும் முடித்துவிட்டனர்.
சாப்பிட்டு முடித்த மாதவ் இலையில் மீதியான உணவை எடுத்துச்சென்று ஒரு பிச்சைக்காரனுக்குக் கொடுத்தான். கொடுத்துவிட்டு அருகில் நின்று தான் கொடுத்ததைத் தானே ரசித்தான். பெரிய கொடையைக் கொடுத்ததாகப் பெருமைப்பட்டான். வாழ்க்கையில் ஏதோ மற்றவர்களுக்குக் கொடுக்கப் பெரிய வாய்ப்பு கிடைத்ததாக நினைத்து மகிழ்ந்தான்.
“நல்லா திருப்தியா சாப்பிடு. சாப்பாடு போட்டவங்களை மனதார வாழ்த்து. உனக்குச் சாப்பாடு போட்ட மகராசி செத்துப்போயிட்டா. ஆனா, உன் வாழ்த்து அவளைப் போய்ச்சேரும். இது அவ கஷ்டப்பட்டுச் சம்பாதிச்ச காசு. மனசார வாழ்த்திட்டுப் போ.” – கேசு பிச்சைக்காரனிடம் பேசினார்.
மாதவ் வானத்தைப் பார்த்துப் பேசினான். “அவ சொர்க்கத்துக்குதான் போவா அப்பா. சொர்க்கத்துல ராணியாட்டம் இருப்பா.”
கேசு நீந்துவதைப் போல் கைகளை வீசித் தள்ளாடி நின்றார். “ஆமாண்டா மகனே. அவ சொர்க்கத்துக்குதான் போவா. அவ போகலைன்னா யாரு போவா? இந்தக் கொழுத்த பணக்காரங்களா போவாங்க? ஏழைகளோட காசைக் கொள்ளையடிச்சுட்டுப் பாவத்தைக் கழுவ கங்கைக்குப் போறாங்க, கோயிலுக்குப் போறாங்க.”
போதைக்கு எல்லாத் திசைகளிலும் பயணம் செய்யும் திறன் உண்டு. அவர்களுடைய மகிழ்வான மனநிலை மாறி சோகத்தைத் தழுவியது.
“ஆனா அப்பா அவ வாழ்க்கைல ரொம்பக் கஷ்டத்தை அனுபவிச்சாளே. சாகும்போதும் அவளுக்கு எவ்ளோ கஷ்டம்.” கண்ணைக் கசக்கியபடி மாதவ் அழத் தொடங்கினான்.
“ஏன் அழுகிறாய் மகனே! சந்தோஷப்படு, அவ இந்த மாய உலகத்துலேர்ந்து முக்தியடைஞ்சுட்டா. கொடுமையிலிருந்து தப்பிச்சுட்டா. ரொம்பக் கொடுத்துவச்சவ, ரொம்பச் சீக்கிரமா இந்த மாயையிலிருந்து விடுபட்டுட்டா.”
அங்கேயே இருவரும் நின்று பாடினர்.
“மாயக்காரி உன் கண்ணு மின்னுதடி! மாயக்காரி…”
மொத்த சாராயக்கடையும் இவர்களைப் பார்க்க, இருவரும் முழுப்போதையில் பாடினர். பின்னர் மெதுவாக ஆடினர், குதித்தனர், நொண்டியடித்தனர், விழுந்தனர், எழுந்தனர், பாய்ந்தனர். திமிரும் காட்டினர். கடைசியில் போதையின் உச்சகட்டத்தில் மயங்கி அங்கேயே தரையில் உணர்வற்று விழுந்தனர்.