எபோலா நோயைச் சர்வதேச நாடுகளின் கவனத்தைக் கோரும் பொது சுகாதார அவசர நிலையாக (PHEIC – PUBLIC HEALTH EMERGENCY OF INTERNATIONAL CONCERN) உலக சுகாதார நிறுவனம் மே 17, 2026 அறிவித்துள்ளது. இந்நாட்களில் எபோலா குறித்து நாம் அனைவரும் அறிந்துகொள்ள பல செய்திகள் உண்டு. அறிந்துகொள்வோம் வாருங்கள்.
எபோலா நோய் என்றால் என்ன?
மத்திய ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவனத்துக்குக் கீழ் காங்கோ எனும் நாடு உள்ளது. இந்த நாட்டின் எபோலா எனும் நதிக்கரையில் இந்த நோய்த்தொற்று முதலில் கண்டறியப்பட்டதால் “எபோலா” நோய் என்று பெயரிடப்பட்டது. இது அடிப்படையில் வைரஸ் எனும் தீநுண்மியால் பரவும் நோயாகும். 1976-இல் முதல் முறையாகத் தொற்று கண்டறியப்பட்டது முதல் இதுவரை அங்கே 17-ஆவது முறையாகக் கொள்ளை நோயாக உருவெடுத்துள்ளது.
எபோலா வைரஸ் குடும்பத்தில் மூன்று வகையான வைரஸ்கள் இனங்காணப்பட்டுள்ளன.
1. எபோலா வைரஸ் / ஜைர் (Zaire) வைரஸ் இந்த வகைதான் அடிக்கடி கொள்ளை நோய்களை உருவாக்கி வந்துள்ள வகையாகும். பாதிக்கப்பட்டவர்களில் 80-90% மரணத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. ஏற்கனவே 2014-2016 காலகட்டங்களிலும், 2018-2020 காலகட்டங்களிலும் கொள்ளை நோயாக உருவெடுத்துச் சில ஆயிரம் மரணங்களை ஏற்படுத்திய வைரஸ் இது. இந்த வைரஸுக்கு எதிராகச் செயல்படும் தடுப்பூசி கண்டறியப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளது. கூடவே மோனோகுளோனல் ஆண்டிபாடி எனும் பிரத்யேக மருந்தும் பயன்பாட்டில் உள்ளது.
2. சூடான் வைரஸ் 3. புண்டிபக்யோ வைரஸ் மேற்கூறிய இரண்டு வகையும் அரிதாக வெளிப்படுபவை. எனினும் மரண விகிதங்கள் அதிகம். மேற்கூறிய இரண்டு வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் வழக்கத்தில் இல்லை.
இப்போது, கடந்த ஏப்ரல் 2026 முதல் காங்கோவில் புண்டிபக்யோ வைரஸினால் எபோலா தொற்றுநோய் பரவி வருகிறது. இதுவரை 250 பேர் தொற்றாளர்கள் என்று இனங்காணப்பட்டு அதில் 80 பேர் மரணமடைந்துள்ளனர்.
ருவாபரா, மாங்வாலா, புனி ஆகிய ஊர்களில் பரவி வந்த நோய் திடீரெனச் சம்பந்தமே இல்லாமல் இட்டூரி என்ற தொலைதூர ஊரில் உள்ளவர்களுக்கும் தொற்று பரவி “சமூகப் பரவல்” எனும் நிலையை அங்கு அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மரணமடைந்தவர்களில் நான்கு பேர் மருத்துவ ஊழியர்கள் என்னும்போது நிலைமையின் தீவிரம் சற்று கடுமையாக உரைக்கிறது.
இட்டூரி எனும் ஊரில் சுரங்கங்கள் இருப்பதால் அங்கு வெளியூர்களில் இருந்து வந்து செல்லும் மக்கள் அதிகமாக இருப்பதும், கூடவே அருகில் உகாண்டா, தென் சூடான், ருவாண்டா ஆகிய நாடுகளும் இருப்பதால் எளிதில் அடுத்தடுத்த அக்கம்பக்க நாடுகளுக்கும் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
இந்த நோய் எப்படிப் பரவுகிறது?
எபோலா வைரஸ்களின் முக்கியமான தேக்கவோம்புயிரியாக (RESERVOIR HOST) இருப்பவை “பழந்தின்னி வௌவால்கள் ” ஆகும். இந்த வௌவால்கள்களில் இயற்கையாக இந்த வைரஸ்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த வௌவால்கள், குரங்குகள், மனிதக்குரங்குகள், மான்கள் உள்ளிட்டவற்றைக் கடிக்கும்போது அவற்றுக்குப் பரவுகின்றன.
இந்த வௌவால்களை மனிதர்கள் வேட்டையாடும்போதும், அவற்றை முறையாகச் சமைக்காமல் உண்ணும்போதும், அந்த வௌவால்களின் உடல் எச்சங்களுடன் தொடர்பு ஏற்படும்போது தொற்றுப்பரவல் நடக்கிறது.
இவ்வாறு வௌவால்களிடம் இருந்து தொற்று கண்ட மனிதர்களிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு எப்படிப் பரவுகிறது?
- தொற்று கண்ட மனிதரிடம் மற்றொரு ஆரோக்கியமான மனிதர் நீண்ட நேரம் தொற்று கண்டவரின் உடல் சுரப்புகளான இரத்தம், வாந்தி, சிறுநீர், மலம், வியர்வை, விந்து, உமிழ்நீர் ஆகியவற்றுடன் தொடர்பில் இருப்பதால் பரவுகிறது.
- தொற்றுக் கண்டவர் உபயோகித்த ஊசி, மருத்துவ உபகரணங்கள் மூலம் பரவலாம்.
- எபோலா தாக்கி இறந்தவரின் பிரேதத்தைத் தொட்டு அதில் இருந்து வரும் உடல் சுரப்புகளில் தொடர்பு கொண்டவர்களுக்குப் பரவுகிறது.
- எபோலா நோய் கண்டு குணமானவரின் விந்து, கண்கள், மூளை ஆகிய பகுதிகளில் சுமார் பதினைந்து மாதங்கள் வரை வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, எபோலா குணமடைந்தவரிடம் இருந்து ஒரு வருட காலத்துக்குப் பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் தொற்று பரவும் வாய்ப்பும் உள்ளது.
தொற்று கண்டவரிடம் தொடர்பில் இருந்தவர்களுக்கு 2 முதல் 21 நாட்களில் நோயின் அறிகுறிகள் தோன்றும்.
நோயின் அறிகுறிகள் யாவை?
- காய்ச்சல்
- தலைவலி
- உடல் சோர்வு
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- ரத்தக்கசிவு
அறிகுறிகள் தோன்றிய பின் மட்டுமே தொற்று பிறருக்குப் பரவும். ஒருவரின் உடலுக்குள் வைரஸ் இருக்கும் காலம் வரை தொற்று பிறருக்குப் பரவும்.
எபோலா நோய்க்குரிய சிகிச்சை என்ன?
எபோலா வகை (Zaire virus)-க்கு எதிராகத் தடுப்பூசி மற்றும் மோனோகுளோனல் ஆண்ட்டிபாடிகள் கண்டறியப்பட்டுள்ளன. மற்ற இரண்டு வகைகளுக்குத் தடுப்பூசி கண்டறியப்பட்டு வருகிறது.
- நீர்ச்சத்து இழப்பைச் சரிசெய்தல்
- அறிகுறிகளுக்குரிய சிகிச்சை
- உடல் தன்னைச் சரிசெய்யுமட்டும் ஒத்திசைவான சிகிச்சை மட்டுமே அளிக்க முடியும்.
சராசரியாக 35% மரண விகிதங்களைக் கொண்டுள்ளது (25 முதல் 90%). ஆர்டிபிசிஆர் – எலிசா (RT-PCR & ELISA) பரிசோதனை முறையில் உடல் சுரப்பில் இருந்து வைரஸைப் பிரித்துக் கண்டறிய முடியும்.
இந்த எபோலா குறித்து இந்தியர்கள் அச்சம் கொள்ள வேண்டுமா?
அச்சம் தேவை இல்லை. இது கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்றாக மாறும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.
இந்தத் தொற்றுச் சாதாரணமாக ஒருவரின் அருகில் இருந்து பேசுவதாலோ தொடுவதாலோ பரவுவதில்லை. கொரோனா போன்று இருமுவதாலோ தும்முவதாலோ காற்றிலோ பரவுவதில்லை. மாறாகத் தொற்றாளரின் உடல் சுரப்புகளுடன் நீண்ட நேரம் தொடர்பில் இருந்தால் மட்டுமே பரவுகிறது.
கூடவே, கொரோனா போன்று அறிகுறியற்ற நிலையில் இந்த நோய் பிறருக்குப் பரவுவதில்லை. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றிய பின்னர் மட்டுமே பரவுகிறது. எனவே அறிகுறிகள் தோன்றியோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்போது தொற்றுப்பரவலும் மட்டுப்பட்டுப் போகிறது.
இதற்கடுத்த படியாக, கொரோனா வைரஸ் தாக்கும்போது மரண விகிதங்கள் மிகக் குறைவு. எபோலா வைரஸில் தான் தாக்கியவரை நோயுறச் செய்து மரணமடைய வைப்பதால் பிறருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.
பெருந்தொற்றாக ஒரு வைரஸ் தொற்று உருவெடுக்க முக்கியமாக இருக்க வேண்டிய குணங்கள்:
- காற்றின் மூலம் (இருமல் தும்மல் மூலம்) பரவ வேண்டும்.
- அறிகுறிகள் தோன்றும் முன்னமே பிறருக்குப் பரவ வேண்டும்.
- அதிக மரண விகிதங்களை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.
இந்த மூன்று விதிகளையும் எபோலா கொண்டிருக்கவில்லை என்பதால் எபோலாவால் உலகையே அச்சுறுத்தும் பெருந்தொற்றாக உருவெடுக்க இயலாது என்பது திண்ணம்.
இந்தியாவில் எபோலா வைரஸின் முக்கிய இருப்புத் தேவையான பழந்தின்னி வகை வௌவால்கள் கானகங்களில் இல்லை. அந்த வௌவால்கள் மத்திய ஆப்பிரிக்காவிலேயே அதிகம் காணப்படுகின்றன.
எனினும் தற்கால சூழ்நிலையில் சர்வதேச விமானப் பயணங்கள் என்பது இன்றியமையாததாகி விட்டன. எனவே நோய் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதும், அறிகுறிகள் தோன்றியோரைத் தனிமைப்படுத்துவதும், சர்வதேச பயணிகள் இது குறித்து இன்னும் எச்சரிக்கையுடன் இருப்பதும் காலத்தின் கட்டாயம்.