Home நாவல்வலைப்பூ – 6

வலைப்பூ – 6

by Iyappan Krishnan
0 comments
This entry is part 6 of 6 in the series வலைப்பூ

சனிக்கிழமை காலை. பத்து முப்பது.

பெல்லந்தூர் அடுக்குமாடிக் குடியிருப்பு வழக்கத்தை விட அமைதியாக இருந்தது. அர்ஜுன் நேற்றிரவு சுசியிடம் எல்லாமும் ஒப்பித்துவிட்டான். அவளுக்குப் புரிந்தது – மீனா அவனது மாயையைக் கலைத்துவிட்டாள் என்பது. அர்ஜுன் சோபாவில் அமர்ந்திருந்தான். கைகளில் காபி குவளை ஆறிக்கொண்டிருந்தது.

இரவெல்லாம் தூங்கவில்லை. விக்ரம் வருவான் என்ற எண்ணமே அவனைச் சற்றுப் பதற்றமாக்கி இருந்தது. என்ன நடக்கும்? ஏதும் சண்டை போடுவானா? எச்சரிக்கை தருவானா? இல்லை… இல்லை… அவன் யோசித்துக்கொண்டிருக்கும்போதே அழைப்பு மணி ஒலித்தது.

அர்ஜுனின் இதயம் ஒரு விநாடி நின்று துடித்தது. சுசி எழுந்து சென்று கதவைத் திறந்தாள். ஆஜானுபாகுவாக ஒருவன் வெளியே நின்றிருந்தான்.

விக்ரம். அர்ஜுனைப் போல நாற்பதுகளில் ஒரு மனிதன். ஆனால், கண்களில் ஓர் அசாதாரணமான கூர்மை. நேர்த்தியாகச் செருகப்பட்ட சட்டை. எந்தப் பதற்றமும் இல்லாத உடல்மொழி.

“நான் விக்ரம். உள்ளே வரலாமா?”

சுசி விலகி வழிவிட்டாள். “வாங்க.”

விக்ரம் அர்ஜுனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். சுசி சமையலறைப் பக்கம் நின்றாள். “காபி?” என்றாள்.

“சர்க்கரை, பால் இல்லை என்றால் எனக்கு ஓகே” என்றான் விக்ரம்.

பரஸ்பர அறிமுகம் செய்து கொண்டனர். அர்ஜுனுக்கு ஒவ்வொரு நொடியும் நரகமாகக் கழிந்தது. முன்னாள் காதலியின் கணவன், இப்போதும் அவர்கள் ஏதோ தொடர்பில் இருப்பதாக நினைத்து வந்திருக்கிறான் போல.

விக்ரம் நேராக விஷயத்திற்கு வந்தான். “எனக்கு ரொம்ப நேரம் இல்லை அர்ஜுன். நான் மென்பொருள் துறையைச் சேர்ந்தவன் இல்லை. வங்கியில வேலை பார்க்கிறேன். நான் ரொம்ப லாஜிக்கா யோசிக்கிறவன். நேத்து ராத்திரி மீனா என்கிட்ட எல்லாமே சொன்னா. பிரிகேட் ரோடு சந்திப்பு உட்பட.”

அர்ஜுன் தலை குனிந்திருந்தான்.

“அந்த வலைப்பூ. இரண்டாயிரத்து எட்டில் நீங்க ஆரம்பிச்சது. அதை மீனா ஒரு ரகசிய டைரியாப் பயன்படுத்திட்டு இருந்தா. அது எனக்குத் தெரியும். ஆமாம், எனக்குத் தெரியும்.”

அர்ஜுன் சட்டென்று நிமிர்ந்தான்.

“எனக்குத் தெரியுங்கறதே மூணு நாள் முன்னாடிதான் அவளுக்குத் தெரியும். அவளுக்கு ஏதோ ஒரு வடிகால் தேவைப்பட்டது. வலைப்பூ, அதைச் சேமிக்கும் ஒரு இடம். அவ்வளவுதான். நான் அதைப் பெருசா எடுத்துக்கல.”

சுசி காபி கோப்பையை நீட்டினாள். அந்த மணத்தை நன்றாக மூச்சிழுத்து உள்வாங்கினான் விக்ரம்.

“அர்ஜுன், நீங்க போன வாரம் அதைத் திறந்தீங்க. நீங்க திறந்த உடனே அந்தக் கணினி எனக்கு ஒரு மெயில் அனுப்பிச்சு. ஏன்னா, அந்த வலைப்பூவோட கோடிங்ல கொஞ்சம் சில்மிஷம் செஞ்சு வச்சிருந்தேன்..”

சுசி குறுக்கிட்டாள். “அப்ப ஏன் மீனா நேத்து என்கிட்ட அப்படிப் பேசினா? நீங்க பார்த்தது அவளுக்குத் தெரியாதா?”

“தெரியும்.. ஆனா பெருசா பேசிக்கல” என்றான் விக்ரம், சுசியைப் பார்த்து.

“மீனா நேத்து உங்ககிட்ட ரொம்ப முதிர்ச்சியாப் பேசினதா நினைச்சிட்டு இருக்கா. ஆனா உள்ளுக்குள்ள அவளும் உடைந்திருந்தா. ஒண்ணு சொல்லவா? மூணு வாரத்துக்கு முன்னாடி அவ பழைய குறிப்பேட்டைப் பார்த்து அழுதது அர்ஜுனை நினைச்சு இல்லை. அவளுக்கு வேலையில பெரிய சிக்கல். அவளோட குழுவை முழுசா வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க.”

சுசி உச்சுக்கொட்டினாள். “அடக்கடவுளே!”

“ஆமா, அந்த மன அழுத்தத்துல பழைய நினைவுகள்ல தஞ்சம் புகுந்தா. மனித மனம் அப்படித்தான். நீங்க தற்செயலா அதே நேரத்துல அந்த வலைப்பூவைத் திறந்திருக்கீங்க. இரண்டு பேருடைய பலவீனமும் இணையத்துல முட்டிக்கிச்சு.”

விக்ரம் மீண்டும் அர்ஜுனைப் பார்த்தான். “அர்ஜுன், எனக்கு என் மனைவி வேணும். என் குழந்தைகள், என் குடும்பம் வேணும். பதினேழு வருஷத்துக்கு முன்னாடி விட்ட ஒரு அம்பு, இன்னைக்கு என் வீட்டு ஜன்னலை உடைக்கக் கூடாது.”

“நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் விக்ரம். சாரி.”

“நீங்க முதலில் அதைச் சுசி கிட்டத்தான் சொல்லணும் அர்ஜுன்” என்ற விக்ரம், தன் சட்டைப் பையிலிருந்து ஒரு துண்டுச் சீட்டை எடுத்து மேசையின் மீது வைத்தான்.

“இது அந்த வலைப்பூவோட புதிய பாஸ்வோர்ட். மீனாவுக்குத் தெரியாம நான் நேத்து ராத்திரி மாத்திட்டேன். இதை நீங்கதான் உருவாக்கினீங்க. நீங்களே இதை நிரந்தரமா அழிச்சிடுங்க, இல்ல வச்சிக்கிடுங்க. ஆனா, எங்க வாழ்க்கையில் எந்தத் தலையீடும் வேண்டாம்.”

விக்ரம் எழுந்து நின்றான், இரு கைகளைக் கூப்பிக்கொண்டு. பின் வாசலை நோக்கி நடந்தவன், திடீரென்று சுசியைப் பார்த்து நின்றான்.

“உங்க தைரியம் பிடிச்சிருக்கு சுசி. ஆனா, உங்க புருஷனை மாயையில இருந்து வெளியே கொண்டு வர, நீங்க என் மனைவியைப் பகடைக்காயா ஆக்கினது நியாயமில்லை. அடுத்தவங்க உணர்வுகளை வச்சு அல்காரிதம் எழுதாதீங்க.”

விக்ரம் கதவைத் திறந்து வெளியேறினான்.

அறைக்குள் பேரமைதி. மேசையின் மீது அந்தத் துண்டுச் சீட்டு ஒரு வெடிகுண்டைப் போலக் கிடந்தது. அர்ஜுன் அந்தச் சீட்டையும், சமையலறை ஓரம் நின்றுகொண்டிருக்கும் சுசியையும் மாறி மாறிப் பார்த்தான்.

(தொடரும்)

Series Navigation<< வலைப்பூ – 5

Author

You may also like

Leave a Comment