Home நாவல்அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17:  நீறு பூத்த நெருப்பு

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17:  நீறு பூத்த நெருப்பு

by Iyappan Krishnan
0 comments
This entry is part 38 of 38 in the series அசுரவதம்

மண்டோதரி அதிர்ந்து நின்றாள். சூர்ப்பனகை சொல்ல முயன்ற அந்த ரகசியம் மண்டோதரியை வேரோடு அசைத்துவிட்டது. அவள் சொன்னவற்றைக் கேட்டதில் இருந்து தன்னிலை இழந்து மண்டோதரி ஒரு கனவுலகில் பயணித்துக் கொண்டிருந்தாள்.

உண்மை நீறு பூத்த நெருப்பைப் போன்றது. அது வெளிவரும் காலத்துக்காக என்றென்றும் தன் தணலைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும். இன்று சூர்ப்பனகை அந்தத் தணலின் மீதிருந்த சாம்பலை ஊதி அகற்றினாள். அது மண்டோதரியைச் சுட்டுக் கொண்டிருக்கிறது.

அசோக வனத்துத் தென்றல் அந்த அந்தப்புரத்துச் சலவைக் கல் தூண்களின் வழியே நுழைந்து, மண்டோதரியின் முத்துச் சரங்களை அசைத்துச் சென்றது. இளவேனிலின் மாலைப் பொழுது அது. மேலை வானில் சூரியன் தன் செங்கதிர்க் கரங்களை மெல்லச் சுருக்கிக் கொண்டு, கடலுக்குள் அமிழ்ந்து கொண்டிருந்தான். அந்த அந்திப் பொழுதின் ஒளியில், மண்டோதரியின் முகப் பொலிவு இன்னும் தீர்க்கமாகக் காட்சியளித்தது. மயனின் மகளான அவளது பேரழகு, சிற்பக் கலைக்குச் சவால் விடுவது போன்ற தோற்றம் கொண்டது. கூர்மையான நாசி, பவளச் செவ்வாய், அலை அலையாகப் புரளும் கார்மேகக் கூந்தல். இடுப்பில் அணிந்திருந்த தங்க மேகலை, அவள் மூச்சுவிடும் வேகத்திற்கு ஏற்ப மெல்லிய ஒலியை எழுப்பியது.

அந்த அழகைக் கண்டு பெருமூச்சு விட்டாள் சூர்ப்பனகை. இந்த அழகை அவள் ஏற்கனவே காட்டில் கண்டிருக்கிறாள். இந்த அழகுடன் கூடவே தெய்வீக ஒளியும் கொண்ட பேரழகி அவள் கண்ட அந்தப் பெண்.

ஆனால், அந்த எழிலரசியின் கண்கள் எப்போதும் போல் கம்பீரமாக இல்லை; அதில் பெரும் நடுக்கமும், எல்லையற்ற அதிர்ச்சியும் உறைந்து கிடந்தன.

அவளுக்கு எதிரே வஞ்சனையின் மொத்த உருவமாக நின்றிருந்தாள் சூர்ப்பனகை. லங்கையின் பேரரசிக்கு முன்னால், தன் வஞ்சப் புன்னகை பூத்த முகத்தை நீட்டி, அந்த ரகசியத்தை உதிர்த்திருந்தாள். அந்த வஞ்சகத்தை வெகு இலகுவாகத் தன் முகத்தில் மறைத்திருந்தாள்.

“என்னை மகளே மகளே என்று தான் அழைத்திருந்தீர்கள் அண்ணியாரே. வெகு காலம் வரை நான் தங்களை என்னை ஈன்ற அன்னை என்றே நினைத்திருந்தேன்… நினைத்துக் கொண்டிருக்கிறேன்.”

மண்டோதரி முகத்தில் மீண்டும் வாஞ்சை மிளிர்ந்தது.

“அதில் சந்தேகமா மகளே…” என்றாள் மண்டோதரி.

சூர்ப்பனகை முகத்தில் இப்போது லேசான துயரம் படர்ந்தது. தன் இடத்தை, தான் மட்டுமே உரிமை கொண்டாடிய உறவில் இப்போது தான் கண்டறிந்த புதிய உறவு உள்நுழைந்திருப்பது அவளைச் சங்கடத்திற்கும், மெல்லிய சோகத்திற்கும் உள்ளாக்கியது.

“அண்ணி! பஞ்சவடியில் நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன்.”

மண்டோதரி சிரித்தாள்.

“உலகத்தில் பெண்களுக்குப் பஞ்சம் வந்துவிட்டதா காமவள்ளி? எங்கோ எப்போதோ பார்த்த பெண்ணைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியம் உருவாகிவிட்டது பாரேன்!”

“இல்லை அம்மா… அந்தப் பெண்… அந்தப் பெண்…”

சூர்ப்பநகையின் குரல் தளர்ந்து தழுதழுத்துக் கொண்டிருந்தது. அண்ணி என்ற வார்த்தை மறைந்து போயிருந்தது. பழைய காமவள்ளி அங்கே தோன்றினாள்.

“அவள் உங்களைப் போலவே இருந்தாள். அவளிடம் உன் சாயல், உன் கண்கள், உன் அங்க அசைவுகள்… எல்லாமே உன்னுடைய நகல் எனத் தோன்றுகிறது.”

“காமவள்ளி…” என்றாள் அதிர்ச்சியாக.

“ஆம் அம்மா…” அவள் கைகள் அப்போது ஆதரவைத் தேடியது போலக் காற்றில் அலைந்தது. மெல்ல மண்டோதரி அருகில் வந்து அவள் கைகளை இருகப் பற்றிக் கொண்டாள்.

அந்தத் தீண்டுதல் மண்டோதரியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவள் இந்த உலகைத் தாண்டி எங்கோ ஓரிடத்தில் பயணித்துக் கொண்டிருந்தாள் மனதளவில்.

சூர்ப்பனகை அவளைக் கொஞ்ச நேரம் லேசாக அணைத்துக் கொண்டிருந்தாள். பின்பு அந்த இடத்தை விட்டு நீங்கினாள். சூர்ப்பனகை அவ்விடத்தை விட்டு நகர்ந்த பின்பும், மண்டோதரி அதே இடத்தில் சிலையாக நின்றிருந்தாள்.

மனித மனம் விசித்திரமானது. நாம் எதை மறக்க வேண்டும் என்று நினைத்து, காலத்தின் ஆழமான அடுக்கில் புதைத்து வைக்கிறோமோ, அதுவே ஒரு நாள் விஸ்வரூபம் எடுத்து நம் முன்னே வந்து நிற்கும். கர்மவினை என்பது மனிதன் ஓடும் வேகத்தைக் காட்டிலும் வேகமாக ஓடக்கூடியது. நாம் எவ்வளவு பெரிய அரண்மனைக்குள்ளும் ஒளிந்து கொள்ளலாம், ஆனால் நம் கடந்த காலம் துரத்திக் கொண்டே வந்து கதவைத் தட்டும்.

மண்டோதரியின் நினைவுகள் பின்னோக்கிப் பாய்ந்தன.

இராவணனின் ஆணவமும், தானென்ற அகந்தையும் உச்சத்தில் இருந்த காலம். முனிவர்கள் வாழ்வதற்காக இராவணனுக்கு வரியாகத் தங்களின் இரத்தத்தைக் கொடுத்து உயிர்த்திருந்த காலம்.

இராவணன் முனிவர்களிடமிருந்து வரியாகப் பெற்ற அவர்களின் இரத்தத்தைச் சேகரித்து ஒரு கலசத்தில் சேமித்து வைக்கிறான். அந்த முனிவர்களில் கிருத்சமத என்ற முனிவரும் ஒருவர். அவர் லட்சுமி தேவியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டி, தர்பைப் புல்லின் சாற்றை ஒரு பாத்திரத்தில் மந்திரம் ஓதிச் சேர்த்து வைத்திருந்தார். இராவணன் அந்தப் பாத்திரத்தில் இருந்த புனித சாற்றையும், அவரின் இரத்தத்தையும் முனிவர்களின் இரத்தத்தோடு கலந்துவிட்டான். இதனால் அந்த இரத்தக் கலசம் அதிக வீரியமும் முனிவர்களின் சாப சக்தியும் கொண்டதாக மாறியது.

அரக்கர்கள் மிகுந்த தன் அரண்மனையில் மறைத்து வைத்துவிட்டு, இது குடித்தால் மரணத்தை வரவழைக்கும் கொடிய விஷம் என்று எச்சரித்தான். யாரும் மறந்தும் அந்தக் கலசத்தைத் தொடுவதையும் அவன் அனுமதிப்பதில்லை. அவனது அந்தரங்க அறையில் அங்கே செல்ல அனுமதி பெற்றோர் இருவர்; ஒன்று இராவணன், மற்றொன்று மண்டோதரி.

அந்தச் சமயத்தில் கணவனின் அதர்மங்களைச் சகித்துக் கொள்ள முடியாமல், தன் உயிரை மாய்த்துக் கொள்ள அதை அமுதெனப் பருகினாள். ஆனால் விதி அவளுக்கு மரணத்தைத் தரவில்லை; ஒரு விசித்திரமான கருவைத் தந்தது. இராவணனின் பேராற்றலும், முனிவர்களின் தவசக்தியும், லட்சுமியின் அருளும் கலந்த ஒரு தெய்வீகக் கரு.

சோதிடர்கள் அந்தக் குழந்தையால் இராவணனின் உயிருக்கு ஆபத்து என்றதும், அந்தப் பிஞ்சுக் குழந்தையை ஒரு தங்கப் பேழையில் வைத்து அவள் கடலில் வீசிய அந்த நிகழ்வு, நேற்று நடந்தது போல் அவள் மனக்கண்ணில் நிழலாடியது.

“என் மகளா? அசோக வனத்தில், என் கணவனின் காமப் பார்வைக்கு முன்னால் நடுங்கிக் கொண்டிருப்பது… நான் ஈன்றெடுத்த என் சொந்தக் குருதியா?” மண்டோதரியின் உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.

அவள் தன் அந்தப்புரத்தின் பலகணி வழியே அசோக வனம் இருக்கும் திசையை நோக்கினாள். பெண்மை என்பது எவ்வளவு பெரிய பலவீனம்! ஒரு தாயாகத் தன் மகளை ஓடிச் சென்று அணைத்துக் கொள்ளத் துடித்தது அவளது உள்ளம்.

ஆனால், இலங்கையின் மகாராணியாக, இராவணனின் தர்மபத்தினியாக அவளுக்கு முன்னால் ஒரு பெரும் தர்மசங்கடம் நின்றது. இராவணன் சீதையை அடைந்தால், அது உலகம் ஏற்காத மகா பாதகம்; தந்தை மகளைக் கூடும் பேரழிவு. இராமனோடு போர் தொடுத்து இராவணன் மடிந்தால், அது அவளது மாங்கல்யத்தின் முடிவு.

எந்தப் பக்கம் திரும்பினாலும் சாம்பலாகப் போவது அவளுடைய வாழ்வுதான் என்பது அவளுக்குப் புரிந்தது. உண்மை எப்போதும் நிம்மதியைத் தருவதில்லை; சில நேரங்களில் அது மரணத்திற்கு நிகரான வலியையே தருகிறது.

மண்டோதரி தன் கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

தர்மமும் அதர்மமும் மோதிக்கொள்ளும் இந்த மகா யுத்தத்தில், தன் கணவனின் அழிவு தொடங்கிவிட்டது என்பதை அவளது ஞானம் உணர்த்தியது.

அதே நேரம் சூர்ப்பனகை ஒரு மானுடப் பெண் உருவில் அசோகவன மரங்களின் மறைவில் இருந்து சீதையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இதுதான் உலகின் விசித்திரம் சீதை, நீ என் தங்கை. என் பழிக்காக உன்னைப் பகடைக் காயாக்கிய பாவி நான்” என்று மனதுக்குள் குமைந்தாள்.

மெல்ல மெல்ல சீதையை அணுகினாள். அவள் கண்களில் இந்த அபாயத்தில் இருந்து சீதையை எப்படிக் காப்பது என்ற தவிப்பு இருந்தது.

பி.கு:

இந்தக் கதையின் முக்கிய மூலம் அற்புத ராமாயணம் என்னும் சமஸ்கிருத நூலாகும். இந்த நூல் பாரம்பரியமாக வால்மீகி முனிவராலேயே இயற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.

இரத்தக் கலவையை உட்கொண்டதால் உண்டான விசித்திரக் கருவை அழிக்க நினைத்து, அவள் மிதிலையில் அங்கு ஒரு பெட்டியில் அந்தப் பெண் குழந்தையை வைத்துப் பூமியில் புதைத்து விடுகிறாள். பிற்காலத்தில் ஜனக மன்னன் யாகத்திற்காக நிலத்தை உழும்போது அந்தப் பெட்டி கிடைக்கிறது. அவரே அக்குழந்தைக்குச் சீதை என்று பெயரிட்டு வளர்க்கிறார்.

அற்புத ராமாயணம் தவிர, இந்தியாவின் பிற மாநில நாட்டுப்புறக் கதைகளிலும், தென்கிழக்கு ஆசிய ராமாயணப் பதிப்புகளிலும், உதாரணமாகத் தாய்லாந்தின் ‘ராமகியன்’ மற்றும் மலேசியாவின் ‘ஹிகாயத் ஸ்ரீ ராமா’ போன்றவற்றில் சீதை இராவணன் – மண்டோதரியின் மகளாகப் பிறந்து, பின்னர் பூமியில் புதைக்கப்பட்டு, ஜனகரால் கண்டெடுக்கப்பட்டாள் என்ற இதே போன்ற கதையமைப்புகள் சிறிய மாறுதல்களுடன் காணப்படுகின்றன.

தேவி பாகவத புராணத்திலும் இந்தக் குழந்தையால் அசுர குலம் அழியும் எனத் தெரிந்து, இராவணனின் அசுர வம்சத்தைக் காக்க அவனால் கைவிடப்பட்ட குழந்தைதான் சீதை என்ற மரபுவழிக் குறிப்புகள் காணப்படுகின்றன.

சமண இலக்கியங்களிலும் குறிப்பாக குணபத்ரரின் ‘உத்தர புராணம்’ மற்றும் ‘வாசுதேவ ஹிந்தி’ போன்ற நூல்களில், இராவணன்-மண்டோதரி தம்பதியருக்குப் பிறக்கும் பெண் குழந்தை தன் வம்சத்தை அழிக்கும் என்ற ஜோதிடக் கணிப்பால் பெட்டியில் வைத்துப் புதைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(தொடரும்)

Series Navigation<< அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை

Author

You may also like

Leave a Comment