மாலை நான்கு பதினைந்து. பிரிகேட் சாலை. போக்குவரத்துச் சத்தம் காதைப் பிளந்தது. தேநீரகத்தின் ஓரத்து மேஜை. அர்ஜுன் இரண்டாவது காபியைக் குடித்துக் கொண்டிருந்தான். கண்கள் கண்ணாடி கதவையே வெறித்தன.
பதினேழு வருடங்களுக்கு முந்தைய மீனாவை அவனது மூளை தேடியது. மெல்லிய சுடிதார். கலைந்த கூந்தல். பயந்த சுபாவம். ஒவ்வொரு முறை கதவு திறக்கும்போதும் அவனது இதயம் தொண்டைக்கு வந்தது.
நான்கு நாற்பத்தைந்து.
யாரோ அவனது மேஜையின் எதிரே நாற்காலியை இழுக்கும் சத்தம் கேட்டது. அர்ஜுன் நிமிர்ந்தான். சுடிதார் இல்லை. ஜீன்ஸ், ஒரு தளர்வான காட்டன் சட்டை. கூந்தல் தோள் வரை வெட்டப்பட்டிருந்தது. முகத்தில் மெல்லிய சுருக்கங்கள். ஆங்காங்கே நரைக்கத் தொடங்கியிருந்த தலைமுடி.
ஆனால் கண்களில் அந்தப் பழைய படபடப்பு கொஞ்சம் கூட இல்லை. ஒரு தீர்க்கமான பார்வை. ஒரு பெருநிறுவன மேலாளரின் தோரணை.
“ஹலோ அர்ஜுன்.”
குரல் மட்டும் மாறவில்லை. அதே மீனா.
அர்ஜுனால் பேச முடியவில்லை. தொண்டை அடைத்தது. வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்கிக்கொண்டன.
“ம்ம்.. ம்மீ.. மீனா…”
அவள் உட்கார்ந்தாள்.
மேசையின் மீதிருந்த அவனது அலைபேசியைப் பார்த்தாள்.
“மீனாவே தான். பதினேழு வருஷம் ஆச்சு அர்ஜுன். நீ கொஞ்சம் கூட மாறல. அதே பதற்றம்.”
“ம்ம்… ஆனா நீ ரொம்ப மாறிட்ட மீனா. ஆளே அடையாளம் தெரியல. எப்படி இருக்கிற? உன் ஹஸ்பண்ட்…. குழந்தைங்க எல்லாம்…”
“அப்பாடா இப்பவாச்சும் என்னைப் பத்தி கேட்கத் தோணுச்சே. நானும் நலம், வீட்ல இருக்கிற எல்லாம் நலம்தான்.”
“ஏன் திடீர்னு பார்க்கணும்னு சொன்ன… அந்த போட்டோ.. சுசி பார்த்திருந்தா…” நேரடியாக விஷயத்துக்கு வந்துவிட்டான்.
“அதை நான் அனுப்பல,” என்று குறுக்கிட்டாள் மீனா.
“அர்ஜுன், உன் மனைவி சுசி அனுப்பியது. உன்னை ஒரு கற்பனை உலகத்திலிருந்து வெளியே கொண்டு வர அவ செஞ்ச ஏற்பாடு இது. அவகிட்ட அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி போன்ல பேசிட்டுதான் உள்ளே வந்தேன்.”
அர்ஜுனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவமானத்தால் குறுகினான். அவனது ரகசியம், அவனது தவிப்பு எல்லாமே அம்பலப்பட்டுக் கிடக்கின்றன. இவன் இரண்டு பெண்களின் சதுரங்கத்தில் வெறும் காயாக நிற்கிறான். சுசி இதைச் செய்தாளா? அவனுக்கேத் தெரியாமல்?
“அந்த வலைப்பூ…” என்று ஏதோ சொல்ல வந்தான் அர்ஜுன்.
“அந்த வலைப்பூவை நான் மறக்கத் தொடங்கிட்டேன் அர்ஜுன். ஆனாலும் பழைய நினைவுகள் பொக்கிஷம்தானே. நானா அதை அழிக்கிற வரை, யாராவது ஹேக் பண்ணாம இருக்க, லாகின் பண்ண உடனே மெசேஜ் வர மாதிரி செட் பண்ணியிருந்தேன்.”
“ஓ..”
“நேத்து நீ அதைத் திறந்தப்போ எனக்கு மெயில் வந்தது. எனக்குச் சிரிப்புதான் வந்தது. நீ இப்பத்தான் என்னைத் தேடி வந்து இருக்கிறேன்னு. சொல்லப்போனா முட்டாள்தனமா தோணுச்சு.”
அர்ஜுன் அவளை வெறித்துப் பார்த்தான். அவனது கனவுகளில் இருந்த அந்தப் பழைய மீனா சுக்குநூறாக உடைந்து சிதறினாள். முன்னால் இருப்பது முற்றிலும் வேறொரு பெண்.
“ஒரு உண்மை சொல்லட்டா? நீ கோழை. காதலைச் சொல்லாம அமைதியா இருந்ததுக்குக் காரணம் உன் எதிர்காலம் இல்லை அர்ஜுன். உன் கோழைத்தனம். இன்னைக்கும் நீ சுசிகிட்ட உண்மையை நேராச் சொல்லாம, இங்கே கோழைத்தனமா வந்துட்ட.”
அவள் நாற்காலியைப் பின்னால் தள்ளி எழுந்தாள்.
“உன்னைப் பார்க்கணும்னுதான் வந்தேன். பழைய மீனா இங்கே இல்லைன்னு உனக்குப் புரிய வைக்க. குட்பை அர்ஜுன்.”
இவ்வளவு சீக்கிரம் இந்தச் சந்திப்பு முடியும் என அவன் எதிர்பார்க்கவில்லை. இரண்டு எட்டுகள் வைத்தவள், சட்டென்று நின்றாள். அர்ஜுனைத் திரும்பிப் பார்த்தாள்.
“இன்னொரு விஷயம் அர்ஜுன். அந்த வலைப்பூவுக்கு நேத்து ராத்திரி இன்னொருத்தரும் வந்திருக்கார். என் கணவர் விக்ரம். அந்தப் பழைய பதிவுகளை எல்லாம் அவரும் படிச்சிருக்கார். நாளைக்குக் காலைல அவர் பெல்லந்தூர் வரப்போறார். உன்னைப் பார்க்க. தயாரா இரு.”
அவள் வெளியேறினாள். அர்ஜுன் அந்தத் தேநீரகத்திற்குள் ஒரு நடுக்கத்தோடு சிலையாக அமர்ந்திருந்தான்.
(தொடரும்)