வைணவ சமயத்தை ஹொய்சாளர்கள் ஏற்றவுடன் சோழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற ஆரம்பித்தன. இவை இரண்டுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது எனச் சொல்ல ஆதாரங்கள் இல்லை; ஆனால், இருக்கிறது என்பதைச் சரித்திர ஆதாரங்களை வைத்து ஏற்றுக்கொள்ளலாம்.
மகதப் பேரரசை ஆண்டுகொண்டிருந்த நந்த வம்சத்தினரால் சாணக்கியர் அவமானப்படுத்தப்படுகிறார். அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் தனியாக வந்து, மௌரியப் பேரரசைச் சந்திரகுப்த மௌரியர் மூலம் நிறுவினார். இந்த மௌரிய ராஜ்ஜியத்தில் சந்திரகுப்தாவிற்கு அடுத்து வந்தவர் சமுத்திரகுப்தா.
இந்தச் சமுத்திரகுப்தா தென்னிந்திய நிலப்பரப்பின் மீது ‘தக்ஷிணபதம்’ என்கிற பெயரில் மூன்றாம் நூற்றாண்டில் படையெடுப்பு நிகழ்த்தினார். ஒரு படையெடுப்பு நிகழ்கிறதென்றால் வெறும் படைவீரர்கள் மட்டுமே இருக்க மாட்டார்கள்; மருத்துவர்கள், சமையல்காரர்கள், குறிப்பு எழுதுவோர், முக்கியமாகக் கதை சொல்வோர் இருந்தனர்.
கதை சொல்வதென்றால் எல்லோரும் சொல்வார்கள் என்று நினைத்துவிடக் கூடாது; அதற்கெனக் குறிப்பிட்ட சமூகத்து மக்கள் இருந்தார்கள். அவர்கள் ‘சாகுலியா பண்டாக்கள்’. இவர்கள் வழக்கமாகப் புறநகர் மற்றும் கிராமங்களில் மாலை வேளையில் அல்லது விசேஷ நாட்களில் இராமாயணத்தைப் பாடல்களாகச் சொல்வார்கள். இவர்களும் சமுத்திரகுப்தாவுடன் அவரது தென்னிந்திய நிலப்பரப்பின் மீதான படையெடுப்பில் உடன் வந்தார்கள்.
சமுத்திரகுப்தாவின் படையெடுப்பு சார்ந்த வணிக நோக்கம் என்பது பெரிய அளவில் பேசப்பட வேண்டிய ஒன்று; அதனைப் பின்வரும் அத்தியாயங்களில் சொல்கிறேன்.
இந்தச் சமுத்திரகுப்தாவின் படையெடுப்பு நிகழ்ந்த காலமும், தமிழ்நாட்டில் இராமாயணக் கதை பற்றிய குறிப்பு கிடைக்கிற மரபுப் பாடல்கள் எழுதப்பட்ட காலமும் ஒன்றுதான்.
இந்த பண்டாக்களுக்கும் தமிழ்நாட்டுக் கோயில் பண்டாரங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கும்; ஆனால், அவர்கள்தான் இவர்களது மூதாதையர்கள் எனச் சொல்ல நேரடிச் சாட்சியங்கள் இல்லை. பண்டாக்கள் சமுத்திரகுப்தர் படையுடன் வந்தவர்கள்; சிலர் இங்கேயே புலம்பெயர்ந்து குடியேறி வாழத் தொடங்கியிருக்க வேண்டும். வாழ்வியல் பணத் தேவைகளுக்குத் தங்களுக்குத் தெரிந்த இராமாயணக் கதையைப் பாடல்களாக மக்களிடத்தில் பாட ஆரம்பித்து இருப்பார்கள். இதுவே தமிழகத்தில் வைணவ சமயம் பரவியதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஏனென்றால், தமிழ்நாட்டில் பழமையான வைணவக் கோயில்களெனப் பார்த்தால் மதுரையில் இருக்கும் கள்ளழகர் கோயில் மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. அதனை அடுத்துக் காஞ்சிபுரம் காவேரிப்பாக்கத்தில் இருக்கும் இரண்டாயிரம் வருடப் பழமையான திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் மற்றும் ரங்கநாத சுவாமி கோயில் ஆகியவைதான் தமிழ்நாட்டில் இருக்கும் பழமையான வைணவக் கோயில்கள்.
இதனுடைய காலமும், இராமாயணக் கதை குறிப்புகள் கிடைக்கும் புறநானூற்றுப் பாடல்களின் காலமும், சமுத்திரகுப்தாவின் தென்னிந்திய நிலப்பரப்பின் மீதான படையெடுப்பான தக்ஷிணபதம் நிகழ்ந்த காலமும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவைதான். மேலும், மதுரை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகரங்கள் அந்தக்காலத்திலேயே பெரும் வணிக மையங்களாக இருந்துள்ளன.
மேற்சொன்னவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது, வைணவ சமயத்தை வணிகர்கள் ஆதரித்திருக்கிறார்கள். அந்த வணிகர்களின் உதவியோடுதான் இராமானுஜர் தமிழ்நாட்டில் இருந்து தப்பித்துக் கர்நாடகம் சென்றிருக்க வேண்டும்.
இதெல்லாம் சரி, இதனைத் தவிர்த்துச் சைவ வைணவ சமயப் போருக்கு நேரடிச் சாட்சி இருக்கிறதா எனக் கேட்டால், ‘ஆம் இருக்கிறது, தஞ்சாவூர் கல்வெட்டில் இருக்கிறது’ என்பதுதான் பதில்.
கி.பி. 1219 ஆம் ஆண்டில் மதுரையை ஆண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன், சோழ தேசத்தின் மீது படையெடுத்து வந்து மூன்றாம் இராஜராஜ சோழனைப் போரில் வென்று, சோழ நாட்டைப் பற்றிக் கொண்டு தஞ்சாவூரையும் உறையூரையும் தீயிட்டுக் கொளுத்தி அழித்துள்ளார். “தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்தி” என்ற கல்வெட்டுக் குறிப்பின் மூலம் இதனைத் தெரிந்துகொள்ளலாம்.
இந்தப் போரினால் தஞ்சையில் இருந்த மூன்று வைணவக் கோயில்கள் அழிந்தன. அவை தஞ்சை யாளிநகர் கோயில், மாமணிக்கோயில், மணிக்குன்றம் கோயில் ஆகியவை. இவை வணிக மையங்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம். மேலும், இந்தப் போரினால் சைவ சமயக் கோயில்கள் அழிந்தன என்பது போன்ற குறிப்புகள் பெரிதாக எனது தேடலில் கிடைக்கவில்லை. இந்த வைணவ எதிர்ப்பு மூன்று நூற்றாண்டுகள் தொடர்ந்து இருந்தனவா அல்லது பொருளாதார மையங்கள் இடம்பெயர்ந்தனவா எனத் தெரியவில்லை. ஆனால், அழிந்த இந்தக் கோயில்களுக்கான வழிபாடு என்பது தஞ்சை நாயக்கர்கள் காலத்தில் மீட்டெடுக்கப்பட்டது.
கி.பி. 1535-இல் தஞ்சை மன்னராகப் பொறுப்பேற்ற செவ்வப்ப நாயக்கரும், அவரது மகன் அச்சுதப்ப நாயக்கரும் இந்த மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்த வைணவ வழிபாட்டு மையங்களை இடம் மாற்றி வெண்ணாற்றங்கரையில் கட்டினார்கள். இதனையெல்லாம், அந்தக்காலத்தில் வைணவக் கோயில்களுக்குத் தானமாகத் தரப்படும் நிலங்களின் எல்லையைக் குறிக்க ‘திருவாழிக்கல்’ என்பதைச் சில குறிப்புகளோடு நட்டு வைப்பார்கள். அதுபோன்ற கல்வெட்டுக் குறிப்புகளில் இருந்து இதனைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
இப்பொழுது மீண்டும் ஹொய்சாளர்களிடம் சென்ற இராமானுஜரிடம் வருவோம். அவர் அங்கு சென்ற பிறகு, ஹொய்சாளர்கள் சோழர்கள் மீது படையெடுத்துப் போர் புரிந்து வெற்றியடைகிறார்கள். இதன் மூலம் இன்னொன்றும் நடக்கிறது; சோழ தேசத்தின் வணிக அமைப்பு அழியத் தொடங்குகிறது. தென்னிந்திய நிலப்பரப்பின் இதுபோன்ற வணிக அமைப்புகள் நிலைகுலைந்ததினால், ஆங்கிலேயர்களிடம் பொருளாதார உதவி பெறத் தொடங்கிய அரசர்களால்…
(தொடரும்)