Home இதழ்கள்மருத்துவர் பக்கம் – 26: புற்றுநோய்-அறிகுறிகள்

மருத்துவர் பக்கம் – 26: புற்றுநோய்-அறிகுறிகள்

by Farooq Abdullah
0 comments

புற்றுநோயைப் பொறுத்தவரை அதன் சிகிச்சையில் மக்களிடம் உள்ள தவறான நம்பிக்கை யாதெனில், இன்னும் புற்றுநோயைச் சரிசெய்யும் சிகிச்சை வரவில்லை என்பதாக இருக்கிறது. ஆனால், புற்றுநோய் சிகிச்சை மற்றும் மருத்துவம் நவீன அறிவியலின் துணைகொண்டு நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

புற்றுநோய்க்கு உள்ளாகும் பெரும்பான்மை மக்கள் தங்களுக்கு வரும் ஆரம்பகட்ட அறிகுறிகளை உதாசீனம் செய்து, பொன்னான காலத்தைக் கடத்திவிட்டு, புற்றுக்கட்டி உடலின் வேறு இடங்களுக்குப் பரவிய பிறகு மருத்துவரைச் சந்திக்கின்றனர். ஆரம்ப அறிகுறிகளிலேயே சுதாரித்துக்கொண்டு மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பான்மையினர் பூரண குணம் அடைகின்றனர்.

இந்தக் கட்டுரையில் பல்வேறு புற்றுநோய்களின் ஆரம்பநிலை அறிகுறிகளைக் காண்போம்.

மார்பகப் புற்றுநோய்

மார்பகங்களைப் பொறுத்தவரை, மார்புக்குள் கக்கப் பகுதியில் கட்டி தோன்றுவது இயல்புக்கு மாறானது. மேலும், முலைக்காம்பிலிருந்து இரத்தம் அல்லது நீர் போன்ற திரவம் வருவது முக்கிய அறிகுறியாகும். மார்புப்பகுதியில் உள்ள தோல் ஆரஞ்சுப் பழத்தின் தோல் போலச் சொரசொரப்புடன் புள்ளி புள்ளியாகப் பள்ளம் விழுந்து காணப்படும். இத்தகைய மாற்றங்கள் தெரிந்தால் உடனே மருத்துவரைச் சந்தித்து மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்; காலம் தாழ்த்தக் கூடாது.

கர்ப்பப்பை சார்ந்த புற்றுநோய்

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் கோளாறு, மாதவிடாய் உதிரப்போக்கு அளவுக்கு அதிகமாகச் செல்வது, மாதவிடாய் நின்று மெனோபாஸ் (Menopause) அடைந்துவிட்ட நிலைக்குப் பின்பும் திடீரென உதிரப்போக்கு ஆவது போன்றவை கர்ப்பப்பை சார்ந்த புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

சிறுநீர்ப்பை மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய்

சிறுநீர் கழிக்கும்போது குறைவாகச் செல்வது, சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது, சிரமத்துடன் சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் வெளியேறுவது, சிறுநீரில் இரத்தம் கலந்து செல்வது போன்றவை ப்ராஸ்டேட் சுரப்பி அல்லது சிறுநீர்ப்பை சார்ந்த புற்றுநோயின் ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கலாம்.

மலக்குடல் புற்றுநோய்

நன்றாக மலம் கழித்துவந்த நிலையில், திடீரென மலச்சிக்கலோ அல்லது அடிக்கடி மலம் வெளியேறும் நிலையோ ஏற்படுவது, மலத்தில் இரத்தம் வெளியேறுவது, அடிவயிற்றுப் பகுதியில் வலி ஏற்படுவது போன்றவை மலக்குடல் பகுதியில் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இதில் கவனம் தேவை.

உணவுக்குழாய் மற்றும் இரைப்பை புற்றுநோய்

சாப்பிட்ட உணவு வயிற்றுக்கு இறங்காமல் நெஞ்சிலேயே அதிக நேரம் நிற்பது, நெஞ்செரிச்சல், உணவை விழுங்குவதில் சிரமம், மேல் வயிற்றுப் பகுதியில் வலி, குமட்டல், வாந்தி, பசி உணர்வு குறைதல் போன்றவை உணவுக்குழாய் அல்லது இரைப்பை போன்ற பகுதிகளில் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

நுரையீரல் மற்றும் சுவாசப்பாதை புற்றுநோய்

அடிக்கடி காரணமில்லாமல் இருமல், தொண்டை கரகரப்பு (எந்தச் சிகிச்சைக்கும் அடங்காமல் தொடரும் இருமல்), இருமும்போது இரத்தம் சளியுடன் வெளியேறுவது போன்றவை நுரையீரல் மற்றும் சுவாசப்பாதை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

வாய் மற்றும் தொண்டைப் பகுதி புற்றுநோய்

வாயில், நாக்கில் அல்லது ஈற்றுப் பகுதியில் ஆறாத புண் அல்லது சதைக்கட்டி போன்றவை ஏற்படுவது, நாக்கு மற்றும் வாயிலிருந்து அடிக்கடி இரத்தக் கசிவு மற்றும் வலி ஏற்படுவது, நாக்கில் வெள்ளையாகவும் சிவப்பாகவும் படை தோன்றுவது போன்றவை வாய் மற்றும் தொண்டைப் பகுதி புற்றுநோயாக இருக்கக்கூடும்.

மூளைப் புற்றுநோய்

அடிக்கடி காரணமின்றித் தலைவலி, வலிப்பு, பார்வை இரண்டாகத் தெரிவது, காது கேட்டலில் குறைபாடு, நடை தடுமாறுவது, கண் இமை கீழிறங்கித் தொங்குவது போன்றவை மூளையில் புற்றுநோய்க் கட்டி இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

சருமப் புற்றுநோய்

தோல் பகுதியில் சதைக்கட்டிகள் திடீரெனத் தோன்றுவது, அவை உருவத்தில் பெரிதாக மாறுவது, கட்டிகளிலிருந்து இரத்தம் கசிவது, ஆறாத புண்கள், புதிதாக மச்சம் தோன்றுவது அல்லது ஏற்கனவே இருக்கும் மச்சம் உருவத்தில் பெரிதாவது அல்லது வீங்குவது போன்றவை சருமம் சார்ந்த புற்றுநோய்க்கு ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

இதர பொதுவான அறிகுறிகள்

  • கழுத்து, கக்கம், வயிற்றுப்பகுதி, இடுப்புப்பகுதி ஆகியவற்றில் கட்டிகள் தோன்றுவது.
  • தீராத காய்ச்சல்.
  • இரவு நேரத்தில் வியர்த்துக் கொட்டுவது.
  • காரணமே இல்லாமல் திடீரென உடல் எடை வெகுவாகக் குறைந்தாலோ அல்லது திடீரெனக் கூடினாலோ அதை அலட்சியம் செய்யாமல் கவனிக்க வேண்டும்.

நான் மேற்சொன்ன அறிகுறிகள் யாவும் பல்வேறு விதமான புற்றுநோய்களின் ஆரம்பநிலை அறிகுறிகள். இவற்றை உதாசீனம் செய்யாமல் உடனே சிகிச்சைக்கு வந்தால், புற்று வேறெங்கும் பரவும் முன்னமே பூரண குணம் அடைய முடியும்.

Author

You may also like

Leave a Comment