இரண்டு மூன்று முறைகள் அவள் பட்டனை அழுத்தியும் கூட வண்டி நகர்ந்தபாடில்லை என்றதும் ஏதோ சந்தேகம் தோன்ற, அவள் கிரீஸை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஹே… என்னடா இது? வண்டியை நகர விடாமல் இப்படிப் பிடித்து அழுத்திக் கொண்டிருந்தாயானால் ஸ்கூட்டர் எப்படி நகரும்? இதென்ன விளையாட்டு? ஆளை விடு. முதலில் நான் ரிசார்ட் திரும்புகிறேன். பிராப்தம் இருந்தால் மீண்டும் சந்திப்போம். சரிதானே?!”
– என வினவியபோதும், ஸ்கூட்டரைப் பற்றிய கையை விடாத கிரீஸ், அவளது தலையில் செல்லமாகக் குட்டி, “ஏய், முந்திரிக்கொட்டை… என்ன அவசரம் உனக்கு? நானும் அங்கேதானே தங்கி இருக்கிறேன். சேர்ந்தே செல்வோம் வா!” என்றான்.
அவனது பதிலில் பிரமித்துப் போன தனுவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
‘நிஜமாகவா?! நிஜமேதானா? இல்லை நான் கனவு காண்கிறேனா? ஒரு வாரமாக எனக்கு எதிராகச் சுழன்று கொண்டிருந்த பூமி எப்போதிருந்து எனக்கு ஆதரவாகச் சுழலத் தொடங்கியது என்று தெரியவில்லையே!’ என்று கிண்கிணியாகச் சிரித்துக் கொண்டு தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.
“சரி… சரி வா, மிச்சத்தை ரிசார்ட்டில் போய் பேசிக் கொள்வோம்” என்று சிரித்தவாறு നടையைக் கட்டினர் இருவரும்.
செல்லும் வழியில் அவன் பகிர்ந்து கொண்ட தகவலின்படி கிரீஸ், இப்போது சாதாரண கிரீஸ் அல்ல. அவன் இந்திய உளவுத்துறையின் சிறப்பு அதிகாரிகளுள் ஒருவராக நியமிக்கப்பட்டுப் பணி நிமித்தமாகவே இங்கு அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. தனுவுக்குப் பெருமைதான். தன் பள்ளித் தோழர்களில் ஒருவன் இப்படி ஒரு பெருமைக்குரிய உயரிய பணியில் இருப்பது குறித்து அவள் பெரிதும் ஆனந்தித்தாள்.
இருவரும் தங்களது கௌஹாத்தி நாட்களை நினைவுகூர்ந்தவாறு ஒருவழியாக ரிசார்ட்டை வந்தடைந்தபோது, அங்கே அவளுக்கு மேலுமொரு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது.
என்னதான் நண்பன் உடனிருந்தபோதும் தன்மத்ரா சற்று அச்சத்துடன் தான் உள்ளே நுழைந்தாள். காலையில் தன் பொறுப்பில் அனுப்பப்பட்ட அந்த உக்ரைனிய தம்பதியினர் அறைக்குத் திரும்பி இருப்பார்களா? அல்லது அவர்களாலும் தனக்கு ஏதாவது புதுப் பிரச்சினை அங்கே காத்திருக்கிறதா?! என்ற துணுக்குறுதலுடன் தான் அவள் வரவேற்பறைக்குச் சென்றாள். ஆனால், அங்கு அவள் எதிர்கொண்டது பிரச்சினையை அல்ல; தோழி தாராவை!
இது முற்றிலும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!
தூரத்தில் தனு நடந்து வரும்போதே அவளைப் பார்த்துவிட்ட தாரா, முகத்தில் மகிழ்ச்சி ததும்பி வழிய, “ஹேய்… தனு!” என்று குதூகலமாகக் கத்திக் கொண்டே ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டாள்.
ரிசப்ஷனிஸ்டுக்கு இந்தக் காட்சி வியப்பளித்திருக்கக் கூடும்! ஆனாலும் அவள் அன்றைக்குப் போலவே இன்றும் முகத்தில் எந்தவிதமான ரியாக்ஷனும் காட்டாமல் விழிகளில் மட்டும் ஒரு சொட்டுப் போல ஆச்சரியத்தைக் கடத்தினாள்.
‘அவளை விட்டுத் தள்ளுவோம்; இப்போதைக்கு தாரா வந்திருப்பதுதான் அதிமுக்கியம்’ என்று தோன்றிவிட, தனுவுக்குக் கண்கள் கலங்கிவிட்டன.
தாராவுக்கும் தோழியின் இந்த நிலைமைக்குத் தானும் ஒரு காரணமாகிவிட்டோமோ என்று தோன்றிவிட்டதில், அவளுமே கண்கலங்கினாள். எல்லாம் சில நொடிகள் மட்டுமே. பிறகு தன்னைத்தானே சமாளித்தவளாக தாரா, ரிசப்ஷனிஸ்டிடம் திரும்பி,
“ஐ நீட் டாக் டு யுவர் சேர்மன் மிஸ்டர் பிரபாகர். கனெக்ட் மீ ரைட் நௌ!” என்று கட்டளை போல அறிவித்தாள்.
அவள் சில கணங்கள் எதற்கோ தயங்கிவிட்டு, “மெக்கன்ஸியிடம் பேசுங்களேன் மேம்” என்றாள்.
“ஹூ இஸ் மெக்கன்ஸி? அவரிடம் பேச எனக்கு எதுவும் இல்லை. பிரபாகர் இங்கு வருகிறாரா, இல்லை நானே அவர் இருக்கும் இடம் சென்று அவரைப் பார்க்கட்டுமா என்று கேள். உடனே கேள்! டோண்ட் வேஸ்ட் மை டைம்” என்று படபடத்தாள் தாரா.
தனுவுக்கு, தாராவின் கோபம் சுவாரசியமாயிருந்தது. ஏனெனில், கடந்த ஒரு வாரமாகத் தன்னையும் ஷைலுவையும் இந்த ரிசார்ட் நிர்வாகம் நடத்திய விதம் குறித்த அச்சம் இன்னமும் அவளிடமிருந்து அகன்றபாடில்லை. அப்படிப்பட்ட அச்சத்தை அவளுக்குள் வளரவிட்ட அந்த ரிசார்ட் நிர்வாகத்தை இப்படி அதட்டவும் ஒருத்தி இருக்கிறாளே என்ற அல்ப சுவாரசியம்தான் அது. ஆயினும் அப்போது அவளுக்கு அது தேவைப்பட்டது.
இரக்கமற்ற இவர்களையும் கூட இந்த தாராவால் விரட்ட முடிகிறதென்றால், இங்கு அவளது முக்கியத்துவம் எப்படிப்பட்டது என்று தனுவால் புரிந்துகொள்ள முடிந்தது.
தாராவின் வீட்டில் வைத்துதானே அந்த ராஜவாள் இவளது வாழ்க்கையில் தனது விபரீத விளையாட்டைத் தொடங்கியது?
‘அந்த வாள் இவளது வீட்டில் வைக்கப்படுமென்றால், இவர்களிடையே நெருங்கிய உறவு இருக்கலாம்’ என்று சிந்திக்கத் தொடங்கிய மனதைத் தோழன் கிரீஸின் பிரசன்னம் தடுத்து நிறுத்தியது.
“ஹே கய்ஸ்… வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர்? இங்கே நானும் இருக்கிறேன். என்னையும் கொஞ்சம் கண்டு கொள்ளுங்கள். உங்கள் சங்கமத்தில் நானும் ஐக்கியமாகலாமா?” என்று சூழலை லகுவாக்குவது போல அவன் எதையோ கேட்டுக் கொண்டு நிற்க…
அந்த நேரம் பார்த்து வினையே போல தமிழ்நாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் அவர்களைக் கடக்க, அவரது ஸ்மார்ட்ஃபோனிலிருந்து கசிந்து வெளியேறியது…
“போடா போடா புண்ணாக்கு, போடாத தப்புக் கணக்கு” என்றொரு பாடல்.
பாடலைக் கேட்டு முதலில் ஜெர்க் ஆனது தாராதான். மற்ற இருவரும் பாடலை ரசித்தாலும்கூட அர்த்தம் புரியாததால் வெறுமே புன்னகையுடன் நின்று கொண்டிருக்க, அர்த்தம் அறிந்தவளோ பிறகு அடக்கமாட்டாமல் நகைக்கத் தொடங்கினாள்.
“இஸ் தேர் எனிதிங் ஃபன்னி இன் தட் சாங்?!” – தன்மத்ரா சந்தேகமாக வினவ…
“நாட் யூ” என்று தாரா, கிரீஸைப் பார்த்துக் கொண்டு சொல்ல;
அந்தப் பாடலோடு இணைத்து அவள் தன்னைத்தான் கேலி செய்கிறாள் என்று புரிந்துகொண்ட அவனுக்கு, ‘இவள் இப்படிக் கேலி செய்யும் அளவுக்கா இருக்கிறது எனது வருகை?!’ என்று நெஞ்சம் துணுக்குற்றது.
அழகான இளம்பெண் கேலி செய்தால் அதற்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்பதை அவன் இன்னும் கற்றுக் கொண்டிருக்கவில்லை என்பதால்,
“டோண்ட் மாக் மீ மிஸ் தாரா… ஐ வில் லீவ் நௌ… பை.. பை” என்றுவிட்டு, மீண்டும் தனுவைப் பார்த்து, “லெட்ஸ் மீட் அகெய்ன்” என்று தலையசைத்துவிட்டு உட்புறமாகச் சென்று லிஃப்டில் மறைந்தான்.
“மிகவும் கோபக்காரராக இருப்பார் போலிருக்கிறதே உன் நண்பர்?”
தாராவின் கேள்வியைப் புன்னகையில் கடந்த தனு, அவளை வெகு இணக்கத்துடன் தோளோடு அணைத்துக் கொண்டு, ரிசார்ட் வளாகத்தில் இருந்த புல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த கல்திண்டில் அவளுக்கு இடம்விட்டுச் சற்றுத் தள்ளி தானும் அமர்ந்தவாறு,
“உன்னிடம் பகிர்ந்து கொள்ள நிறைய அதிர்ச்சிகளும் சுவாரசியங்களும், ஏன்… சில அபத்தங்களும் கூடச் சேர்த்து வைத்திருக்கிறேன்… வா, அதைப்பற்றிப் பேசலாம். உன் தோழி இன்றைய நிலையில் உதவி எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் வகையிலான சூழ்நிலைக் கைதியாகிவிட்டேன்” என்றாள் நீண்டதொரு பெருமூச்சுடன்.
மிகுந்த களைப்புடன் பேசிய தோழியை ஏறிட்ட தாராவுக்கு உண்டான மன வருத்தத்தில் தொண்டை அடைத்துக் கொண்டது.
விலை மலிவான ஆடை, சோர்ந்து நலுங்கிய வதனம், அத்துடன் கண்களில் தென்பட்ட நம்பிக்கையின்மை… இப்படியெல்லாம் தனுவைப் பார்த்தே இராத காரணத்தால் தாராவுக்கு மிகுந்த மனச்சங்கடமாகிவிட்டது.
“என்ன ஆயிற்று தனு? விசுவநாதபுரியிலிருந்து என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் நீங்கள் இருவரும் ஏன் கிளம்பினீர்கள்? ஷைலு எங்கே? என் வீட்டில் விரும்பத்தகாத வகையில் ஏதேனும் நிகழ்ந்ததா? அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்… மிச்சமின்றி எல்லாமும் சொல்.”
தோழியின் அடுக்கடுக்கான கேள்விகள் தன்மத்ராவை மீண்டும் விசுவநாதபுரிக்குள் இழுத்துச் செல்ல… அவள் அங்கு தனக்கு நேர்ந்த விநோத மனநிலையிலிருந்து தொடங்கினாள்.
தாராவுக்கு இவளது தாயின் மரணப்புதிர் குறித்து மேலோட்டமாகத் தெரியும் என்பதால், அவளுக்குமே இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
நூபுர கங்கைக்கு அவள் பலமுறை தோழிகளுடன் சுற்றுலா சென்றிருக்கிறாளே… அப்படி அதில் ஏதும் சிறப்பாக இவளுக்குத் தோன்றியதே இல்லை. தோழிகள் பட்டாளமாகக் கிளம்பிச் சென்று மலையின் மேல் கொட்டமடித்துவிட்டு, ஜில்லென்ற மூலிகைத் தண்ணீரில் நீந்திக் களைத்து வெளியேறி, கொண்டு சென்ற காரசாரமான உணவு மற்றும் ஸ்நாக்ஸ் வகையறாக்களை ஒரு கை பார்த்துவிட்டு மலையிறங்குவார்கள். இவளுக்கு அது அம்பிகா யட்சி என்று கூடத் தெரிந்திருக்கவில்லை. தாராவைப் பொறுத்தவரை அது ராக்காயி அம்மன் கோயில்… அவ்வளவுதான். இஷ்டமிருந்தால் கோயிலுக்குள் நுழைந்து கும்பிடுவார்கள்; இல்லாவிட்டால் அதைப் பொருட்படுத்தாமல் வீடு திரும்பியதும் உண்டு. அப்படிப்பட்ட ஓரிடம் தோழி தன்மத்ராவுக்குள் இவ்வளவு அதிர்வுகளைக் கிளப்பிவிட்டது குறித்து தாராவுக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது.
அவளுக்குக் காது கொடுத்துக் கொண்டே தாரா இவ்வாறு தனக்குள் மூழ்கியிருக்க, தனு மேலும் தொடர்ந்தாள்:
“அந்தக் கோயில் எனக்குள் மூட்டிய அனலை விழுங்கிக் கொண்டு, ஷைலுவுக்காக நான் அவள் வழியில் செல்லத் தயாரான நிலையில் தான் இப்படி ஆகிவிட்டது தாரா. என்ன காரணத்தாலோ உன் அம்மாவுக்கு எங்களைக் கண்டால் அத்தனை பிடித்தமில்லை என்பதை நாங்கள் விசுவநாதபுரிக்கு வந்திறங்கிய முதல் நாளிலேயே உணர்ந்து கொண்டோம்.
உன் அண்ணன் சோமேஷ் குறித்தான கவலை அவரை அரித்துத் தின்று கொண்டிருப்பதாக எனக்கொரு சந்தேகம். புதிய இடத்தில் உதவுகிறேன் என்கிற பெயரில் அவர் எங்களையே சுற்றிச் சுற்றி வந்தது உன் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை தாரா… அது குறித்து மதுரா ஆண்ட்டி, ஷைலுவைத் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருந்தார். அதற்காக எங்களை அந்த ஊரை விட்டு வெளியேற்றும் அளவுக்குப் பேராவல் கொண்டிருந்தார் என்பதுதான் அப்போது எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவிப்பதாக இருந்தது.
ஷைலு சின்னப் பெண் தானே! சோமேஷ் உற்சாகமாகப் பேச வரும்போது கல்மிஷமில்லாது, உள்நோக்கம் ஏதுமின்றி இயல்பாக அவருடன் பழகத் தொடங்கினாள். எனக்குமேகூட விடுமுறைக்காலம் மட்டுமேதானே இங்கிருக்கப் போகிறோம், அதுவரை தோழியின் அண்ணனுடன் இப்படியான நல்ல ஆரோக்கியமான நட்புறவு நீடிப்பதில் என்ன நஷ்டம்? இதைப்போய் தவறாக அணுகி, இயல்பாகப் பழகுபவர்களிடம் பிழை காண வேண்டுமா என்றுதான் இருந்ததே தவிர, அதைத் தடுக்கத் தோன்றவில்லை.
அதை அப்படியே விட்டிருந்தால் நாங்கள் எப்போதும் போல் விடுமுறை தீர்ந்ததும் இப்போது அஸ்ஸாமில் இருந்திருப்போம்.
ஆனால்…
அப்படியல்லாது விபரீதமாக வேறு என்னென்னவோ நடந்து கொண்டிருப்பதைத்தான் இப்போது நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய்.
இதிலிருந்து எப்படியாவது எங்களை மீட்டுக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுத் தருவாயா தாரா? எனக்கு இங்கே அவமானத்தில் மூச்சு முட்டுகிறது.”
– சொல்லிவிட்டு தன்மத்ரா கலங்கிய கண்களை மறைக்க எழுந்து நின்றவளாகப் பின்புறம் அமைந்திருந்த செயற்கைக் குளத்தில் பார்வையைப் பதித்துக் கொண்டாள்.
“இதில் இந்த வாள் திருட்டு எங்கிருந்து வந்தது தனு?! அதை ஏன் அம்மாவின் இரும்பு அலமாரியிலிருந்து ஷைலு எடுக்க வேண்டும்? அவளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?”
தாராவின் கேள்வி ஏற்கனவே கலங்கியிருந்த தன்மத்ராவைக் கூர்மையாகத் தாக்க,
“தவறுதான்… மாபெரும் தவறுதான். ஆனால், அதைச் செய்தவளின் நோக்கமென்னவோ திருட்டு அல்ல. அந்த வாளின் உரிமையாளருக்கும் உன் அம்மாவுக்கும் சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் சிறுபிள்ளைத்தனம் மட்டுமே! அதை அவள் செய்யாமலிருந்திருக்கக் கூடாதா என்றுதான் இன்றுவரை ஒவ்வொரு நொடியிலும் நான் மறுகிக் கொண்டிருக்கிறேன் தாரா. அதற்காக நாங்கள் தண்டிக்கப்பட்டது நியாயமே என்ற எண்ணத்தில்தான் இதுவரையிலும் இங்கு நாங்கள் நடத்தப்பட்ட விதத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால் முடியுமென்றால் இதிலிருந்து எங்களை எப்படியாவது விடுவித்துவிடு, ப்ளீஸ்.
இங்கிருந்து ஊர் திரும்பினால் போதும் என்றிருக்கிறது. அம்மாவின் மரணம், சதா என் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் அன்னையின் கால் சதங்கை எல்லாமும் ஒரு கொடுங்கனவென்று நான் மறந்துபோகத் தயார். என்னை இந்த வாள் திருட்டுப் பழியிலிருந்து மட்டும் எப்படியாவது விடுவித்துவிடு.”
தோழியின் மன்றாடலில் நிலைகுலைந்த தாரா, மனம் நொந்தவளாகத் தவிப்புடன் எழுந்து வந்து அவளது கைகளைப் பற்றிக் கொண்டாள்.
“பெரிய வார்த்தைகளெல்லாம் எதற்கு தனு?! ஐ பிலீவ் யூ. ப்ளீஸ், இந்தப் பேச்சை இத்துடன் விட்டுவிடு. நான் பார்த்துக் கொள்கிறேன்.
உன் அருமை தெரியாதவர்கள் மத்தியில் உன்னைத் தங்க வைத்தது என் தவறு. நீ என் மனதுக்குகந்த தோழி தனு. நான் என்னைப் போலவே உன்னை நம்புகிறேன். கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்து வா… ஷைலுவைப் பார்க்கச் செல்லலாம். பாவம் அந்தக் குழந்தை!” என்று ஆதூரத்துடன் அவளைக் கைப்பற்றி எழுப்பினாள்.
இப்படி ஒருவருக்கொருவர் இதமான ஆறுதல் வார்த்தைகளைப் பேசிக் கொண்டே இருவருமாக தனுவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றனர்.
அங்கே அவர்கள் மீண்டும் கிரீஸைக் காண நேர்ந்தது.
தனு ஆச்சரியத்துடன் அவனை ஏறிட்டு, “ஏய், உனக்கு என் அறை எண் தெரியாதே… சொல்லி அனுப்பி உன்னை வரவழைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வந்தால் ‘திங்க் ஃபார் தி டெவில்’ ஆக எதிரில் நிற்கிறாய் பார்!” என்றாள் சிரிப்புடன்.
“ம்ம்… உன் தோழியைக் கண்டதும் நீதான் உலகையே மறந்துவிட்டாயே… உன்னைத் தொல்லை செய்வானேன் என்றுதான் நான் இங்கு வந்துவிட்டேன். ஷைலு இஸ் சச் எ நைஸ் கேர்ள். அவளோடு பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இந்திய உளவுத்துறையில் அதிகாரி என்றதும், அடுத்த ஆண்டு அவளது பள்ளி கலாச்சார விழாவிற்கு (Cultural Fest) என்னைச் முதன்மை விருந்தினராக (Chief Guest) அழைக்கப் பரிந்துரைக்கப் போவதாகச் சொல்கிறாள். விட்டால் என்னுடைய பிராண்ட் அம்பாஸிடர் ஆகிவிடுவாள் போல!” என்றான் நகைப்பிற்கிடையே…
அவனது நகைப்பொலி தீர்ந்து போவதற்குள்ளாக இடையிட்ட ஷைலு, “கிரீஸ் அண்ணா… நீங்கள் நிஜமாகவே ஒரு சூப்பர் ஹீரோதான். நல்லவேளை இந்தச் சமயத்தில் உங்களை இங்கு சந்தித்தது எங்களுக்கு ஜென்ம சாபல்யமாகிவிட்டது. எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது தெரியுமா?” என்று கண்கலங்கத் தொடங்கவே,
“நோ ஷைலு, யூ ஷுட் நாட் கிரை… டோண்ட் வொர்ரி மை டியர் கேர்ள்… ஐ வில் பி வித் யூ ஆல்வேஸ்… இங்கிருந்து கௌஹாத்தி திரும்பும் வரை என்னுடைய காவல் உங்களைத் தொடரும்” என்று தோளணைத்து முடி கோதி ஆறுதல்படுத்தினான்.
அவர்களை அப்படிக் கண்டதில் தன்மத்ரா, தாரா இருவருக்குமே மிகுந்த மன ஆறுதலாகிவிட்டது.
புன்னகையுடன் தாரா, கிரீஸை அணுகி, “நைஸ் மீட்டிங் யூ, ஆபீஸர்!” என்று தம்ப்ஸ் அப் காட்டி, அப்படியே அருகிருந்த ஷைலுவை அன்போடு அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டு, “ஸாரி… ரியலி ஸாரி ஃபார் எவ்ரிதிங் பேபி, ரியலி வெரி ஸாரி. சீ யூ தென்… பை, குட்நைட்” என்று மூவருக்கும் பொதுவாகச் சொல்லி விலகிச் சென்றாள்.
(தொடரும்)