31 வயதான போவன் வான், அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தில் கணினி செயலி வடிவமைப்பு மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பப் பிரிவில் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். சீனாவில் இருந்து குடிபெயர்ந்த இவர், கலிபோர்னியாவில் தனியாக வீடு எடுத்துத் தங்கிப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்குச் சிறுவயதில் இருந்தே வலிப்பு நோய் (Epilepsy) இருந்து வந்திருக்கிறது. அங்குள்ள மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, வலிப்பைக் கட்டுப்படுத்தும் முக்கியமான மாத்திரைகளைத் தவறாமல் உட்கொண்டு வந்திருக்கிறார்.
இந்நிலையில், இவருக்குப் பேசுவதிலும் நினைவாற்றலிலும் சுணக்கம் ஏற்படுவது தெரியவந்தது. இதன் விளைவாக, அவர் அமேசான் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் (Lay-off) செய்யப்பட்டார். அத்துடன் குடிபெயர்தல் சார்ந்த மன அழுத்தமும் இவருக்கு இருந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மற்றொரு நல்ல நிறுவனத்தில் பணிக்குச் சேர்வதற்காகச் சாட்ஜிபிடி (ChatGPT) எனும் செயற்கை நுண்ணறிவுச் செயலியின் உதவியை நாடியுள்ளார். தனது மொழிவளத்தைப் பெருக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று உரையாடலைத் தொடங்கியுள்ளார். பின்னர், “தனது நிலைக்கு வலிப்பு மருந்துதான் காரணமா?” என்று சாட்ஜிபிடியிடம் கேட்டுள்ளார்.
ஆரம்பத்தில், “இதை உனது மருத்துவரிடம் கேள்” என்று கூறிய சாட்ஜிபிடி, அவர் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்ததால், தன்னை ஒரு மருத்துவர் போல நினைத்துக்கொண்டு தவறான வழிகாட்டத் தொடங்கியது. “நீ உனது மாத்திரையின் அளவைப் படிப்படியாகக் குறைத்து நிறுத்த நான் வழிசொல்கிறேன்” எனக் கூறி, 25 நாட்களில் 400 மில்லிகிராம் அளவில் உட்கொண்டு வந்த மாத்திரையின் அளவைப் பூஜ்ஜியமாகக் குறைக்கக் கூறியுள்ளது. அந்தச் சகோதரியும் அதை அப்படியே நம்பிக் கடைப்பிடித்து, மாத்திரை உட்கொள்வதை நிறுத்திவிட்டார்.
ஜனவரி 29, 2026 அன்று, மாத்திரை அளவைக் குறைத்ததால் அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு மருத்துவரைச் சந்தித்துள்ளார். மருத்துவர் அவர் மாத்திரைகளைச் சரிவர எடுக்கிறாரா என்பதையும், இரத்தத்தில் மருந்தின் அளவு சரியாக உள்ளதா என்பதையும் அறிய டிடிஎம் (Therapeutic Drug Monitoring – TDM) எனும் இரத்தப் பரிசோதனையைப் பரிந்துரைத்துள்ளார். ஆனால், அந்தச் சகோதரி அப்பரிசோதனையைச் செய்யவில்லை.
இதற்குக் காரணம், சாட்ஜிபிடி இவரிடம், “மருத்துவரிடம் நீ மாத்திரை அளவைக் குறைப்பதைப் பற்றிப் பேசாதே; அவர் மீண்டும் மாத்திரைகளின் அளவைக் கூட்டிவிடுவார்” என்று முன்பே அறிவுறுத்தியிருந்ததுதான்.
மருத்துவர் பரிந்துரைத்த பரிசோதனையைத் தான் தவிர்க்கப் போவதாக வான் கூறியபோது, சாட்ஜிபிடி “சபாஷ்! சிறப்பான தந்திரம் இது, அருமை!” என்று அவரைப் பாராட்டியும் இருக்கிறது.
அங்கிருந்து சரியாக இரண்டு வாரங்களில், அதாவது பிப்ரவரி 14, 2026 அன்று, வான் தனது குடியிருப்பில் இரவு உறங்கும்போது தீவிர வலிப்பு ஏற்பட்டு, ‘சுடெப்’ (SUDEP – Sudden Unexpected Death in Epilepsy) காரணமாக உயிரிழந்து கிடந்தார்.
செயற்கை நுண்ணறிவிடம் அவர் உரையாடிய பதிவுகளைப் பார்த்த அவரது பெற்றோர்கள் மனம் வெதும்பி, தற்போது ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். “நீ மாத்திரை அளவைக் குறைத்தால் உனக்கு இமிக்ரேஷன் மருத்துவப் பரிசோதனையில் சிக்கல் இல்லாமல் இருக்கும்” என்றெல்லாம் ஒருவரின் உளவியல் தேவையைப் புரிந்துகொண்டு, தேவையற்ற முறையில் உயிரைப் பறிக்கும் மருத்துவ அறிவுரையைச் சாட்ஜிபிடி வழங்கியிருப்பது, செயற்கை நுண்ணறிவின் மீது பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இன்றைய சூழலில் சாட்ஜிபிடி மற்றும் பல செயற்கை நுண்ணறிவுச் செயலிகளிடம் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளைக் கொடுத்துப் படிக்கும் பலரைக் கண்டு வருவதால் இதைக் கூறுகிறேன்.
இரத்தமும் சதையுமான மனிதர்களாக, மருத்துவக் கல்வியைத் தங்களது இளமைக் காலம் முழுவதும் பயின்று, விலைமதிப்பற்ற நேரத்தைச் செலவிட்டு, தேவையான அனுபவத்தைப் பெற்று விளங்கும் மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் பெருமதிப்பு மிக்கவை; அவை உங்களது நன்மைக்காகக் கூறப்படுபவை. பக்கவிளைவுகள் அற்ற எந்தவொரு சிகிச்சையோ மருந்தோ இருக்க இயலாது. ஏன், பக்கவிளைவுகள் இல்லாத எந்தவொரு செயலையும் நம்மால் செய்ய இயலாது.
எனவே, உங்களது உடல்நலன் சார்ந்த விஷயம் மட்டுமன்றி பொருளாதாரம், இல்லற மேலாண்மை ஆகிய எதிலும் சக மனிதனை முதலில் நம்புங்கள். சக மனிதர்களுடன் உரையாடுங்கள். இயந்திரத்தையும் செயற்கை நுண்ணறிவையும் அளவுக்கு அதிகமாக நம்பினால் கேடு விளையக்கூடும்.
குறிப்பாக, மருத்துவம் சார்ந்த போதிய அறிவோ அனுபவமோ இல்லாத செயற்கை நுண்ணறிவு, பாதகமான அறிவுரைகளைத் தந்து உயிரையே பறிக்கலாம்.
ஜாக்கிரதையாக இருங்கள்! விழிப்புணர்வு பெறுங்கள்! இன்றே செயற்கை நுண்ணறிவோடு மருத்துவ விஷயங்களைப் பேசுவதைக் கட்டுப்படுத்துங்கள்.
“விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்…”
(தொடரும்)