Home நூல் விமர்சனம்பேரன்பின் சாட்சியங்கள் – அமுதவல்லி நாராயணனின் ’என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து…

பேரன்பின் சாட்சியங்கள் – அமுதவல்லி நாராயணனின் ’என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து…

by Ramalakshmi Rajan
0 comments

என்றும் நானறியேன்‘ கவிதைத் தொகுப்பு ஒரு உயிர்ப்புள்ள நாட்குறிப்பைத் திறந்து வைப்பது போல் உணர வைக்கிறது. கவிதை என்பது, அமைதியில் நினைவு கூர்ந்திடும் உணர்வுகளிடமிருந்து ஆரம்பமாவது எனும் வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தின் எண்ணத்தையும்; மிகச் சிறந்த மனங்களின் மிக மகிழ்ச்சியான தருணங்களின் பதிவாகும் எனும் P.B. ஷெல்லியின் கூற்றினையும்; கற்பனை மற்றும் உணர்ச்சிகளின் மொழி எனும் வில்லியம் ஹாஸ்லிட்டின் பார்வையையும் மெய்ப்பிக்கும் விதமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. வலைப்பூக்களின் வசந்தகாலத்தில் ‘என் வானம்’ வலை தளத்தில் இருபது ஆண்டுகளாக எழுதி வரும் அமுதா என்ற அமுதவல்லி நாராயணனின் இந்த நெடும்பயணத்தில் நானும் உடன் இருந்திருக்கிறேன் என்பதையும், தொகுப்பாக அவரது கவிதைகளை வாசிக்கக் காத்திருந்தேன் என்பதையும் மகிழ்வுடன் கூறிக் கொள்கிறேன்.

108 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில், ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணம் ஆழ்ந்த நெகிழ்வுடனும், உண்மையுடனும் விரிகிறது. சூரிய ஒளியில் நனைந்த குழந்தைப் பருவ நினைவுகள், தாயின் ஆழமான அன்பு, தந்தையின் அமைதியான பிரியம், உறவுகளின் உன்னதம், தன் குழந்தைகளின் மீதான எல்லையற்ற பாசம்.. இவை அனைத்தும் கவிஞரின் உள்ளத்திலிருந்து தீட்டப்பட்ட ஓவியங்களாக உயிர்பெற்றுள்ளன. எதைக் குறிப்பிடுவது, எதைத் தவிர்ப்பது எனும் திகைப்பை ஏற்படுத்தும் கவிதைகள்.

“என்ன பிடிக்கும் என கேட்காமலே
பிடித்ததை செய்வாள் அம்மா

என்ன பிடிக்கும் என நான்
எல்லோரையும் கேட்டு செய்வேன்

என்ன பிடிக்கும் எனக்கு என
எவரும் கேட்கவில்லை என்றுணர்ந்து

அம்மாவுக்கு என்ன பிடிக்கும் என
கேட்டபொழுது…
பிடித்தவை மறந்தே போயிருந்தாள்.” [அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?]

‘அன்னையும் பண்டிகைகளும்’ கவிதை நம்மில் யாராலும் மறுதலிக்க முடியாத உண்மை.

ஒவ்வொரு கவிதையும் கவிஞரின் அக நிலப்பரப்பைக் காட்டும் ஒரு மென்மையான சாளரத்தைப் போலத் திறக்கிறது. மொழிநடை ரீதியாக, இக்கவிதைகள் கவித்துவமான அழகிற்கும், கதை சொல்லும் தெளிவிற்கும் இடையே ஒரு நேர்த்தியான சமநிலையைக் கொண்டுள்ளன.

இவரது கவிதைகளில் வீடுகள் உயிரும் உணர்வும் கொண்டவையாக உலவுகின்றன. வீடென்பது…, காலியான வீடு, நினைவுகள் பூட்டிய வீடு, திண்ணை தொலைந்த வீடுகள், ஊரில் வீடு, ஒரு திண்ணையின் கதை — ஆகிய கவிதைகள் நீங்காத நினைவுகளையும், சுவர்களின் உள்ளிருக்கும் அன்பையும் மென்மை கலந்த வலியோடு வெளிப்படுத்துகின்றன:

“…சொல்லிக்கொள்ள யாருமின்றி
நினைவுகளைத் தூண்டிவிட்டு
கிரீச்சிடும் கதவாக
ஒலிக்கும் வீட்டின் குரல்
அடுத்த பயணம் எப்பொழுதென…
மீண்டும் வரும் காரணம்
என்னவாக இருக்குமென
தேடலுடன் பூட்டப்படுகிறது
ஊரில் வீடு…” [ஊரில் வீடு]

“…நல்லதொரு நாளில்
மனமார்ந்த வாழ்த்துக்களுடன்
அவர்கள் சொந்த வீடு
குடி பெயர்ந்தார்கள்

இந்த வீட்டில்
மழலையின் சுவடுகள்
இன்னும் இருக்கின்றன…
வீட்டை…
வெறுமையால் நிறைத்துவிட்டு
காலி செய்துவிட்டார்கள்” [காலியான வீடு]

அகவயமான உணர்வுகளுக்கு அப்பால், தன்னைச் சூழ்ந்திருக்கும் சமூகப் பின்னலையும் அவரது கவிதைகள் பேசுகின்றன. முதுமையிலும் உழைப்பு, ஏதோ ஒன்றுக்காக…, ஆக்ரமிப்பு, மீண்டு வரட்டும் உயிரினங்கள்!! — போன்ற கவிதைகளில் சமூக விழிப்புணர்வை ஆளுமையோடு இயல்பாக இழையோடச் செய்துள்ளார். இருமனங்களுக்கு இடையேயான நேசம் புலப்படுகிறது ‘மெளனத்திரை’யில். மரணத்தின் நிழலை நடுக்கத்துடன் தொடுகின்றன ‘நிழற்பட பயணம்’ மற்றும் ‘இழப்பு’.

சுயத்தை இடையறாது கேள்வி கேட்கும் மனமும், வாழ்வின் நிதர்சனங்களை இயலாமையின் மென்மையோடு எதிர்கொள்ளும் உணர்வும் இவரது பல கவிதைகளில் அழுத்தமாக வெளிப்படுகின்றன.
“…சின்ன சின்னதாய்
திருப்பாத நன்றிகளும்
சின்ன சின்னதாய்
செய்த தவறுகளும்
சின்ன சின்னதாய்
சந்தித்த துரோகங்களும்
உறுத்திக் கொண்டேயிருக்கின்றன
மனதின் ஓரத்தில்…” [உறுத்தல்]

“…வாழாத தருணங்களை எண்ணி
வாழ்ந்த வாழ்க்கையை மறந்த
தீராத ஏக்கத்தோடு நோக்கினேன்
முடிந்து போன வாழ்க்கையை…” [தீராத ஏக்கங்கள்]

இவரது கவிதைகளின் பெரும் வலிமை அவற்றின் நேர்மையிலும் உலகளாவிய தன்மையிலும் உள்ளது. மிகவும் தனிப்பட்ட தருணங்களை வேராகக் கொண்டிருந்தாலும், அவை வாசகர்களை தமது சொந்தக் குழந்தைப் பருவத்திற்கும், பெற்றோரின் நினைவுகளிற்கும், அன்பின் அமைதியான மூலைகளிற்கும் அழைத்துச் செல்கின்றன. ஒரு குழந்தையாக இருந்து தாயாக மாறுவது, நினைவுகளை அசைபோட்டு புதிய நினைவுகளை உருவாக்குவது, மற்றும் இயற்கையின் பெருந்துடிப்பின் ஒரு பகுதியாகத் தன்னை உணர்ந்து நம்மையும் உணரச் செய்வதெனப் பரந்து நிற்கிறது.

மழலை சிரிப்பு, தித்திக்கும் முத்தம், மழலை இன்பம், என் மடியில் பூத்த பூக்கள், விரியும் உன் உலகம்…, என் பெண் வளர்கிறாள்…, புரிந்து கொள்வாயா பெண்ணே, என்னுலகம் நீயானாய்…, மாறிவிட்டதடி என்னுலகம் .., நீயின்றி — என இரு பெண் மக்களின் வளர்ச்சிப் பயணத்தை அன்போடு தொடரும் பல கவிதைகள், தாய்மையின் ஆகச் சிறந்த பூரிப்பில் பிறந்தவை என்பதைத் தமது தலைப்புகளாலும் உணர்த்துகின்றன.

“…என் நெஞ்சோடு சாய்ந்து
நான் மட்டும் உன்னுலகமென
துன்பமின்றி நீ உறங்குகையிலே
என்னுலகம் நீயானாய்…” [என்னுலகம் நீயானாய்…]

“…அலைகள் கலைக்கும் மணலில்
எழுத்து எதற்கு என்றவள் தான்
உன் சிரிப்பிற்காக, அழிய அழிய…
எழுதிக் கொண்டிருக்கிறேன்

மணல் வீட்டைக் கலைத்தவரிடம்
கோபம் கொண்டவள் தான்
நீ கலைப்பதற்கென்றே
கோட்டைகள் கட்டுகிறேன்…” [மாறிவிட்டதடி என்னுலகம்]

ஆக, வாழ்க்கையின் சுழற்சிகளைக் கொண்டாடும் ஒரு திருவிழாவாக ஒளிர்கிறது இத்தொகுப்பு. மொழி இனிமையுடனும் எளிமையுடனும் அமைந்திருப்பதால், உணர்வுகள் நேரடியாக வாசகர் மனதிற்குக் கடத்தப்படுகின்றன. அவரது சொற்கள் மென்மையான நீரலைகளைப் போல் வருகின்றன, ஆயின் நீடித்து நிற்கின்றன. இந்த மென்மையும் எளிமையும் கவிதைகளின் ஆழத்தைக் குறைத்து விடவில்லை. மாறாக, அதிகப்படுத்துகின்றன. அவை பயணிக்கும் நிலங்களின் வழியாக நம் காலடியில் உள்ள பூமியை மீண்டும் கண்டடைகிறோம். வாசிப்பவரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்குவதுடன் நின்று விடாமல், இக்கவிதைகள் ஒரு நிம்மதியை வழங்குகிறது.

நினைவுகள் என்பது மனிதர்களை மட்டும் சார்ந்ததல்ல; அவர்களுடன் வாழ்ந்த, அவர்கள் விட்டுச் சென்ற சிறு பொருட்களும் காலத்தைக் கடந்து நம்மைத் தொடுகின்றன என்பதை நெகிழ்வுடன் சொல்லும் கடைசிக் கவிதை ஒரு ஆழமான கேள்வியுடன் நிறைவுறுகிறது:
“என்றும் நானறியேன்
என்னை நினைவுறுத்த
என்ன இருக்கும் என்று.” [என்றும் நானறியேன்]
அன்று அவரது வலைப்பதிவில் பலரும் சொன்ன அதே பதில்தான் இப்போதும் மனதில் எதிரொலிக்கிறது.., அது அவரது கவிதைகள்தாம் என்பதன்றி வேறென்னவாக இருக்க முடியும்? காலத்தைக் கடந்து நிற்கும் பேரன்பின் சாட்சியங்கள் இக்கவிதைகள்.

*

‘என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பு
ஆசிரியர்: அமுதவல்லி நாராயணன்
வெளியீடு: Pustaka
முதல் பதிப்பு: ஜனவரி 2025
விலை: ரூ. 200; பக்கங்கள்: 173
தொடர்பு எண்: 7418555884
**

Author

  • Ramalakshmi Rajan

    ராமலக்ஷ்மி :
    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.

    இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment