Home இலக்கியம்*திம்மராஜபுரத்துக் கதைகள்* –  நூல் விமர்சனம்

*திம்மராஜபுரத்துக் கதைகள்* –  நூல் விமர்சனம்

0 comments

வெளியீடு: தமிழ்வெளி பதிப்பகம்
ஆசிரியர் : ராணி கணேஷ்

எழுத்தாளர் ராணி கணேஷின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, வெறும் புனைவுகளின் தொகுப்பாக இல்லாமல், திருநெல்வேலி மண்ணின் வாழ்வியலையும் மனிதர்களின் உணர்வுகளையும் அப்படியே அள்ளித்தரும் ஒரு காலப் பெட்டகமாகத் திகழ்கிறது. ஆசிரியர் திம்மராஜபுரம் என்ற கிராமிய மணம் மாறாத சிற்றூரைத் தன் கதைகளின் களமாகக் கையாண்டுள்ளார். தாமிரபரணி ஆற்றங்கரை, பாளையங்கோட்டையின் அருகாமைப் பகுதிகள், தெருக்கள், கோவில்கள் என நெல்லை மாவட்டத்தின் பின்னணியை மிகத் துல்லியமாக வர்ணித்திருப்பது வாசகர்களை அந்த ஊருக்கே அழைத்துச் செல்கிறது.

கதைகளில் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ள நெல்லை வட்டார வழக்கு, கதாபாத்திரங்களுக்கு உயிரோட்டத்தையும் எதார்த்தத்தையும் சேர்க்கிறது. இந்தத் தொகுப்பின் மிக முக்கியப் பலமே, இதில் வரும் பெண் கதாபாத்திரங்களின் வடிவமைப்புதான். ‘தரையில் ஒரு தாயம்‘ கதையில் வரும் பெரியாச்சி, ரஞ்சனி போன்ற பாத்திரங்கள் மூலம் நம் முன்னோர்களின் நினைவுகளையும், கால மாற்றத்தில் நாம் இழக்கும் பாரம்பரிய அடையாளங்களையும் ஆசிரியர் நெகிழ்ச்சியோடு தொட்டுக் காட்டுகிறார்.

அதேபோல், ‘மாயச்சூல்‘ கதையில் வரும் ஜோதி, கணவனின் மானத்தைக் காக்கத் தன்மேல் பழியைச் சுமந்து கொண்டு குடும்பத்தை உடைக்காமல் காப்பாற்றும் எதார்த்தப் பெண்ணாக மிளிர்கிறாள். ‘இசக்கி‘ கதையின் சீதா, ஜோசிய மூடநம்பிக்கைக்காகத் தன் கருவைக் கலைக்கச் சொல்லும் மாமனார் குடும்பத்தையும், அதற்குத் துணையாக நிற்கும் கணவனையும் எதிர்த்து, “நான் என் குழந்தையைக் காப்பேன்” என்று வீறுகொண்டு எழுவது மிக உன்னதமான பெண்ணியப் பிரகடனம்.

மேலும், ‘வாழ்ந்த வீடு‘ போன்ற கதைகளின் மூலம் மனிதர்களுக்கும் அவர்கள் வாழும் இடத்திற்குமான உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஆசிரியர் மிக அழகாகக் கடத்தியுள்ளார். முன்னேற்றம் என்ற பெயரில் நாம் நகரங்களை நோக்கி ஓடினாலும், நம் அகம் எப்போதும் பால்ய கால நினைவுகளையும் சொந்த ஊரையுமே தேடி அலைகிறது என்ற உண்மையை இப்புத்தகம் மிக ஆழமாகப் பேசுகிறது. பணத்திற்காகவும் பேராசைக்காகவும் சொந்த உறவுகளே செய்யும் துரோகங்களையும் எதார்த்தமாகப் பதிவு செய்கிறது. அதே நேரத்தில், குழந்தையின்மைக்கு எப்போதும் பெண்களையே குற்றவாளியாக்கும் சமூகத்தின் ஆணாதிக்கப் புத்தி, ஜோசியம் மற்றும் சடங்குகளின் பெயரால் சிசுக்களைக் கொல்லத் துணியும் மூடநம்பிக்கைகள் எனச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பல அவலங்களை ஆசிரியர் சவுக்கடி கொடுப்பது போல் தன் கதைகளின் மூலம் சாடியுள்ளார்.

நூலாசிரியர் தன் பால்ய கால நினைவுகளையும், தான் பார்த்து வளர்ந்த மனிதர்களையும், புனைவுகளையும் கலந்து பன்னிரெண்டு உயிர்ப்புள்ள கதைகளாக இதை உருவாக்கியுள்ளார். திம்மராஜபுரத்துக் கதைகள் என்பது, நாம் தொழில்நுட்ப உலகிற்குள் நுழைந்ததால் தொலைத்துவிட்ட எளிய மனிதர்களின் பாசம், கூட்டுக்குடும்பத்தின் நெகிழ்ச்சி, மண்ணின் மணம் மற்றும் பெண்களின் சுயமரியாதைப் போராட்டம் ஆகியவற்றைப் பேசும் ஒரு மிகச்சிறந்த வாழ்வியல் ஆவணம். எதார்த்தமான தமிழ் சிறுகதைகளை விரும்பிப் படிப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

Author

  • ராஜேஷ் வைரபாண்டியன்(நிலாரசிகன்) கவிஞர் மற்றும் எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் நாவல், கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் ஆனந்த விகடன், வார்த்தை, உயிர்மை, கல்கி, புன்னகை, அகநாழிகை, நவீன விருட்சம், உயிர் எழுத்து, கல்குதிரை, கொம்பு போன்ற இதழ்களிலும், கீற்று, கூடல்திணை, அதிகாலை, உயிரோசை, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன. 2011க்கான "சுஜாதா சிறந்த சிற்றிதழ் விருது" பெற்றிருக்கும் 361 என்னும் தீவிர நவீன இலக்கிய சிற்றிதழின் ஆசிரியர்.

You may also like

Leave a Comment