அரசமரத்தடிக் காற்றின் சிலுசிலுப்பில் காதோரம் உரசிக் குறுகுறுக்க வைத்த முன்னுச்சி முடிக்கற்றைகளைத் தன்னியல்பாகத் தடவிக் கொத்தாகக் குவித்து வலது காதின் பின்புறமாகச் சொருகியவாறு மலை உச்சியில் பார்வையை நிலைக்க விட்டிருந்தாள் தன்மத்ரா.
மலை அடிவாரத்தில் அவள் அமர்ந்திருந்த பலாமரத்தூரின் மேல்பாகம் வெட்டப்பட்டு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கக் கூடும்… ஆனாலும் பயன்படுத்துபவர்களுக்கு உறுத்தாத வண்ணம் பல்லாண்டு கால உபயோகத்தின் பயனாக வழுவழுப்பான மேல்தளத்துடன் இருந்தது. கால்முட்டிகளை சேர்த்தணைத்துக் கட்டிக் கொண்டு முழங்காலில் முகம் பதித்து மலைமுகட்டையே பார்த்துக் கொண்டு எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ தெரியவில்லை.
அவள் வந்து வெகு நேரமாயிருக்கக் கூடும் என்று உணர்த்திக் கொண்டிருந்தது இன்னும் அணைக்காமல் வைத்திருந்த அலைபேசி அலார்ம் ஓசை. ஆம், கூகுள் பேசியில் அவள் முன்னதாகக் கட்டமைத்திருந்த அலார்ம் ஓசை ‘தனு இட்ஸ் டைம் டு கோ ஹோம்’ தனு இட்ஸ் டைம் டு கோ ஹோம்… என்று இடையறாது மிழற்றிக் கொண்டிருந்தது.
அதைக்கூட உணராமல் அவள் அப்படி என்ன விதமான யோசனையில் மூழ்கிப் போயிருக்கிறாளோ என்று நொடிக்கொரு தரம் ஓடோடி வந்து தனது கூர்ந்த அலகால் தரையைக் கொத்திக் கொத்தி அவளது கவனம் கலைக்க முயன்று கொண்டிருந்தது அருகில் மேய்ந்து கொண்டிருந்த காட்டுக் கோழியொன்று.
எதற்கும் முடிவு என்று ஒன்று உண்டல்லவா? அத்தனை நேரமாய் மிகக் கனமானதொரு யோசனையில் மூழ்கி இருந்தவளை வெகு அருகிலென நெருங்கி வந்த இருள் ஒருவழியாக கவனம் கலைத்தது.
கை ரேகை மறையும் இருட்டில் இன்னும் அங்கேயே அமர்ந்து கொண்டு மோனத்தில் லயித்திருத்தல் நல்லதல்ல என்றுணர்ந்தவளாக மெதுமெதுவாய்த் தன்னியல்புக்கு வந்தாள் அவள்.
அந்தியில் உள்ளூர்க்காரர்களே உலவத் தயங்கும் மலைக்காட்டின் நுழைவாயிலே போன்ற அந்த இடத்தில் தன்னந்தனியாக அமர்ந்திருக்கிறாளே யாரிவள்?
வலசை திரும்பிய அக்கக்காக் குருவிகள் தமக்குள் கேட்டுக் கொள்வதைப் போல மரங்கள் தோறும் கூச்சலிட்டு க் கொண்டிருந்தன.
எல்லாவற்றையும் அவதானித்தவாறு அவ்விடத்தை விட்டு மெதுவாக நகரத் தொடங்கினாள் அவள்.
பிறப்பில் அஸ்ஸாமியான தன்மத்ரா வாழ்வில் முதன்முறையாக விசுவநாதபுரிக்கு வந்திருந்தாள்.
இந்த மண்ணில் கால் வைத்த முதல் நொடியில் இருந்தே அதென்னவோ இந்தக் காற்றும், இந்த நிலமும், இந்த ஊரும் இதன் மக்களும் என்னுடையவர்களே தானோ?! என்ற எண்ணம் அவளுக்குள் வலுத்துக் கொண்டே இருந்தது.
எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து எப்படியோ இந்த ஊரை வந்தடைந்து முழுதாக ஒரு மாதம் கூடத் தாண்டவில்லை. அதற்குள் ஊருக்கும், தனக்குமானதொரு ஆத்மார்த்தமான பந்தம் எப்படி முகிழ்த்திருக்க முடியும்?
எங்கோ வடகிழக்கு மாகாணமொன்றில் பிறந்து 10 வயதிலிருந்து தன்னந்தனியளாக 28 வயது வரை வாழ்ந்திருந்து பெற்றோர், உடன் பிறந்தோர் என எவரது வழிகாட்டுதலும் கிடைத்திருக்க வேண்டிய அதி முக்கியமான வாழ்க்கைத் தருணங்களில் கூட கிஞ்சித்தும் கிட்டாமலே போன துரதிருஷ்டசாலியாகி சொந்த மாநிலத்தில் எப்படி எப்படியோ அலைக்கழிந்து விட்டு கடைசியாக ஒரிஸ்ஸாவில் நிலைகொள்ளும் எண்ணத்தில் இருந்தவளை இங்கு வரவழைத்த புண்ணியம் தோழி தாராவுக்கே உரித்தானது.
தாரா இவளுக்குத் தோழியான கதை விந்தையானது.
விடுமுறைகள் தோறும் தனது தனிமையை விரட்ட இவள் கற்றுக் கொண்ட பல கலைகளில் ஒன்று ஜெர்மன் மொழி. கற்றுக் கொண்டதோடு அதில் பட்டம் பெற்றானதும் தொடர்ந்து தான் பயின்ற இணையதளச் செயலி மூலமாகவே அதை ஆர்வமுள்ள பிற மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் விருப்பம் தனக்கு உண்டு என்று பதிவு செய்திருந்தாள் தன்மத்ரா.
அதில் அப்படியொரு வசதி இருந்ததால் உலகெங்கிலும் இருந்து அவளுக்குச் சில மாணவர்கள் கிடைத்தனர். அவர்களுள் ஒருத்தி தான் தாரா. அவள் அப்போது டெல்லி பல்கலைக்கழகத்தில் எம் பி ஏ படித்துக் கொண்டிருந்தாள். அந்த ஆண்டில் டெல்லி புத்தகத் திருவிழா ஒன்றில் அகஸ்மாத்தாக இருவரும் நேரிலும் சந்தித்துக் கொள்ளக் கூடிய சந்தர்பமும் அமைய சம வயதினரான இரு பெண்களிடையே நட்பும் வலுப்படலாயிற்று. தாராவுக்கு , தன்மத்ராவின் நேர்த்தியான கற்பித்தல் திறனின் மீது பெரிய மரியாதை இருந்ததால் ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமான தோழிகளாயினர்.
உயர்கல்விக்காக டெல்லியில் வசிக்க நேர்ந்த போதும் தாராவின் பிறந்த ஊர் தமிழகத்தின் விஸ்நாதபுரி என்று அப்போதே தன்மத்ரா அறிந்திருந்தாள்.
ஆரம்பத்தில் விஸ்வநாதபுரி பயணத்தில் தன்மத்ராவுக்கு அத்தனை ஆர்வமிருக்கவில்லை. தமிழகத்தின் கோடை காலங்களைப் பற்றி அவள் அனுபவரீதியாகத் தெரிந்து கொண்டவள் இல்லையென்ற போதும் தென்பாரத நிலத்தின் கோடைகாலப் பரிதாபங்கள் குறித்து ஏட்டளவில் அவளுக்குத் தெரிந்தே இருந்தது. ஏப்ரல், மே மாதங்களில் இங்கு வந்து மாட்டிக்கொள்ளும் விருப்பம் இல்லாததால் தாராவின் வரவேற்பை முதலில் அவர் நிராகரித்துக் கொண்டு தான் இருந்தாள்.
பிறகு எப்படி மனம் மாறியது? எந்த விதி அவளை இங்கு கொண்டு வந்து சேர்த்தது என்பது இன்றும் புரியாத புதிர்.
அந்த வகையில் கடந்த ஐந்தாண்டுகளாக ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் மீண்டும் மீண்டும் விசுவநாதபுரிக்கு வரச்சொல்லி தொடர்ந்து அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த தாராவுக்கு இம்முறை வெற்றி கிட்டியது. அவள் பெருமதிப்புக் கொண்டிருந்த அவளது வடகிழக்கு மாகாணத் தோழி அவளுடைய சொந்த ஊருக்கு வந்து இறங்கி விட்டாள் என்பதில் தாராவுக்கு சந்தோஷத்துக்கு குறைச்சல் இல்லை.
தாராவைப் பற்றி நினைக்கையில் அவளது அண்ணன் சோமேஷின் நினைவும் அழையா விருந்தாளியாக மேலெழத்தான் செய்கிறது. அதை ஒதுக்கி வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது தன்மத்ராவுக்கு அப்படியொன்றும் கடினமான காரியமில்லை. ஆனால், இன்றைய நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் ஷைலாவின் விடுமுறை தீரப்போகிற இந்த சமயத்தில் சோமேஷ் குறித்து ஒரு ஸ்திரமான முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவள் இருந்தாள்.
ஏனெனில், தன்மத்ரா இங்கு வந்திறங்கிய ஒரே வாரத்திலேயே அவளது அழகையும், படிப்பையும், அதன் மூலமாக அவள் ஈட்டிக் கொண்டிருத கணிசமான மாதாந்திர வருமானத்தையும், அஸ்ஸாமில் அவளுக்கிருந்த பின்புலத்தையும் கொண்டு முடிவு செய்து சோமேஷ் அவளிடம் நெருங்கிப் பழக விழைந்தான். தாராவின் உடன் பிறந்தவன் என்பதோடு பழகுவதற்கு ஆபத்தானவன் அல்ல என்றும் தோன்றியதால் தன்மத்ரா அவனை நிராகரிக்காவிட்டாலும் கூட அவனது விருப்பத்தை இதுவரை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
சோமேஷின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் எதுவுமில்லாத போதும் அதைப்பற்றி யோசித்தாக வேண்டிய நிலையில் நீடித்தது அவளது அப்போதைய சூழல்.
உண்மையில் அவள் ஊர் திரும்ப இன்னும் இரண்டே தினங்கள் தான் மிச்சமிருக்கின்றன. நாளை விடியும் முன் இந்த ஊரில் இதற்கு மேலும் அவள் தங்கி இருக்க வலுவான காரணம் எதையாவது நிச்சயம் அவள் கண்டுபிடித்தாக வேண்டும். இல்லையேல் தாரா தக்கலில் பதிவு செய்யவிருக்கும் ரயில் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டு மீண்டும் கவுகாத்திக்கே திரும்ப வேண்டியிருக்கும்.
ஆனால், அதெப்படி முடியும்?
இந்த ஒரு மாதத்தில் பார்த்த கணத்தில் இருந்தே இதோ இந்த நொடி வரையிலும் கூட சதா தன் உள்ளத்தின் அடியாழம் வரை ஊடுருவி அறியப்படக்கூடாத ரகசியங்களனைத்தையும் அறிந்தே ஆகவேண்டுமெனும் வேட்கையை ஊட்டியவாறு அதோ உச்சியில் உருகி வழிந்து கொண்டிருக்கிறதே அந்த மலைச்சுனையைப் பிரிவதென்பது இப்போதிருக்கும் மனநிலையில் தன்னால் ஆகக் கூடிய காரியமில்லை என்பதை அவள் உணர்ந்து கொண்டதால் வந்து விட்ட தெளிவு அது.
மலைச்சுனையில் என்ன மாயமிருக்கிறது?
அங்கிருக்கும் எது தன்னை இப்படி ஒரு ஆழமான பாதிப்பில் ஆழ்த்தி வைத்திருக்கிறது?
சுனையா?
அதன் மூலாதாரமான அன்னையவளின் சிலம்பணிந்த கால்களா? பொற்கழலணிந்த திவ்ய பாதக் கமலங்களில் இருந்து பொங்கிப் பிரவஹித்து வரும் சுனை நீரின் அழகைக் கண்ட நாள் முதலே இவளுக்குப் பித்துப் பிடிக்காத குறை! அங்கிருந்து அகலவே மனமின்றி அம்பிகா தேவியின் பொற்பாதங்களில் நிலைத்திருந்த கண்களை கனவிலும், நனவிலுமெனப் பிறகு விலக்கவே இல்லை இவள்.
முதன்முதலாக இங்கு வந்த அன்றும் கூட ஷைலா தான் ”நேரமாச்சு அத்தை… இன்னும் கொஞ்சமிருந்தா ரொம்ப இருட்டிடும், அப்புறம் இந்த மலைக்காட்டுக்குள்ள பாதை மறந்து போய் கீழ இறங்கறது நமக்கு கஷ்டமாயிடும், வாங்க போகலாம்” என்று அரைமணிக்கொரு தரம் தொணதொணத்து மலையை விட்டுக் கீழிறக்கிக் கொண்டு வந்தாள்.
அந்தப் பாதங்களில் அப்படி எதைக் கண்டாள் இவள்?!
உள்ளும், புறமுமாக அவளது ஒவ்வொரு அணுவிலும் நீக்கமற நிறைந்து விட்ட அந்த சிலாரூபிணி யார்?
உள்ளூர் மக்கள் அவளை ‘ராக்காயி’ என்கிறார்கள். ஸ்தலபுராணமோ அவளை அம்பிகா யட்சி என்கிறது. யார் இவள்? இயக்கி என்றும் அவளை அரக்கி என்றும் கூடத்தான் ஒரு டூரிஸ்ட் கைட் சொல்லிக் கொண்டிருந்தார்.
அதெல்லாம் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்.
அவள் தேவதையா? அரக்கியா? என்பதல்ல பிரச்சினை… அந்தப் பாதங்கள் தன்னை என்னவோ செய்கின்றனவே… கண்களோடு கண்கள் பேசுவதை பற்றித்தான் இலக்கியங்கள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றனவே தவிர. கால்கள் பேசுவதைப் பற்றி என்றேனும் நாம் அறிந்திருக்கிறோமா?
ஆம், சதா சர்வ காலமும் ஒரு போதும் ஓய்ந்திருக்க விழையாத அந்த நூபுரம்( நூபுரம் என்றால் சிலம்பு என்று அர்த்தம்) அணிந்த கால்கள் தன்மத்ராவிடம் எதையோ சொல்ல விரும்பின!
முதல் முறை அங்கு சென்று திரும்பியதிலிருந்து தன்மத்ரா அதைப்பற்றி மட்டுமே கடந்த சில தினங்களாக ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறாள்.
பிறகெப்படி விசுவநாதபுரியை விட்டு அவளால் உடனே கிளம்ப முடியும்? ஆம், அவள் இங்கிருந்து ஆற்றி முடித்தாக வேண்டிய மகத்தான கடமையென ஏதோ ஒன்றிருக்கிறது. இம்முறை தவறினால் பிறகு எதிர்காலத்தில் எப்போதுமே அது சாத்தியப்படாததாகி விடக்கூடுமோ என்ற அச்சம் அவளுக்குள் மூண்டிருந்தது.
அப்படி மட்டும் ஆகிவிட்டால் தன்னைத்தானே மன்னித்துக் கொள்வது என்பது கூட முற்றிலும் இயலாத காரியமென அவள் நம்பினாள்.
எனவே இம்முறை ஷைலாவைத் தனியாக கவுகாத்திக்கு அனுப்பவதென்றும், அவள் மட்டும் இங்கேயே மேலும் சில மாதங்கள் தங்குவது என்றும் தீர்க்கமான முடிவெடுத்த பின் தனது அலைபேசியை எடுத்து சோமேஷின் எண்களை அழுத்தினாள்.
இங்கே ஷைலாவைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும்.
ஷைலா, தன்மத்ராவின் அண்ணன் வியாஷின் மகள்.
வியாஷும் , அவன் மனைவி நேயாவும் மகளைப் பற்றிய கவலைகளைத் தலை மேல் சுமக்காது அவளுக்கு 6 வயதிருக்கும் போதே கடும் முயற்சியின் பயனாக லண்டனில் வாய்த்த அருமையான ஆய்வுப்பணி வேலை ஒன்றில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தனர். மாதம் தவறாமல் தன்மத்ராவின் வங்கிக் கணக்கு எண்ணிற்கு தாராளமாக ஒரு தொகையை அனுப்புவதன் மூலம் தங்கை மற்றும் மகள் மீதான பொறுப்புணர்வை கடந்த பத்தாண்டுகளாக அவர்கள் நிலைநாட்டிக் கொண்டிருந்தனர்.
ஷைலாவுக்கு இப்போது 16 வயது. அத்தை தன்மத்ராவைப் போலவே 7 வயதில் இருந்தே ஹாஸ்டல் வாசம் தான் என்பது அவளது சுயவிருப்பின்றி அவள் மீது திணிக்கப்பட்டதொரு வாழ்க்கைமுறையாகி விட்டிருந்ததால் இத்தனை காலங்களில் அவளுக்கு அது பழகி விட்டிருந்தது. ஆனால், எது எப்படியாயினும் சற்றே நீண்டதான கோடை விடுமுறைக் காலங்களை மட்டும் தன் அழகான, அன்பான அத்தையுடன் செலவளிக்க அவள் பெரிதும் விரும்பியதால் தன்மத்ரா அவளைத் தன்னுடன் இங்கு அழைத்து வந்திருந்தாள்.
கவுகாத்தியில் சொந்த வீடும், சின்னஞ்சிறு காய்கறித்தோட்டமும், சுமாரான அளவில் அழகானதொரு தேயிலை எஸ்டேட்டும் தன்மத்ராவுக்கு எஞ்சியிருந்தது. அண்ணனுக்கும் அதில் பங்கு உண்டு. சின்னஞ்சிறு கிராமமான அங்கு தொடர்ச்சியாக தங்க முடியாத காரணத்தால் அவை அனைத்துமே அஸ்ஸாமிலிருக்கும் குக்கிராமமொன்றில் வசித்து வந்த அவளது சித்தியின் பொறுப்பில் இருந்தது. வருமானத்தை அனுபவிக்கும் நன்றி உணர்விலோ அன்றியும் அக்காள் மகளென்ற பாசத்திலோ ஏதோ ஓர் உணர்வில் உந்தப்பட்டவளாக வருடத்திற்கு ஒருமுறை மட்டும் அந்தச் சித்தி இவளைப் பார்க்க வருவாள். அவ்வளவு தான்.
மற்றபடி தன் வாழ்க்கைக்கும், தான் எடுக்கும் முடிவுகளின் சாதக பாதகங்களுக்கும் தான் மட்டுமே பொறுப்பு எனும்படியான ஒரு வாழ்க்கை தான் தன்மத்ராவுடையது.
கண்டிப்பதற்கோ ஒரு கஷ்டம் என்றால் சேர்த்தணைத்து தலை வருடி தோள் சாய்த்து ஆறுதல் மொழி கூறி அவளை அரவணைப்பதற்கோ இன்றைய தேதிக்கு அவளுக்கு யாருமே இல்லை.
அதற்காக அவள் பாசப் பிணைப்பானதொரு பந்தத்தை அறிந்தே இராதவள் என்றும் சொல்வதற்கில்லை. 10 வயது வரை அவளது அன்னையின் பாசப் பிணைப்பில் கட்டுண்டு கிடந்தது பூர்வ ஜென்ம நினைவோ எனும்படியாக இப்போதும் அவளுள் தனது அம்மாவைப் பற்றியதான ஏக்க நினைவுகள் உறைந்திருக்கின்றன.
அவளுடைய அன்னைக்கு அவள் தன்மத்ரா அல்ல! ‘பிறந்து ரத்தமும், சதையுமாக கையிலேந்திய நொடியிலிருந்தே நீ எனக்குத் ‘தனு’ தான் என் தங்கமே!’ என்று சிற்சில சமயங்களில் அவளை மிருதுவாக அணைத்துக் கொண்டு உச்சந்தலையில் முகம் பதித்து கண்களை மூடிக் கொண்டு மோனத்தில் ஆழ்ந்து போய் சொல்வதுண்டு அவளது அன்னை!
அத்துணை அன்பைப் பொழிந்தவள்… இத்தனை விரைவில் தன்னை விட்டு மறைவானேன்?!
காரணமே அற்று ஒரு மரணம் நிகழ்க்கூடுமா?
ஆம்!
ஏன்? எதற்கு? எப்படி? என்று உணர்ந்தறியும் முன் சட்டென நிகழ்ந்து முடிந்த அசம்பாவிதம் ஒன்று தனுவின் வாழ்வில் உண்டென்றால் அது அவளது தாயின் துர்மரணமே!
இதோ இப்போது தான் நடந்து முடிந்ததைப் போல அதைப்பற்றி நினைப்பதற்கே அஞ்சி உள்ளம் நடுங்கி உடம்பெல்லாம் உதறலெடுத்தது அவளுக்கு!
அதுவும் இந்த மலையடிவாரக் காட்டுப் பகுதியில் தன்னந்தனியே நின்று கொண்டு யோசிக்கும் போது அப்படியே ஓடிச்சென்று அந்த மலை உச்சியிலிருந்து குதித்து சுனைநீரில் ரத்தமாய் கலந்து எண்ணியெடுக்க எலும்பு கூட கிடைக்காத அளவுக்கு ஒன்றுமே இல்லாமலாகி மாண்டு இந்த உலகை விட்டே மறைந்தாலும் தான் என்னவாகி விடப்போகிறது! என்று அவளது மனம் பிறழ்வு கொள்ளத் தொடங்கி விட்டது.
அப்படி அவள் செய்ய முயன்றால் தடுப்பதற்கும் தான் அவளுக்கென்று யார் இருக்கிறார்கள்?
ஒருவரும் இல்லை.
ஷைலா கூட இவளை நம்பி இல்லை. அவளும் கூட விடுமுறை முடிந்ததும் தன் ஹாஸ்டல், நண்பர்கள் என்று தன்னை வகைப்படுத்திக் கொண்டு ஒதுங்கிக் கொள்ளத்தான் செய்வாள்…
இப்படியெல்லாம் மனம் போன போக்கில் சிந்தை தறிகெட்டு ஓடிக் கொண்டிருப்பதை எண்ணி எண்ணிப் பலநேரங்களில் பித்துப் பிடித்தாற் போலாகி விடுகிறது தன்மத்ராவுக்கு.
அப்படியான பொழுதுகளில் செய்வதற்கு ஏதுமற்ற இயலாமை உந்த தன்னிரக்கம் மிகக்கொண்டவளாக மடிந்து உட்கார்ந்து அந்த அந்தகாரத்தில் தன் தாயின் தற்கொலையை எண்ணி மனம் உடைந்து அழத்தொடங்குவாள்.
இப்போதும் அதுவே தான் நிகழ்ந்து கொண்டிருந்தது.
இந்தக் கணத்தின் முந்தைய எல்லாப் பொழுதுகளையும் போலவே இதோ இப்போதும் கூட அவளது 10 ஆம் வயது நினைவுகள் அன்றும் மேலெழுந்து வந்து முற்றிலுமாக அவளை ஆக்ரமிக்கத் தொடங்கின.