எல்லா நாட்களையும் போலவே அன்றும் அஸ்ஸாமின் முன்மாலைப் பொழுதொன்றில் பள்ளி விட்டு வீடு நோக்கிக் குதூகலமாகத் திரும்பிக் கொண்டிருக்கையில் தன்மத்ராவுக்குத் தெரியாது நாளை முதல் பள்ளிக்குச் செல்கையில் டாட்டா காட்டி வழியனுப்பி வைக்கத் தனது அன்பான அம்மா உயிருடன் இருக்கப் போவதில்லை என்று.
ஏதுமறியாத சின்னஞ்சிறுமியின் உலகத்தில் அவளது அம்மாவின் இடம் என்பது யாராலும் நெருங்கவே முடியாததொரு அன்பும் அந்தரங்கமுமான பிணைப்பு. அதை இன்று இழக்கப் போகிறோம் எனும் அறிகுறிகளேதுமின்றி எப்போதும் போலத்தான் அந்த நாளும் விடிந்தது.
மதியம் வீடு திரும்புகையில் வகுப்புத் தோழன் கிரிஷ் மாலையில் நடக்கவிருக்கும் தனது பிறந்த நாள் விழாவுக்கு வரச் சொல்லித் தோழர்கள் அனைவரையும் அழைத்திருந்தான். கிரிஷ் தனுவின் பள்ளித் தோழன் மட்டுமல்ல; உண்டு உறங்கும் நேரம் தவிர மற்றெல்லா நேரங்களிலும் ஒன்றாகவே சுற்றி வரும் களித்தோழனும்கூட. ஆக… அவனது பிறந்த நாள் குறித்த பரபரப்பான கற்பனைகளோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் அவள்.
வீடு நெருங்க நெருங்க மாலைக் குளிருக்கு இதமாக அம்மா செய்யும் துக்பாவின் அருமையான மணத்திற்காக நாசியும் ருசிக்காக நாவும் துடித்துப் பரபரக்க அத்துடன் மாலைப் பிறந்த நாள் விழாவுக்கு அணிந்து செல்லும் உடையைப் பற்றிய குதூகலமான யோசனைகளோடு சந்தோஷமாக வீட்டுக்குள் நுழைந்தாள் தன்மத்ரா.
வீட்டிலும் அசூயையாகவோ அல்லது ஒரு 10 வயதுச் சிறுமி சந்தேகப்படும்படியாகவோ எந்த உடனடி மாற்றங்களும் தென்படவில்லை. தினமும் முற்றத்துத் தென்னை மரத்தண்டில் சிறு புன்னகையுடன் சாய்ந்தவாறு நின்றபடி தன்னை வரவேற்கும் அன்னையைக் காணோம்! ஒருவேளை உள்ளே சமையலறையில் துக்பா (சைவம் மற்றும் அசைவம் என இருமுறையிலும் தயாரிக்கக் கூடிய ஒருவகை சூப் நூடுல்ஸ்) தயார் செய்து கொண்டிருக்கலாம். எனவே அவளைத் தொல்லை செய்யாமல் இன்று வீட்டுக்குள் நுழைந்து அம்மாவிடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கலாம் என்று யோசித்தவளாய் தன்னுடைய அறைக்குள் புகுந்தாள் தனு. பள்ளி விட்டு வந்ததும் வீட்டுக்குள் அங்கு இங்கென்று நேர விரயம் செய்யாமல் ஒழுங்காக நேரே குளியலறைக்குச் சென்று உடலைச் சுத்தம் செய்து கொண்டு சலவை செய்த ஆடைகளை அணிந்து கொண்டு பொறுப்பான குழந்தையாக வரவேற்பறைக்கு வந்தால் அது அம்மாவுக்குப் பிடித்தமான விஷயம் என்பதை உணர்ந்து கூடுதல் மகிழ்வுடன் அம்மாவைத் தேடாது நேரே குளியலறைக்குள் புகுந்தாள் தனு.
அப்படியல்லாது உடனடியாக அம்மாவைத் தேடிக் கொண்டு அவளிருக்கும் இடம் சென்றிருந்தால் ஒருவேளை அவளை மரணத்திலிருந்து காப்பாற்றியிருக்கக் கூடுமோ என்று இப்போதெல்லாம் யோசனைகள் கட்டுப்பாடின்றிப் பாய்ந்து அவளைக் குற்றவாளியாக்க முயல்கின்றன. எல்லாம் முடிந்த பின் யோசித்து என்ன? யோசிக்காவிட்டாலும் தான் என்ன? எனும் விரக்தி உணர்வு மேலே யோசிக்க ஒட்டாமல் நினைவுகளை நழுவச் செய்வதாயிருக்கிறது.
குளித்து விட்டு அம்மாவுக்குப் பிடித்த ரோஜா நிறப் பருத்திக் கவுன் அணிந்தவளாய் வெளியேறி மாஸ்டர் பெட்ரூமுக்குள் நுழைந்தவளை பேரமைதியுடன் வரவேற்றது அறை நடுவே படுக்கைக்கு மேலே அகாலமாகத் தொங்கிக் கொண்டிருந்த கொலுசணிந்த அம்மாவின் மென்பஞ்சுப் பாதங்களே!
காண்பது நிஜமா? அன்றி துர்க்கனவா எனும் குழப்பத்தில் தனுவின் மூளை சிந்திக்க மறுத்து சண்டித்தனம் செய்தது.
அழகான அன்பான அம்மா ஏன் கூரையில் பொருத்தப்பட்டிருந்த அலங்காரமான காத்தாடியில் சுருக்கிட்டுத் தொங்கிக் கொண்டிருக்கிறாள்?
ஏன்?
ஐயோ! அம்மா இப்படித் தொங்கினால் எப்படி? இறங்கி வா அம்மா… இப்படிச் செய்யாதேயேன்… ப்ளீஸ் அம்மா இறங்கி வாம்மா! …
அம்மா… ப்ளீஸ் அம்மா… வாம்மா..
அம்மா…. அம்மா… அம்மா!
இந்த வார்த்தைகளையேதான் அவள் மீண்டும் மீண்டும் எனச் சொல்லிக் கொண்டே இருந்தாள்.
வேறு யோசிக்க மூளை இடம் தரவில்லை.
அதிர்ச்சியில் உறைந்து சொன்னதையே சொல்லிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுது கொண்டே இருந்தவளைத் தகவல் அறிந்து திரண்ட அக்கம்பக்கத்து நட்புகள் தேற்ற முயற்சித்தும் பலனொன்றும் இல்லை.
காத்தாடியிலிருந்து கீழே இறக்கப்பட்ட அம்மா இன்னும் ஏன் தன்னருகில் வந்து தன்னைத் தேற்ற முயற்சிக்கவில்லை என்பதாகவே சிந்தனை பாய்ந்து அவளைப் பொறுமையிழக்கச் செய்து கொண்டிருந்தது.
அதே நினைவுகளுடன் ஒரு மூலையில் ஒடுங்கியவளை அங்கே கண்டுகொள்வார் யாருமில்லை.
இவளைக் காட்டிலும் 6 வயது மூத்தவனான அண்ணனுக்கும் ஏதும் புரிபட்டதாகத் தெரியவில்லை. அவனும் விவரமேதும் புரியாதவனாக அலங்கமலங்க விழித்துக் கொண்டு இவளருகில் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தான்.
ஆண் பிள்ளை அழக்கூடாது என்று நினைத்தானோ என்னவோ! கண்ணில் திரண்ட நீரை மறைத்து விழுங்க முயன்று தோற்றுப்போனவனாய் அப்பாவை எதிர்பார்த்து மனம் உடைந்து அழக் காத்திருந்தான் அவன்.
அப்பா இவர்களுடன் இந்த ஊரில் இல்லை. திஸ்பூர் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியரான அப்பா மாதத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே வீடு வருவார். மற்றபடி அவரது ஜாகை பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கான குடியிருப்பில்தான். அம்மா ஏன் தன்னையும் அண்ணனையும் அழைத்துச் சென்று அப்பாவுடன் சேர்ந்து வசிக்கவில்லை என்ற ஐயங்களுக்கெல்லாம் அப்போது இடமிருக்கவில்லை.
அம்மாவின் துர்மரணத்தை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதால் குழந்தைகளின் அழுகையோடும் அம்மாவின் பிறந்த வீட்டிலிருந்து வந்திருந்த அவளது உடன்பிறந்தாரின் குற்றம் சாட்டும் கூச்சலுமாக இறுதிக்காரியங்கள் நடந்து முடிந்தன. மனம் பொறுக்காமல் கிராமத்திலிருந்து வந்திருந்த சித்தி குழந்தைகளைத் தன்னுடன் அழைத்துச் செல்வதாகக் கூறிக் கதறி அழுதும்கூட அப்பா அதற்கு அனுமதிக்கவில்லை.
அதற்காகத் தன்னுடனும் அவர் அழைத்துச் சென்றார் என்பதில்லை. மாறாக முன்னெப்போதையும்விட மகளுக்கும் மகனுக்கும் தனது அன்பும் அரவணைப்பும் மிக அதிகமாகவே தேவைப்பட்ட அந்த நேரத்தில் தன் மக்கள் இருவரையும் அவர் ஹாஸ்டல் வசதிகள் நிறைந்த உண்டு உறைவிடப் பள்ளியொன்றில் சேர்த்து விட்டு இடையூறுகளின்றித் தன் அலுவலையும் தொடரப் போய்விட்டார்.
அண்ணனாவது கொஞ்சம் மனதுக்கு நெருக்கமானவனாக இருந்திருக்கலாம். ஆனால் அவனோ வளர வளர அப்பாவின் மற்றொரு உருவாகவே தன்னை காண்பித்துக் கொள்ள முயன்றான். வாய்த்த மனைவியோ இயல்பில் அவனை ஒத்தவளாகவே இருந்ததால்தான் மணந்தார்களோ?! அன்றியும் இவனது மனைவியான பின் தனது பிறவி இயல்பைத் தொலைத்தவளோ எனும்படியான குழப்பத்தைத் தோற்றுவிப்பவளாகவே இருந்து விட்டாள். இல்லாவிட்டால் 8 வயதுக் குழந்தையை அத்தனை நெருக்கமாகப் பழகியிராத நாத்தனாரை நம்பி ஒப்படைத்து விட்டுத் தனது வேலைதான் முக்கியத்திலும் அதிமுக்கியம் என்பதாகக் கணவனுடன் லண்டனுக்குச் செல்ல முடியுமா?!
சுகமான வாழ்க்கைக்குத் தேவையானவை என இன்றைய மனிதர்கள் நம்பும் அத்தனை வசதிகளும் தனக்கிருந்த போதிலும் அனைத்தையும் மீறிக்கொண்டு துருத்திக்கொண்டு உறுத்தியது அன்பற்ற வாழ்க்கை! அன்பை உணரவோ அதைப் பெறவோ அல்லது பிறருக்கு அதைக் கடத்தவோகூடத் தனக்குக் கொஞ்சமும் தகுதி இல்லை என்று அந்த இறைவன் முடிவு செய்துவிட்டான் போல என்றெண்ணிக்கொண்டு அடிக்கடி தன்மத்ரா சலிப்படைவாள்.
எப்போதாவது இப்படியான பழம் சிந்தனைகள் தன்மத்ராவினுள் ஆதிக்கம் செலுத்தினாலும் அவை வந்த சுவடேயின்றி வெகு விரைவாக அவற்றின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்று அதில் வெற்றியும் காணக்கூடியவளே அவள்.
ஏனெனில் திடீரென நிகழ்ந்துவிட்ட அம்மாவின் துர்மரணமும் அதையொட்டிய அப்பாவின் அக்கறையின்மையும் அண்ணனின் விட்டேற்றியான மனப்பான்மையும் தன்னுள் விளைவித்த மிகை அதிர்ச்சி கலந்த குழப்பத்தில் இத்தனை நாட்களில் அவள் தன்னை மிக ஆழமாகப் பாதிக்கக்கூடிய எந்த ஒரு விஷயத்தையுமே மிகக் கடினமாக முயன்று ஒதுக்கவும் பழகியிருந்தாள்.
அது ரொம்பவும் கஷ்டம்தான். ஆனால் அவள் அதைத் தனது வழக்கமாக்கிக்கொள்ளத் தொடங்கி வெகு காலமாகியிருந்தபடியால் ஏதோ தன்னளவில் அமைதியைத் தேடிக்கொண்டவளானாள்.
ஷைலாவின் பொறுப்பு என்பதும்கூட அவள் தட்டிக்கழிக்கக் கூடியதே! ஆனால் ஒரு சிறுமியின் மிகச் சாதாரணமான ஆசைகளைக்கூடத் தட்டிக்கழிப்பதில் அப்படி என்ன நிம்மதி கிடைத்துவிடக்கூடும்? எனும் கழிவிரக்கமும் அப்படிச் செய்ய விரும்பாத குணமுமே ஷைலாவை தன்னுடன் வருடத்தின் சில வாரங்களேனும் தங்கவைத்துக் கொள்ளும் பழக்கத்தை சாத்தியப்படுத்தியிருந்தன.
தவிரவும் ஷைலாவுக்குத் தன் அத்தையின் மீது அதீத பிரேமையும் கொஞ்சம் இருந்தது என்பதும் மெய்.
இப்படியொரு சூழலில் தன்னை மணந்துகொள்ள விண்ணப்பிக்க எந்த இளைஞனுக்குத்தான் தைரியம் வரும்? சோமேஷைப் போல லிவிங் டுகெதருக்குத்தான் அழைக்கத் தோன்றும்… அதில் பிழை காண்பதுதான் தவறோ என்றுகூட அவளுக்குத் தோன்றத் தொடங்கிவிட்டது.
சொந்தமாகச் சம்பாதிக்கத் தொடங்குவதற்கு முன்பும்கூட அப்பா மற்றும் அண்ணனின் தயவால் அவளுக்குப் பணம் எப்போதுமே ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. அவளறிந்த அளவில் அவளுக்கு மனிதர்களின் நேசம்தான் இப்போது வரையிலும் முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது. அது மட்டுமே இந்த நிமிடம் வரையிலும் கிடைத்தற்கரிய பொக்கிஷம் போல அவளை மருட்டிக் கொண்டிருந்ததுவே தவிர ஆசையும் நம்பிக்கையையும் தரக்கூடிய ஒன்றாக கைவசப்படத்தான் காணோம்.
ஏனென்றால் சோமேஷுக்கு முன்பே முடிந்துபோன மூன்று காதல்கள் அவளுக்கு உண்டு. அவற்றின் முடிவுக்கு நிச்சயம் தான் காரணமில்லை என பூரணமாக அவள் நம்பினாள்.
இப்படியான யோசனைகளில் ஆழ்ந்து கிடந்து எவ்வளவு நேரம்தான் அழுதுகொண்டே இருக்க முடியும். அதற்கும் ஒரு முடிவு உண்டுதானே.
உரசிச் சென்ற பழம் நினைவுகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்காமல் விரைவிலேயே அதிலிருந்து மீண்டு நிகழ்காலத்திற்கு வந்தாள் தன்மத்ரா.
இவளது ஒரு அழைப்பிலேயே தொடர்பில் வந்தான் சோமேஷ்.
”ஹேய் தனு வேர் ஆர் யூ! காலை முதலே உன் நினைவுதான். சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போய் ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கிறாய் மை டியர் ஹனி என் அழகுப் பூஞ்சிட்டே?! “
அலைபேசியில் அலைபாய்ந்த அவனது குரல் தனுவிடம் பெரிதாக எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் முயன்று வரவழைத்த பலவீனமானதொரு ஆர்வத்துடன் அவள் பதில் சொல்லத் தொடங்கினாள்;
“பூஞ்சிட்டா? வி ஆர் நாட் டீன்ஸ் சோம்!” – சொல்லி முடிப்பதற்குள்ளாக சலிக்கத் தொடங்கிய மனதை ‘இல்லை இப்போது இவனது தோழமை தனக்கு வெகு முக்கியம்’ என்று புத்தி அறிவுறுத்த மனமின்றியே அவனுடனான உரையாடலை நீட்டித்தாள்.
”ஸோ வாட் மை டார்லிங் 28 வயசானாலும் நீ இன்னும் பூஞ்சிட்டுப் போலத்தான் இருக்க. யாராலும் மறுக்க முடியுமா அதை? பக்கத்துல மட்டும் இருந்தேன்னு வை ஆப்பிள் கன்னத்தை அழுந்தப் பிடிச்சு கொஞ்சி…”
அவன் மேலே தொடரும் முன் குறுக்கிட்டாள்
“சோம் ஐ நீட் யுவர் ஹெல்ப் நவ் டூ ஒன் ஃபேவர் ஃபார் மீ ப்ளீஸ்”
அவள் கேட்டு நிறுத்தும் முன் அவன் தொடர்ந்தான்.
”உனக்கில்லாத ஃபேவரா! கட்டளையிடு கண்ணே காத்திருக்கிறேன் இந்த கந்தர்வ குமரன். சொல்லு என்ன செய்யணும்? இன்னைக்கு நைட் வேணா நான் உன் ரூம்ல தங்கிடட்டுமா?” – சொல்லிவிட்டுப் பெரிதாக ஜோக் அடித்த பாவனையில் அவன் சிரிக்க
மறுமுனையில் சத்தமில்லாது அவனுடனான அலைபேசித் தொடர்பைத் துண்டித்தாள் தனு.
ச்சை என்ன மனிதன் இவன்? தமிழ்நாட்டில் இவ்வளவு மொன்னையான இளைஞர்களும் இருக்கிறார்களே! அஸ்ஸாம் தேவலாம் போல! என்றொரு கணம் தோன்றியது.
அவளை யோசிக்க விடாமல் உடனே சோமேஷ் அழைத்தான். தன் பேச்சு அவளுக்கு உவப்பானதாக இல்லை என்பதில் கொஞ்சம் சுதாரித்தவனாக, “டார்லிங் லைன் கட் ஆயிடுச்சு. சொல்லு ஹனி என்ன ஃபேவர் பண்ணணும் உனக்கு?” என்று ஒழுங்காக விஷயத்துக்கு வந்தான்.
அவனுக்குப் பதில் சொல்லும் முன் ஒருமுறை ஆழ மூச்செடுத்து தன்னை ஒருமுகப்படுத்திக்கொண்ட தன்மத்ரா அடுத்த நொடி எவ்வித தயக்கமும் இல்லாமல்;
“சோம் நான் இங்க வந்த மறுவாரமே நீ என்கிட்ட லிவிங் டுகெதர் பத்தி கேட்டிருந்த இல்ல. நான் யோசிச்சு சொல்றதா சொல்லியிருந்தேன். இப்ப அதைப் பத்தி பேசத்தான் உன்னைக் கூப்பிட்டேன்.”
எங்கே அவள் எதிர்மறையான பதிலைத் தான் சொல்லப் போகிறாள் என்று எதிர்பார்த்திருந்ததாலோ என்னவோ; மறுமுனையில் சோம் அசுவாரஸ்யமாக;
“அதுக்கென்ன இப்போ அதான் உன் வெகேசனே முடியப்போகுதே! இனி என்ன அதைப்பத்தி?! ப்ளீஸ் முடியாதுன்னு மாத்திரம் சொல்லி என் மனசை உடைச்சிடாதே ஐ வில் வெயிட் ஃபார் யூ ஒன் மோர் இயர்!” என்றான் காற்றுப் போன பலூனாக!
அவனே அப்படியொரு முடிவில் இருக்கையில் தான் ஏன் வலுக்கட்டாயமாக அவனுக்கு ஆதரவான பதிலைச் சொல்ல வேண்டும் என்று ஒருபுறம் மனம் முரண்டினாலும் உறுத்திக் கொண்டிருந்த கடமையின் மீதான வேட்கை அவளை வேறுவிதமாகப் பேசத் தூண்டியது.
காரியம் பெரிதா? வீரியம் பெரிதா? என்றால் அவளுக்கு இப்போது காரியம்தான் பெரிதாகிப்போனது.
”நோ… நோ ஐ வோண்ட் டிஸப்பாயிண்ட் யூ டியர். லிஸன் சோம் ஐ அம் ரெடி டு லிவ் அண்ட் ஷேர் மை திங்ஸ் வித்யூ!”
அவள் அவசர அவசரமாக இதைச் சொன்ன வேகத்தில் மறுமுனையில் ‘ஹூர்ரே’ என்று ஒரேயடியாக கூவித் தனது நம்பமுடியாத சந்தோஷத்தை வெளிப்படுத்திக்கொண்டான் சோம்.
இந்தப் பச்சைக்கிளி தன் விருப்பத்தை நிராகரிக்கக்கூடும் என்று பலமாக நம்பியவனாயிற்றே அவன்! ஆயினும் பழம் நழுவிப் பாலில் விழும்போது காலம் தாழ்த்துவது மடத்தனம் என்று நினைத்தானோ என்னவோ!
“ஹேய் ரியலி… இஸ் இட் ட்ரூ? ஆர் யூ ஜோக்கிங் மீ” என்றெல்லாம் ஆர்ப்பரித்தவன் உடனே ஹஸ்கி வாய்ஸில்;
“நான் எப்போ உன் இடத்துக்கு வரணும் சொல்லு?” என்று பரபரத்தான்.
”வெயிட் மை டியர் ஃப்ரெண்ட். நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கலை. அதுக்குள்ள நீ அடுத்த லெவலுக்குப் போகாத. ” என்று அவனது அற்ப சந்தோஷத்துக்கு முதலில் ஒரு அணையைப் போட்டு முடக்கிவிட்டு மேலே தனது பேச்சைத் தொடர்ந்தாள் இவள்.
“சோம் நான் இங்கயே ஐ மீன் விஸ்வநாதபுரியிலயே தங்கிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். இங்கேயே ஏதாவது ஒரு கல்லூரியில வேலை தேடிக்கிட்டு என்னுடைய ஆராய்ச்சிப் படிப்பையும் தொடரலாம்னு இருக்கேன்… உடனடியா எனக்கு ஒரு வீடு பார்த்துத் தரணும். உன்னால முடியுமா அது?!”
“அட இவ்வளவுதானா! இதுக்குப் போய் ஃபேவர் கீவர்ன்னு பெருசா பில்ட் அப் கொடுப்பியா? அழகர்மலை போற ரோடுல எங்க கெஸ்ட் ஹவுஸ் ஒன்னு ஃப்ரியா இருக்கே. அதையே உனக்காக க்ளீன் பண்ணி வைக்கச் சொல்லிடறேன். அவ்ளோ தான். முடிஞ்சது விஷயம்.”
சோம் லகுவாகச் சொல்லிச் சிரிக்க;
அவனை முடிக்கவிடாது இடையிட்டுத் தடுத்தாள் தன்மத்ரா.
“சோம் நீ தன்னிச்சையா முடிவெடுக்காத. உன் வீட்ல பேசிட்டு அப்புறமா சொல்லு. தாராவுக்கு இதுல ஆட்சேபனை இருக்கலாம்.”
அந்தப் பக்கம் சோம் சிரிப்பை அடக்க முயல்வதை இவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
” இதெல்லாம் அவ கிட்ட ஏன் சொல்லணும் நான்?!”
சோமேஷின் பதிலில் தனுவுக்கு மனம் சுணங்கியது.
அவள் எதையுமே நேர்மையாகச் செய்து பழக்கப்பட்டவள்.
இவனை நம்பி அவள் தமிழ்நாட்டுக்குள் அடியெடுத்து வைத்தவள் இல்லை.
தோழி தாராதான் இவளை விடாது அரித்தெடுத்து இங்கே வரவழைத்தவள். அவளுக்கே தெரியாமல் அவளது அண்ணனுடன் அவர்களுக்குச் சொந்தமான வீடொன்றில் லிவிங் டுகெதராக வாழ்க்கையைத் தொடர்வது என்றால் அது அத்தனை முறையானதாகத் தோன்றவில்லை அவளுக்கு.
எனவே;
’சோம் இது விளையாட்டு இல்லை. எனக்கு உன்னோடு லிவிங் டுகெதராக வாழ்வதில் பிரச்சினை இல்லை என்றால் அது என்னைப் பொறுத்தது. என் மீது எனக்கிருக்கும் அபார நம்பிக்கை எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு தோழியாக நான் எங்கே நிற்க வேண்டுமோ அங்கேதான் நிற்க முடியும். தாரா… உன் பெற்றோர் இவர்களிடமெல்லாம் எதுவுமே சொல்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் உன்னுடன் தொடர்பில் இருப்பதென்றால் அது என்னால் முடியாத காரியம். ஒருவகையில் அது துரோகமும்கூட. அதை என்னால் செய்ய முடியாது. எதையும் தொடங்குவது என்றால் அவர்களிடம் சொல்லிவிட்டு நீ என்னுடன் வரலாம். இல்லாவிட்டால் நாம் வெறுமே நண்பர்களாகவே தொடரலாம். ’
சொல்லி முடித்துவிட்டு அலைபேசியை அணைத்துக் கைப்பையினுள் தூக்கிப் போட்டாள்.
அது மீண்டும் மீண்டும் என மும்முறை அடித்து ஓய்ந்தது.
இப்போது சோமேஷ் ஒரு மண்குதிரையோ? என்று சந்தேகம் வந்தது அவளுக்கு.
இவனை நம்பி நாம் இந்த ஊரில் மேலும் சில காலம் தங்க நினைப்பது தவறோ! என்று மனம் பரிதவிக்கத் தொடங்கியது.
(தொடரும்)