Home இதழ்கள்இதழ் 12தமிழே! அமிழ்தே! – 11
This entry is part 6 of 12 in the series தமிழே அமிழ்தே

பிரிக்க முடியாதது எதுவோ என்று கேட்டால் எல்லோரும் அறிந்த விடை தமிழ் இலக்கிய விருதுகளும் சர்ச்சையும் என்பதே.

அண்மையில் வெடித்த ஒரு விருது சர்ச்சையையொட்டி மூத்த இதழாளர் ஒருவர் எழுதும் போது, ‘மரபுக் கவிதை எழுதி சென்ற நூற்றாண்டில் வாழ்பவர்கள்’ என்று ஒரு வரி எழுதியிருந்தார். அவ்வாறன்று. தமிழில் இன்று மரபு எழுதும் பலருக்கும் நவீன வகைமைகளில் தொடர்பில்லை. போலவே, நவீன கவிதைகள் எழுதும் பலருக்கும் மரபின் வேர்கள் குறித்த புரிதல்கள் இல்லை. ஒரு தமிழ்க் கவி எல்லா வகைமைகளிலும் அறிதலும் ஆற்றலும் கொண்டிருக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. போகட்டும்.
நாம் இனி மரபுப் பா வகைகளைப் பார்ப்போம்.

மரபின் ஓசைநயத்தோடு ஒட்ட ஒழுகி தமிழில் நாலு வகை முதன்மையான பா வகைகள் உண்டு.

அவை செப்பலோசை கொள்ளும் வெண்பா, அகவலோசைக்கு ஆசிரியப்பா, துள்ளலோசைக்குரிய கலிப்பா, தூங்கலோசை எனில் வஞ்சிப்பா என்பனவாம். இவையல்லாமல் வெண்பாவின் செப்பலோசையுடன் தொடக்கமும் ஆசிரியப்பாவின் அகவலோசையின் முடிவுமாக கலப்போசை கொண்டு மருட்டும் மருட்பா வகையும் உண்டு.

இதில் வெண்பா பற்றி இப்போது பார்ப்போம்

செப்பலோசை என்பது உரையாடுதலைப் போன்ற ஓசை ஆகும். இந்த ஓசை தரும்
வெண்பாவில் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை ஆகியன பயின்று வரும்.

அதாவது, ஈரசைச் சீர்களால் அமைந்து இயற்சீர் வெண்டளை என்றும் மூவசைச் சீர்களும் கலந்து வருவது வெண்சீர் வெண்டளை என்றும் சொல்லப்படும்.

இந்த ஓசையை அடிப்படையாகக் கொண்டு வெண்பாவின் இனங்களாக துறை தாழிசை, வெண்விருத்தம் ஆகியன உண்டு. மற்ற பா வகைகளிலும் உண்டு.

வெண்பாவின் வகைகள் என்று பார்க்கும் போது, இரண்டு அடிகள் கொண்ட குறள் வெண்பா (ஏழு சீர்கள் அல்லது சொற்கள்), மூன்று அடிகளில் சிந்தியல் வெண்பா, நான்கு அடிகளில், இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று வருவது நேரிசை வெண்பா என்றும் தனிச்சொல் இல்லாமல் எல்லா அடிகளிலும் ஒரே எதுகை அமைவது இன்னிசை வெண்பா என்றும் சொல்லப்படும். நான்கு முதல் பன்னிரண்டு அடிகள் வரை பஃறொடை (பல தொடை) வெண்பா என்ற பெயர் பெறும். இவையன்றி இதன் உட்கூறுகளாகவும் பல வெண்பா வகைமைகள் உள்ளன.

மேலே சொன்னவாறு வெண்டளை பயின்று வருவது மட்டுமின்றி எல்லா அடிகளிலும் நான்கு சீர்கள், ஆனால், இறுதி அடி அல்லது வரி மட்டும் மூன்று சீர்கள் அல்லது சொற்களில் அமைவதாகவும் இருக்க வேண்டும். இறுதிச்சொல் நாள் (நேர் ), மலர்(குறில்), காசு(நேர்பு) , பிறப்பு(நிரைபு) என்று முடிய வேண்டும். இது வெண்பாவுக்கான அடிப்படை விதி.

இப்படி ஒவ்வொரு பா வகைக்கும் அடிப்படை விதிகள் முதல் உச்சமும் மிச்சமுமாய் பற்பல விதிகளும் கட்டுக்களும் இருக்கின்றன.

வெண்பா மட்டுமின்றி மரபில் எழுத எண்ணும் யார்க்கும் மொழியின் சொற்களஞ்சியம் (Vocabulary) கைவரப் பெற்றிருக்க வேண்டும். அல்லாமல், வெறும் வடிவமும் சந்தமும் மட்டுமே கவிதை ஆகாது என்கிற புரிதலும் வேண்டும்.

என்னதான் அழகாக அலங்கரித்தாலும் கவிதை என்பது உயிர்ப்புடன் அமைய அதில் கவிதையுணர்வு இருக்க வேண்டும். அலங்காரம் எல்லாம் நன்று, ஆனால் உயிரில்லாமல் போனால் எவ்வளவு வருத்தம்! இந்த வருத்தத்தை முன்பு ஒரு விருத்தத்தில் வைத்தேன்.

சந்தமதன் வசந்தத்தைச் செவிகள் கேட்கும்
…சாரமது போதுமென்று சிந்தை சொல்லும்
முந்தையதே கவிதையாகும் மற்ற யாவும்
… முறையற்றுப் போனதென்று முறையீடு உண்டு.
பிந்தையதே கவிதையாகும்; பொருளே தேடல்
….பொருட்டில்லை மரபென்ற பேச்சும் உண்டு
எந்தவிதம் கவிதையாகும்? என்னைக் கேட்டால்
… இதயத்தில் பதிவதுவே கவிதை என்பேன்

(தொடர்வோம் )

Series Navigation<< தமிழே அமிழ்தே – 5தமிழே! அமிழ்தே! -7 >>

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

You may also like

2 comments

ஊர் நேசன் May 3, 2026 - 6:39 pm

மரபு கவிதையா?

தற்போது எழுத்துக்களை வாசிப்பதே மரபு இல்லையே..?
Gen-z க்களுக்கு நேரம் உள்ளதா?
ஆனாலும் மேலும் வருங்காலதில் வாசிக்கும் மரபணுக்கள் மாறாத Gen-z’க்கள்மாற வேண்டும்..

Reply
Kabeer VP May 3, 2026 - 7:13 pm

விதிப்படி எழுதப்படுவதோ, விதியே என எழுதப்படுவதோ எதுவாகினும் வாசகனின் நெஞ்சச்சத்தில் தஞ்சம்புகும் எல்லா வகைமையும் போற்றப்பட வேண்டியதே!

வருத்தத்திற்கும் விருத்தம் தந்த வித்தகரே! தொடர்க!

Reply

Leave a Comment