Home தொடர்மருத்துவர் பக்கம் – 35: ஆந்திர கோவிட் மரணங்கள்

மருத்துவர் பக்கம் – 35: ஆந்திர கோவிட் மரணங்கள்

by Farooq Abdullah
0 comments

நாம் அறிந்து கொள்ள வேண்டியவை என்ன?

கோவிட் பெருந்தொற்றாக இருந்த 2020 – 2022 காலங்களில், தினசரி கோவிட் தொற்றடைந்து மரணமடைந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது அது கொள்ளை நோயாகச் சமூகத்தில் பரவி, பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் தரும் நிலையில் இருந்தது.

முதல் அலை: ஆல்ஃபா – 2020
இரண்டாம் அலை: பீட்டா + டெல்ட்டா – 2021
மூன்றாம் அலை: ஓமைக்ரான் – 2022

புதிய கொரோனா வைரஸைப் பொறுத்தவரை, 2022 முதல் இப்போது வரை நம்மிடையே பரவி வருவது ஓமைக்ரான் குடும்பத்தின் சந்ததிகள் மட்டுமே. ஓமைக்ரான் குறித்துத் தொடர்ந்து செய்யப்பட்டு வரும் ஆய்வுகளில், இது முந்தைய உருமாற்றங்களை விட:

வேகமாகப் பரவக்கூடியது
ஏற்கனவே எதிர்ப்புச் சக்தி இருப்பினும் தொற்றை ஏற்படுத்தக் கூடியது
முந்தைய உருமாற்றங்களை விட மிதமான முதல் லேசான நோய் நிலையை ஏற்படுத்தக் கூடியது என்று அறியப்பட்டுள்ளது.

2026 ஆம் வருடம் ஆரம்பம் தொட்டே ஓமைக்ரானின் BA.3.2 என்ற உருமாற்றம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திப் பரவி வருகிறது. எனினும்:

தீவிர தொற்றாளர்கள் அதிகமானார்கள் என்றோ, எதிர்பார்க்கப்படும் மரணங்களை விட அதிகமான மரணங்கள் நிகழ்ந்தனவென்றோ, தீவிர நுரையீரல் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகள் ஸ்தம்பித்துள்ளன என்றோ எங்கும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.

இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது யாதெனில், BA.3.2 உருமாற்றம் என்பது மனிதர்களிடையே எளிதில் பரவும் தன்மை கொண்டது. ஆனால், பெருந்தொற்று அளவுக்கோ, லாக்டவுன் அளவுக்கோ, ஆக்சிஜனுக்குப் பிரச்சனை ஏற்படுத்தும் அளவுக்கோ அதனால் பாதிப்பு ஏற்படவில்லை என்பது கடந்த ஆறு மாத காலங்களில் நாம் பெற்றுள்ள அனுபவம்.

கொரோனா தொற்று ஏற்பட்டு ஆந்திராவில் ஏற்பட்டுள்ள இரண்டு மரணங்களை எப்படிப் பார்ப்பது?

கொரோனா வைரஸ் என்பது தற்போது நம்முடன் சகலபாடியாகக் கூடி வாழப் பழகிவிட்டது. நாமும் அதனுடன் சேர்ந்து வாழப் பழகிவிட்டோம்.

ஒரு பரவும் நோய், எப்போதும் கண்டறியப்படும் அளவை விடக் குறிப்பிட்ட இடத்தில் மிக அதிகமான அளவு கண்டறியப்பட்டால் அது கொள்ளை நோயாகும் (Epidemic). அதே கொள்ளை நோய் அதிகம் பேருக்குத் தீவிர நோய் நிலையையும், மரணத்தையும் ஏற்படுத்தினால் அது பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் நிலையாகும். இவ்வாறு கொள்ளை நோய் நிலையை உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நோய் ஏற்படுத்துமாயின் அது பெருந்தொற்றாகிறது (PANDEMIC).

ஆனால், கொரோனா வைரஸ் 2022 முதல் தற்போது வரை, இனி வரும் காலங்களிலும் சேர்ந்தே இருந்து, வருடா வருடம் சீசன்களில் நம்மிடையே சளி, இருமல், காய்ச்சலை ஏற்படுத்தும் வகையில் சேர்ந்துவிட்டது. இதை ENDEMIC என்போம்.

1917 ஆம் ஆண்டு பெருந்தொற்றை ஏற்படுத்திய இன்ஃபுளூயன்சா வைரஸ், 2009 ஆம் ஆண்டு பெருந்தொற்றாக இருந்த H1N1 ஆகியன இன்று சீசனல் வைரஸ் ஜூரங்களை ஏற்படுத்தும் நிலைக்கு வந்து, இப்போதும் பூமியில் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. இன்ஃபுளூயன்சா வைரஸால் இந்தியாவில் வருடந்தோறும் 1.27 லட்சம் பேர் மரணமடைவதாகச் சமீபத்திய ஆய்வுகள் மேற்கோள் காட்டின.

அதே போலக் கொரோனாவாலும் தொடர்ந்து ஆங்காங்கே மரணங்கள் நிகழ்ந்து வருவது உண்மை. ஆயினும், பொதுமக்கள் அனைவரும் பீதி நிலை கொள்ளும் அளவு அந்த மரணங்கள் நிகழ்வதில்லை.

யாரெல்லாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்?

60+ தாண்டிய சீனியர் சிட்டிசன்கள்
பல்வேறு இணை நோய்கள் கொண்ட 45+ வயதினர்
இதய நோய் / சிறுநீரக நோய் / கல்லீரல் நோய் / நுரையீரல் நோய் கொண்டோர்
எதிர்ப்புச் சக்தி குறைக்கும் மருந்துகள் பெற்று வருபவர்கள்
கர்ப்பிணிகள்

ஆகியோருக்கு, ஏனையோருக்குச் சாதாரணமாக வெளிப்படும் வைரஸ் ஜூரம் கூடத் தீவிரத்துடன் வெளிப்படலாம். ஏனையோருக்கு வெறும் தொண்டை வலி, இருமல், காய்ச்சல் என்று வெளிப்படும் அதே நோய், மேற்கூறிய ஹை ரிஸ்க் மக்களுக்கு நிமோனியாவாக மாறலாம்.

மற்றபடி, ஆந்திராவில் இரண்டு மரணங்கள், ஒடிஷாவில் எச்சரிக்கை என்றெல்லாம் வரும் செய்திகளைக் கண்டு பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை. அப்படி ஒரு நிலை இப்போது இல்லை.

எப்போது எச்சரிக்கையாக வேண்டும்?

தீவிர காய்ச்சல் விடாமல் 3 நாட்களுக்கு மேல் அடிக்கும் போது
மூச்சுத் திணறல்
மூச்சு விடுவதில் சிரமம்

ஆகியவை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

சளி, இருமல், சீசனல் ஜூரம் பரவும் காலங்களில் பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணியலாம். கைகளை அவ்வப்போது சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். கத்தின் காய்ச்சல் இருப்போர் தங்களை காய்ச்சல் குணமாகுமட்டும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். சீசனல் ஃப்ளூ தடுப்பூசியை முதியோருக்கும், 5 வயதுக்குட்பட்டோருக்கும், இணை நோய்கள் கொண்டோருக்கும் வருடந்தோறும் வழங்கி வரலாம்.

இவையெல்லாம் எல்லாக் காலமும் எப்போதும் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்தான். சீசனல் வைரஸ் ஜூரமே ஆயினும், அது ஹை ரிஸ்க் மக்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் எனும் எச்சரிக்கை உணர்வு நமக்கு இருக்க வேண்டும்.

எச்சரிக்கை வளர்ப்போம்; பீதியைக் குறைப்போம்!

Author

You may also like

Leave a Comment