Home கவிதைதிருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 3

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 3

0 comments
This entry is part 9 of 12 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்ஜாஃபர் பாஷா

அறைக்குள் நுழைந்து கண்ணுக்குத்தப்பி ஒளிந்துகொண்ட
பாம்பு ஏற்படுத்திய பயம்
இராத்திரி முழுக்கப் படுத்தி எடுப்பதுபோல்…
தேகப் புற்றிற்குள் நுழைந்து
மனதுக்கும் மூளைக்கும் நடுவே
சட்டை கழற்றிவிட்ட ஒரு வார்த்தை
ஏற்படுத்திய பயம்
வாழ்நாள் முழுக்கத் துரத்திக்கொண்டே இருக்கும்….

மூச்சுவிடுவதுபோலத் தான் இருக்கும்,
ஆனால்,
உள்ளுக்குள் எங்கோ பிணத்தைச் சுற்றியும் திரண்ட கூட்டத்தின் இழவு வீட்டு அழுகுரல் அதிர்வு கேட்டுக்கொண்டிருக்கும்

சிறிதளவு தைரியத்தை நிரப்பிக்கொண்டு பலூனாய்ப் பறந்த ஒவ்வொரு முறையும்,
காலம் உசுப்பிவிட்ட நீண்டுயர்ந்த தன்னலம் ஒன்று
சொல்லம்புகளை வீசிக்கொண்டிருக்கும்

நினைப்போம், ஆனால்,
சொற்களெல்லாம் காற்றிற்குப் பிறந்து
காற்றில் சஞ்சரித்து
காற்றிலேயே கலப்பதில்லை

ஏதோ ஒன்று,
ஒரு சொல்தான் என்றாலும்
மனப் புதரில் மறைந்திருந்து பிறகும் கொத்திக்கொண்டே இருக்கும்

கிழக்குக் கொம்பில் பூத்த ககன மந்தாரம் பொழுதெல்லாம் வாசனையைப் பரப்பி
மேற்குப் பக்கமாக உதிர்ந்து விழுந்ததன் பிறகு…
கண் நிறைந்த கனவைக் கேட்டால்,
காலம் கண்ணீரைப் பரிசாகத் தந்தது

நிறைகுடத்தில் துளை விழுந்து நீர் ஒழுகியதுபோல்…
கண் குடத்தை யாரோ உடைத்துவிட்டனர்…
தாராளமாக வழிகிற துயரம்…

இப்போது எனக்கொரு ஆறுதல் மொழியை
இதயத்தில் வார்க்கிற கை வேண்டும்

எனக்குக் கொஞ்சம் அன்பு வேண்டும்…

இரண்டு வயது பச்சைக் குழந்தை நடந்து நடந்து, அடிதப்பிப்போய் விழுந்தால், நிலத்தை அடித்துக் குழந்தையை அரவணைத்துக்கொள்ளும் தாயன்பைப் போன்றதொரு அன்பு…

அப்படிப்பட்ட அன்பை எனக்குக் கொஞ்சம் கடனளிப்பீர்களா…?
இரண்டு மடங்காக அன்பை வட்டியாக அடைக்கிறேன்.

Series Navigation<< திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 2திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 4 >>

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

You may also like

Leave a Comment