Home இதழ்கள்இதழ் 15விசுவநாதபுரி – 7
This entry is part 7 of 7 in the series விசுவநாதபுரி

இரவில் உணவை வீணாக்கியதற்கான தண்டனையாகவோ என்னவோ, மறுநாள் விடிந்தது முதலே இரு பெண்களுக்குமான வேலைகள் முந்தைய நாட்களைக் காட்டிலும் மிகக் கடுமையானவையாகவே தரப்பட்டிருந்தன.

அன்று ரிசார்ட்டில் தங்கியிருந்த உக்ரைனிய நடுத்தர வயதுத் தம்பதியினரை ஸ்கூபா டைவிங் அழைத்துச் சென்று, நாள் முழுதும் அவர்களுடனே இருந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை நிறைவேற்றித் தரும் பணி தன்மத்ராவுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஷைலாவுக்கு அன்றைய பணி ரிசார்ட்டில் இருக்கும் நர்சரியில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது.

ஆக, அத்தையும் மருமகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டார்கள். இது வேண்டுமென்றே செய்யப்பட்ட மாற்றமென தனுவுக்குத் தோன்றினாலும், அதை மறுக்கும் வலிமையின்றித் தண்டனையாகத் தங்களுக்கு வழங்கப்படும் வேலைகளில் ஒன்றாகத்தானே இதையும் கருத வேண்டியிருக்கிறது என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு அவள் தேவையான உபகரணங்களுடன் கிளம்பி விட்டாள்.

செல்வதற்கு முன் ஷைலுவை அழைத்து,

“நான் ரிசார்ட் திரும்புவதற்கு மாலையாகி விடக்கூடும். தயவுசெய்து உன் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளால் மீண்டும் ஏதேனும் செய்து இப்போதிருக்கும் நிம்மதியையும் குலைத்து விட வேண்டாம் ஷைலு. நான் இல்லாத போது நீ இன்னும் அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்வாய் தானே?” என்று எச்சரித்து விட்டுத்தான் கிளம்பிச் சென்றாள்.

உண்மையில் அன்று எச்சரிக்கை தேவைப்பட்டது ஷைலுவுக்கு அல்ல, தனக்குத்தான் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை!

தனுவின் உதவி தேவைப்பட்ட உக்ரைனியத் தம்பதியினர் மிக விநோதமான நடவடிக்கை கொண்டவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சுத்தமாக ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை; இவளுக்கு ரஷிய மொழி தெரியாது. அவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாகக் கடித்துத் துப்பிய ஓட்டை உடைசல் ஆங்கிலத்தை இவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவர்கள் விடாது தங்களது மொழியிலேயே பிடிவாதமாக இவளுடன் உரையாடிக் கொண்டே வந்தனர்.

பல நேரம் இவள் எதுவும் புரியாது விழிப்பதைக் கண்டு கோபம் கொண்டவர்களாக அவர்கள் சைகையில் பேசத் தொடங்கவே, கடைசியில் இருவருக்குமான போராட்டம் முடிவுக்கு வந்தது.

முதலில் எலிபெண்ட் பீச்சில் ஜெட் ஸ்கீயிங் செல்ல வேண்டும் என்றார்கள் (சைகை மொழியில் தான்). சரி என அதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள் தனு. அவர்கள் ஜெட் ஸ்கீயிங் செல்லும் போது தான் கரையில் அமர்ந்து கொஞ்சம் ஓய்வெடுக்கலாம், எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகும் அந்த விளையாட்டு முடிய என்றெண்ணிக் கொண்டாள் தனு.

ஆனால், அவளது எண்ணம் ஈடேறவில்லை. அந்த உக்ரைனியப் பெண் தன் கணவருடன் ஜெட் ஸ்கீயிங் செல்லாமல், தான் மட்டும் டிரெக்கிங் செல்லப்போவதாக அறிவித்து விட்டு பேக் பேகை மாட்டிக் கொண்டு தனியாகக் கிளம்பி விட்டாள்.

‘இதேதடா தொல்லை! ரிசார்ட்டில் தனக்கு வழங்கப்பட்ட தகவலில் இதெல்லாம் சொல்லப்படவில்லையே’ என்று யோசித்த தனு, ‘சரி, விருந்தினர்களை அவர்களது விருப்பம் போல் செயல்படத்தானே அனுமதிக்க வேண்டும்’ என்று தோன்ற, அந்தப் பெண்மணியுடன் துணையாகச் செல்ல தனக்கும் ட்ரெக்கிங் உபகரணங்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அவர்களை அணுகி விவரம் சொன்னாள்.

ஆனால், அந்தப் பெண்மணியோ,

“எனக்கெதற்கு துணை? நான் ஒரு ஏகாந்தவாசி. நான் வருடந்தோறும் இங்கே வரக்கூடியவள். என்னைப் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும். என் கணவருக்குத் தான் இப்போது துணை அவசியம். கடலில் ஜெட் ஸ்கீயிங் செய்வதில் அவன் அசகாய சூரன். கூடவே உன்னைப் போன்ற இளம்பெண் துணையாகக் கிடைத்தால் ஆனந்தக் கூத்தாடுவான். நீ அவனுடன் இரு. ரிசார்ட் திரும்பியதும் உனக்கு நிறையப் பணம் தருகிறேன்” என்றாள்.

இதை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது என்று ஒரு நொடி திகைத்த தனு, அவளை மறுப்பவள் போல தலையாட்டி, “நோ… நோ மிஸஸ் ஆண்ட்ரூ! எனக்கு ஜெட் ஸ்கீயிங் என்றால் பயம். என்னால் கரையில் இருந்து கொண்டு தான் உதவ முடியும், கடலில் அல்ல” என்றாள்.

அவளது பதிலில் அதிருப்தியடைந்தவளாய் அந்த உக்ரைனியப் பெண்ணின் முகம் சுருங்கியது. ‘நீங்கள் விருந்தினர்களை நடத்தும் லட்சணம் இது தானாக்கும்!’ என்ற ரீதியில் முணுமுணுத்தவளாக அவள் இவளைச் சட்டை செய்யாது விலகித் தன் வழியில் நடக்கத் தொடங்கினாள்.

மனைவி அந்தப் பக்கம் நகர்ந்ததும், ஸ்கீயிங் டாக்குடன் இவளை நோக்கி ஆர்வமாய் ஓடி வந்த அந்த உக்ரைனியனிடம் மறுப்புத் தெரிவித்து அவனிடம் இருந்து மீள்வதற்குள் தனுவுக்குப் போதும் போதுமென்றானது.

அவனுடன் நீர்விளையாட்டை மறுத்ததால் பின்னர் அவன் தனு மீது கோபம் கொண்டவனாக நடந்து கொள்ளத் தொடங்கினான். உப்புச் சப்பில்லாமல் கடலில் இரண்டு முறை ஜெட் ஸ்கீயிங் சென்று போரடித்துப் போய் அதை நிறுத்தி விட்டு, கடலை விட்டு வெளியேறி வந்து அவளிடம்,

“போதும், இது எனக்குப் போரடிக்கிறது. என்னை இப்போது அபெர்தீன் பஜாருக்கு அழைத்துப் போ, ஷாப்பிங் செய்ய வேண்டும்” என்றான்.

“கொஞ்சம் பொறுத்திரு, ட்ரெக்கிங் சென்ற உன் மனைவி வந்து விடட்டும், சேர்ந்து செல்லலாம்” என்றதற்கு,

“உனக்கென்ன தெரியும், அவளொரு டிரக் அடிக்ட். ட்ரெக்கிங் செல்கிறேன் என்ற பெயரில் அங்கு எவனாவது புதியவனைப் பிடித்துக் கொண்டு போதையில் ஆழ்ந்து எங்கேனும் விழுந்து கிடப்பாள். அவளுக்காகக் காத்திருக்கத் தயாரில்லை நான். நீ என்னோடு வா, எனக்கு உன் உதவி தேவை” என்று கிளம்பி விட்டான்.

தனுவுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. அந்தப் பெண் இங்கு திரும்பி வந்து பார்க்கும் போது கணவனையும் தன்னையும் காணாது தேடுவாளே என்றிருந்தது. மாறாக, அவளையும் அவளது சைகை மொழியையும் பார்த்தால் அப்படி எல்லாம் தேடக்கூடியவள் போலவும் தெரியவில்லை. ‘இவர்கள் சரியான தாந்தோன்றித் தவளைகள்! இவர்களுக்குத் தன் துணை ஒன்று தான் கேடு’ என்று எரிச்சலாகவும் இருந்தது.

அங்கே ரிசார்ட்டில் தன் துணை இல்லாது ஷைலு வேறு ஏதாவது புதுக் குழறுபடியை உண்டாக்கி விடக்கூடாதே என்ற அச்சமும் உள்ளூர வளரத் தொடங்க… அதனோடே அவள் அந்த உக்ரைனியனுடன் அபெர்தீன் பஜாருக்குப் பயணப்பட்டாள்.

அங்கு வெளிநாட்டினரை ஈர்க்கும் அத்தனை வஸ்துக்களும் இருந்தன. இவனுக்கு என்னவெல்லாம் தேவை என்று தெரியாததால் தனு வெறுமே அவனோடு நடந்து ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தாள். அதற்குள் அவளுக்கு நல்ல பசி வேறு எகிறிக் கொண்டிருந்தது.

மேலும் இவனோடு இங்கே சுற்றிக் கொண்டிருக்க வேண்டுமென்றால் வயிற்றுக்குள் எதையேனும் தள்ளினால் தான் முடியும் என்றாகி விட, அவள் மெல்ல பின் தங்கி ஒரு துணிக்கடையின் முன்னால் கிடந்த பிரம்பு மோடாவில் அமர்ந்து விட்டாள்.

மேலும் ஒரு மணி நேரம் கடந்ததே தவிர, கடைக்குள் சென்றவன் வெளியில் வரக் காணோம். மேற்கொண்டு 10 நிமிடங்கள் கழிந்த பின்னர் பசி தாங்காமல் அவள் அவனைத் “இளநீர் அருந்தலாமா?” என்று கேட்பதற்காகக் கடைக்குள் தேடினால் அங்கே அவனைக் காணோம்!

திடுக்கிட்டுப் போய் கடையில் இருந்தவர்களிடம் விசாரித்ததில், இவள் பசி மயக்கத்தில் சற்று கண்ணயர்ந்ததில் அவன் அங்கே பர்சேஸ் முடித்து விட்டு, பில்லை இவள் செட்டில் செய்வாள் என்று கூறி எஸ்கேப் ஆகியிருந்தான்.

கடைக்காரர் நீட்டிய பில்லைப் பார்த்ததும் இவளுக்கு மயக்கம் வராத குறை! 10,000 ரூபாய்க்கு எதையெதையோ வாங்கித் தள்ளியிருந்தான் அவன். தனுவின் கையில் இப்போதைக்கு தம்பிடிக் காசு கூட இல்லை. டெபிட் மற்றும் அவளது அவசரத் தேவைக்கான கிரெடிட் கார்டுகள் அனைத்துமே ஆஷா வசம் இருந்தன. அவர்கள் தான் இந்த மண்ணில் கால் வைத்த அன்றே தங்களது எல்லா அடையாளங்களையும், அதிகார உரிமைகளையும் பறித்து வைத்துக் கொண்டார்களே!

இப்போது இந்தச் சூழலை எப்படிக் கையாள்வது? இந்தக் கடைக்காரர்கள் பில்லுக்கான பணத்தைத் தராமல் தன்னை இங்கிருந்து நகர அனுமதிக்க மாட்டார்களே! இப்போது என்ன செய்து இதிலிருந்து மீள்வது என்று அவள் பதற்றத்துடன் யோசித்துக் கொண்டிருக்கையில்…

கடையின் மாடி அறையில் இருந்து இவளைக் கோபத்துடன் முறைத்துப் பார்த்துக் கொண்டு இறங்கி வந்தாள் இளம்பெண்ணொருத்தி. வந்தவள் உடைந்த ஆங்கிலத்தில், “இன்னும் எத்தனை பேர் இப்படிக் கிளம்பி இருக்கிறீர்கள்? இப்படித் திருட்டுத்தனம் செய்ய வெட்கமாக இல்லையா உங்களுக்கு?” என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறது போல் கேள்விகளை அடுக்கினாள்.

தன்மத்ராவை அந்தப் பெண்ணின் கேள்விகள் தீக்கங்காகச் சுட்ட போதும், அவளுக்கு ரோஷத்துடன் பதில் அளிக்கும் வகையில் தன் நிலைமை இப்போது இல்லையே எனும் நினைவில் மனம் சோர்ந்தாள். அத்துடன் இப்போது தான் என்ன சொன்னாலும் அதைக் கொஞ்சமாவது ஏற்று ஆலோசிக்கும் நிலையில் அவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்று தோன்றி விடவே…

இதற்காக தான் தங்கியிருக்கும் ரிசார்ட் நிர்வாகியான மெக்கன்ஸிக்குக் கூட இதைப் பற்றித் தெரிவிக்கும் எண்ணமின்றி, சட்டென்று முடிவெடுத்துத் தன் கழுத்தில் கிடந்த மெல்லிய தங்கச் சங்கிலியைக் கழற்றி அந்தப் பெண்ணின் முன்னிருந்த மேஜையில் வைத்தாள்.

“தயவுசெய்து என்னை மன்னியுங்கள்… என்னுடன் வந்த நபரால் உங்களது கடைக்கு ஏற்பட்ட இழப்பை நான் இந்த நகையால் ஈடு செய்கிறேன். நிச்சயம் இதன் மதிப்பு அரை லகரமேனும் இருக்கும். உங்களுக்குச் சேர வேண்டிய 10,000 ரூபாய்க்கு ஈடாக இதை இங்கு விட்டுச் செல்கிறேன். நான் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று எனது ஏடிஎம் கார்டை எடுத்து வந்த பின் இதை மீட்டுக் கொள்கிறேன். அது வரை இந்த நகை இங்கிருக்கட்டும்” என்றாள்.

“அதெல்லாம் முடியாது. எங்களிடம் இப்படிச் சொல்லி விட்டு நீ அந்தப் பக்கம் போய் போலீஸை அழைத்து வந்து எங்கள் மீது திருட்டுப் பட்டம் கட்ட முயன்றால் நாங்கள் என்ன செய்வதாம்?” என்றாள் கடைக்காரப் பெண்.

“இல்லை… அப்படி நடப்பதற்கில்லை என்று உறுதியாக நம்புங்கள் ப்ளீஸ்! நான் இங்கே விஜய்நகர் ரிசார்ட்டில் தான் தங்கி இருக்கிறேன். நீங்கள் அங்கு வரவேற்பறைக்கு அழைத்து என் பெயரைச் சொல்லிப் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டு பிறகு இந்த நகையை ஒப்புக் கொள்ளலாம். இது என்னால் நிகழ்ந்த தவறு அல்ல. என்னுடன் வந்த நபர் அயல்நாட்டவர். தம்பதிகளாக இங்கே சுற்றிப் பார்க்க வந்து எங்களது ரிசார்ட்டில் தங்கியிருந்த அவர்களது வழிகாட்டியாகவே நான் இங்கே அனுப்பப்பட்டேன். டிரெக்கிங் சென்றிருக்கும் அவரது மனைவியைக் கண்டுபிடித்து அழைத்துச் செல்லும் பொறுப்பும் இப்போது எனக்கு இருக்கிறது. அதனால் ப்ளீஸ் என்னை நம்புங்கள்”

– என்று கெஞ்சுதலாகச் சொன்னவளை நம்பிக்கையின்றி முறைத்துக் கொண்டிருந்த கடைக்காரப் பெண்ணை, அவளது வயதொத்த மற்றொரு இளம்பெண்ணின் குரல் இடையிட்டுக் கலைத்தது.

“ரேகா, இந்தப் பெண்ணைப் பார்த்தால் நம்பலாம் போலத்தான் இருக்கிறது. வீண் சஞ்சலம் வேண்டியதில்லை. நகையை வாங்கிக் கொண்டு அவளை அனுப்பி ஆக வேண்டியதைப் பார்ப்போமே” எனவும், பிறகு தான் இவளை நம்பி வெளியேற அனுமதித்தாள் அந்த ரேகா.

துணிக்கடையை விட்டு வெளியில் வந்தாயிற்று. இப்போது மீண்டும் ஹேவ்லாக் செல்ல வேண்டும். அதற்கு முன் ட்ரெக்கிங் பாயிண்ட்டுக்குச் சென்று உக்ரைனியக் கிறுக்குப் பெண்ணின் நிலை என்னவென்று தெரிந்து கொண்டால் நல்லது.

‘கடவுள் எனக்கென்று தேடித்தேடி மனிதர்களை அனுப்புகிறார் போலும். மன தைரியத்தைச் சோதிக்கவா? அல்லது சகிப்புத்தன்மையைச் சோதிக்கவா? என்பது தான் புரியாத புதிர்.’

இப்படிப் பலவாறாக யோசித்துக் கொண்டே மலையேற்றப் பாதைக்குச் சென்று பார்த்தாள். அங்கு ஈ, காக்கையைக் கூட காணோம். நேரம் மாலை 4-ஐக் கடந்து விட்டதாலா? அல்லது இன்று ட்ரெக்கிங் செல்ல யாருக்குமே விருப்பம் இல்லாமல் போய்விட்டதாலோ என்னவோ, சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை அந்தப் பாதையில் ஒருவரையும் காணோம்.

‘ஆள் நடமாட்டமற்ற அந்தப் பாதையில் மேலும் நடந்து நேரத்தை வீணடிப்பானேன்?’ என்று தோன்றி விட, தனு வேறு வழியின்றி போட் ஹவுஸுக்குச் சென்று, விஜய்நகர் ரிசார்ட் நிர்வாகத்தின் தரப்பில் அளிக்கப்பட்டிருந்த படகில் அங்கிருந்து விஜய்நகர் ரிசார்ட்டுக்கே மீண்டும் பயணப்படத் தொடங்கினாள்.

ரிசார்ட்டில் தான் இல்லாது ஷைலுவின் நிலைமை படு மோசமாக இருந்திருக்கும். போனதும் அவளை வேறு சமாதானப்படுத்த வேண்டும்.

போட் ஹவுஸில் இறங்கி, அங்கு காலையில் நிறுத்தி வைத்திருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சாவியிட்டு பட்டன் ஸ்டார்ட் செய்து வண்டியை ஸ்டார்ட் செய்த பிறகே கவனித்தாள், தன்னையே நோக்கியவாறு எதிரில் யாரோ ஒருவன் நின்று கொண்டிருப்பதை!

எதற்காகத் தன்னை இப்படி அவன் வெறித்துப் பார்க்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடியாது இவள் குழப்பமாக அவனை ஏறிடவே… அவன் நிதானமாக நடந்து அவளருகில் வந்தான்.

வந்தவன் கண்களில் கேள்வியுடன், “யூ மிஸ் தன்மத்ரா… அம் ஐ ரைட்?!” என்றான்.

வெகு அருகில் வந்த பின்னரே தெரிந்தது அவனும் ஒரு அஸ்ஸாமி என்று.

அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதெல்லாம் அப்புறம்; முதலில் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபரைக் கண்டதும் தன் மனதில் தோன்றிய எல்லையற்ற நிம்மதி கண்டு தன்மத்ராவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அந்த ஆச்சரியத்தை அப்படியே தனது குரலில் தேக்கி அவனை நோக்கி,

“நீங்க அஸ்ஸாமியா? மை காட், அட்லாஸ்ட் யூ சேவ்டு மீ!” என்று கடவுளுக்கு நன்றி சொல்லவே, அவளையே உற்று நோக்கிக் கொண்டிருந்தவன் அகன்ற புன்னகையுடன் மேலும் ஆச்சரியமானான்.

இரண்டு அஸ்ஸாமிகள் அந்நிய மண்ணில் சந்தித்துக் கொள்வது அப்படி ஒன்றும் அதிசயமான விஷயமில்லை தான். ‘ஆனால், இங்கு என் சார்பாகப் பேச யாருமே இல்லையே என்று மனம் தவித்துக் கொண்டிருக்கையில் உங்களைப் பார்த்ததும் கடவுள் தன் பிரதிநிதியை அனுப்பி விட்டார் போலும் என்று எனக்குத் தோன்றி விட்டது’ என்று பெருமூச்சுடன் மேலும் அவனுக்குப் பதில் அளித்த தனு, அவன் இன்னும் தன்னை ஆச்சரியம் கலந்த புன்னகையுடன் நோக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு ஒருவழியாக நடப்புக்கு வந்து,

“ஆம், நான் தன்மத்ரா தான். ஆனால், என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? நாம் முன்பே அறிமுகமானவர்கள் இல்லையே!” என்றாள் ஒரு ஆராய்ச்சிப் பார்வையுடன்.

பாதையை மறைத்தாற் போல் எதிரில் நின்று கொண்டு தன் புன்னகையை மேலும் விரித்த அவன் நல்ல திடகாத்திரமான தேகத்துடன் இருந்தான். தன்மத்ராவிடம் தோழமை கொள்ளும் ஆர்வமும் அவனிடம் இருந்தது. அதற்கேற்றார் போலத்தான் வெளிப்பட்டது அவனது பதில்.

“எஸ் மிஸ் தன்மத்ரா, என்னை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான். ஏனென்றால் நான் தான் உங்களுடன் ஐந்தாம் வகுப்பில் ஒன்றாய் அமர்ந்து பெஞ்சைத் தேய்த்துக் கொண்டு படித்த கிரீஸ் அல்லவே!” என்று குறும்புடன் நகைக்கவே, தனு ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்று விட்டாள்.

இப்போது அவளிடமும் அவனது ஆச்சரியமும் திகைப்பும் கலந்த சந்தோஷம் ஒட்டிக் கொள்ள,

“கிரீஸ்… ம்ம்… கிரீஸா?! என்ன… என்னோடு படித்த கிரீஸா நீ? இதெப்படி சாத்தியம்? நீ எப்படி இங்கே? அதுவும் இந்த நேரத்தில்?! நம்பவே முடியவில்லை கிரி பையா!” என்றவளின் குரல் உச்சபட்ச குதூகலத்தில் அவளுக்கே சற்று அந்நியமாக ஒலித்தது.

கிரீஸ் இப்போது சந்தேகம் தீர்ந்தவனாக தன் இரு கைகளையும் உயர்த்தி ‘ஹைபை’ அடித்துக் கொள்ளக் கோரவே, அவனது சந்தோஷம் தனுவையும் தொற்றிக் கொள்ள, அவளும் மகிழ்வுடன் கைகளை உயர்த்தி அவசர அவசரமாக அதை எதிரொலித்தாள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட நண்பர்களாக இருவரும் சில நிமிடங்கள் தங்களது குழந்தைப் பருவ நிகழ்வுகளைப் பற்றிய பகிர்தல்களுடன் சந்தோஷித்திருந்த போதிலும், ‘நடப்பு’ என்று ஒன்று இருக்கிறது தானே!

அந்த நினைவு வந்ததுமே தனுவின் முகம் கூம்பியது. தன் தோழியின் முகம் சோர்ந்ததைக் கண்ட கிரீஸின் கண்கள் அதற்கான காரணத்தைத் தேடி அவளிடமே பாய, எப்படித் தொடங்குவது என்று சற்றுத் திணறிய தனு,

“கிரீஸ், நான் இப்போது ஒரு மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறேன். என்னைச் சார்ந்தவர்கள் யாரையுமே தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அடுத்து என்ன செய்து இதில் இருந்து மீள்வது என்று ஒவ்வொரு நிமிடமும் பரிதவித்துக் கொண்டிருந்தேன். இங்கே மொழிப்பிரச்சினை வேறு பெரிதாக இருந்தது எனக்கு. அதனால் தான் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த உன்னைக் கண்டதும் அத்தனை ஆசுவாசமாகி விட்டது.

விடுமுறைக்காகத் தமிழ்நாட்டின் விசுவநாதபுரிக்குச் சென்ற என் கதை ஒரு பெரிய கதை… அதை இப்போது உன்னிடம் விலாவாரியாக என்னால் விளக்க முடியாது. நேரமாகி விட்டது. நான் உடனடியாகத் தங்குமிடம் திரும்பியாக வேண்டும். உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என்னை நாளைக் காலையில் விஜய்நகர் ரிசார்ட்டில் வந்து சந்திக்க முடியுமா?” என்றாள் தயக்கத்துடன்.

முடிப்பதற்குள் கிரீஸின் குரல் குறுக்கிட்டது.

“என்ன? நாளைக் காலையிலா? அது முடியாது தனு” என்றான் அவன்.

அவனது பதிலில் ‘ஏ… ஏன்?’ என்று ஒரு நொடி தடுமாறியவள்…

“நாளைக் காலையில் முடியாவிட்டாலும் நீ இங்கிருக்கும் சமயத்தில் என்றாவது ஒரு நாளில் வந்து என்னைச் சந்திக்க முயற்சி செய்யேன்…” அவன் வருவானோ மாட்டானோ எனும் அவநம்பிக்கையில் தனுவின் குரல் மெலிந்து ஒலித்தது.

அவளது தயக்கமும் குழப்பமும் அவனுக்கு வேடிக்கையாகத் தோன்றியதோ என்னவோ, அவளை ஏமாற்றத்தில் ஆழ்த்துபவன் போல அவன் மேலும் எதிர்மறையாகவே பதிலுறுத்தும் வகையில், “அதெப்படி முடியும்?” என்று மேலும் சீண்டினான் அவளை.

அதைச் சொல்லும் போது அவனது இதழ்களில் நெளிந்து கொண்டிருந்த குறும்பைக் கண்டிருந்தாளெனில் தன்மத்ரா அவனது முதுகில் நாலு வைத்திருப்பாள். ஆனால் அவள் தன்னில் மூழ்கியவளாக,

“முடியாதா கிரீஸ்… ஓ! நீ மிகவும் பிஸியான ஆளாகி விட்டாயா இப்போது? சரி விடு. நீ வந்து என்னைப் பார்க்க வேண்டாம். நீ எங்கு தங்கி இருக்கிறாய் என்று சொல்லு, நாளை நானே வந்து உன்னைப் பார்க்கிறேன். இப்போதைக்கு பை… பை, டேக் கேர்!” என்று அவனது தோளைத் தட்டிச் சொல்லி விட்டு, தன் வழியில் செல்ல ஸ்கூட்டரின் பட்டனை அழுத்தினாள்.

(தொடரும்)

விசுவநாதபுரி

விசுவநாதபுரி – 6

Author

You may also like

Leave a Comment