பழமொழிகளும் சொலவடைகளும்.
பழமொழிகள், சொலவடைகள் என்பன மொழியின் ஆழமும் அகலமும் கண்டோரின் அனுபவச் சாறுகள். அவை எல்லோருக்குமான மழை. தமிழில் மிக அருமையான பல பழமொழிகள், சொலவடைகள் இனிமையும் பொருத்தமும் உடையவை. வாழ்வைப் பிழிந்து கருத்தாகச் சொட்டும் பழமொழிகள் / சொலவடைகள் சுருக்கமாகவும் சுவையாகவும் ஒரு செய்தி அல்லது கருத்தை விளங்கச் செய்கின்றன.
காலப்போக்கில் பழமொழிகளில் சில திரிந்து வேறு பொருள் தருவதும் உண்டு. எல்லாமும் அப்படி ஆகவில்லை என்றாலும் எல்லாவற்றிலும் அப்படி வேறு பொருள் தேடும் போக்கும் உள்ளது. அவற்றில் சில ஏரணம் காரணம் பொருந்தி வந்தாலும் சில வலிந்து எப்படியாவது ஏரணத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன.
காட்டாக, பந்திக்கு முந்து; படைக்குப் பிந்து என்கிற ஒரு பழமொழி.
இதன் உண்மை வடிவம் பந்திக்கு முந்திக் கை (வலது கை), படைக்குப் பிந்திக் கை (இடது கை) என்பதுதான்.
அக்காலத்தில் அம்பறாத்தூணிகளை முதுகில் சுமந்து வந்த போர் வீரர்கள் வலது கையில் வில்லிருக்க இடதுகையால் தான் அம்புகளை எடுப்பர் என்பதை நோக்குங்கால் இதன் ஏரணம் விளங்கும்.
எனினும், ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் என்பதற்குக் காரணம் கண்டுபிடிக்கும் நோக்கில் அதை, ‘ஆயிரம் பேரிடம் போய் சொல்லி…‘ என்று ஏரணத் திருத்தம் என்பது வலிந்து செய்யப்படுவதாகத் தோன்றுகிறது.
பொன்மொழிகளாக ஏதேனும் எழுதி அதன் கீழே பெரிய அறிஞர் / தலைவர் பெயரைப் போட்டு அங்கீகாரம் தேடுவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடில்லை.
பழமொழிகளைத் தொகுத்து நண்பர் ஒருவர் அளித்த பட்டியலை முன்பொரு முறை பண்புடன் மடலாற் குழுமத்தில் பதிவு செய்திருந்தேன். மேலும் நண்பர் ஷேக் முஹம்மது ‘அறிந்தும் அறியாமலும்‘ என்கிற தலைப்பில், ரியாத் தமிழ்ச் சங்க வலைமனையில் நூற்றுக்கணக்கான பழமொழிகளுக்கு இயல்பான சரியான பொருளை எடுத்துக்காட்டியிருந்தார்.
காட்டாக,
‘மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?’ என்கிற பழமொழியில் பலரும் மண் குதிரை என்பதை மண்ணால் செய்யப்பட்ட குதிரை (Muddy Horse) என்று பொருள் கொள்கிறார்கள். உண்மையில், அது மண்குதிர் (மண் குவிந்த இடம்). அது உறுதியாக இருப்பது போலத் தெரிந்தாலும், காலடி வைத்தவுடன் ஆற்று நீரில் சரிந்து கரைந்துவிடும். எனவே, உறுதியாகத் தெரியாத ஒன்றை அல்லது போலித் தோற்றங்களை நம்பி ஆபத்தான காரியங்களில் இறங்கக்கூடாது என்பதைத்தான் இப்பழமொழி உணர்த்துகிறது.
இப்படிப் பொருள் திரிந்த பல பழமொழிகளும் இருக்கவே செய்கின்றன. அவற்றை மீட்டெடுப்பதும் காலத்தே செய்ய வேண்டுவதே.
பழமொழி நானூறு என்கிற நூல் தமிழின் செவ்விலக்கிய நூல்களுள் ஒன்று. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இதை யாத்தவர் முன்றுறை அரையனார். 401 வெண்பாப் பாடல்களைக் கொண்ட இந்நூலில் 400-க்கு நெருக்கமான பழமொழிகள் தரப்பட்டுள்ளன.
அதிலிருக்கும் பழமொழிகள் அல்லது இன்னும் பலவற்றுக்கும் இக்காலத் தமிழில் மீண்டும் பா வடிவம் கொடுக்க வேண்டும் என்பது என் அவா.
அப்படி முயன்ற ஒன்று:
பாலும் புளிக்கும் பழமொழி பொய்த்துவிடின்.
நூலும் நன்கு நவில்கிறதே – சாலுமோர்
ஞாயிறும் இருட்டை விரட்டுதற்போல் எங்கேயும்
ஆயிரம் காக்கைக்கோர் கல்.
(இதில் பழமொழி பொய்த்தால் பால் புளிக்கும் என்பதும் ஆயிரம் காக்கைக்கோர் கல் என்பதும் பழமொழிகளாம்)
(தொடர்வோம்)