அது ஒரு பொற்காலம் – மங்கா நினைவுகள்

அந்தக் காலத்தில், இக்காலம் போல் ஆன்லைன் கிடையாது. ஆனால் ஆர்டர் செய்யாமலே, வேண்டிய பொருட்களை வீட்டு வாசலில் தள்ளுவண்டியிலோ சைக்கிளிலோ வாங்கலாம்.

காலை ஐந்து மணி முதல் கணகணவென பலவித மணியோசை. அதுதான் வீட்டுப்பெண்டிரின் அலாரம். “ஓ பால்காரர் வந்தாச்சு. இந்த மணி எதிர் வீட்டுது. இது பக்கத்து வீட்டுப் பால்காரர்து. ஓ நம்ம பால்காரர் வந்தாச்சு” என்றபடி பெரிய பாத்திரத்தை எடுத்துண்டு வாசலுக்கு ஓடுவா. சைக்கிளில் மூன்று நான்கு துத்தநாகக் கேன்கள் தொங்கும். மடித்துக்கட்டிய வெள்ளை வேஷ்டி, வெள்ளைச் சட்டை, தலையில் முண்டாசு – இதுதான் பால்காரர். பசும்பால், எருமைப்பால் எனத் தனித்தனியே வைத்திருப்பார். நீண்ட கைப்பிடி உள்ள அளவுக்குவளை. அரைசேர், ஒரு சேர் என்று, அந்தக் கேனுக்குள் அளவுக்குவளையை விட்டு, லாவகமாக, சொட்டுப்பால் கீழே சிந்தாமல் படு ஸ்பீடாக நமது பாத்திரத்தில் ஊற்றுவார். தினப்படி எத்தனைன்னு சுவரில் கோடுதான் கணக்கு. அடுத்த மாத ஆரம்பத்தில் பணம் வாங்கிக்கொள்வார். சில வீட்டிற்கு, பசுமாடோ அல்லது எருமைமாடோ கன்றுடன் வாசலில் கொண்டுவந்து கட்டி, நம் கண்முன் கறந்து, கலப்படமில்லாத பால் தருவர். அற்புதமான நாட்கள்.

அடுத்து, “தயிரு தயிரூஊஊஊ காரம்மா”. பின் கொசுவம் வைத்து, முழங்கால் வரை அழகாக கிராமத்துப் பாணியில் புடவை கட்டியிருப்பார். ரவிக்கை கிடையாது. ஒரு மண்பானையைத் துணியால் சுற்றி, அதை பிரப்பங்கூடையில் வைத்து, அதை இடுப்பிலேற்றித் தயிர் விற்றுக்கொண்டு வருவார். அளவு எது தெரியுமா? வழவழவெனத் தேய்க்கப்பட்ட தேங்காய் மூடி. கொட்டாங்கச்சி என்று பெயர். பாறை போல் இருக்கும் தயிரை உடையாமல் நேக்கா கொட்டாங்கச்சியால் கட் பண்ணி நம்ம பாத்திரத்துல போட்டாஆஆ… ஆகா ஓகோதான். இதற்கும் சுவரில் கோடுதான் கணக்கு.

பச்சைப்பசேல் தளதளன்னு அவங்க தோட்டத்துல வெளஞ்ச ஆர்கானிக் கீரை கிடைக்குமே! தலையில் சும்மாடு (துணியைச் சுற்றி ஸ்டாண்ட் போல் செய்வர்) போட்டு, அதன் மேல் கீரைக்கூடை எடுத்து வருவாங்க.

கூடவே கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி, பச்சமொளகாப் பாட்டி… மேற்கூறிய காஸ்ட்யூமில் பாக்கெட் மணி சம்பாதிக்கும் பாட்டி. தானே விளைவித்த சாமான்கள். அம்மா கையால் போடும் ஒரு பிடி அரிசிக்கு, அன்றைக்குத் தேவையானதை வச்சுட்டுப் போய்டுவாங்க அந்தப் பாட்டி.

கறீகோய்… நாலு பக்கம் சைக்கிள் சக்கரம் கொண்ட தள்ளுவண்டியில் முண்டாசு கட்டிய காய்கறிக்காரர். எல்லாம் அவர் தோட்டத்தில் வெளஞ்ச நாட்டுக்காய்கறிகள். பால் புடலை (நீட்டமா, ஒல்லியா, பிஞ்சா), பிஞ்சுக் கத்திரிக்கா, பளபளன்னு அவரைக்காய், எளசா வெண்டிக்காய், பூசணிக்கொட்டை, பறங்கிக்கொட்டை (சிறிய சைஸுக்குப் பெயர்) இதான் இருக்கும். வெண்டைக்காய் எண்ணி வாங்கலாம். மிக ருசியான காய்கள். வீசை, பலம் என்றுதான் அளவு. நிறுவையில் மோசம் கிடையாது. சின்னக் குழந்தை வேணாலும் போய் வாங்கலாம். நேர்மையானவர்கள்.

இவர்கள் மட்டுமா? இன்னும் பலர்!

1. சாணை பிடிக்கலயோ…

மிக முக்கியமான விஷயம். இரும்பில் செய்யப்பட்ட வெட்டுக்கருவிகள் (உ.ம். அரிவாள்மணை, தேங்காய் துருவி, கத்தி, வெட்டரிவாள் போன்றவை) அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட காலம். உபயோகப்படுத்தும்போதே கூர் மழுங்கிவிடும். அவற்றை மீண்டும் ஷார்ப் செய்து தருபவர் இவர். அவர் தோளில் தூக்கிவரும் மெஷினில், ஒரு பெடல், ஒரு வீல் மற்றும் ஒரு கல்லால் செய்யப்பட்ட டிஸ்க் இருக்கும். மூன்றுமே ஒரு பெல்ட்டால் இணைக்கப்பட்டிருக்கும். பெடலைக் காலால் அமுக்கி, சக்கரங்களை ஸ்பீடாகச் சுழலவிட்டு, கூர்ப்பாக்க வேண்டிய பாகத்தை அந்தக் கல் டிஸ்க்கில் லாவகமாக வைத்து, கூர்ப்பாக்குவார். தன் கை மாட்டிக்கொள்ளாமல் அவர் நேக்காகச் செய்வது வாயைப் பிளக்க வைக்கும். அதிலிருந்து வரும் நெருப்புப்பொறியைத் தொட்டுப்பார்த்து, சுடுவது போல் நடித்து ‘ஆ ஊ’ எனக் கத்துவது குழந்தைகளுக்குக் குதூகலம்.

2. கிணறு தூர் வாருபவர்

இவர் கிணற்றில் இறங்கி மூழ்கி, அடியில் தங்கியிருக்கும் சேறு, குப்பைகளை எடுத்து வெளியே போட்டு, நீர் ஊறும் அடைப்புகளைச் சுத்தப்படுத்துபவர். அத்துடன் கையில் பல இரும்புக்கொக்கிகளை இணைத்த பாதாளக்கரண்டி வைத்திருப்பார். கிணற்றில் விழுந்த பெரிய சாமான்களை இந்தப் பாதாளக்கரண்டியைக் கயிற்றில் பிணைத்து, கிணற்றில் இறக்கி துழாவுவார். கொக்கியில் மாட்டியவுடன் மேலே இழுத்து வெளியில் எடுப்பார். இன்னும் இதில் மாட்டாத சிறு பொருட்களாக இருந்தால் கயிற்றைப் பிடித்துத் தானே கிணற்றின் பக்கச்சுவர்களில் கால் வைத்து சரசரவெனக் கிணற்றில் இறங்கி மூழ்கி, பொருட்களை எடுத்து வெளியே வருவார். அவை அநேகமாகக் குழந்தைகள் உள்ளே போட்ட வெள்ளி ஸ்பூன், பாலாடை, டம்ளர் போன்றவை. அவர்கள் நினைத்தால் மடியில் மறைத்து நம்மை ஏமாற்றலாம். ஆனால் தொழில் தர்மம் மற்றும் கங்கா தேவி தண்டனை கொடுப்பாள் என்ற தெய்வ பயம் உள்ளதால் அப்படிச் செய்ய மாட்டார்கள். அவ்வளவு நேர்மை.

3. குடை ரிப்பேய்ய்யார்ர்…

வெயிலோ மழையோ இரண்டுக்கும் குடை மிக அவசியம். குடைக்கம்பி அடிக்கடி ஒடியும். சாப்பிட எதுவும் கிடைக்காத எலிகள் குடைத்துணியைக் கடித்து ஆத்திரத்தைத் தீர்த்துப் பழிவாங்கும். இவற்றை ரிப்பேர் செய்து கொடுப்பவர்தான் இவர்.

4. கல்லு பொளியலையோ கல்லூஊஊஊ…

துணி துவைக்கக் கல், மசாலா மற்றும் துவையல் அரைக்க அம்மி, இட்லி தோசை அரைக்க ஆட்டுக்கல், ட்ரை மாவு அரைக்க திருவுஎந்திரம் – இவையெல்லாம் பாறாங்கல்லால் செய்யப்பட்ட அன்றாடம் உபயோகித்த உபகரணங்கள். நாட்பட நாட்பட தேய்ந்து வழுவழுப்பாகிவிடும். அவைகளைச் சிறு உளி கொண்டு கெத்தி ரஃப் ஆக்குபவர்தான் இவர். இவரால் மட்டுமே செய்யக்கூடிய வேலை. இவருக்கு டிமாண்ட் சற்று அதிகமே.

5. பாத்திரங்கள் ஈயம் பூசலயோ…

எவர்சில்வர், செராமிக் பாத்திரங்கள் அதிகம் உபயோகமில்லாத காலம். பித்தளைதான் அநேக வீட்டில் (Resale value உண்டு). ஆனால் பித்தளைப் பாத்திரத்தில் நேரடியாக உப்பு, புளி போட்ட பதார்த்தங்களைச் சமைக்க மாட்டார்கள்; கெமிக்கல் ரியாக்ஷன் ஆகி விஷமாகிவிடும். உள்பக்கம் ஈயத்தால் கோட்டிங் செய்தபின்தான் உபயோகப்படுத்துவர். சமைக்கச் சமைக்க அந்த ஈயம் கொஞ்சம் கொஞ்சமாக அழியும் (நம் வயிற்றினுள் போகும், உடலுக்கு நல்லது). ஆதலால் ஆறேழு மாதங்களுக்கொருமுறை ஈயம் பூசுவார்கள். இவர்தான் அந்தத் தொழில் செய்பவர்.

6. நம்ம வீட்டம்மாக்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் பாத்திரக்காரர்

தலையில் ஒரு பெரிய கூடையில் பலவித எவர்சில்வர் பாத்திரங்களுடன் வேகாத வெயிலில், பழைய துணிக்குப் பாத்திரம் வாங்கலையோ எனக் கூவியபடி வருவார். வீட்டிலுள்ள பழைய துணிமணிகள், புடவைகள் கொடுக்கப்பட்டு பாத்திரமாகப் பண்டமாற்று ஆகும். பல கணவன் மனைவிகளுக்குள் தங்கள் நல்ல சட்டை பேண்ட் போட்டுப் பாத்திரம் வாங்கிவிட்டதாகப் பெரிய சண்டைகள் எல்லாம் வந்திருக்கு.

7. பாய் விற்பவர்

அந்த நாட்களில் சாமானியப்பட்டவா வீட்டில், கட்டில் மெத்தை என்றெல்லாம் கிடையாது. தரையில் கோரைப்பாய் போட்டுப் படுப்பார்கள். அந்தப் பாய் விரைவில் நைந்துவிடும். தினம் தவறாமல் “பாயீஈஈஈ” என விற்பவருக்கு, ஏதாவது ஒரு வீட்டில் கட்டாயம் வியாபாரம் நடக்கும்.

8. துணி ரிப்பேர்ர்ர்…

தலையில், ஒரு கையால் சுற்றும் தையல் மெஷினைச் சுமந்தபடி மேற்கூறியபடி கூவிக்கொண்டு வருபவரிடம், சின்னச் சின்னக் கிழிசல்கள், தையல் விட்டுப் பிரிந்தவை போன்ற துணிகளைத் தைத்துக்கொள்வர் நம் பெண்டிர்.

9. பழம் வாங்கலயோ…

தம் தம் தோட்டத்தில் விளைந்த கொய்யா, வாழை, நெல்லி, நாவல், இலந்தை போன்ற பழங்களைக் கூடையில் போட்டு எடுத்துவருவர் விவசாயப் பாட்டிகள். அதில் வரும் வருமானம் அவர்களுக்குப் பாக்கெட் மணி.

இன்னும் செருப்பு தைப்பவர், பழைய கண்டா முண்டா சாமான் வாங்குபவர், பழைய பேப்பர் வாங்குபவர் (பேரீச்சம்பழக்காரர்னு பேர்) போன்றவர்கள் மத்தியான வேளையில்தான் வியாபாரம் செய்வர். ஆண்கள் இல்லாத சமயம் (ஆண்களுக்கு எதையும் போட மனசு வராதே) வந்தால் நன்னா வியாபாரம் நடக்கும் என்ற ட்ரிக் அறிந்தவர்கள்.

அந்தக்கால வியாபாரிகள், நல்ல வியாபார தந்திரம் அறிந்தவர்கள். எந்த நேரத்தில் தனது வியாபாரத்தை நடத்தினால், அமோக வியாபாரம் நடக்கும் என்று நன்கறிந்து, அந்த நேரத்தில்தான் வருவார்கள்.

மேலே பல மதிய வேளை வியாபாரிகளைச் சந்தித்தோம். அவர்களுடன், செருப்பு தைப்பவர், வெள்ளி, செவ்வாயில் உப்பு வாங்கினால் நல்லது என்றறிந்து அந்தக் குறிப்பிட்ட நாட்களில் விற்க வரும் உப்பு மூட்டைக்காரர், அந்தந்த சீசனில் கூடையில் நிரப்பி வரும் கொலு பொம்மை, பட்டாசுகள், கரும்புத்துண்டு வியாபாரிகள், தெருமுக்கில் நின்றபடி “சீமெண்ணே” என்று கூவும் கெரோசின் வண்டிக்காரர், கலர் கலராக ஏதோ திரவம் வைத்தபடி விதவிதமான சர்பத் தயாரிக்கும் சர்பத் வண்டிக்காரர் எனப் பலபேரைச் சொல்லலாம்.

அடுத்து, குழந்தைகளைக் கவரும் வியாபாரிகள்:

1. ஜவ்வுமிட்டாஆஆஆய்…

ஒரு பெரிய வழவழப்பான கம்பின் உச்சியில் பல கலர்களில் ஏதோ ஒரு ஸ்வீட் பெரிய சைஸில் ஒட்டியிருக்கும். தோளில் தாங்கியபடி வருவார். அதைச் சர்ருன்னு இழுத்து கம்பி போல் வடிவாக்கி, குழந்தைகளின் கையில் கடிகாரம், மிருகங்கள், பூக்கள் என அவர்கள் கேட்கும் வடிவங்களில் ஒட்டிவிடுவர். அதை அந்தக் குழந்தைகள் நக்கி நக்கிச் சாப்பிட்டு ஆனந்தப்படும். நானும் சாப்பிட்டிருக்கேன். இப்ப நெனச்சா உவ்வேதான்!

2. பஞ்சு மிட்டாஆஆஆய்…

இது அடுத்த ஸ்வீட். ஒரு தள்ளுவண்டியில் ஒரு பெரிய தகர ட்ரம். அதனுள் ஒரு சுழலும் மெஷின். அதில் ஒரு கோலை வைத்துச் சுழற்றினால் டார்க் பிங்க் கலரில் பஞ்சு மாதிரி ஒரு ஸ்வீட் அந்தக் கோலில் படியும். ஒரு பலூன் அளவு வரும் வரை சுழற்றி அதைக் குழந்தைகளுக்குக் கொடுப்பார். அந்தப் பஞ்சு சேதமடையாமல் சாப்பிடுவது குழந்தைகளுக்கு மஜா… ஜாலி!

3. பலூன்காரர்

அதே போல் பலூன்காரர்… பீ பீ என உடைந்த பலூன் துண்டை வைத்து வினோத சப்தம் எழுப்புவார். குழந்தைகள் அடம்பிடித்து அம்மாவிடம் காசு வாங்கி, விதவிதமான வடிவங்களில் பலூன் வாங்கிக்கொள்வர்.

4. பயாஸ்கோப்பு பாக்கலயா…

ஒரு பெரிய மர ஸ்டூலின் மேல் துணியால் மூடிய லென்ஸ் வைத்த ஒரு கூண்டு. ஒரு பக்கம் சின்ன ஃபிலிம் ஸ்டில்களை வைத்தால் மறுபக்கம் பெரியதாகத் தெரியும். பத்து ஃபிலிம் காட்டினால் ஒரு குறிப்பிட்ட தொகை. குழந்தைகள் கூட்டம் அலைமோதும்.

5. சோன்பப்டிக்காரர்

ஒரு நீளமான கோலின் ஒரு பக்கத்தில் பெரிய சைஸ் தராசு போன்ற கூடையில் வடக்கத்திய ஸ்வீட்டான சோன்பப்டி பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டுத் தொங்கும். அதைத் தோளில் போட்டு மணி அடித்தபடி வருவது, தொலைதூரத்திலிருந்தே குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும். அவர் பேப்பரில் மடித்துக்கொடுக்கும் ஒரு சிட்டிகை சோன்பப்டி அவ்வளவு ருசியாயிருக்கும்.

“தேங்ஙா போளீங்…” என்று மூக்கால் கூவியபடி வரும் போளி வியாபாரி, “டிங் டிங்” என மணியடித்தபடி “மல்லாக்கொட்டை” எனக் கூவியபடி வரும் சூடான கடலை வியாபாரிகள், பலவித ஸ்நாக்ஸ்களுடன் வரும் பட்சணவண்டி மாமா, குச்சிஐஸ், பால்ஐஸ் விற்பவர் – இவர்களை மறக்க முடியுமா?

ம்ம்ம்… என்னதான் வளர்ச்சி ஆனாலும் அந்த நாட்களின் இனிய நினைவுகள் மனதை விட்டுப் போகவில்லை!

Author

Related posts

நினைவோட்டத்தின் திருக்கார்த்தியல்

நானும் அரசியலும்

உயிரின் எடையும், அதற்கான விலையும்!