வானுயர்ந்த விந்திய மலைத்தொடரின் மடியில், துங்கபத்திரை நதி மலைப்பாம்பு போல வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தச் சலசலப்பிற்கு இடையே கிஷ்கிந்தையின் பாறை இடுக்குகள் ஒரு மர்மமான சங்கீதத்தை இசைத்துக் கொண்டிருந்தன. அந்திப் பொழுது மெல்லக் கவியத் தொடங்கிய அந்த வேளையில், மலைக்கோட்டையின் உச்சாணிக் கொம்பில் இருந்த மாளிகையின் உப்பரிகையில் நின்று வாலி தன் சாம்ராஜ்யத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது தோள்கள் ஒரு சிற்பியின் உளியால் செதுக்கப்பட்ட பாறைத் தூண்களைப் போல உறுதியாக இருந்தன. வெண்ணிற மயிர் அவனது உடலைப் போர்த்தியிருக்க, அவன் மேனியில் அந்தி வெயில் பட்டுத் தெறிக்க, அவன் ஒரு நடமாடும் வெள்ளிச் சிலையாகக் காட்சியளித்தான்.
அவனுடைய அந்தப் பிரம்மாண்டமானத் தோற்றத்திற்குப் பின்னால் ஒரு தீராத துக்கம் நிழலாடியிருந்தது. கிஷ்கிந்தையின் மகுடத்தைத் தாங்கி நின்ற முதுவேந்தன் இரிக்சராஜன், தன் வாழ்நாளின் அந்திமப் பொழுதை எட்டியிருந்தார்.
“வலிமை ஒன்றே வாழ்வல்ல வாலி, உன் வலிமை காட்டாறு போன்றது. அதைக் கட்டுப்படுத்த ஒரு நல்ல மதியூகி வேண்டும். தாரை உன் மனைவியாக இருந்தால் நல்லது,” என்றார்.
“அப்பா…” வாலியின் குரல் தழுதழுத்தது.
“தாரை… அவள் நல்லவள், உனக்கு ஏற்றவள். சுக்ரீவன் உணர்ச்சிவசப்படுபவன், வெகுளியானவன். அவனை நன்றாகக் கவனித்துக்கொள்.”
அதுவே அவர் கடைசியாகப் பேசியவை.
அரண்மனையின் உட்புறத்தில், அகில் புகையும் மூலிகை மணமும் கமழ்ந்து கொண்டிருக்க, மெல்லிய காற்று அங்கிருந்த திரைகளை அசைத்துக் கொண்டிருந்தது. படுக்கையில் கிடந்த இரிக்சராஜனின் கண்கள் மெல்ல மெல்ல மூடிப் பேரமைதி கொண்டன. அந்த இரவில், அந்த வேந்தனின் உயிர் பிரபஞ்சத்தில் கலந்தது. கிஷ்கிந்தையின் குகைகள் ஓர் அமானுஷ்யமான மௌனத்தில் ஆழ்ந்தன.
வாலியின் அழுகை கர்ஜனையாக மாறி மலை முகடுகளில் எதிரொலித்தது. “அண்ணா, அண்ணா…” என்றபடி சுக்ரீவன் தன் அண்ணனைத் தாங்கிப் பிடித்தபடி விம்மினான். அந்தத் துக்கம் அவர்களை இன்னும் நெருக்கமாக்கியது. ஆனால், அந்தப் பாசப்பிணைப்பின் விரிசலுக்கான வித்துக்கள் காலத்தின் கையில் இருந்தன.
மலை வேந்தனின் மறைவுக்குப் பின், வாலி மகுடம் சூடும் வேளை வந்தது. ஆனால், தந்தையின் இறுதி ஆணைப்படி ஒரு சக்கரவர்த்திக்கு நிகரான அவனது அதிகாரத்திற்கும் வலிமைக்கும் அணையாக நிற்க, ஒரு மதியூகி மனைவியாகத் தாரை தேவைப்பட்டாள். தாரையின் பிறப்பு குறித்த கதைகள் அலாதியானவை. தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது, அங்கிருந்து பல அபூர்வமான பொருட்கள் தோன்றின. அதில் ஒன்றாக, தேவதாட்சண்யமும் வானர சொரூபமும் பேரறிவும் கொண்ட ஒரு மங்கை உதித்தாள்.
தாரை கிஷ்கிந்தையின் பேரழகி. அவளது கண்கள் கார்மேகத்தில் மின்னி மறையும் ஒளியைப் போன்ற வீச்சினை உடையவை. சிற்பியின் உளி தீண்டாத பளிங்குச் சிலை ஒன்று உயிர் பெற்று நடமாடுவது போன்ற தோற்றம். அலை அலையாய்ச் சரிந்து விழுந்த அவளது கார்மேகக் கூந்தல், அவளது இடையழகைக் காணத் துடிக்கும் ஒரு கருநாகத்தைப் போலப் பின்னழகுடன் விளையாடிக் கொண்டிருந்தது.
பெண்ணின் அழகு என்பது அவள் காட்டும் வடிவம் மட்டுமல்ல, அவள் மறைத்து வைத்திருக்கும் ரகசியங்களின் நளினமும்தான்.
அவளது நுட்பமான அறிவு, வாலியின் வீரத்திற்கு ஒரு கடிவாளமாகத் திகழ்ந்தது. வாலி தாரையைத் தன் அரியாசனத்தின் ஒரு பகுதியாகவே கருதினான். அவளது வருகை கிஷ்கிந்தையை ஒரு நாகரிகமானப் பேரரசாக மாற்றத் தொடங்கியது.
தாரை கிஷ்கிந்தையின் அரசியாகப் பொறுப்பேற்றதும், முதலில் கவனித்தது சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பைத்தான். வாலி தன் பலத்தின் மமதையில் “எதிரிகளே இல்லை” என்று நம்பிக் கொண்டிருந்தான். ஆனால் தாரையோ, தந்திரங்களே வீரத்தை விடவும் கொடியவை என்று உணர்ந்திருந்தாள். அவள் கிஷ்கிந்தையில் ஒரு ரகசிய ‘உளவுத்துறை’யை உருவாக்கினாள். காட்டின் பறவைகளும் விலங்குகளும் கூட அவளுக்குத் தகவல்களைக் கொண்டு வருவது போலத் திறமையான வானர ஒற்றர்களைக் கிஷ்கிந்தை மற்றும் தண்டகாரண்யம் முழுவதும் பரப்பினாள்.
அவளது ஒற்றர்கள் ஓர் அதிர்ச்சிகரமான செய்தியைக் கொண்டு வந்தனர். தண்டகாரண்யத்தின் இருண்ட பகுதிகளில், ஒரு விசித்திரமான கூட்டணி உருவாகிக் கொண்டிருப்பதை அவள் அறிந்தாள். இலங்கையின் இளவரசி சூர்ப்பனகைக்கும், தண்டகாரண்யத்தின் பயங்கரமான அரக்கியான அயோமுகிக்கும் இடையே ஒரு நெருக்கமான நட்பு மலர்ந்திருப்பதைத் தாரையின் நுட்பமானப் புலன் உணர்ந்தது. சூர்ப்பனகை தன் மாய வித்தைகளால் காட்டை அலைக்கழித்துக் கொண்டிருக்க, அயோமுகி தன் வக்கிரமான பார்வையால் பயணிகளை அச்சுறுத்திக் கொண்டிருந்தாள்.
“ஐயனே, நாம் லங்கையோடு பகை கொள்ளத் தேவையில்லை; ஆனால் அந்தப் பக்கமிருந்து வீசும் காற்றின் வாடை சரியில்லை” என்று தாரை வாலியை எச்சரித்தாள். சூர்ப்பனகையின் வருகை ஒரு பெரும் புயலின் அறிகுறி என்பதை அவள் தன் மதியூகத்தால் உணர்ந்தாள்.
இந்தச் சூழலில், கிஷ்கிந்தையின் பாதுகாப்பு மற்றும் ஆலோசனைக்கு இன்னொரு மதியூகியும் தேவை என்று தாரை முடிவு செய்தாள். அப்போதுதான் மதங்க முனிவரின் ஆசிரமத்தில் வளர்ந்து வரும் அஞ்சனை மைந்தன் அனுமனைப் பற்றிய தகவல்கள் அவளுக்குக் கிடைத்தன. அனுமன், ‘நவவியாகரண பண்டிதன்’; ஒன்பது இலக்கணங்களையும் கரைத்துக் குடித்தவன். அவனது சொல்லாற்றலும், தூய்மையான பக்தியும், வீரமும் தாரையை ஈர்த்தன.
“நம் சாம்ராஜ்யம் தருமத்தின் வழியில் நிலைத்து நிற்க வேண்டுமானால், நமக்கு ஒரு மதியூக மந்திரி தேவை. அனுமன் போன்ற ஒரு ஞானி கிஷ்கிந்தையின் அமைச்சராக இருப்பது, வரப்போகும் ஆபத்துகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்” என்று தாரை வாலியிடம் வாதாடினாள்.
வாலி தன் மனைவியின் பேச்சை ஏற்று, அனுமனைத் தன் அரசவைக்கு அழைத்தான். அனுமன் கிஷ்கிந்தைக்குள் நுழைந்த அந்தத் தருணம், பாறைகள் எல்லாம் பணிந்து வணங்கியது போலத் தோன்றியது. அனுமனின் ஞான உருவத்தைக் கண்ட தாரை, அவனைச் சுக்ரீவனுக்கு உற்ற தோழனாகவும், வாலியின் தலைமை அமைச்சராகவும் அமர்த்தினாள். இது தாரையின் ராஜதந்திரத்திற்குக் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாக அமைந்தது.
வாலிக்கும் தாரைக்கும் திருமணம் முடிந்து கிஷ்கிந்தை பொலிவு பெற்ற நிலையில், சுக்ரீவனின் வாழ்விலும் வசந்தம் வீசியது. சுக்ரீவன் ருமை என்ற வானரப் பெண்ணை மணந்தான். ருமை, பனசன் என்ற வானரத் தலைவனின் மகள். சுக்ரீவன் மற்றும் ருமையின் திருமணம் குறித்த ஒரு சுவாரஸ்யமான நாட்டுப்புறக் கதை உண்டு. சுக்ரீவன் ருமையைத் தேடிச் சென்றபோது, அவளது தந்தை ஒரு கடினமான நிபந்தனையை விதித்தார். ஒரு பெரும் மலைப்பாறையை எவ்வித ஆயுதமுமின்றிப் பிளக்க வேண்டும் என்பதே அது. சுக்ரீவன் தன் அண்ணன் வாலியின் வீரத்தைப் பாடிக் கொண்டே, அந்தப் பாறையைத் தன் கரங்களால் பிளந்ததாகவும், அவனது அந்தச் சகோதரப் பாசத்தைக் கண்டு வியந்த பனசன் தன் மகளை அவனுக்கு மணமுடித்துக் கொடுத்ததாகவும் கிராமியப் பாடல்கள் கூறுகின்றன.
தாரையைப் போல ருமை மதியூகி அல்லள், ஆனால் அவள் அன்பின் வடிவம். சுக்ரீவனின் அலைபாயும் மனதிற்கு அவள் ஓர் அன்புக் கடிவாளமாக விளங்கினாள். வாலி-தாரை, சுக்ரீவன்-ருமை என இரண்டு தம்பதிகளும் கிஷ்கிந்தையை ஒரு மகிழ்ச்சியான பிரதேசமாக மாற்றினர்.
ஆனால், எந்த ஒரு பேரரசின் உச்சமும் அதன் வீழ்ச்சிக்கான தொடக்கமாகவே அமையும். வாலி தன் வலிமையின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்து, வரப்போகும் விதியை மறந்து புன்னகைத்துக் கொண்டிருந்தான். தாரையின் கண்கள் மட்டும் கவலையோடு அந்தத் தெற்குத் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தன. அங்கு அயோமுகி வாழும் வனத்தில் சூர்ப்பனகையின் நிழல் படரத் தொடங்கியிருக்க, ஒரு பக்கம் ஆடம்பரங்களிலும் மது மங்கையர் போதைகளிலும் ஆழ்ந்திருந்த சுக்ரீவனைக் கண்டு வருந்திக் கொண்டிருந்தாள்.
வாலி அரசுப் பணிகளில் அதிகம் கவனம் செலுத்தியதாலும், அரச விவகாரங்களில் தம்பியைப் பெரிதும் ஈடுபடுத்தாத காரணத்தினாலும், சுக்ரீவன் மீது அவன் கவனம் குறைந்து இருந்தது. அவனை நல்வழிப்படுத்த ஒரு நல்ல நண்பன் தேவை என்பதைத் தாரை உணர்ந்திருந்தாள்.
கிஷ்கிந்தையின் பொன்னிறக் கோட்டைகளில் இப்போது மகிழ்ச்சி தாண்டவமாடிக் கொண்டிருந்தாலும், குகையின் ஆழத்தில் தன் தந்தையின் மரணத்துக்குப் பழி வாங்குவேன் என்று கர்ஜிக்கும் மாயாவி என்ற அசுரனின் பேரொலி கேட்கத் தொடங்கிவிட்டது.
குறிப்பு: நாட்டுப்புறக் கதைகளின்படி, பாற்கடல் கடைதலின் போது வாலி தன் அபார பலத்தால் தேவர்களுக்கு உதவினான். அவனது அந்த இணையற்ற வீரத்தைப் பாராட்டி, அங்கிருந்து வெளிப்பட்ட தாரையை வாலிக்கு மணமுடித்துக் கொடுத்ததாக ஒரு வாய்மொழிக் கதை இன்றும் நிலவுகிறது. இந்தக் கதைகள் கம்பன் காலத்திலும் இருந்திருக்க வேண்டும். பாற்கடலைக் கடைந்த போது வாலி அங்கே உதவியதாகக் கம்பனும் எழுதி இருப்பது குறிப்பிடத் தக்கது.
1 comment
வெகு அழகிய விவரணை. சுவாரஸ்யம்