ஈற்றடிக்கோர் பாட்டு – 2

முகநூலில் வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை வழங்கியிருந்தோம். தின்று செரித்தாலும் தீது என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.

உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:

அன்பு விடுத்து அறநெறி வீழ்த்தியவர்
தங்கமும் தாளாப் பொருள்தந்த போதிலும்
வன்முறையை தூண்டி வளர்க்கும் பணமதைத்
தின்று செரித்தாலும் தீது
.

இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும், கவிதைகளும்:

  1. இப்னு ஹம்துன்

தன்னுரிமை காத்தல் தலைக்கனம் ஆகாது
முன்னுரிமை தன்னையே முன்னிறுத்தும் – என்றாலும்
இன்னொருவர் நோக இடர்செய் அகங்காரம்
தின்று செரித்தலும் தீது.

2. சின்னக்கண்ணன்

அன்னை தருகின்ற அற்புதச் சாப்பாட்டை
மின்னலாய்த் தள்ளிவிட்டு மேவியே துள்ளியோடி
அன்னிய அங்காடி ஆங்கே தருமுணவைத்
தின்று செரித்தாலும் தீது

3. ஹேமா செந்தில்

நஞ்சைக் கலந்த உணவு
வஞ்சனை தந்த கள்ளப்பணம்
நெஞ்சை மயக்க போதை
பஞ்சாய்ப் பறக்க வதந்தீ
கொஞ்சமும் வடிகட்டா நெகிழி
பஞ்ச பாதகத்தால் வந்த செல்வமதனைத்/
தின்று செரித்தாலும் தீது.

4. சக்தி பிரபா

ஏதாகினும் செய்துயர நன்னூலெதுவும் நயந்து
ஓதாகிடினும்; இழிவழி பழியேற்று – மேதாவியென
வென்றுலகில் தேடிச் சேர்த்த செழும்புகழை
தின்று செரித்தாலும் தீது.

வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துகளும்.

Author

Related posts

தான வீர சூர கர்ணன் – 5

அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்

அறிவெழுச்சி: 1