உருதுக் கவிதை உலகு – 9:  குல்ஸார்

This entry is part 9 of 9 in the series உருதுக்கவிதை உலகு

சம்பூரண் சிங் கல்ரா, குல்ஸாரின் இயற்பெயர். கடந்த அறுபது ஆண்டுகால உருது இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயர், குல்ஸார். கவிஞர், எழுத்தாளர் என உருது இலக்கியத்திலும், திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு எனத் திரைத்துறையிலும் சிகரம் தொட்டவர் குல்ஸார். எழுத்தார்வம் உள்ள இளைஞனாக வெளிப்பட்ட அவரை இந்தித் திரையுலகம் பாடலாசிரியராக்கி, அவ்வப்போது மட்டும் தீவிர இலக்கியத்தில் கவனம் செலுத்துபவராக்கியது.

குல்ஸார் பெற்ற ஃபிலிம்ஃபேர் விருதுகளின் எண்ணிக்கை மட்டும் இருபத்தொன்று. அந்த நீண்ட பயணம் எளிமையாகத் தொடங்கியது.

பதின்மூன்றாம் வயதில் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையில் தன்னுடைய சொந்த ஊர் ஜீலம் – பஞ்சாபிலிருந்து அமிர்தசரஸில் அகதிகள் முகாமில் அடைக்கலமாகின்றார். அதற்கும் முன்பே அவருக்குத் தாகூர், சரத் சந்திரர் இருவரின் எழுத்துகளும் மொழிமாற்றம் செய்யப்பட்டுப் பள்ளிப்பருவத்தில் அறிமுகமாயின.

அமிர்தசரஸிலிருந்து தில்லிக்குக் குடிபெயர்கின்றனர். குடும்பச் சூழல் காரணமாக குல்ஸாரின் படிப்பு நிறுத்தப்படுகிறது. தாகூரும் சரத் சந்திரரும் அறிமுகமானதால் உண்டான தாக்கம் குல்ஸாருக்கு எழுத்தார்வத்தை உண்டாக்குகிறது. ஆனால், குடும்பச் சூழல், சமூகச் சூழல் இரண்டும் அவருக்குச் சாதகமாக அமையவில்லை. பள்ளிப்படிப்பையும் நிறுத்திவிட்டுக் குடும்பத்துக்குச் சம்பாதித்து உதவ வேண்டிய சூழலில் வளர்கிறார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை மக்களை அலைக்கழித்த வரலாறு பதிவாகியிருக்கும் வாழ்க்கையில் குல்ஸாரின் வாழ்க்கையும் ஒன்று.

பிழைப்பைத் தேடி தில்லியிலிருந்து மும்பைக்குக் குடும்பம் குடிபெயர்கிறது. மும்பையில் வண்டிகளுக்கு வண்ணமடிக்கும் வேலை குல்ஸாருக்குக் கிடைக்கிறது. வண்ணமடிக்கும் வேலையைச் செய்துகொண்டே கல்வியைத் தொடர்கிறார், தன்னுடைய இலக்கிய ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்கிறார். அவருக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்பு உண்டாகிறது.

பொதுவுடைமைக் கருத்துகளையும் இயல்பு வாழ்க்கையையும் மையப்படுத்தித் திரைப்படங்கள் தயாரித்து இயக்கிய பிமல் ராயுடன் எழுத்தாளர் சங்கத்தில் தொடர்பு உண்டாகிறது. கவிஞர், திரைப்பாடலாசிரியர் ஷைலேந்திராவுடனும் தொடர்பு உண்டாகிறது. இலக்கியத்திலும் எழுத்திலும் ஆர்வமுள்ள ஓர் இளைஞன் வண்டிகளுக்கு வண்ணமடிக்கும் வேலையில் பொழுதைக் கழிக்கக்கூடாது என்னும் எண்ணத்தில் பிமல் ராய் குல்ஸாரைத் திரைத்துறைக்கு அழைக்கிறார்.

ஆண்டு 1963, பிமல் ராய் இயக்கிய ‘பந்தினி’ திரைப்படத்தின் மற்ற பாடல்களை ஷைலேந்திரா எழுதியிருக்க, அவரே குல்ஸாரை ஒரு பாடல் எழுதச் சொல்கிறார். பிமல் ராய் ஏற்க, தன்னுடைய முதல் திரைப்பாடலை குல்ஸார் எழுதுகிறார். தொடர்ந்து இந்தித் திரையிலும் இலக்கியத்திலும் நிலைத்திருக்கப் போகும் கவிஞனின் முதல் பாடல் அரங்கேறியது.

// என் வெண்ணிறத்தை நீ எடுத்துக்கொள்
உன் கருமை நிறத்தை எனக்குக் கொடு
அமைதியாகக் கடந்துவிடுவாய் இந்த இரவை
என்னுடன் நீ சங்கமித்தால்
//

// மோரா கோரா அங்க் லாய்லே
மோஹெ ஷியாம் ரங்க் தாய்தே
ஸுப்ஜாவூங்கி ராத்ஹி மைன்
மோஹெ பீகா சங்க் தாய்தே
//

ஜீலத்தில் பிறந்து இந்தியப் பிரிவினையைப் பார்த்து, அமிர்தசரஸில் அகதிகள் முகாமில் தங்கி தில்லிக்கு வந்து மும்பைக்கு வந்து, தன்னுடைய எழுத்தார்வம் காரணமாக அன்றைய முன்னணி பாடலாசிரியர் இயக்குநரால் நேரடியாகத் திரைப்பாடல் எழுதக் கிடைத்த வாய்ப்பில் தன் திறனை நிரூபிக்கிறார். இருபத்தொன்பது வயதில் இளைஞனாகத் தன் முதல் திரைப்பாடலை லதா மங்கேஷ்கர் பாடக் கேட்கிறார். பாடல் பெருவெற்றியைப் பெறுகிறது.

திரைப்பாடலை இலக்கியத் தரமாக வடித்தும், உருதுக் கவிதைகளிலும் குல்ஸார் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

உருதுக் கவிதையில் ‘திரிவேணி‘ என்னும் வடிவத்தை குல்ஸார் அறிமுகப்படுத்தினார்.

திரிவேணியில், ஹைக்கூக்களைப் போல் மூன்றடிகள், ஆனால் சுருக்கமாக இல்லாமல் நீண்ட அடிகளாக இரண்டடிகள் ஒரு பொருளில் பாடப்படும். மூன்றாவது அடி முதல் இரண்டடிகளுடன் இணைய, இன்னொரு பொருள் கிடைக்கும். மூன்றாம் அடித் திருப்பமும் ஹைக்கூவில் நிகழும் வெட்டு அல்லது திருப்பம் என்னும் ‘கிரெஜே’ இங்கும் நடந்து பொருளை மாற்றும். தமிழ் யாப்பிலக்கணத்தில் மூன்றடி கொண்டு பாடப்படுவது சிந்தியல் வெண்பா. ஆசிரியப்பாவின் குறைந்தபட்ச எல்லையும் மூன்றடிகள்.

ஜப்பானிய மொழியிலும், தமிழிலும் இருக்கும் மூன்றடிப் பாக்களைப் போல உருதுவில் (இந்தியில்) அளவடிகளாக மூன்றடிகளைக் கொண்ட குல்ஸாரின் திரிவேணி புத்தகமாக வெளிவந்துள்ளது.

குல்ஸாரின் திரிவேணிகளுள் இரண்டு:

(1)
// கடைத்தெருவில் இப்படியும் அடிக்கடி நடந்துவிடும்
விலை சரியாக இருக்கும், என்னிடம் பணம் இருக்காது
அப்படித்தான் ஒருநாள் உன்னையும் இழந்து வந்தேன்
//

// கபி கபி பாஸார்மென் யூன்ஹி ஹோஜாத்தா ஹை
கீமத் டீக்தி ஜேப்மேன் இத்னா தாம் நஹீன்தே
ஐசேஹி எக் பார் மைன் தும்கோ ஹார் ஆயாத்தா
//

(2)
// புத்தகத்தின் பல பக்கங்கள் படபடத்தன
கதவைத் தள்ளிவிட்டுக் காற்று அதுவாக உள்நுழைந்தது
அதைப் போல் என்றேனும் நீயும் வந்து போ/
/

// தமாம் சஃப்ஹே கிதாபோன்கே பட்படானே லகே
ஹவா டகல்கே தர்வாஸா ஆகயி கர்மேன்
கபி ஹவாகி தராஹ் தும்பி ஆயா-ஜாயா கரோ
//

குல்ஸாரின் மூன்று திரைப்படங்கள் தமிழில் மறுவுருவாக்கம் செய்யப்பட்டன.

சஞ்சீவ் குமார், ஜெயா பாதுரி பச்சன் நடித்து குல்ஸார் எழுதி இயக்கிய கோஷிஷ் தமிழில் கமல்ஹாசன், சுஜாதா நடித்த ‘உயர்ந்தவர்கள்’. இயக்கம் டி. என். பாலு.

ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கத்தில் குல்ஸார் எழுதிய ‘குட்டி’ (Guddi) திரைப்படத்தில் முதன்மைப் பாத்திரங்களில் தர்மேந்திராவும் ஜெயா பாதுரி பச்சனும் நடித்திருந்தனர். இது தமிழில் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த ‘சினிமாப் பைத்தியம்’. ஜெயசங்கரும், ஜெயசித்ராவும் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

குல்ஸார் எழுதி இயக்கிய இன்னொரு திரைப்படம், ‘மவ்சம்‘. சஞ்சீவ் குமார், ஷர்மிளா டாகூர் நடிப்பில் வெளியான இதில் இடம்பெற்ற // தில் டூண்டுத்தாஹை ஃபிர் வஹி ஃபுர்சத்கே ராத் தின் (இரவும் பகலும் இதயம் அந்தக் கணத்தை மீண்டும் மீண்டும் நினைக்கிறது) // மிகவும் பிரபலமான பாடல். இத்திரைப்படம் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா நடித்த ‘வசந்தத்தில் ஓர் நாள்’ திரைப்படமாக வெளிவந்தது.

குல்ஸார், வசனக் கவிதையின் சுதந்திரத்தைத் திரைப்பாடலுக்குள் கொண்டு வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

தான் எழுதி இயக்கிய ‘இஜாசத்‘ திரைப்படத்திற்கு ஒரு பாடலை எழுதி ஆர்.டி. பர்மனிடம் இசையமைக்கக் கொடுத்தபோது, அவர் அதை நிராகரித்திருக்கிறார். ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளுக்கெல்லாம் என்னால் இசையமைக்க முடியாது’, என மறுத்திருக்கிறார். குல்ஸாரின் தொடர்ந்த வற்புறுத்தலில் பர்மன் இசையமைக்க, // மேரா குச் சாமான் துமாரே பாஸ் படா ஹை (எனது சில பொருள்கள் உன்னிடம் இருக்கின்றன) // பாடல் ஆஷா போன்ஸ்லேயின் குரலில் நிரந்தரப் பிரபலமானது. புதிய வடிவில், கவித்துவம் நிறைந்த இந்தித் திரைப்பாடல் பட்டியலில் இடம்பெறும் பாடல் இது.

‘ஷேர்’ எனப்படும் இரண்டடிகளில் குல்ஸார் நிகழ்த்தும் அற்புதங்கள் அனுபவிக்க வேண்டியவை.

(1)
// நிலைக்கண்ணாடி பார்த்து உறுதிப்படுத்துகிறேன்
இவ்வீட்டில் என்னையறிந்தவர் யாரோ உள்ளார்
//

// ஆயினா தேக்கர் தசல்லி ஹுவி
ஹம்கோ இஸ்கர்மேன் ஜான்தாஹை கோயி
//

(2)
// வாழ்க்கை அப்படியே தனிமையில்
இனக்குழு என்னுடன் பயணம் தனிமையில்
//

// ஸிந்தகி யூன் ஹுவி பஸர் தன்ஹா
கஃபீலா சாத் சஃபர் தன்ஹா
//

(3)
// நிழலைக் கண்டும் நடுங்கி
வாழ்நாள் கழிந்தது தனிமையில்
//

// அப்னே சாயேசே சௌங்க் ஜாத்தாஹை
உம்ர் குஸ்ரிஹை இஸ்கதர் தன்ஹா
//

குல்ஸாரின் வாழ்க்கையும் அவருடைய கவிதைகளைப் போலத் தனிமையும் காதலும் நிறைந்தது. 1973இல் அவருக்கும் அப்போதைய முன்னணி நடிகையருள் ஒருவரான ராக்கிக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் வெளியான திரைப்படங்களில் ராக்கியின் பெயர் ராக்கி குல்ஸார் எனத் திரைப்படங்களில் காட்டப்பட்டது. அடுத்த ஆண்டில் மேக்னா குல்ஸார் பிறக்கிறார். அடுத்தடுத்த ஆண்டுகளில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு உருவானது. இரண்டு பெரும் திரை ஆளுமைகளுக்கு இடையில் நடந்த மனப்போராட்டம். அதன் பின்னர் இருவரும் பிரிந்தனர். மணவிலக்கு இல்லை, வழக்குகள் இல்லை, அவர் வழியில் அவரும் இவர் வழியில் இவரும் திரைத்துறையில் தொடர்ந்தனர். மேக்னா குல்ஸார் இருவரிடமும் வளர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிவுக்குப் பின்னர் வெளியான திரைப்படங்களில் ராக்கியின் பெயரிலிருந்து குல்ஸார் நீங்கியதைத் தவிர வேறெந்தப் பாதிப்பையும் வெளியில் தெரியும் அளவுக்குக் கொடுக்காத சுமுகமான பிரிவு அது.

குல்ஸாருக்கும் மீனா குமாரிக்கும் இடையில் இருந்த நட்பும் கவித்துவமானது. தான் கவிதைகள் எழுதியதை அவற்றை குல்ஸாருடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தை மீனா குமாரி கொண்டிருந்தார்.

யாராலும் நெருங்க முடியாத அளவுக்கு நடிகை மீனா குமாரி புகழின் உச்சத்திலும், தன் கணவர் கமால் அம்ரோஹியின் பார்வையிலும் இருந்த காலகட்டத்தில், படப்பிடிப்பு தொடர்பாக அவரை நேரில் சந்திக்கும் அளவுக்கு அவருக்கும் குல்ஸாருக்கும் நட்பு இருந்தது. மீனா குமாரி கவிஞராகவும் இருந்ததால், கவிதைகளால் உண்டான நட்பு, அவரைத் தன் திரைப்படத்தில் நடிக்க அழைக்கும் வரையில் தொடர்ந்தது. முதன்மைப் பாத்திரத்தில் அவர் நடித்த ‘மேரே அப்னே’ 1971இல் வெற்றிப்படம். அந்தப் பாத்திரத்தை மீனா குமாரிதான் செய்யவேண்டும் என குல்ஸார் வேண்டிக் கேட்டு நடிக்க வைத்திருக்கிறார்.

மீனா குமாரி இறப்பதற்கு முன் தன்னுடைய கவிதைகளை குல்ஸாரிடம் ஒப்படைத்திருக்கிறார். அவருடைய இறப்புக்குப் பின் அக்கவிதைகளைத் தொகுத்து ‘தனிமை நிலவு’ என்னும் பெயரில் குல்ஸார் தொகுப்பாக வெளியிட்டார்.

தன்னுடைய வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களால் பிராந்தியத்தில் பேசப்படும் இந்தி வழக்கில் பாடல் எழுதுகையில் குல்ஸார் பயன்படுத்தும் சொற்கள் முழுவதும் அந்தந்த பிராந்திய வழக்கில் இருக்கும். குறிப்பாக, உத்தரப் பிரதேசக் கதைக்களன் ‘ஓம்காரா‘வில் இடம்பெறும் பீடி ஜலைலே பாடலில் பிராந்திய வழக்கும் மொழியும் கைகோத்து அந்தப் பாடலைக் கதையுடன் ஒன்றவைக்கும்.

களியாட்டப் பாடலிலும் மீர்ஸா காலிபின் மாளிகை இருந்த தில்லியின் பல்லிமாரான் பகுதியை இணைப்பார். பண்ட்டி அவுர் பப்லியின் களியாட்டப் பாடல் ‘கஜுராரே கஜுராரே’யில், வயதான பாத்திரமாக அமிதாப் பச்சன் பாடும் வரிகளில் தில்லியில் உன்னைச் சந்திக்க வேண்டும் என்னும் விண்ணப்பத்தை வைத்து அடுத்த வரியில் பல்லிமாரான் பகுதியில் நடக்கவேண்டும் எனச் சொல்லி காலிபைக் குறிப்பால் ரசிகனுக்கு உணர்த்துவார்.

பல்லிமாரான் தில்லியில் மீர்ஸா காலிப் மாளிகை இருக்கும் இடம்.

இடம் சுட்டிப் பொருள் விளக்கமெல்லாம் இல்லாமல், புரிந்த ரசிகன் மட்டும் புன்னகைக்கும் விதமாக அந்த வரிகள் இருக்கும்.

// பழைய தில்லியில் உன்னைச் சந்திக்கவேண்டும்
அடையாளங்களை விட்டுவந்தேன் தில்லியிலே
பல்லிமாரான் தரீபே வரை
உன் கதை எங்கதை தில்லியிலே
//

// தும்சே மில்னா புரானி தில்லி மேன்
சோடு ஆயே நிஷானி தில்லி மேன்
பல்லிமாரான் தரீபே தலக்
தேரி மேரி கஹானி தில்லி மேன்
//

சாகித்ய அகாடமி, ஞானபீடம், தாதாசாஹிப் பால்கே, பத்மபூஷன் போன்ற உயரிய விருதுகளின் சொந்தக்காரர், தன்னுடைய ‘ஜெய்ஹோ‘ பாடலுக்காக ஏ.ஆர். ரஹ்மானுடன் ஆஸ்காரும் பெற்றார்.

திரைப்படம் அவருக்குப் புகழைக் கொடுத்தது. ஆனால், கவிதைதான் அவருக்கு நிலைத்த இடத்தை அளித்தது. இலக்கியமும் திரையும் இரண்டிலும் ஒரே அளவு மரியாதையைப் பெற்ற மிகச் சில படைப்பாளிகளில் குல்ஸார் ஒருவர். ‘கவிஞர்களின் கவிஞர்‘ என்ற பாராட்டு அவருக்கு மிகப் பொருத்தமானது.

(தொடரும்)

Series Navigation<< உருதுக் கவிதை உலகு – 8: அல்லாமா இக்பால்

Author

Related posts

மர்மமான நூல்

வரலாற்றில் பொருளாதாரம் – 34

மருத்துவர் பக்கம் – 34: செரிப்ரல் மலேரியா அலர்ட்