ஈற்றடிக்கோர் பாட்டு – 13

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கட்டளைக்குப் பாடும் கவி” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.

உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:

ஏடெழுதாப் பாடலதை எப்படித்தான் பாடிடுமோ
கூடிலாப் புள்ளாம் குயிலதும் – தேடிட
கிட்டா தெவிட்டாத கீதமதும் யாருடைய
கட்டளைக்குப் பாடும் கவி

இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும் கவிதைகளும்.

இப்னு ஹம்துன்
ஒளிமொய்க்கும் விட்டிலெல்லாம்; ஓடங்கள் நீரில்
வளிசெலுத்த ஓடும் வகையாய் – துளிர்த்திடும்
மொட்டுக்குத் தூதனுப்பும் வண்டினம் என்னுமிவை
கட்டளைக்குப் பாடும் கவி.

சின்னக்கண்ணன்
பட்டென ஈற்றடியைப் பாய்ந்துதான் சொல்லிவிட
பட்டெனப் பாடல் புனைந்தபின் – சிட்டென
எட்டிப் பறந்துவந்து இங்குதரக் காரணம்நான்
கட்டளைக்குப் பாடும் கவி.

மாலா மாதவன்
சொல்லுக்குச் சொல்லெடுத்துச் சொற்பந்தல் கட்டிவைக்கும்
வல்லவரே பாட்டெடுக்க வாருமிங்கு – சொல்லெடுப்பீர்!
நட்டமில்லை நாவுக்கு நாலடியே நீரெந்தன்
கட்டளைக்குப் பாடும் கவி

ருக்மணி வெங்கட்ராமன்
தெவிட்டாத கீதம் கேட்டது
தென்றலும் தலை அசைத்தது
எங்கே அந்தக் கானக் குயில்
எங்கிருந்தோ ஒலிக்கும் குரல்
காலையில் பயிற்சி செய்திடும்
கற்றது எந்த ஆசானிடம்
மயிலும் ஆடியது மெய்மறந்து
மானும் உவகையில் குதித்தது
கடவுள் தந்த வரத்தினில்
கட்டளைக்குப் பாடும் கவி

கண்மணி பாண்டியன்
பாண்டியனிடம் பரிசு வேண்டி பாடினான் கவி தருமி
காதலியை வெல்ல சபையில் பாடினான் கவி அம்பிகாபதி
புதுமை, விடுதலை உணர்வோடு பாடினான் கவி பாரதி
ஜோடியுடன் எசப்பாட்டு பாடும் குயிலே
கட்டளைக்கு பாடும் கவி

ராமலக்ஷ்மி ராஜன்
எந்தக் கிளை
தன் எடையைத் தாங்குமென்று
கொடி அறிந்திருக்கிறது—
நீண்டு, பின்வாங்கி, வளைந்து தாவி
எப்படியோ கண்டுகொள்கிறது
தான் பற்றிக்கொள்ள வேண்டிய இடத்தை.
பூமியின் இருண்மைக்குள்
விதை வெடித்துத் திறக்கிறது—
முதல் வேரைக் கீழ்நோக்கியும்
தான் ஒருபோதும் கண்டிராத
ஒளியின் திசையில்
பச்சைக்குருத்தை மேல்நோக்கியும்
அனுப்புகிறது.
வியப்பதில்லை விட்டில்பூச்சி
ஏன் ஒரு வெளிச்சம்
மற்றொன்றை விடத் தன்னை
நெருக்கமாக ஈர்க்கிறதென்று—
வட்டமிடுகிறது, பாதையை மாற்றுகிறது
திரும்பி வருகிறது
ஈர்ப்பே ஒரு ஆணை என்பதாக.
யாரும் அறிவிக்காத தாளங்களினூடே
உலகம் இசைத்துக் கொண்டே இருக்கிறது—
சிறகுகள் விரிவதும், மலர்கள் மலர்வதும்
காத்திருக்கும் பூமிக்கு மழை திரும்புவதுமாக.
ஒவ்வொன்றும்—
ஆழ்வுணர்வின்
கட்டளைக்குப் பாடும் கவி.

ஹேமா செந்தில்
குயி்ல் கூவுது
மயில் ஆடுது
கானகத்தில் இசைமழை
வானத்தில் பெருமழை
என்றே வர்ணித்து
எண்ணிலாக் கவிதைகளை
ஏராளம் புனைய வைக்கும்
இட்ட விதிமுறைப்படி
விட்டம் தோக்கி யோசித்தே
கிட்டும் பரிசை எண்ணியே
ஆட்டநாயகன் அரசனின்
கட்டளைக்குப் பாடும் கவி

ப்ரசாத் ஜெயவேலு
என்னென்றறியேன் ஏதென்றறியேன்
பொன்னென்றறியேன் எந்
நாட்டவர்க்கும் இறைவன் அவன்றன்
கட்டளைக்குப் பாடும் கவி

உஷா கண்ணன்
வறுமையில் உழன்று
வாடையில் குளிர்ந்து
வட்டில் சோறு பொங்க – தன்
மானம் புறந்தள்ளி வயிற்றிற்காக மன்னனின்
கட்டளைக்கு பாடும் கவி

பவளமணி பிரகாசம்
நீளமாய் கூவி நித்திரை கலைக்கும்
நாடகம் இது தினமும் நடக்கும்
வாரமொரு ஈற்றடி கண்டு ஆனேன்
கட்டளைக்குப் பாடும் கவி.

சுந்தர் லக்ஷ்மணன்
மனிதரின் பேசுமொழி தின்று செரித்துத்
திசையன் வெளிதனில் வைக்கும் பயிலிமா
கட்டளைக்குப் பாடும் கவி.

வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.

Author

Related posts

விசுவநாதபுரி – 11

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 12: மதியூக மந்திரி

நீல நிலவு