எண்ட் டோஹ் த்ரெ – 4

This entry is part 3 of 3 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

வணக்கம் ஆராவமுதன் பேசுகிறேன்..

கண்ணோட்டம் காட்டிவிட்டால் காதலனின் பாடெல்லாம் திண்டாட்டம் திண்டாட்டம்தான்

என ஆன்றோர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

குணமெல்லாம் மாறியதே காரிகையின் கண்ணால் உணர்வுகள் ஊடியே பொங்க – நனவான எண்ணங்கள் எல்லாமும் ஏட்டினிலே வாராது பொன்னால் வடித்ததுதான் போம்..

இதுவும் ஓர் ஆன்றோர் எழுதியதுதான்..

ம் சொல்ல மறந்துவிட்டேன். எனக்கும் அனந்துக்கும் தமிழ் மரபுக் கவிதைகளில் நாட்டமுண்டு.. கொஞ்சம்கொஞ்சம் எழுதி விளையாடுவோம்..

புள்ளையாண்டான் அனந்த் என்கிட்ட எதுவும் சொல்லலை.. ஜஸ்ட் ஒரே ஒரு வாட்ஸ்அப் மெசேஜ்:

”ஸ்டேய்ட் வித் ஆஷா ஃபார் குவெய்ட் சம்டைம்.. ஆஷாவுடன் சில மணித்துளிகள் தங்கினேன்..” ஆமாம், சமயத்தில் மேஜர் சுந்தர்ராஜனாக மாறலாம், தப்பில்லைதான்..

”என்னடா விஷயம்?”

”ஒன்றுமில்லை.. ”

இந்த வயது ஆண்களும் சரி பெண்களும் சரி, ஒன்றுமில்லை எனச் சொன்னால் விஷயம் உண்டு என அர்த்தம்.

எனக்கு இதயத்தில் நமநம என்று செய்ய, ”அனந்த் கண்ணா, கொஞ்சம் வீடியோ காலுக்கு வா.”

”சித், நான் இருப்பது ஆபீஸ்.”

”பரவாயில்லை, ஒரே நிமிடம் வா.”

வெளியில் மொட்டை மாடிக்குச் சென்று வீடியோ கனெக்ட் அவன் செய்ய, பையன் முகத்தைத் தெளிவாக வீடியோவில் பார்த்தேன்.

”ம்.. கொஞ்சம் மாறுதல் தெரிகிறதுதான்” என மனதில் நினைத்துக்கொண்டேன்.

”ஆஷா வந்திருக்காளா ஆபீஸ்ல?”

”இல்லை சித், காலையில் மஸ்கட் வந்து நான் ஆபீஸ் வந்தாச்சு.”

சரி எனப் போனை வைத்தேன்.. ம்.. அவன் முக மாறுதல் எனக்குத் தெரியாதா என்ன..

ஆண்டவா நாராயணா, அனந்தைக் காப்பாற்று.. நான் என்ன செய்யப் போகிறேன் இதில்?

ஒரு மணி நேரம் கழித்து அவனிடமிருந்து மெசேஜ். ஆஷா வரவில்லையாம்.. ஈமெயில் வந்ததாம் அவளிடமிருந்து ‘நாட் வெல்’ என்று.. அப்புறம் இன்னொரு ஈமெயில்:

லீவில் வெகேஷன் ஒரு த்ரீ வீக்ஸ் செல்வதாக..”ஹேண்டில் த ஆபீஸ் வித் சாரின் கைடன்ஸ்.. அவருக்கும் மெயில் அனுப்பி இருக்கிறேன்….மிஸ் யூ…”

இந்த ‘மிஸ் யூ’ தான் எனக்கு ரொம்பவே இடித்தது.. மத்தளம் கொட்ட வரிச்சங்கம் நின்றூத முத்துத்தாமம் பந்தற்கீழ் ஆஷா அனந்த் கையைப் பிடிக்கப் போகிறாளா என்ன.. அதற்குத்தான் சுட்டியா? விடுமுறையா?

கருந்தட்டாங்குடி வெயில் மதுரைக்குச் சற்றும் குறைந்ததல்ல.. அதுவும் காய்ந்தது என் தலையைப் போல..

அப்புறம் கழிந்தன மூன்று வாரங்கள்…

‘நார்மல், நார்மல்’ என வாட்ஸ்அப் மெசேஜஸ்.. நோ நியூஸ் ஃபிரம் ஆஷா..

நான்காவது வாரம் ஆஷா வந்துவிட்டாள் ஆபீஸிற்கு. அனந்திற்கு ஒரு டோஸ் அதிர்ச்சியை வழங்கினாளாம்..

அது…

வாருங்கள், அனந்தின் இடத்திற்குப் போகலாம்..

நாட்கள் நகர்வது சற்றே மெதுவாக எனப் பட்டது அனந்திற்கு.. சித்தப்பா கேட்டால் ‘ஜுனூன் தமிழ்’ என்பார்..

ஆசாமி ரொம்ப கெட்டி.. சே! அப்படி வாட்ஸ்அப்பில் சொல்லியிருக்கக்கூடாது.. என்ன நளினமானவள் ஆஷா.. என்ன அழகானவள், என்ன இனிமையானவள், என்ன சுகந்தமானவள்… அனந்த், உனக்கும் கவிதையாய் யோசிக்கத் தெரிகிறதே!

ஆனால் வேலை வேலை… வியாபார அவுட்லெட்களில் சேல்ஸ் மேனேஜர்களின் கேள்விகள், பர்ச்சேஸிற்கு அறிவுரைகள்.. என நாள் ஓடித்தான் போனது.

ஆஷா வந்தாள் ஒரு ஞாயிற்றுக்கிழமை.. ஞா.கி தான் மஸ்கட்டில் வேலை ஆரம்ப நாள்..

வந்தது முதல் அனந்தின் முகத்தை நேர்ப்பார்வையாய்ப் பார்க்கத் தயங்கினாள்..

பின் அலுவலுக்காக அழைத்தாள் அவள் அறைக்கு.

”யெஸ் மேடம்”

”யா அனந்த்.. பாயிண்ட் நம்பர் ஒன்.. இந்த ஆர்டர்ஸ் எல்லாம் அவசியமா எனச் செக் செய்தீர்களா என்ன?”

”எஸ்…”

”என்ன எஸ்? இந்த ஐட்டங்கள் ஏற்கனவே ஒன்றரை வருடம் தேங்கியிருக்கிறதே, கொஞ்சமாவது யோசனை செய்தீர்களா.. அறிவைக் கொஞ்சம் உபயோகப்படுத்த வேண்டும் அனந்த்!”

”அடி பெண்ணே… வார்த்தையை அளந்து பேசக்கூடாதா.. இப்படியா?” என மனதில் நினைத்தான் அனந்த்..

”ம்.. பரவாயில்லை.. பாயிண்ட் டூ.. கொஞ்சம் சேல்ஸ் இம்ப்ரூவ்தான் ஆகியிருக்கிறது.. பேமெண்ட்ஸ் வரவில்லைபோல, ஐ வில் டாக் டு சாரி.. ஒன் மினிட்..”

செல் சிணுங்க, எடுத்து அவள் சிணுங்கினாள்.

”யெஸ்.. என்ன, ரிசப்ஷனில் இருக்கிறீர்களா?.. கிவ் இட் டு ஆயுஷி. ஆயுஷி, அவரை இங்கு அழைத்து வா..”

சில நிமிடங்களில் கதவு திறக்க, ஆஷா எழுந்தாள். நின்றது.. செவேலென்ற வாலிபன்..

”ஹாய் ஜோன்ஸ்..”

மெலிதாக அணைத்து அவன் கன்னத்தை அவள் உரச, அனந்த் கண்ணில் கொஞ்சம் இயல்பு மாறியது..

”அனந்த், திஸ் இஸ் ஜோன்ஸ்… ஃபிரம் கோபன்ஹேகன்.. என் ஃபியான்ஸே.. வீ காட் எங்கேஜ்ட் லாஸ்ட் வீக்…”

அனந்த் கண்களின் நேர்ப்பார்வையை ஏனோ தவிர்த்தாள்… இதுதான் பாயிண்ட் த்ரீயாடி…?…

பின் மெல்லச் சொன்னாள்.. ”அனந்த், ஐ வில் கால் யூ. யூ கேன் கோ நவ்..”

அனந்த் வெளியேறினான்.. *

சித்தப்பாவின் மெசேஜ் படித்தான்..

”போனாப் போகுதுடா போடா. அவங்கள்லாம் அப்படித்தான். எல்லா விஷயமுமே அவங்களுக்கு ஈஸிதான்.. டிஷ்யூவைத் தூரப் போடுற மாதிரி தூக்கிப் போட்டுடுவாங்க. அவளுக்கு என்ன பிரச்சினையோ என்னமோ.. விடு.. இதுவும் கடந்து போகும்….”

”சித், பட் ஐ லவ்ட் ஹெர்…”

”அச்சச்சோ கண்ணா, இது எனக்கு நியூஸ், சொல்லவே இல்லையே…”

”இப்பதான் சொல்றேனே.”

”உன்னோட டிராயரைத் திற!”

”சித்தப்பா!”

”டேபிள் பா, அறிவுகெட்டவனே.”

”சரி, திறந்து?”

”பென்சில்தானே யூஸ் பண்றே.. அதுக்குக் கீழ தக்குணூண்டு ரப்பர் இருக்குமோன்னோ, அதை எடுத்து..”

”அதை எடுத்து?”

”உன்னோட ஆஷா காதலை அழிச்சிடு.. சரிப்படாது.. ஆமா, ஆயுஷி என்னாச்சு…?”

”ஏதோ பேசணும்னா பேசிட்டு உங்ககிட்ட சொல்றேன் சித்தூ..”

கஷ்டம்தான்.. முதல் காதல் தோல்வி வலிதான்..

இருவரிடமும் துளிர்ப்பதுதான் காதல்.. அவளிடம் அப்படி இல்லை.. என்ன செய்ய?

மனமே ஆஷாவை மற… இப்போது ஆயுஷி!

ஆயுஷி: ”வா அனந்த்.. மூணு வாரமா சரியாவே பேசல என்கிட்ட..”

”ஒன்றுமில்லை.. அப்பாவுக்குக் கொஞ்சம் உடம்பு முடியலை.” (அப்பா, என்னை மன்னிச்சூ!)

ஓ.. பதறினாள். ”என்ன ஆச்சு?”

”நோ பிராப்ளம் நவ் ஆயுஷி.. சொல்.”

”வா, மொட்டை மாடிக்குப் போகலாம்.”

”நீயுமாடி?” என மனதில் நினைத்துச் சென்றான்..

”அனந்த்.. ஈவினிங் எட்டு மணிக்கு என்னை பிக்கப் பண்ணிக்கறியா?”

”எங்க போக?”

”மார்ல்பரோ கிரவுண்ட்ஸ்.. நவராத்திரி டைமோன்னோ, டாண்டியா அமர்க்களப்படும்…. கர்பா டான்ஸ்.. வா போகலாம்….”

”எனக்கு..”

”உதைப்பேன் சாக்குச் சொன்னா…”

போய்விட்டாள்..

அவள் சொன்ன எட்டு மணியில், அல்குவேர் என்ற இடத்தில் இருந்த அவள் வீட்டில் இருந்து பிக்கப் செய்து மார்ல்பரோ போனால் ஒரே கூட்டம்..

ஜகஜக என குஜராத்தி ஆடவர் ஆடவியர் டிரஸ்களில் மின்ன, இவர்கள் சென்றபோது நடனம் ஆரம்பித்திருந்தது.

‘ஓ துர்க்கா.. ஓஓஓ’ என மேடையில் ஒரு குஜராத்தி ஆண் பாடிக்கொண்டிருக்க, ஸ்ருதி பிசகாமல் ஆண், பெண், குழந்தைகள் என வயது வித்தியாசமில்லாமல் அந்தப் பளீர் மஞ்சள் விளக்கொளிகளில் மைதானத்தில் ஆடிக்கொண்டிருக்க, எங்கும் ஒரே உற்சாகம்தான்!

”அனந்த்..”

ஆயுஷியைப் பார்த்தான்.. ரத்தச் சிகப்புச் சுடிதார்.. அதில் வெள்ளைப் பூக்கள்.. நெற்றியில் நெளிப் பொட்டு.. காதுகளில் கொய்ங்க் கொய்ங்க் என ஆடிய கம்மல்கள், உதடுகளில் மெல்லிய செம்பஞ்சுக்குழம்பின் லேட்டஸ்டான லிப்ஸ்டிக் அண்ட் சற்றே ஈரப்பதம்… அண்ட் புன்முறுவலில் அவை குழைந்திருந்தன..

”ஆயுஷி..”

”நன்னா இருக்கில்ல?”

யெஸ்.. உண்மைதான்… ஆஷாவின் பிஹேவியர் தந்த வலிக்கு உடனே நிவாரணி.. இந்தப் பாட்ஸ், மனதுள் நினைத்தான்.

”ஆம் ஆயுஷி..”

”அப்போ..”

”அப்போ?”

”நாம ஆடலாமா இப்போ?”… ஆர்வத்துடன் கேட்டுக் கை பிடித்தாள் ஆயுஷி.. கண்களில் எக்கச்சக்க மின்னல்!

(தொடரும்)

Series Navigation<< எண்ட் டோஹ் த்ரெ – 3

Author

Related posts

திருவை மு.இரா. கவிதைகள் – 7

வரலாற்றில் பொருளாதாரம் – 33

இந்த விஷயங்கள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி