பீஷ்மர் கர்ணனைக் குறைத்து மதிப்பிட்டாரா?
சிவாஜி கணேசனின் ‘கர்ணன்’ திரைப்படத்தில் ஒரு உணர்ச்சிகரமான காட்சி வரும்.
பத்தாவது நாள் போரின் முடிவில் களத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீழ்ந்திருக்கிறார். அப்போது அங்கு ஓடி வரும் கர்ணன், “ஐயகோ, வீர மாமலை சாய்ந்ததா? வீரத்தின் விளைநிலம் தரிசாகிப் போனதா? பகை குணத்தால் உம்மோடு துணை நில்லாமல், பகைவர் கை உயர நம்முள் புரையோடச் செய்துவிட்டேனே! என்னை மன்னித்துவிடுங்கள்” எனப் பீஷ்மரிடம் கேட்பான்.
அதற்குப் பீஷ்மரும் பெருந்தன்மையாக, “கர்ணா, விதி வலியது. சென்றதை மற. வீரனே, உன்னை நான் ஒதுக்கியதன் உள்நோக்கம் நீ அறியாய். மகாரதி கர்ணன் என்ற மதிப்புக்கு உரியவன் நீ. உன்னை வெல்ல வல்லவன் யாரும் இல்லை. எத்தனை பேர் இறப்பினும் எனக்குக் கவலை இல்லை. ஒரு சூதும் அறியாத இந்தத் துரியோதனனைக் கடைசி வரை உடனிருந்து காத்துத் தர வேண்டும் என்ற காரணத்திற்காகவே உன்னைத் தனியாக ஒதுக்கி வைத்தேன். வீரனல்லவா நான்? வீரத்தை வீரம் அவமதிக்குமா கர்ணா?” என்று நெடிய வசனம் பேசுவார்.
கேட்பதற்குச் சிலிர்ப்பாக இருந்தாலும், இந்த வசனமும் காட்சியும் பீஷ்மரின் உண்மையான ஆளுமையை அவமதிக்கும் செயலாகும். அதுவும் ஒரு சூதும் அறியாத துரியோதனன் எனப் பீஷ்மர் எப்படிச் சொல்லியிருக்க முடியும்? மேலும் பீஷ்மர் பல நேரங்களில் கர்ணனின் வீரத்தை அவன் எதிரிலேயே உரிய காரணத்தோடு மறுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, அடிப்படையில் அவர் கர்ணனை வெறுக்கவும் செய்தார்.
உத்யோக பருவத்தில் கர்ணனை ‘அர்த்தரதன்‘ எனப் பீஷ்மர் வகைப்படுத்துவதற்கு முன்பாகவே, பல இடங்களில் கர்ணனின் தற்பெருமைப் பேச்சுகளையும், அவனது உண்மையான திறமையின்மையையும் சுட்டிக்காட்டிக் கடுமையாக பீஷ்மர் அவமதித்துள்ளார். இந்த அவமதிப்புகள் அனைத்தும் காரணமில்லாமல் செய்யப்பட்டவை அல்ல; மாறாக, கர்ணனின் வீண் ஜம்பத்தையும், அதனால் துரியோதனனுக்கு ஏற்படும் கண்மூடித்தனமான நம்பிக்கையையும் அடக்கவே பீஷ்மரால் செய்யப்பட்டன.
முதல் முக்கிய நிகழ்வாக வனபருவத்தில் வரும் கோஷ யாத்திரையைக் (கந்தர்வர்களுடனான போர்) குறிப்பிடலாம். த்வைதவனத்தில் சித்திரசேனன் என்ற கந்தர்வனிடம் துரியோதனன் சிக்கிக்கொண்டபோது, போர்க்களத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் கர்ணன் புறமுதுகிட்டு ஓடினான். பின்னர் பாண்டவர்கள் வந்து துரியோதனனை மீட்டனர். ஆனால், அஸ்தினாபுரத்திற்குத் திரும்பிய பின்பு, கர்ணன் சபையில் எழுந்து, அர்ஜுனனுக்குக் கிடைத்த வாய்ப்பு தனக்குக் கிடைத்திருந்தால் கந்தர்வர்களை வேரோடு அழித்திருப்பேன் என்று ஆணவத்துடன் பேசினான்.
அப்போது இடைமறித்த பீஷ்மர், போர்க்களத்தில் இருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தப்பி ஓடிவிட்டு இப்போது வீரவசனம் பேசுகிறாயே என்று கர்ணனைச் சபையில் கடுமையாக அவமதித்தார். பாண்டவர்கள் செய்த உதவியை மறந்துவிட்டுப் பேசும் உன் வீரம் வெறும் வெற்றுப் பேச்சு என்று அவர் கர்ணனை இடித்துரைத்தார்.
அடுத்ததாக, விராடப் போரில் (நிரை மீட்டல் அல்லது கோக்ரஹணம்) நடந்த நிகழ்வு மிக முக்கியமானது. அஞ்ஞாத வாசம் முடிந்து பாண்டவர்கள் வெளிப்படும் தருவாயில், தனி ஒருவனாக வந்த அர்ஜுனனை எதிர்கொள்ளும் முன்பு கௌரவப் படையில் கர்ணன் பெரும் சூளுரைத்தான். அர்ஜுனனைத் தான் ஒருவனே கொல்வேன் என்று அவன் மார்தட்டியபோது, கிருபரும் அஸ்வத்தாமனும் அவனது தற்பெருமையைக் கடுமையாகக் கண்டித்தனர்.
அப்போது பீஷ்மரும் அவர்களுடன் இணைந்து, கர்ணனின் பேச்சு வெற்றுப் பேச்சு என்றும், அர்ஜுனனின் காண்டீபத்திற்கு முன்னால் கர்ணன் நிற்க முடியாது என்றும் கூறி அவமானப்படுத்தினார். அதைத் தோற்றோடி கர்ணன் உறுதிப்படுத்தினான். அந்தப் போரில் கர்ணன் அர்ஜுனனிடம் பலமுறை தோற்று, தன் தம்பியையும் பறிகொடுத்து ஓடியதை பீஷ்மர் பின்னர் பலமுறை சபையில் அவனுக்கு நினைவூட்டி அவமதித்துள்ளார்.
இது தவிர, போர் தொடங்குவதற்கு முன்பாக அஸ்தினாபுரத்தில் நடைபெற்ற பல சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதும் பீஷ்மர் கர்ணனைத் தொடர்ந்து அவமதித்துள்ளார். எப்போதெல்லாம் கர்ணன் துரியோதனனுக்குப் போதை ஏற்றுவது போல் “என் ஒருவனின் வில்லே பாண்டவர்கள் ஐவரையும் கொல்லப் போதுமானது” என்று வீரம் பேசினானோ, அப்போதெல்லாம் பீஷ்மர் அவனது முந்தைய தோல்விகளைச் சுட்டிக்காட்டினார். துரியோதனன் பாண்டவர்களை எதிர்க்கும் அதீத துணிவைப் பெற்றதே உன் ஒருவனின் வெற்று வார்த்தைகளை நம்பித்தான் என்றும், செயலில் காட்ட முடியாதவன் நீ என்றும் பீஷ்மர் கர்ணனைக் கடுமையாக விமர்சித்தார்.
இது உண்மையே, துரியோதனன் கர்ணன் ஒருவனை நம்பியே பாண்டவர்களை எதிர்க்கத் துணிந்தான். பீமனை வெல்லும் ஆற்றல் தனக்குண்டு என்று துரியோதனன் நம்பினாலும் அவனிடம் அர்ஜுனனை வெல்லும் திறன் இல்லை; ஆகவே, அர்ஜுனனுக்கு மாற்றாகக் கர்ணன் ஒருவனே எனத் தீவிரமாக நம்பினான் அரவக்கொடியோன்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், பீஷ்மர் கர்ணனை அர்த்தரதன் என்று முத்திரைக்குத்துவதற்கு முன்பே, கோஷ யாத்திரை தோல்வி, விராடப் போரில் அர்ஜுனனிடம் அடைந்த படுதோல்வி மற்றும் சபையில் அவன் அடித்த வீண் ஜம்பங்கள் ஆகிய அனைத்தையும் ஆதாரமாகக் கொண்டு, பலமுறை அனைவர் முன்னிலையிலும் அவனது வீரத்தைக் குறைத்து மதிப்பிட்டு அவமதித்துள்ளார். இவை அனைத்தும் வெறும் காழ்ப்புணர்ச்சியால் அல்லாமல், களத்தில் நடந்த நிஜமான நிகழ்வுகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன.
வீரம் குறித்த விமர்சனங்கள் ஒருபுறமிருக்க, பெரியவர்கள், மூத்தவர்கள் என்ற எந்த மரியாதையும் இன்றி கிருபர், துரோணர், பீஷ்மர் என அனைவரையும் கர்ணன் பல இடங்களில் அவமதித்திருக்கிறான். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், குரு வம்சத்தின் குலமகளைச் சான்றோர்கள் நிறைந்த அரசவையில் துகிலுரிக்கச் சொன்னவனை, அறத்தின் வடிவான பீஷ்மரால் எப்படி ஏற்க இயலும்?
இருந்தும் இத்தனை வெறுப்புகள் இருந்தாலும், பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீழ்ந்திருந்த போது தன்னைச் சந்திக்க வந்த கர்ணனை அனுமதித்தார். பீஷ்ம பர்வத்தில் (பகுதி 124) இந்தச் சந்திப்பு மிகத் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.
கண்களில் நீர் திரையிட, தன் இமைகளை மெதுவாகத் திறந்த கங்கையின் மைந்தன், காவலர்களை விலகச் செய்துவிட்டு, இடம் தனிமையாக இருப்பதை உறுதி செய்துகொண்டார். ஒரு தந்தை தன் மகனை அரவணைப்பதைப் போலக் கர்ணனைத் தன் ஒரு கையால் தழுவிக்கொண்டு மிகுந்த வாஞ்சையுடன் பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்:
“வா, வா! என்னோடு எப்போதும் உன்னை ஒப்பிட்டுச் சவால் விடும் என் எதிரியே! நீ என்னிடம் வராமல் இருந்திருந்தால், அது உனக்கு நல்லதாக முடிந்திருக்காது. நீ ராதையின் மகனல்ல, குந்தியின் மகன்! அதிரதனும் உன் தந்தை அல்ல! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன்னைப் பற்றிய அனைத்தையும் நான் நாரதரிடமிருந்தும், வியாசரிடமிருந்தும் கேட்டறிந்தேன். இதில் எவ்வித ஐயமுமில்லை, இவை அனைத்தும் உண்மையே! என் மகனே, நான் உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன். நான் உன் மீது எவ்விதக் காழ்ப்புணர்ச்சியும் கொண்டிருக்கவில்லை. உனது செருக்கைக் குறைப்பதற்காகவே நான் உன்னிடம் அப்படிக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினேன்.”
இந்த ஆறுதல் வார்த்தைகளை உபசாரமாகவோ, குந்தியின் மைந்தன் தீயவர்களோடு சேர்ந்துகொண்டு இப்படிச் செய்கிறானே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவோ நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இதற்கடுத்து பீஷ்மர் பேசுவதில்தான் அசல் உண்மை அடங்கியிருக்கிறது. இறக்கும் தருவாயில் கூடக் கர்ணனின் குணத்தை அவன் முகத்திற்கு நேராகவே பீஷ்மர் தோலுரிக்கிறார்.
“சிறந்த விரதங்களைக் கொண்டவனே, நீ எவ்விதக் காரணமுமின்றிப் பாண்டவர்களை இழிவாகப் பேசுகிறாய்! நீ பாவத்தின் காரணமாக இந்த உலகத்தில் தோன்றி இருக்கிறாய். அதனால்தான் உன் இதயம் அப்படி இருக்கிறது. அகங்காரத்தாலும், தீயவர்களின் தோழமையாலும் நீ தகுதி வாய்ந்த மனிதர்களைக் கூட வெறுக்கிறாய்! இதற்காகவே நான் குருக்களின் பாசறையில் உன்னைக் கடுமையான வார்த்தைகளால் பேசினேன். பூமியில் எதிரிகளால் தாங்க முடியாத உனது பேராற்றலை நான் அறிவேன். வில்லாற்றலிலும், ஆயுதங்களைப் பிரயோகிப்பதிலும் நீ அர்ஜுனனுக்கோ அல்லது கிருஷ்ணனுக்கோ இணையானவன். ஜராசந்தனையே போரில் வென்றவன் நீ. உன் மீதிருந்த கோபம் தணிந்துவிட்டது. நீ எனக்கு விருப்பமானதைச் செய்ய நினைத்தால், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உனது சகோதரர்களான பாண்டவர்களுடன் இணைந்து கொள். என்னோடு இந்தப் பகை முடிவுக்கு வரட்டும். பூமியில் உள்ள மன்னர்கள் இன்று முதல் ஆபத்திலிருந்து விடுபடட்டும்!”
பீஷ்மர் அவனின் நிலையற்ற தன்மையை எடுத்துக் கூறியது மட்டுமன்றி, அவனது தீய நட்பையும், பாவச் செயல்களையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இந்த இடத்தில் கர்ணனின் பதிலையும் நாம் பார்க்க வேண்டும். அங்கே கொஞ்சம் நட்புணர்ச்சியோடு கர்ணன் பேசினான் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
கர்ணன் பீஷ்மரிடம், “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, இவை யாவையும் நான் அறிவேன். நீர் சொல்வதில் ஐயமில்லை. நான் குந்தியின் மகனே, சூதரின் மகனல்ல. எனினும், நான் குந்தியால் கைவிடப்பட்டு, சூதர் ஒருவரால் வளர்க்கப்பட்டேன். இவ்வளவு நெடுங்காலமாகத் துரியோதனனின் செல்வத்தை அனுபவித்த நான், அவனுக்குச் செய்த சத்தியத்தைப் பொய்யாக்கத் துணியேன். துரியோதனனுக்காக என் உடைமைகள், என் உடல், என் பிள்ளைகள், மனைவி ஆகியோரையும் கைவிட நான் தயாராக உள்ளேன். வாசுதேவன் எப்படிப் பாண்டவர்களுக்காக உறுதியாக இருக்கிறானோ, அப்படியே நானும் இருப்பேன். நோயால் மரணம் அடைவது க்ஷத்திரியருக்கு உரியதல்ல. நான் துரியோதனனைச் சார்ந்தே எப்போதும் பாண்டவர்களை அவமதித்து வந்தேன். இக்காரியங்கள் விதியின் வழியில் செல்ல விதிக்கப்பட்டிருக்கின்றன. அர்ஜுனனும் கிருஷ்ணனும் பிறரால் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதை நான் நன்கறிவேன். ஆனாலும் நான் அர்ஜுனனை வீழ்த்துவேன். இதுவே என் உறுதியான தீர்மானம். இந்தக் கடும் பகையைக் கைவிட என்னால் இயலாது. எனக்கு உமது அனுமதியைக் கொடுப்பீராக. எப்போதாவது நான் சிந்தனையற்ற தன்மையினாலோ, கோபத்தாலோ உமக்கு எதிராகக் கடுஞ்சொற்களைப் பேசியிருந்தால் என்னை மன்னிப்பதே உமக்குத் தகும்,” என்றான்.
இதைக் கேட்டதும் பீஷ்மர் அவனைப் போரிட அனுமதித்து, இறுதி அறிவுரையையும் கூறுகிறார்.
“நேர்மையான போரைத் தவிர வேறெதிலும் க்ஷத்திரியன் ஒருவனுக்குப் பெருமகிழ்ச்சி இல்லை என்பதால், செருக்கிலிருந்து விடுபட்டு, உன் பலம் மற்றும் சக்தியை நம்பிப் போரில் ஈடுபடுவாயாக. அமைதியை ஏற்படுத்த நான் நீண்ட காலம் பெருமுயற்சிகளைச் செய்தேன். ஆனால் கர்ணா, நான் அந்தப் பணியில் வெல்லவில்லை. இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்,” என்றார் பீஷ்மர்.
இதில் பீஷ்மர் குறிப்பிட்டு வலியுறுத்திய நேர்மையைக் கர்ணன் அபிமன்யுவுக்கு எதிரான போரில் காற்றில் பறக்கவிட்டதை யாரால் மறுக்க முடியும்? ஒரு வீரன், அதாவது மகாரதி செய்யும் செயலா அது? அர்த்தரதன் கூட இதைச் செய்ய ஆயிரம் முறை யோசிப்பான்.
பீஷ்மர் ஆரம்பத்திலிருந்தே கர்ணனை முழுமையாக அறிந்தவராகவும், அவனின் உண்மையான ஆற்றலையும் அதே சமயம் அவனது அகந்தையையும் எடைபோட்டவராகவுமே இருந்தார். அவனின் தீய குணங்களை அறிந்ததாலேயே அவனை வெறுக்கவும் செய்தார். இதிகாசம் காட்டும் உண்மை இதுவாக இருக்க, துரியோதனனுக்காகக் கர்ணனைப் பீஷ்மர் பத்திரப்படுத்தி வைத்தார் என்று சொல்லப்படுவதெல்லாம் அப்பட்டமான, கலப்படமில்லாத பொய்!
(தொடரும்)