மருத்துவர் பக்கம் – 45: இந்தியப் பெண்களும் இதய நோயும்.

இந்தியாவில் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் பெண்களிடையே இதய நோய் அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வறிக்கைகள் சான்று பகர்கின்றன.

இனியும் இதய நோயை “ஆண்களுக்கான பிரத்யேக நோய்” என்றும், பெண்களை அவர்களது பெண்மைக்கான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் இனப்பெருக்க காலம் முடியும் வரை இதய நோயிலிருந்து காக்கும் என்று நம்புவதெல்லாம் நம்மை அலட்சியப் பாதையில் தான் வழிநடத்தும் என்று புரிகிறது.

கடந்த பத்தாண்டுகளில் இந்திய ஆண்களை விட இந்திய இளம் பெண்களிடத்தில் இதய நோயின் தாக்கம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதை நாம் எளிதில் கடந்து செல்லலாகாது.

இதய நோயை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:

முதல் வகை:

இதயத்துக்கு ரத்த ஓட்டமளிக்கும் தமனிகள் அடைத்துக் கொண்டு அதனால் இதய ரத்த நாள அடைப்பு ஏற்படும். இதை ‘ஹார்ட் அட்டாக்’ என்கிறோம்.

இரண்டாவது வகை:

இதயத்தின் துடிக்கும் தசைகள் வலுவிழந்து, அதனால் துடிக்கும் திறன் குறைந்து குறைந்து இதயம் செயலிழந்து போகும். இதை ‘ஹார்ட் ஃபெயிலியர்’ என்கிறோம்.

மூன்றாவது வகை:

இதயத்தின் மின் இணைப்பு மற்றும் மின் கடத்தலில் ஏற்படும் பிறழ்வு நிலைகளினால் இதயத்தின் துடிக்கும் வேகம் கூடியோ குறைந்தோ வெளிப்படுவது; இதனால் ஏற்படுவது ‘கார்டியாக் அரெஸ்ட்’ ஆகும்.

இம்மூன்று வகையிலும் இதயம் சார்ந்த மரணங்கள் ஏற்படலாம் என்றாலும், இதயம் சார்ந்த மரணங்களில் பெரும்பான்மையாக நிகழும், நமக்குத் தெரிந்த ‘ஹார்ட் அட்டாக்’ என்பதைத் தான் பொதுவாக நாம் கூறிவருகிறோம்.

இதில் பெண்களிடையே:

  • விழிப்புணர்வின்மை என்பதா?
  • தங்கள் உடல் நலனில் அக்கறையின்மை என்பதா?
  • அல்லது குடும்பத்தின் மீது அதீத அக்கறை என்பதா?

எப்படிக் கூறினாலும், தங்களுக்கு வரும் பிரச்சனைகளை, ஏற்படும் அறிகுறிகளைப் புறக்கணிப்பவர்களாகவும் அசட்டை செய்பவர்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள்.

பெண்களைப் பொறுத்தவரை, ஆண்களுக்கு இதய ரத்த நாள அடைப்பு ஏற்படும் போது வரும் அறிகுறிகளான:

  • நெஞ்சு வலி
  • இடப்பக்க மார்பு மற்றும் கைக்கு வலி பரவுதல் (இதனுடன் தாடை, கழுத்து, வயிற்றுப் பகுதிகளுக்கும் வலி பரவலாம்)

இவையன்றி சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய அறிகுறிகளான:

  • அதுவரை இல்லாத உடல் சோர்வு
  • லேசான தலைசுற்றல்
  • குமட்டல்
  • நெஞ்செரிச்சல்
  • வயிற்று வலி
  • மூச்சு விடுவதில் சிரமம்

போன்ற அறிகுறிகளாகவும் இதய ரத்த நாள அடைப்பு / இதய நோய் வெளிப்படலாம்.

இதய நோயை வரவழைக்கும் காரணிகளாகப் பார்க்கப்படுவது:

  • உயர் ரத்த அழுத்தம்
  • கட்டுக்கடங்காத நீரிழிவு
  • அதீத உடல் பருமன்
  • குடும்பத்தில் ஏற்கனவே இதய நோய் மற்றும் அது சார்ந்த மரணங்கள்
  • உடல் உழைப்பின்மை
  • புகை / மது

இதில் கணவர் புகை பிடிக்கும் போது அதை சுவாசித்தாலும் அதுவும் புகை பிடிப்பதில் அடங்கும். இதை ‘இரண்டாம் நிலை புகை இழுத்தல்’ (Passive Smoking) என்று கூறுகிறோம்.

தற்காலத்தில் 35 முதல் 54 வயதுடைய பெண்களுக்கு இதய நோய் அதிகம் ஏற்படத் தொடங்கியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்திய பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் சராசரி அகவை 59 ஆக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது வளர்ந்த நாடுகளில் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அகவையை விடக் குறைவு.

இந்தியாவில் நிகழும் மகளிர் மரணங்களில் 18% இதய நோயால் வருபவை.

இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு ஏற்படும் விகிதம் 17% ஆகும்; இது அமெரிக்காவை (6-9%) விட இரு மடங்கு அதிகம்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்தக் கொதிப்பு நோயில் இந்தியா 10-11% Vs அமெரிக்கா 5-6%.

கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியப் பெண்களிடையே இதய ரத்த நாள அடைப்பு ஏற்படும் விகிதம் 300% உயர்ந்துள்ளது.

மாதவிடாய் நிற்பதற்குப் பின் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இந்த நிலையை எவ்வாறு தடுப்பது?

பெண்களிடையே மட்டுமின்றி ஆண்களிடையேயும் இது குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்.

ஆண்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவத்தில் கிடைக்கும் உரிமைகள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். அதைப் பெண்கள் முன்வந்து பெற முயற்சிக்க வேண்டும்.

அறிகுறிகளை உதாசீனம் செய்யாமல் உடனடியாக சிகிச்சைக்கு விரைந்திட வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறையேனும் கட்டாயம் இதய நலனைக் கண்காணிக்கும் பரிசோதனைகளை (ஈசிஜி + எக்கோ + டிரெட் மில் பரிசோதனை) 40+ வயதுடைய பெண்கள் செய்து கொள்வது நல்லது.

நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன் போன்றவற்றைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவு முறை, உடல் உழைப்பை உறுதி செய்யும் வாழ்வியல், மன அழுத்தம் குறைத்து உறக்கத்தை முறையாகப் பேணிட வேண்டும்.

  • இதய நலன் சார்ந்த கண்காணிப்பு
  • இதய நோய் தடுப்பு சார்ந்த விழிப்புணர்வு
  • இதய நோய் அறிகுறிகள் ஏற்படும் போது உடனடி சிகிச்சை

இதன் மூலம் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்.

விழிப்போம்.. சிந்திப்போம்.

Author

Related posts

சப்தக்கோர்வை..

நல்லாச்சி – 44

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 17: பகை மூட்டிய புகை