2
பார்க்கும் எல்லாமுமாக வாழ்ந்துவிட ஆசை
குறைந்த ஆயுளில் நிறைந்த வாழ்வை விரும்பி
கடைக்கோடி ஜீவி வரை வாழ்ந்திட ஆசை
எவ்வுயிராக ஏதாக எனும் குழப்பத்தில்
பச்சோந்தியாக எனில்
பாவம் உயிர்வாழ நிறம்மாறும் அதற்கும்
மனிதர்களால் அவப்பெயர்
நாயாக எனில்
உண்மையிலேயே அதன் வாழ்வு
‘நாய் படும் பாடாக’ உள்ளது
மழையாக எனில்
அனைவரும் வேண்டும் மழையாகவா
வெறுக்கும் மழையாகவா
மரமாக எனில்
அடைக்கலம் தரும் நிழலுக்காகவா
வீட்டில் கதவு ஜன்னல்களாய் அமையவா
மலையாக எனில்
பல்லுயிர்ப் பெருக்கும் தாயாகவா
கல்லுக்காக உடைபடவா
நதியாக எனில்
விளைச்சலைத் தந்திடும் ஜீவனாகவா
கழிவுகள் சுமந்திடும் பழிபாவங்கள் போக்கிடும்
சகதி சாக்கடையாகவா
எதுவாயினும் சரி மனிதர்கள் அற்ற உலகில்
வாழ்ந்திட வேண்டும்
நித்திய அமைதியோடு சுகமாக..