நல்லாச்சி – 32

This entry is part 32 of 41 in the series நல்லாச்சி

செல்லப்பிராணி வளர்க்க ஆசை பேத்திக்கு
வீட்டிலுள்ளோரைப் பிய்த்துப்பிடுங்குகிறாள்
சேக்காளிகள் வீடுகளிலெல்லாம் வளர்க்கின்றனராம்
கதைகதையாய்ச் சொல்கின்றனராம் அருமைபெருமைகளை
சொல்லிச்சொல்லி மாய்கிறாள்
தனக்குமொன்று இல்லையெனில் மதிப்பில்லையென்கிறாள்

நடைபழக நாயோ பூனையோ
சேர்ந்து மிழற்ற கிளியோ குருவிக்குஞ்சோ
சொப்புவாய் குவித்துக்கொஞ்சும் மீன்களோ
எனக்கொரு செல்லம் வேண்டுமென்கிறாள்
பராமரிப்பை அஞ்சுகின்றனர் வீட்டார்
பிள்ளைப்பாசம் நிறைவேற்றச்சொல்கிறது
இயலாமை பின்னடைய வைக்கிறது

அன்றோர்தினம் கீச்வீச்சென விடிகிறது தோட்டத்தில்
கண்திறக்காத பஞ்சுப்பொதிகளுடன்
அள்ளி மடியிலிடுகிறாள் நல்லாச்சி
அணைத்துக்கொஞ்சுகிறாள் பேத்தி
இப்போதெல்லாம்
தத்தம் பிள்ளைகளை அவளிடம் விட்டு
உலாச்சென்று விடுகின்றன அத்தனை ஜீவன்களும்
தலையிலும் தோளிலும் இடுப்பிலுமாக
பிள்ளைகளுடன் நடைபழகுகின்றாள் பேத்தி
ஒரு பேரன்னையாக.

நல்லாச்சி

நல்லாச்சி – 31 நல்லாச்சி – 33

Author

Related posts

உருதுக் கவிதை உலகு: 12 – ஷகீல் பதாயுனி

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 12: மதியூக மந்திரி

நீல நிலவு