56
தீபாவளிக்கு ஆரோக்கிய அல்வா வேண்டுமென
அரை மணி நேரமாய்
எசலுகிறான் மாமன்
அசையாமல் அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சி
எடையும் இடையும் பெருகாமல்
எண்ணெய்யும் நெய்யும் தொடாமல்
நாவினிக்க வேண்டுமாம் தீபாவளி
இத்தனை விதிகளைப் பரப்பினால்
என் செய்வாள் அவளும்
நல்லாச்சியின் பட்டியலை
தலையசைத்து ஒதுக்குகிறான்
பேத்தியின் பட்டியலையோ
கண்டுகொள்ளவேயில்லை
பழைய மனப்பான்மை கொண்ட உங்களுக்கு
நவீன நடைமுறை தெரியாதென
கேலியும் செய்கிறான்
ஆரோக்கிய அல்வா ஒன்றை
ஆன்லைனில் வாங்கியவன்
ஆஹாஹாவெனக் கொண்டாடுகிறான்
அதீத ருசியெனக் கூத்தடிக்கிறான்
மனம் பொறுக்கா ஆச்சியும் பேத்தியும்
கிள்ளியெடுத்துச் சுவைத்தபின்
ஒரு சேர சலித்துக்கொண்டனர்
இந்த உளுந்தங்களிக்கா
இத்தனை ஆர்ப்பாட்டமென
ஜிகினாத்தாள் சுற்றிவரும் புதுமையெலாம்
அன்றைய பழமையாகவும்
இருக்கக்கூடுமென
பாவம்
மாமனுக்குத்தான் தெரியவில்லை.