Home கவிதைதிருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 5

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 5

0 comments
This entry is part 11 of 11 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்ஜாஃபர் பாஷா

தூக்கம் இல்லாத இரவு

சரியாக இதுதானென்று சொல்ல முடியாத சோகமொன்று
நரம்பில் பாய்ந்து மனதைத் தாக்கியதும்
நெஞ்சுக்குள் “சிறைப்பட்டிருந்த” துக்க நதி
கண்களிலிருந்து “விடுதலையாகும்”

கண்களுக்குக் கனவுப்பசி எடுக்கும்போது
வீசிய இராத்திரி வலையில் தூக்கமீன் சிக்காது
மூடாத இமைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்ட
தெளிந்தும் தெளியாத அவளுடைய உருவம்
கண்ணீர்த் துளிகளாகி வழியும் ஸ்பரிசம்

குழந்தையின் வாயில் பால்ஐஸ் துண்டமாய் உருகிப்போகும்
பகல் தூக்கத்தில் கனவு காண்பவர்களுக்கு மத்தியில்
தூக்கத்தைக் கனாக்கண்டு கழியாத இராத்திரி நேரத்தோடு
கூட்டுசேர்ந்து
பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் முடிவிலா நாடகம்

லவ் ப்ளஸ் நம்பிக்கை ஈகுவல்டு லாபம்
இதுதான் உலக ட்ரெண்டிங் சூத்திரம் என்று
புதிய அர்த்தத்தை வருவித்துக்கொண்டு அவள்
சென்றுவிட்ட பிறகு
நிசப்தத் தெருவில் தப்பிப்போய் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்
தெருநாயைப்போல் உள்ளது வாழ்க்கை

அவளுடைய கத்திமுனைக்கு
முழுகெலும்பு எப்போது சிக்கியதோ நினைவில்லை
ஆனால் அந்தக் குத்தின் காயம் இராத்திரியில்தான்
போட்டுப் புரட்டி எடுக்கும்

கண்கூட்டில் அடைந்திடப் பார்த்த தூக்கப் பறவை
இறக்கைக் கதவுகளைத் திறந்து
மீண்டும் சிறகை விரித்துப் பறந்துபோகும்

அப்படி தூக்கம் வராத எந்தவொரு நடுராத்திரியிலோ…
கவலை ஆக்கிரமித்த தேகக் கூர் எலும்புகளிலிருந்து
சட்டெனப் பீறிட்டெழுந்து
தனி அறையில் சுவர்களுக்கு இடையிலான தூரத்தை
அளந்துகொண்டிருக்கும் என்னை நானே தேற்றிக்கொண்டு

இராத்திரி பகையாகி தூக்கம் அந்நியமாகிப்போனதும்
தூக்கம் வராத இரவுகளில் வாழ்க்கையைப் பிழியும்போதெல்லாம்
உதிர்ந்த அக்ஷரங்களைப் பொறுக்கிக்கொண்டு

மூச்சுவிட முடியாத அறையில் கொஞ்சம்
காற்றுக்காகத் திறந்த ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டு
இரக்கம் காட்டாத இரவையோ
அணுகாத தூக்கத்தையோ
நொந்தபடி உட்கார்ந்திருப்பேன்.

Series Navigation<< திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 4

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

You may also like

Leave a Comment