‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு’ என்ற மகாகவி பாரதியாருக்கும், தமிழாக்கம் செய்தால் இதே வரிகளைத் தரக்கூடிய, ‘சாரே ஜஹான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ என்ற மகாகவி இக்பாலுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.
இருவரும் இந்திய விடுதலையைப் பாடியவர்கள்; இருவரும் தத்துவம் பேசியவர்கள்; இருவரும் ஆன்மீகம் பேசியவர்கள். பாரதி சக்தியைப் பாடினார் – இக்பால் ஒவ்வொருவருக்கும் ‘தான்’தான் முதன்மை என வலியுறுத்தினார். இருவரும் அவரவர் மொழியில் யாப்பு அறிந்தவர்கள்; இருவருமே யாப்பை மீறி வசன கவிதை எழுதியவர்கள்; கடைசியாக, இருவரும் இந்தியா விடுதலை அடைந்ததைப் பார்க்கவில்லை.
இக்பால், பிரிட்டிஷ் இந்தியக் கவிஞர்களுள் அதிகமாகக் கல்வி கற்றவர். இரண்டு இளங்கலை, முதுகலை, முதுமுனைவர் – பாரசீகத்தில் மீவியல்பியலின் (மெட்டாஃபிசிக்ஸ்) வளர்ச்சி என்னும் தலைப்பில் ஆய்வு, சட்டக்கல்வி (பாரிஸ்டர் அட் லா), பாரசீகம், உருது, ஆங்கிலம், அரபி ஆகிய மொழிகளில் தேர்ச்சி, தத்துவம் என நீண்ட பட்டியலுக்குச் சொந்தக்காரர்.
உருதுக் கவிதை உலகில் இக்பாலின் பெயர் தவிர்க்க முடியாதது. அடிப்படைக் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லாமல், இஸ்லாமிய மார்க்கத்தை அந்தந்தக் காலகட்டத்தின் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்றபடி அணுக வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சமகாலத்திற்கு இஸ்லாமியப் பார்வையைத் தகவமைக்க வேண்டும் என நம்பியவர். அதனாலேயே மார்க்க அறிஞர்களால் ஐயத்துடன் பார்க்கப்பட்டவர். இக்பாலின் இஸ்லாமியப் பார்வைக்குக் கல்வி கற்ற இஸ்லாமியரிடமும், இஸ்லாமிய அணுகுமுறை தகவமைக்கப்பட வேண்டும் என்னும் கருத்துள்ளோரிடமும் வரவேற்பு இருந்தது. ஒரே நேரத்தில் சில இஸ்லாமியர்களால் வரவேற்கப்பட்டவராகவும், சில இஸ்லாமியர்களால் ஐயத்துடன் பார்க்கப்பட்டவராகவும் அவர் இருந்தார். அவரை ஐயத்துடன் பார்த்தவர்கள், அவர் முன்வைத்த கருத்துகளுக்குத் தர்க்க ரீதியாகத் தங்கள் கருத்துகளை முன்வைத்து, அறிவுசார் தளத்தில் உரையாட முற்படவில்லை என்பது முக்கியமானது. அத்தனை எளிதில் தர்க்க ரீதியாகக் கேள்விகளை எழுப்ப முடியாத அளவுக்கு இக்பாலின் ஆளுமை இருந்தது.
பாரசீக மொழியிலும் உருதுவிலும் கவிதை எழுதியிருந்தாலும், பின்னாளில் அவரது உருதுக் கவிதைகளே அதிகம் பேசப்பட்டன. இஸ்லாமிய இலக்கியத்தில் அவருடைய ‘ஷிக்வா‘ (புகார் – இறைவனை நோக்கிய கேள்வி எனவும் சிலர் மொழிபெயர்த்துள்ளனர்) வெளியாகிப் பரபரப்பாகப் பேசப்பட்டது. இஸ்லாமிய மரபில் இறைவனை நோக்கி யாரும் கேள்வி கேட்பதில்லை. அம்மரபை உடைத்து இக்பாலின் கவிதை வெளியானதால், அது மார்க்க அறிஞர்கள் பலரை முகம் சுளிக்க வைத்தது. அதன் பின்னர், அவரே ‘ஜவாப்-ஏ-ஷிக்வா‘ (புகாருக்குப் பதில் – இறைவனின் பதில்) எழுதித் தன் கேள்வியைச் சமன் செய்தார்.
இறைவா
நம்பிக்கையாளர்களின் புகாரையும் கேள்
உன்னைப்
புகழ்வதை மட்டுமே செய்தவரிடமிருந்து
புகாரையும் கேள்
ஏ குதா ஷிக்வா-ஏ-அர்பாப்-ஏ-வஃபா பி சுன்லே
குகார்-ஏ-ஹம்த் சே தோடாசா கிலாபி சுன்லே
இறைவா
இந்த உலகில்தான்
துருக்கியும் துரானியும் சீனமும் பாரசீகமும்
சசானியும் கிரேக்கமும் இருந்தன
இங்குதானே யூதரும் கிறித்தவரும் இருந்தனர்
சொல்
உன் பெயரால் வாளை எடுத்தது யாரெனச் சொல்
அன்றைய காலகட்டத்தில் என்றல்ல, இன்றைய காலகட்டத்திலும் இஸ்லாமியரின் பொதுப்பார்வையில் இப்படிப்பட்ட வரிகள் ஏற்புடையவை அல்ல. இஸ்லாமியரின் அணுகுமுறை என்பது இறைவனைக் கேள்வி கேட்காமல் ஏற்பது. அப்படியிருக்கையில் மொத்தக் கவிதையும் இதைப் போன்று இறைவனை நோக்கிய புகாராக இருப்பின், அன்றைய இஸ்லாமியச் சமுதாயம் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றியிருக்கும் என அனுமானிக்கலாம்.
அனைவரும் எதிர்வினையாற்றி முடிந்த பின்னர், நான்கு ஆண்டுகளுக்குப் பின் ‘ஜவாப்-ஏ-ஷிக்வா’ (புகாருக்குப் பதில்) எழுதினார்.
மானுடனுக்குத்
தீவிரமாக உரையாடுவதில் பெருமையுண்டு
ஆனால்
பேச்சில் நற்றன்மை இழந்தவனாகவும்
அதை அறியாதவனாகவும் இருக்கிறான்
நாஸ்ஹை தாக்கத்-ஏ-குஃப்ஃபார்பே இன்சானோன்கோ
பாத் கர்னேகா சலீக்கா நஹீன் நாதானோன்கோ
இப்படியாக இறைவன் மனிதனைப் பார்த்து அவனுடைய கீழான நிலைக்குக் காரணங்களைச் சொல்வதாக அவருடைய ‘புகாருக்குப் பதில்’ அமைந்தது. புகாரும், புகாருக்குப் பதிலும் காலம் கடந்து நிற்கும் செய்யுள்கள். அதிலும் குறிப்பாக, மனிதன் தன்னுடைய உரையாடல்களில் தன்மையை இழப்பதும், இழந்ததை அறியாமலே உரையாடுவதும் எல்லாக் காலகட்டத்திற்கும் பொருந்தும்.
பிரிவை விரும்பியும் இனத்தை விரும்பியும்
பிரிந்திருக்கும் மானுடனின் இயல்பே இதுதானோ?
ஃபிக்ரா-பந்தி ஹை கஹீன் ஔர் கஹீன் ஸாத்தே ஹைன்
கியா ஸமானேமேன் பனாப்னே கி யஹீ பாத்தேன் ஹை
என்றைக்கும் இந்த மனித இனம் ஏதாவது ஒரு காரணத்திற்காகப் பிரிந்தே இருக்கிறதே, இதுதான் அவர்களின் இயல்பாக இருக்கப்போகிறதா? என்னும் கேள்வி இக்பாலின் காலத்தில் மட்டுமல்ல, என்றைக்கும் நிலையாக இருக்கப்போகும் கேள்வி. அதை இக்பால் இறைவனின் குரலாகத் தன் கவிதையில் ஒலித்தார்.
இக்பாலை இணைத்துச் சொல்லப்படும் குட்டிக்கதைகளின் நம்பகத்தன்மையை யாராலும் சரிபார்க்க முடியாது. உருதுச் சிலேடைகளைச் சொல்வதற்கு ‘இக்பால் சொன்னார்‘ என்னும் பின்னொட்டைச் சேர்ப்பது வழக்கமாகிப் போனது. தமிழிலும் இப்படியான மரபு உண்டு. பொன்மொழிகளைச் சொன்னால், “அவர் சொன்னார், இவர் சொன்னார்” எனப் பின்னொட்டைக் கூட்டிப் பொன்மொழிகளின் முக்கியத்துவத்தைக் கூட்டுவார்கள். இக்பால் சொன்னதாகச் சொல்லப்படும் பொன்மொழிகளும் அப்படியே.
இவ்விரண்டையும் போலவே, இக்பால் எழுதாத சில கவிதை வரிகளை இக்பால் எழுதியதாகச் சொன்னதும் உண்டு. அப்படிச் சொல்லப்பட்டவை தவறுதலாகப் பரப்பப்பட்டதும் உண்டு.
எடுத்துக்காட்டாக,
உனக்கு எதிராக வீசும் கடுங்காற்றுக்கு அஞ்சாதே
பருந்தே
இது உன்னை இன்னும் உயரே செல்ல வைக்க வீசுகிறது
துந்தி-ஏ-பாத்-ஏ-முகாலிஃப் சே நா கப்ரா ஏ உகாப்
ஏ தோ சல்தீ ஹை துஜே ஊன்ச்சே உடானே கேலியே
சுயமுன்னேற்றச் சிற்றுரைகள், ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சிகள், மாணவர்களிடையே ஆற்றும் உரைகள் எனப் பல இடங்களில் இந்த உருதுக் கவிதை மேற்கோளாகக் காட்டப்படும். ஊக்கமளித்துச் சிற்றுரையை முடிக்கும் உத்திக்கும் பேச்சாளர்கள் இந்தக் கவிதையை முடிவில் சொல்வதுண்டு. கொதிநிலையில் கூட்டத்தை வைப்பதற்கும் உரத்த குரலில் இதைச் சொல்லி உரையைத் தொடங்குபவர்கள் உண்டு. அவர்களுள் பெரும்பாலானோர் இதை இக்பாலின் கவிதை எனத் தவறாமல் குறிப்பிடுவதும் உண்டு. பல ஆண்டுகளாக இது இக்பாலின் கவிதையாகவே பலராலும் ஏற்கப்பட்டது.
இந்தக் கவிதையை எழுதியவர் ‘சையத் சாதிக் ஹுசைன் ஷா காசிமி’. இவரும் வழக்கறிஞர்; இவரும் சியால்கோட்டைச் சேர்ந்தவர். இணையப் பயன்பாடும் இணையத் தேடல்களும் அதிகமான பின் இந்தக் கவிதை எழுதியவரின் பெயர் வெளிவந்தது. இருப்பினும் இப்போதும் பரவலாக இது இக்பாலின் கவிதை என்றே அறியப்படுகின்றது.
அல்லாமா இக்பாலுக்கும் சென்னைக்கும் தொடர்பு உண்டு; அது அன்றைய காலகட்ட இஸ்லாமியரின் அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாகி வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது.
ஆண்டு 1929 ஜனவரி மாதத்தில், மதராஸ் – ஜார்ஜ் டவுன் – அர்மீனியன் தெருவில் இருந்த கோகலே ஹாலில் இக்பால் பேருரையாற்ற அழைக்கப்பட்டார். அன்னி பெசண்ட் அம்மையாரால் நிறுவப்பட்ட ‘கோகலே ஹால்‘ அன்றைய அறிவுப் பயிற்சிக்கூடமாகச் செயல்பட்டது. அறிவுஜீவிகளும் கல்வியாளர்களும் சிந்தனையாளர்களும் கூடும் அங்கு இக்பாலை உரையாற்ற அழைத்தவர்கள் ‘மதராஸ் முஸ்லிம் அசோஷியேஷன்‘ குழுமத்தினர். அது முஸ்லிம் அறிஞர்கள், கல்வியாளர்கள், வணிகர்கள், அறிவுஜீவிகள் நிறைந்த குழுமம். தத்துவத்திலும் இஸ்லாமியப் பார்வையிலும் உச்சத்தில் இருந்த இக்பாலை அந்தக் குழுவினர் அழைத்து வந்து, நவீனப் பார்வையில் இஸ்லாமியக் கோட்பாடுகள், ஐரோப்பிய அணுகுமுறை தொடர்பாக உரையாற்ற வேண்டினர். இஸ்லாமியர் மட்டுமல்லாமல் மதராசின் முன்னணி வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், வணிகர்கள் நிறைந்த பார்வையாளர்களாக அந்த அவை இருந்ததைப் புகைப்படம் ஒன்று பதிவு செய்திருக்கிறது.
கோகலே ஹால் உரையைத் தொடர்ந்து சில உரைகளை இக்பால் ஆற்றினார். அவை அனைத்தும் இஸ்லாமியக் கோட்பாடுகளைத் தகவமைப்பது தொடர்பாக இருந்திருக்கின்றன.
கிலாஃபத் இயக்கத்திற்குப் பின், பரவலாக இஸ்லாமியக் கோட்பாடுகளைத் தகவமைப்பது தொடர்பாக இஸ்லாமிய அறிவார்ந்த சமூகம் உரையாடல்களை நிகழ்த்தியது. கடுங்கோட்பாட்டு வாதத்திற்கும் தகவமைக்கப்பட்ட அணுகுமுறைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில், பெரும்பாலும் நவீன அணுகுமுறைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, கடுங்கோட்பாட்டு வாதம் முன்னிறுத்தப்படுவது ஏற்புடையது அல்ல. இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பவர்களும் இஸ்லாமியக் கோட்பாடுகளைத் தகவமைத்து முன்வைக்கும் அறிவுசார் கருத்துகளைப் புறந்தள்ளி, கடுங்கோட்பாட்டுவாதிகளை முன்வைத்துக் கருத்தைக் கட்டமைத்தனர். அப்படியான சூழலில், சீரமைக்கப்பட்ட இஸ்லாமியக் கோட்பாடுகளை முன்வைத்தவர் இக்பால். அவருடைய வரலாற்றில் சென்னையும் தன்னுடைய பங்கினைப் பதிவு செய்துள்ளது.
பறத்தல் தொடர்பாக இக்பாலின் கவிதையாகச் சொல்லப்பட்டதைப் பார்த்தோம். அது அப்படிச் சொல்லப்பட்டதன் காரணம், உயரே பறத்தல் தொடர்பாக இக்பால் எழுதியிருக்கும் இரண்டு கவிதைகள்:
(1)
நீ பருந்து, பறப்பது உன் இயல்பு
உன் முன்னே வானம் இன்னும் உள்ளது
து ஷாஹீன் ஹை பர்வாஸ் ஹை காம் தேரா
தேரே சாம்னே ஆஸ்மான் அவுர் பி ஹைன்
(2)
உன் கூடு சுல்தானுடைய நகரின் மாளிகைக் கும்பங்களில் இல்லை
நீ பருந்து! மலைகளின் முகடுகளை உன் தங்குமிடமாகத் தேர்ந்துகொள்
நஹீன் தேரா நஷீமன் ஷஹர்-ஏ-சுல்தானிகி கும்பட் பர்
து ஷாஹீன் ஹை பசேராகர் பஹாடோன்கி சட்டானோன்மேன்
இவ்விரண்டு கவிதைகளும்கூட அதிகமான மேற்கோள்களில் இடம்பெறுபவை. இவற்றின் ஆதிக்கமும் இக்பாலின் ஆளுமையும், அவர் எழுதாத இன்னொரு கவிதையை அவர் பெயரில் பலரும் எழுதிச் செல்லக் காரணமாக இருக்கின்றன.
எந்நேரமும் விழிப்புணர்வுடனும் அறிவுசார் சிந்தனையுடனும் மனிதன் இருப்பதை இக்பால் விரும்பியதில்லை. சில நேரங்களில் தளர்வாக உணர வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மனதுக்கு அருகில் அறிவு அமர்ந்திருப்பது நல்லதுதான்
ஆனால், அவ்வப்போது
அதைத் தனிமையிலும் விடு
அச்சா ஹை தில்கே சாத் ரஹே பஸ்பான்-ஏ-அக்ல்
லேக்கின் கபி கபி இசே தன்ஹாபி சோடுதே
பாரதியின் ‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு’ நினைவிருக்கும் வரையில், இக்பாலின் ‘சாரே ஜஹான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’வும் நினைவில் இருக்கும்; இக்பாலும் நினைவில் இருப்பார்.
(தொடரும்)