வண்ண வண்ணமாய்
பறக்கின்றன ஹீலியம் பலூன்கள்
உருண்டையாய்
வாத்துக்களைப் போல
வானூர்தி வடிவத்திலும்
இவர்கள் வீடு திரும்பும்போது
என்ன வாங்கிப் போவார்கள்
குழந்தைகளுக்குத்
தின்பண்டங்கள்
பொம்மைகள்
இல்லத்தரசிகளுக்கு
காய்கறிகள்
மளிகைப் பொருட்கள்
வாழ்க்கைப் பயணத்திற்குத்
தேவையானதை பெற்றுத்தருமா
இந்த வாயு தேவனின் குழந்தைகள்
கார்கள் கண்ணாடிகளை
ஏற்றிக்கொண்டு விரைகின்றன.
நடுத்தர வர்க்கம் பார்த்தும்
பார்க்காதது போல கடக்கிறது.
குழந்தைகளே இல்லாத வீட்டில்
இதெல்லாம் எதுக்கு
என்ற மனைவியின் கேள்வியை
எப்படி எதிர்கொள்வது
என்ற எண்ணத்தைப் புறந்தள்ளி
விற்பவரின் குறுநகையைப்பார்க்க
ஐம்பது ரூபாய்த்தாளை
எடுத்து நீட்டுகிறேன் நான்.