இல்லாத எல்லாமும்

வானம் ஒப்புக் கொள்வதற்கு முன்னரே
அவளது இரவு தொடங்கி விடுகிறது

மங்கிய ஒளியில்
பழைய புடவைகளை மடிப்பது போல
பொழுதுகளை மடிமேல் விரித்து நீவுகிறாள்
நைந்து போன அதன் இழைகளில்
தூக்கியெறிய முடியாத காலம்

முடிவற்ற எண்ணங்களால் நிரம்பி வழியும்
அவளது மனதை அறிந்த தூக்கம்
ஒருபோதும் உள்ளே நுழைவதில்லை
ஆனால் அழைக்கப்படாமல்
உரிமையுடன் நினைவுகள் வருகின்றன
அவளருகில் அமர்ந்து
அவளறிந்த குரல்களில் பேசுகின்றன
அடர்ந்த நிசப்தத்தில்
தமக்குள் சிரிக்கின்றன

நினைவு கூர்கிறாள்
எப்போதோ பற்றிய கரங்களின் ஸ்பரிசத்தை
எங்கும் ஒலித்த பெயர்களை
பல திசைகளில் சுவாசித்த இல்லத்தை

முன்னோக்கி நகராமல்
அவளைச் சுற்றியே சுழல்கிறது கடிகாரம்
நேரத்தை அல்ல
நேரத்தில் எஞ்சியதை அளக்கிறது

இருளே சோர்ந்து போன நிசியில்
கண்கள் அகலத் திறந்திருக்க
அசைவின்றிப் படுத்துக் கிடக்கிறாள்

எண்ணுகிறாள்
சன்னலுக்கு வெளியே மின்னிய
நட்சத்திரங்களை அல்ல
இல்லாதவர்களை

அவளருகிலேயே
கனிவோடு காவலிருக்கிறது
தன்னை வெளிப்படுத்தி
அவளைக் காயப்படுத்த விரும்பாத
நிதர்சனம்…

தனிமை என்பது
மனிதர்கள் இல்லாதிருப்பது அல்ல
இனி இல்லாத எல்லாமும்
அங்கே நிறைந்திருப்பது.

Author

  • ராமலக்ஷ்மி :
    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.

    இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

தமிழகக்கல்விச்சூழல்: சவால்களும்தீர்வுகளும்

நன்னீருக்காகப் பலியாகும் உயிர்கள்

ஆரோக்கியமே உண்மையான அழகு