வலைப்பூ – 7 (இறுதிப்பகுதி)

This entry is part 7 of 7 in the series வலைப்பூ

விக்ரம் சாத்திவிட்டுப் போன கதவின் அதிர்வு அந்த அறைக்குள் வெகுநேரம் தங்கியிருந்தது. மேசையின் மீதிருந்த அந்தச் சிறிய காகிதத் துண்டை அர்ஜுன் கையில் எடுத்தான். அதில் சில எண்களும் எழுத்துகளும் கலந்த ஒரு புதிய கடவுச்சொல் கிறுக்கப்பட்டிருந்தது.

சுசி சமையலறைக் கல்மேடையில் சாய்ந்து நின்றாள். அவள் கண்களில் முதல்முறையாகக் கலக்கம். தான் எழுதிய கணக்கு தோற்றுப்போன அதிர்ச்சி. அவள் எதையும் அவ்வளவு எளிதில் தவறாகக் கணிப்பவள் அல்ல.

ஆனால், இன்று ஒரு முகம் தெரியாத மனிதன் அவளது கணக்குகளை, யூகங்களை, கணிப்புகளை, அவளின் கர்வத்தைச் சுக்குநூறாக உடைத்துவிட்டுப் போயிருக்கிறான்.

“அவர் சொன்னது சரிதான் சுசி,” என்றான் அர்ஜுன்.

குரலில் கோபமில்லை; ஒருவிதத் தெளிவு இருந்தது.

“மனித உணர்வுகளைக் கணிதச் சூத்திரமாக்க முடியாது.”

சுசி மெதுவாக நடந்து வந்தாள். அவனுக்கு எதிரே நாற்காலியில் அமர்ந்தாள். அவளை அறியாமலேயே ஒரு சொட்டுக் கண்ணீர் அவளது கன்னத்தில் இறங்கியது.

“உன்னை அந்த மாயையிலிருந்து பிடிச்சு இழுக்க எனக்கு வேற வழி தெரியல அர்ஜுன். நீ என் கண் முன்னாடியே கொஞ்சம் கொஞ்சமாப் பழசுக்குள்ள மூழ்கிட்டு இருந்த. எனக்குப் பயமா இருந்தது. என்னை மன்னித்துவிடு.”

அர்ஜுன் அவளது கையைப் பற்றிக்கொண்டான். பதினேழு வருடங்களாகத் தேக்கி வைத்திருந்த ஒரு பெருமூச்சு அவனிடமிருந்து வெளியேறியது.

“நீ மன்னிப்பு கேட்க வேண்டாம். நான் அந்தப் பழைய வன்தட்டைத் திறந்ததுல இருந்து ஒரு பைத்தியம் மாதிரிதான் நடந்துகிட்டேன்.”

அவன் மடிக்கணினியைத் திறந்தான். இணைய உலாவியில் அந்தப் பழைய வலைப்பூவின் முகவரியைத் தட்டச்சு செய்தான். திரையில் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் கேட்கும் கட்டங்கள் வந்தன. விக்ரம் கொடுத்துவிட்டுப் போன அந்தப் புதிய கடவுச்சொல்லை உள்ளிட்டான்.

வலைப்பூவின் நிர்வாகப் பக்கம் திறந்தது. அங்கே பதினேழு வருடக் குப்பைகள். சொல்லப்படாத வார்த்தைகள். அனுப்பப்படாத வரைவுகள். மீனா தன் வேலையிழந்த விரக்தியில் சிந்திய கண்ணீர்த் துளிகள். அர்ஜுனின் கோழைத்தனம். எல்லாம் வெறும் தரவுகளாக உறைந்து கிடந்தன. இரண்டு பேருடைய பலவீனங்களும் சேமித்து வைக்கப்பட்ட ஒரு பாதாளம் அது.

அமைப்புகள் பகுதிக்குச் சென்றான். கடைசியாகச் சிவப்பு நிறத்தில் ஒரு பொத்தான் இருந்தது.

‘இந்த வலைப்பூவை நிரந்தரமாக அழிக்கவும்’.

அதைச் சொடுக்கினான். திரையில் ஒரு எச்சரிக்கைப் பெட்டி குதித்தது. ‘இதற்குப் பின் தரவுகளை மீட்க முடியாது. உறுதியாக அழிக்க வேண்டுமா?’

அர்ஜுன் சுசியைப் பார்த்தான். சுசி கண்களில் லேசான அச்சம் மிச்சமிருந்தது.

“நம்ம வாழ்க்கையில இனிமேல் இந்தத் திங்கள் முதல் புதன், வியாழன் முதல் சனின்னு எந்தக் கணக்கும் வேண்டாம் சுசி. கொஞ்சம் குழப்பமாவே இருக்கட்டும். அதுதான் நிஜம்.”

சுசியின் முகத்தில் ஒரு மெல்லிய நிம்மதி பரவியது. அவள் கண்களைத் துடைத்துக்கொண்டு லேசாகச் சிரித்தாள். தலையசைத்தாள்.

அர்ஜுன் திரையைப் பார்த்தான். அவனது சுட்டுவிரல் அழுத்தமாக அந்தப் பொத்தானை அழுத்தியது. திரை ஒரு கணம் இருண்டது. பின்பு, ‘நீங்கள் தேடும் பக்கம் கிடைக்கவில்லை’ என்ற பிழைச்செய்தி தோன்றியது. எல்லாம் முடிந்தது.

இனி அந்த நினைவுகளுக்கு எங்கும் இடமில்லை. முற்றிலும் துடைத்தழிக்கப்பட்டது.

அர்ஜுன் கணினியை மூடினான். வெளியே பெல்லந்தூர் போக்குவரத்து வழக்கம் போல இயந்திரத்தனமாக ஊர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அந்த அறைக்குள் இப்போது மூச்சு முட்டும் அந்தப் பழைய மௌனம் இல்லை.

சாளரத்தின் வழியே வந்த காலை வெயில் சுசியின் முகத்தில் விழுந்தது. அர்ஜுன் எழுந்து சென்று சமையலறையின் மின்சார அடுப்பை உயிர்ப்பித்தான்.

“இன்னைக்கு சனிக்கிழமை. உன் முறைதான். இருந்தாலும் நான் உனக்கு ஒரு காபி போட்டுத் தர்றேன்,” என்றான் அர்ஜுன்.

சுசி நாற்காலியிலிருந்து மெதுவாக எழுந்து வந்தாள். “காபி வேண்டாம் அர்ஜுன். வெந்நீர் போதும்.”

அர்ஜுன் ஆச்சரியமாகத் திரும்பினான். அவளுக்குக் காலைக் காபி என்பது ஒரு மதச்சடங்கு மாதிரி. அதை அவள் தவிர்த்ததே இல்லை.

“ஏன்? உடம்பு ஏதும் சரியில்லையா?”

சுசி மேடையருகே வந்து நின்றாள். அவன் கையை இழுத்து தன் வயிற்றின் மீது லேசாகக் கை வைத்தாள். அவள் முகத்தில் இதுவரை அர்ஜுன் பார்த்திராத ஒரு புதிய பிரகாசம்.

“மருத்துவர் காபி குடிக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்.”

அர்ஜுன் காபி டப்பாவைப் பிடித்தபடியே உறைந்து நின்றான். அவனது மூளை அந்த வார்த்தைகளை உள்வாங்கச் சில விநாடிகள் எடுத்துக்கொண்டது.

“சுசி… நீ…”

அவள் மென்மையாகப் புன்னகைத்தாள். தலையசைத்தாள். “ஏழாவது வாரம் அர்ஜுன்.”

அவனுக்குத் தலை சுற்றியது. ஆனந்தமா, அதிர்ச்சியா எனப் பகுக்க முடியாத ஒரு உணர்வு.

“ஆனா… நாம கல்யாணத்தின் போதே முடிவெடுத்தோமே… குழந்தைகள் வேண்டாம்னு…”

“வீணா அந்த ஒப்பந்தம் போட்டோம் அர்ஜுன். அது இயந்திர வாழ்க்கை. நாம நம்ம வாழ்க்கையை வேண்டாம்னு ஒப்பந்தம் போட்டுக்கலையே,” என்றாள் சுசி. “எனக்கு இயந்திரத்தனமான வாழ்க்கை அலுத்துப் போச்சு அர்ஜுன். இது நான் எழுதின புதுக் கணக்கு.”

அர்ஜுனின் கண்களில் நீர் முட்டியது. பதினேழு வருடப் பாரம் அகன்ற இடத்தில் இப்போது ஒரு புதிய உயிர் துளிர்விட்டிருந்தது. அவனுக்காக, சுசி ஏற்கனவே ஒரு அழகான எதிர்காலத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டாள் என்பது அவனுக்குப் புரிந்தது.

அவன் அடுப்பை அணைத்தான். அவளை நெருங்கி, மெதுவாக அணைத்துக்கொண்டான். அந்த ஒலியொடுக்கப்பட்ட அறைக்குள் இப்போது ஒரு புதிய மௌனம்.

வெளியே பெல்லந்தூர் போக்குவரத்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் இயந்திரத்தனமாகச் சத்தமிட்டுக் கொண்டிருந்தது.

(முற்றும்)

Series Navigation<< வலைப்பூ – 6

Author

Related posts

வெயில் ஆடும் சுவர்

திருவை மு.இரா. கவிதைகள் -2

5 நான்-கள்: அத்தியாயம் நான்கு