விசுவநாதபுரி – 4

This entry is part 4 of 4 in the series விசுவநாதபுரி

அலார்மின் மென் கதறலில் முதலில் விழித்தெழுந்தது தன்மத்ரா. தாராவின் வீட்டிலிருந்து விசுவநாதபுரி ஏர்போர்ட் 30 நிமிட தூரத்தில் இருந்தது. 2.30-க்கு அலார்ம் எழுப்பி விட உடனடியாக எழுந்து படுக்கையில் சாய்ந்தமர்ந்தவள் ’ம்மா துர்கா’ நாமம் சொல்லி வணங்கத் தவறவில்லை. பிறகு எழுந்து கொண்டவள் உட்காரவே இல்லை. பம்பரமாகச் சுழன்று தனக்கும், ஷைலுவுக்குமென சில மில்க் பிஸ்கட்டுகளை எடுத்து வைத்து அதை வெந்நீரில் முக்கிச் சாப்பிடத் தந்தவள், ”ஜல்தி கண்ணா, மதுரா ஆண்ட்டி எழுந்து வரும் முன்னரே நாம இங்கிருந்து எஸ்கேப் ஆயிடலாம். நம்முடைய அழகான கூட்டுக்கே திரும்பப் பறந்து போயிடலாம்” என்று ஜோக் அடிப்பது போலச் சொல்லி கஷ்டப்பட்டு புன்னகைத்தாள்.

பதிலுக்கு எதுவும் சொல்லாவிட்டாலும் சும்மா சிரித்துவிட்டு வேக வேகமாகக்க கிளம்பத் தொடங்கியவள் 10 நிமிடங்களில் தயாராகி தன் அத்தையுடன் மாடி அறையை விட்டுக் கீழிறங்கி வந்தாள்.

என்னதான் இவர்கள் வாடகை டாக்ஸி புக் செய்ய முயன்றபோதும் மதுரா அதற்கு ஒப்புக்கொள்ளாமல் தங்களுடைய ஸ்கோடாவை இவர்களுக்கென ஒதுக்கிக் கொடுத்திருந்தாள்.

கடைசி நேர பரபரப்பில், ‘இதென்னடா திடீர் அக்கறை!’ என்று கொஞ்சம் அவஸ்தையாக உணர்ந்தபோதும் ’இட்ஸ் ஓகே’ என்பதாக இருவரும் அதில் ஏறி அமர்ந்தனர். டிரைவர் சின்னக்கண்ணுவுக்கு தனுவின் மேல் சிறிது அக்கறை உண்டு. தாராவின் தோழி என்பதற்காக அல்ல; அதையும் தாண்டி ஏதோ ஒரு அறியாக் காரணத்திற்காக வயதில் மிக முதியவரான அந்த டிரைவர் தனுவின் மீது பரிவோடு இருந்தார்.

அவர் உடன் வருவதில் பெரிதாக தனுவுக்கு ஆட்சேபணை இல்லாததால் இலகுவாக அவருடன் உரையாடிக்கொண்டே செல்லவும் அவளால் முடிந்தது.

ஷைலு காரில் ஏறி அமர்ந்ததுதான் தாமதம், மீண்டும் தூக்கத்தில் அமிழத் தொடங்கியிருந்தாள்.

அவள் ஞை… ஞை… என்று எதையேனும் புலம்பிக்கொண்டிராமல் நிம்மதியாகத் தூங்கினால் சரிதான் என்று தனுவும் அவளை அப்படியே விட்டுவிட்டாள்.

30 நிமிடங்களில் ஏர்போர்ட் வந்ததும் இருவரும் இறங்கி உள்ளே செல்ல, டிரைவர் ட்ராலியில் அவர்களது பெட்டிகளை அடுக்கித் தள்ளிக்கொண்டு உள்ளே அனுமதிக்கப்பட்ட எல்லை வரை வந்து அளித்துவிட்டு, ’பத்திரமா போய் வாங்க தாயி!’ என்று விடைபெற்றார்.

பெண்கள் இருவரும் டிக்கெட் சரிபார்த்துவிட்டு செக்யூரிட்டி செக்கிங் வரிசையில் சென்று நின்றார்கள். பெட்டிகளைச் சோதிக்கும்போது சுமுகமாக முடிந்த செக்கிங், கைப்பைகளைச் சோதிக்கும்போது ஒரேயடியாக அலறத் தொடங்கியது. ஏதேனும் பிளக்கர், நெயில் கட்டர் அல்லது மெட்டல் கைப்பிடி கொண்ட கோம்ப் மாதிரியான காஸ்மெடிக் உபகரணங்களாக இருக்கலாம் என்ற நினைப்பில் பையைக் குப்புறக் கவிழ்த்து சோதனையிட்டார் அந்த அதிகாரி…

ஆனால், தனுவின் கைப்பையில் எப்போதும் காஸ்மெடிக் உபகரணங்களுக்குப் பெரிதாக வேலையே இல்லையே… அவளதில் பணமும், முகம் துடைக்கும் வெட் டிஸ்யூ கிளாத்துகள், அவசரத்திற்கு உபயோகப்படும் என ஒன்றிரண்டு மென்சுரல் நாப்கின்கள் மற்றும் அலைபேசி சார்ஜர், ஹெட்போன் இத்யாதிகள் மட்டும்தானே இருக்கும்!

ஷைலுவின் கைப்பையிலும் கூட மெட்டல் பொருட்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவே. அவள் அழகைப் பராமரிப்பதில் தன் அத்தையை விடவும் மோசமானவள். வெறும் குளிர்ந்த தண்ணீரும் பருத்திக் கைக்குட்டையும் போதும் என்பாள். புருவங்களைச் சீர்செய்துகொள்ளும் பிளக்கர் முறையை அவள் இன்னும் விரும்பினாளில்லை. அவளொரு இயற்கை விரும்பி… அப்படியிருக்க இதென்ன சத்தம்? தாங்கள் இருவரும் அறியாமல் இந்த கைப்பைக்குள் அப்படி என்னதான் இருக்கிறது?

தன்மத்ரா குழப்பத்துடன் அந்த செக்யூரிட்டி டெஸ்கையே உற்றுநோக்கிக்கொண்டிருந்தாள்.

உள்ளிருந்து வந்து விழுந்த பொருட்களைக் கலைத்து செக்யூரிட்டி மானிட்டர் வட்டமிட்டுக் காட்டிய சந்தேகத்திற்குரிய அந்தப் பொருளைச் சரியாகத் தேடி கையில் எடுத்தார் அந்த அதிகாரி.

உறைக்குள் இருந்த அந்தப் பொருள் என்னவாயிருக்கக்கூடும் என்று ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் தனு. ஏனென்றால் வெகு நிச்சயமாக அது அவளுடையது அல்லவே!

பிறகெப்படி அது அவளது கைப்பைக்குள் இடம்பெற்றிருக்கக்கூடும்!? ஆச்சரியத்துடன் அவளுக்கு இப்போது லேசான பதற்றமும் தொற்றிக்கொள்ள, அது என்னவாக இருக்கக்கூடும் என்று அதையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதிகாரி அதன் உறையைக் கீழ்நோக்கிக் கவிழ்த்து உருவியதும் பளபளவென ஒளிவீசிக்கொண்டு உள்ளிருந்து துள்ளி விழுந்தது வெள்ளிப்பிடியிட்ட அழகான குறுவாள் ஒன்று. பார்வைக்கு வெகு பழமையானதாகத் தென்பட்டது. ஆனால், அதெப்படி தனது கைப்பைக்குள் வந்திருக்கக்கூடும்! என்று அவள் யோசிப்பதற்கு முன் அந்த அதிகாரியின் பார்வை வெகு கூர்மையாக அந்தப் பொருளை உற்றுநோக்கியதுடன், வேக வேகமாக அங்கிருந்த டியூட்டி போலீஸாரையும் அவர் அழைக்கத் தொடங்கினார்.

”கமான் காப்ஸ்… இவங்கள அந்த அறைக்குக் கூட்டிட்டுப் போய் விசாரிங்க, தடை செய்யப்பட்ட பொருட்களை விமானத்துல கொண்டுபோறது சட்டப்படி தவறு. அதிலும் இவங்க கைப்பையில் ஆயுதம் வைத்திருப்பது சந்தேகத்துக்கு இடமா இருக்கு. அதனால இவங்கள விசாரிங்க…”

என்று அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்துவிட்டு மீண்டும் இவளிடம் திரும்பி,

”மேடம் ப்ளீஸ் கோஆப்ரேட் வித் தெம்” என்றார் சற்றே கடினமாகிவிட்ட குரலில்.

தனுவுக்கு இது ஏதோ குழப்பமான கனவின் நீட்சியோ என்றிருந்தது. அவள் அலங்க மலங்க விழித்துக்கொண்டு நிற்பதற்கான நேரமல்ல இது என்பதை உணர்ந்தவளாக, நேற்றிலிருந்து தன்னைச் சுற்றி நடக்கும் அபத்தங்கள் குறித்த கனத்த யோசனையுடன் அந்தக் காவலர்களுடன் அங்கு சற்றுத் தள்ளி இருந்த விசாரணை அறைக்கு நகர்ந்தாள்.

நடப்பன அனைத்தையும் அதிர்ச்சி கலந்த பீதியுடன் கவனித்துக்கொண்டிருந்த ஷைலுவோ, இதயம் தொண்டைக்குள் வந்து குதிப்பது போன்ற அவஸ்தைக்கு உள்ளாகியிருந்தாள்.

அத்தையின் கைப்பையில் அந்தப் பொருளை வைத்தவள் அவளேதான் அல்லவா?! இப்போது தண்டனை அத்தைக்கா?!

இதை எப்படி மறந்தேன் நான்! ஐயோ, காரில் வரும்போது அதை எடுத்து வெளியில் வீசிவிட வேண்டும் என்று ஒன்றுக்கு நான்கு முறை இரவில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டுதானே படுத்தோம்? பிறகெப்படி மறந்தோம்… செக்யூரிட்டி செக்கிங்கில் மாட்டிக்கொள்வோம் என்று கூடத் தெரியாத அப்பாவியா நான்?! எல்லாம் அடிமுட்டாளும், சோம்பேறியுமான என்னால் தானே வந்தது! இப்போது அத்தை மாட்டிக்கொண்டாளே! அவளை இந்த விமானநிலைய போலீஸார் என்ன செய்வார்களோ? தெரியவில்லையே!

இப்போது, தானும் போய் அங்கே நின்று குட்டையைக் குழப்புவதைக் காட்டிலும் அத்தையை இந்தப் பிரச்சினையிலிருந்து மீட்பது எப்படி… எப்படி? எப்படியேனும் அவளை இதில் சிக்கவைக்காமல் மீட்டே ஆக வேண்டுமே! இப்போது உடனடியாக யாரை உதவிக்கு அழைப்பது?

இந்த அதிகாலை நேரத்தில் டெல்லியில் இருக்கும் தாராக்காவை அழைக்க முடியாது. அவளது அண்ணன் சோமேஷ் இருக்கிறார். ஆனால், அவரைப் பார்த்தால் இப்படி ஒரு பிரச்சினையில் உதவக்கூடிய அளவுக்குத் தெளிவானவராகவோ சாமர்த்தியசாலியாகவோ தோன்றவில்லையே! மதுரா ஆண்ட்டியைப் பற்றி நினைக்கவே வேண்டியதில்லை. இங்கே… இப்படி என்று தெரிந்தாலும் போதும், அவள் இந்தக் காவல்துறையினரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தக்கூடிய தகவல்களைத் தரவே தயாராக இருக்கக்கூடும்!

நினைக்க நினைக்கப் பதற்றம் கூடிக்கொண்டேதான் இருந்தது ஷைலுவுக்கு.

இப்படி ஒரு சூழலில் இங்கே யார்தான் இருக்கிறார்கள் என் அத்தையைக் காப்பாற்ற?

லண்டனில் இருக்கும் பெற்றோரிடம் சொல்லியும் பிரயோஜனமில்லை.

கவுகாத்தியில் இருக்கும் தாத்தா… ம்ஹூம்! அவர் தொடர்பு எல்லைக்குள் இருக்கிறாரா, இல்லையா என்பதை அவரது செயலரிடம் கேட்டு முன் அனுமதி பெற்று உதவி கேட்பதற்கெல்லாம் இப்போது அவகாசமில்லை.

குழம்பித் தவித்த மூளையையே கைகளில் ஏந்திக்கொண்டவள் போல தலையைக் கைகளில் தாங்கி, அந்த விமானநிலைய காத்திருப்போர் இருக்கையொன்றில் சோர்ந்துபோய் பலமிழந்தவளாக அமர்ந்திருந்த அந்தச் சிறுமி, தன் வாழ்நாளில் மிக மிக நிராதரவாக உணர்ந்த நாள் அது எனலாம்.

ஆயுதமாம்… பெரிய ஆயுதம்… இதை ஏன் நேற்று நான் மதுரா ஆண்ட்டியைப் பார்க்க வந்த அந்த இளைஞனிடமிருந்து திருட வேண்டும்? எல்லாம் என் மூளைகெட்ட புத்தியினால் அல்லவா வந்தது!

எல்லாவற்றிற்கும் நான்தான் காரணம்.

மதுரா ஆண்ட்டியைப் பழிவாங்குகிறேன் என்கிற பெயரில் என்மேல் பாசம் வைத்த பாவத்திற்கு அத்தையை இப்படி ஒரு சிக்கலில் மாட்டிவைத்துவிட்டேனே!

என்று அவள் தவித்துக்கொண்டிருக்கும்போதே, ‘திங்க் ஃபார் தி டெவில்’ கதையாக நேற்று அவள் சந்தித்த அந்த இளைஞன் வேக வேகமாக, கிட்டத்தட்ட ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டவன் போல மிதமிஞ்சிய பரபரப்புடனும் பதற்றத்துடனும் விரைந்தோடி வந்தவன், நேராகச் சென்று கஸ்டம்ஸ் அதிகாரியின் அறைக்குள் நுழைந்தான்.

அந்த அதிகாரி அவனுக்கு முன்பே பழக்கப்பட்டவர் போல அவனைக் கண்டதும் மரியாதை தருபவர் போல எழுந்து நின்று அவனது கைகளை நட்புடன் பற்றிப் புன்னகைத்தார்.

அதிகாரியின் புன்னகைக்குப் பதிலாக அந்த இளைஞனும் புன்னகைத்தாலும், உடனேயே அவனது பார்வை அவரது டேபிளில் கிடந்த குறுவாளின் மீது மின்னலெனப் பாய்ந்தது. அந்த நொடியில் அவனது கண்களில் வெகு ஆவேசமாக மின்னி மறைந்த கோபக்கனலை மட்டும் ஷைலு பார்த்திருந்தாளானால், பின்னாளில் நடக்கவிருந்த பல துன்பங்களிலிருந்து தன் அத்தையைக் காப்பாற்றியவளாகி இருப்பாள்.

ஆனால், அதற்குள் அதிகாரியையும் அவனையும் மறைத்துக்கொண்டாற்போல மேலும் இருவர் அந்த அறைக்குள் நுழையவே, ஷைலு மீண்டும் தன் அத்தைக்கு என்ன ஆகுமோ என்ற மன விசாரத்தில் மூழ்கியவளாக மிகுந்த பதற்றத்துடன் அத்தையை அழைத்துப்போன திசையில் பார்வையைப் பதித்துக்கொண்டாள்.

இந்த மனிதனுடைய குறுவாள்தான் இது. இதை நான்தான் எடுத்து அத்தையின் கைப்பையில் வைத்தேன் என்று சொன்னால், இப்போதுள்ள நிலையில் அந்த உண்மை தன்னை எங்கே கொண்டுபோய் நிறுத்துமோ? தெரியவில்லை. அத்தையானால் தன்னைவிட வயதில் மூத்தவள்… அவளால் இந்தச் சூழலை மிகப்புத்திசாலித்தனமாகக் கையாள முடியும். நடந்தது, நடந்ததாகவே இருக்கட்டும். தான் குறுவாளை எடுத்ததை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை எனும் போது எதற்காக அதை வெளியில் சொல்லுவானேன்?

தனது யோசனை இப்படிச் சுயநலமாக மாறிப்போனதை எண்ணி ஒருபக்கம் ஷைலுவுக்குத் துக்கமும் குற்ற உணர்வும் பொங்கிப் பொங்கி வந்தாலும், மறுபக்கம் ஏதும் செய்ய இயலாத ஏதிலியான சூழலில் மாட்டிக்கொண்டு திணறுவதில் அவளுக்கு மூச்சு முட்டியது.

இப்படியே தன் எண்ணங்களுடனும் குற்ற உணர்வுடனும் அவள் போராட்டம் நடத்தியது எவ்வளவு நேரமோ? தெரியாது.

டக் டக்கென்று ஹீல்ஸ் ஒலிக்க அவளருகே வந்து அமர்ந்த அதிநவீன இளம்பெண்ணொருத்தி, “மிஸ்… கிளம்புங்க… க்விக்… க்விக் பாஸ் இஸ் ஆஸ்கிங் அஸ் டு கெட் ரெடி வித் இன் 5 மினிட்ஸ். நமக்கான சார்ட்டர்ட் ஃப்ளைட் இஸ் கெட்டிங் ரெடி நவ்!”

என்று அவளைப் பயணத்திற்கு உந்தியதும்தான் நிகழ் உலகிற்குத் திரும்பினாள்.

அந்தப் பெண்ணின் உத்தரவில் ஷைலு குழம்பித் தான் போனாள்.

யார் இவள்?! திடீரென்று எங்கிருந்தோ வந்து பக்கத்தில் அமர்ந்துகொண்டு தன்னை கிளம்ப வேறு சொல்கிறாளே!

எங்கே கிளம்புவது? எதற்கு கிளம்புவது?!

ஷைலு பேஸ்தடித்துப்போய் அந்தப் பெண்ணைப் பார்த்து மழுங்க மழுங்க விழித்துக்கொண்டிருக்க, திடீரென உதயமாகி அருகமர்ந்தவளோ கொஞ்சமும் அயராமல்… ”யூ மிஸ் ஷைலாத்ரி, ஆம் ஐ ரைட்!” என்றதோடு பதிலை எதிர்பாராமல் கைகொடுத்து ஷைலுவை எழுப்பிக்கொண்டு, சொல்லப்போனால் கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு விரைந்த நடையுடன் கண்ணாடிக் கதவைத் தள்ளித்திறந்துகொண்டு 5-ஆம் எண் பிளாட்ஃபார்முக்கு ஓடினாள் என்றே சொல்லலாம்.

ஒரு நொடி திக்பிரமை அடைந்தவளாய் மூளை மரத்துப் போய் அவளுடன் இணைந்து ஓடத் தொடங்கிய ஷைலு, உடனே சுதாரித்துக்கொண்டவளாகி…

‘ஹே… ஹூ ஆர் யூ? என்னை எங்க கூட்டிட்டுப் போற? நான் வரல, என் அத்தை இங்க இருக்காங்க. ஐ ஷுட் சேவ் ஹெர் நவ்…’

என்று கத்திக்கொண்டே கைகளை உதறி விடுவித்துக்கொண்டு அவளிடமிருந்து விலகி எதிர்திசையில் ஓடத் தொடங்கினாள்.

‘ஊஃப்!’ என்றொரு ஓசையுடன் வாயைக் குவித்து ஸ்டைலாக ஊதிய அந்தப் பெண்ணோ கொஞ்சமும் அசராமல் இரண்டே எட்டில் ஷைலுவை எட்டிப்பிடித்து,

’ப்ளீஸ் டோண்ட் டெஸ்ட் மை பேசன்ஸ்! கம் வித் மீ’ என்று கொஞ்சம் கடினப்பட்ட முகபாவத்துடன் அவளது தோளை அழுத்திப்பிடித்து இழுத்துக்கொண்டு மீண்டும் முன்னேறிச் செல்லத் தொடங்கினாள்.

ஷைலுவால் அவளது பிடியிலிருந்து திமிறவே முடியவில்லை. இவளது இஷ்டத்தையும் கஷ்டத்தையும் பார்த்துக்கொண்டிருக்கத் தனக்கு நேரமில்லை என்பதாக அந்தப் பெண் ஷைலுவை கிட்டத்தட்ட இழுத்துச் சென்று அங்கிருந்த சார்ட்டர் விமானத்தில் ஏற்றி அமரவைத்தாள். 8 பேர் மட்டுமே செல்லக்கூடிய அளவில் மிகவும் சின்னஞ்சிறு விமானமான அதில், முன்னதாக தன் அத்தையைக் கண்டதும் ஷைலுவுக்குக் கொஞ்சம் பதற்றம் தணிந்தார்போல் இருந்தாலும் அதிர்ச்சி குறைவதாய் இல்லை.

ஏன் அத்தை இங்கிருக்கிறாள்? அங்கே விசாரணை என்னவாயிற்று? அவள் முகம் ஏன் இத்தனை இறுகிப்போயிருக்கிறது! தன்னைக் கண்டதும் மிகப்பெரும் விபரீதத்தில் சிக்கிக்கொண்டாற்போல் இறுகக் கண்களை மூடித் திறந்தாளே… அதன் பொருள் என்ன? நெருப்புக்குப் பயந்து வாணலியில் குதித்த கதையாகிக்கொண்டிருக்கிறதா தங்களது நிலை?!

இப்படிப் பலப்பல விதமான விடையறியாக் கேள்விகளுடன் நெஞ்சுக்குள் பயப்பந்து உருள, தங்களைச் சுற்றி நடப்பதை அவதானிக்க முடியாதவர்களாகி பேஸ்தடித்துப்போனவர்களாகவே அத்தையும் மருமகளும் அந்த சார்ட்டர் ஃப்ளைட்டில் அமர்ந்திருந்தார்கள். உடன் வந்த இளம்பெண் மிக ஸ்டைலான ஆங்கிலத்தில்,

”இப்போது நாம் செல்லவிருப்பது அந்தமான் நிகோபார் ஐலாண்ட்ஸ். தங்கள் பயணம் மிக இனிமையானதாக நீடிக்கட்டும்” என்றாள்.

என்ன, அந்தமானுக்கா? ஏன்?!

தன்மத்ராவுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

’அங்கே எங்களுக்கு என்ன வேலை? நாங்கள் கவுகாத்திக்கு அல்லவா செல்ல வேண்டும்?’ – அச்சத்துடன் அவள் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கும்போதே, அழுத்தமானதும் அவசர அவசரமானதுமான காலடி ஓசைகளுடன் ஓடிவந்து ஃப்ளைட்டில் ஏறினான் அந்த இளைஞன். அவனுக்காகத்தான் ஃப்ளைட் காத்திருந்தது போலும்!

ஓடிவந்து ஏறியவன் இன்னும் இருவர் உள்ளே அமர்ந்திருக்கிறார்கள் எனும் உணர்வே இன்றி அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காதவனாக,

‘அயம் இன் ஹரி. கெட்டிங் ஸ்டார்ட் யார். வில் ரீச் போர்ட் பிளேர் வித் இன் 2 அவர்ஸ். கோ… கோ… கோ பாஸ்ட்’ என்று விமானியை முடுக்கினான்.

அவனை நிமிர்ந்து பார்க்கவும் கூசியவளாக தன்மத்ரா முகத்தை ஜன்னலோரம் திருப்பிக்கொண்டாள். அவளது கண்கள் கலங்கியிருந்தனவோ என்று ஷைலுவுக்கு சந்தேகமாயிருந்தது.

ஆனாலும் இந்தப் புதியவனுக்கும் தன் அத்தைக்கும் இடையில் விசாரணை அறையில் வைத்தே ஏதோ விரும்பத்தகாத உரையாடல் நிகழ்ந்திருக்கக்கூடும் என்றும் அவளுக்குத் தோன்றியது.

காணாமல் போன பொருளுக்கு உரியவன் என்பதால் ஒருவேளை திருட்டுப் பட்டம் சுமத்தி அவமானப்படுத்தியிருப்பானோ? அதைத் தாங்க முடியாமல்தான் அத்தை கண்கலங்கித் தவிக்கிறாளோ?! என்று தோன்றியதும்…

உடனடியாகத் தன் அத்தையின் துயர் துடைக்கும் முயற்சியில், இவர்களுக்குப் பக்கவாட்டில் முன்னிருக்கையில் வாகாகச் சாய்ந்து ஒரு அரசனைப் போல கால்களைப் பரப்பிச் சட்டமாக அமர்ந்தவாக்கில் இறுக்கமான முகத்துடன் வலது கையால் தனது முன்னுச்சி முடியைக் கோதிக்கொண்டிருந்தவனை நோக்கி இவள் நகர்வதை அறிந்ததும், இவளை நிமிர்ந்தும் பாராமலே அடிக்குரலில் ஸ்பஷ்டமாக அவன் கர்ஜித்தான்:

’சிட் டவுன் ஐ சே… இடியட்!’ வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாற்போன்ற மிக மிகக்கடுமையான அந்த ‘இடியட்’ உச்சரிப்பில் ஷைலு நடுநடுங்கிப்போனாள்.

கொஞ்சமும் எதிர்பார்த்திராத அவமானம் இது.

ஷைலுவுக்குக் குபுக்கென கண்கள் நிறைந்து கண்ணீர் அருவியாகக் கொட்டத் தொடங்கியது.

(தொடரும்)

Series Navigation<< விசுவநாதபுரி – 3

Author

Related posts

ஞான நூல்கள் – 8 & 9

பாகோஸ் என்கிற நபும்சகன் – 3

அறிவெழுச்சி: 5