1. சும்மா கிறுக்குகிறேன் என்பாள்
கிறுக்கி கிறுக்கிக் கிழித்தாள்
அந்தப் பக்கம் களர்நிலம் போன்றது என்பாள்
படுபயங்கரமான விளைச்சல் உள்ள களர்நிலம்
எல்லா இரகசியமும் ஒளிந்த பக்கம்
யாவருக்கும் கிறுக்கல்களின் குவியல்
தனக்கே அது உரித்தான பக்கங்களாய்
ஒவ்வொரு நோட்டுகளும்
தாங்கும் அப்பக்கங்களின் சுமை அதிகம்
அவை தனித்தே இருப்பவை
அடையாளங்களோடு…
*********************************************************
2.பழுதாகும் பொழுதுகளில் எல்லாம் குறுக்கிட்டுத்
தன்னைத் தானே சீரமைத்துக்கொள்கின்றன
அடிக்கடி புனரமைக்கும் தேவையே இல்லாதபோதும்
குறுக்கிட்டுத் தோன்றி தன்னைத் தானே
சீர்படுத்திக்கொள்கின்றன
அதற்கு ஒரு காரணம் தேவை கொடுக்க
மனம் எண்ணுகிறது
எதுவும் அகப்படாதபோது தனக்கு
எப்போதும் கிடைக்கும் நேரங்களை உறிந்து
சீரணிக்கின்றன
என்று காலவதியாகும் என்றே தெரியாத
வானவில்லாய்த் தோன்றி மகிழ்வின்
விளிம்புகளில் கீச்சலம் காட்டுகின்றன
கயிறு அறுந்த பட்டமாய்த் திக்குத்திசை தெரியாது
உலாவி மாட்டிக்கொண்ட ஜடமா நான்
காற்றடிக்கும் போதெல்லாம் கலங்கடிக்கிறாயே
கருவறைத் தெய்வமாய் இருப்பினும்
எந்த மூலையில் இருக்கிறாயென்றே தெரிவதில்லை
திடீரென்று குடமுழுக்கு கண்ட மாட கோபுரங்களோடான
கோயிலாய்த் தோன்றுகிறாய்
தோன்றக் கூடாத நேரங்களிலும் தோன்றுவேன்
என்று அடம்பிடிக்கும் குழந்தையா என்ன?
எவ்வாறாயினும் அதிகக் கனம் கொடுத்துவிடாதே
3.கதைசொல்லி ஒருவன் கதையில்
அவன் கதைகளின் ஒலிகளில் ஒளிபவன்
அவ்வாறே பழகியவன்
சாயல் சாயலாய்த் தொடரும் பிம்பங்களில்
ஒளிந்துள்ள தன்னைக் காண விரும்பாத மயக்கமோ
தெளிந்த கண்களுக்குத் தாமரை
அடர்கருப்பாய்த் தெரிய
4.மழை வந்து சேர்த்து விட்டது வரப்புக்களால்
பிரிக்கப்பட்டிருந்த வயல்களை
அதற்கு அந்நிலத்தை சிறு குளமாகவோ பெரும்
வனமாகவோ மாற்றவே உத்தேசம்
கண்கள் அதைக் காணப் பொறுக்காமல் கைகளைக்
கால்களைப் பணிக்கின்றன
மீண்டும் பாழாக்கியது மழை வரப்புகளை என்று
முணுமுணுத்தனர்
வேலியிட்டுப் பாதுகாக்கும் இலாவகம் கைவந்தவர்கள்
அவர்கள் என்று பக்கத்து நாட்டு
ஆட்டு மந்தைக்காரர் சொல்லிக்கொண்டிருக்க
கருப்பு ஆடு ஒன்று நுழைந்தது வேலிக்குள்
என்னதான் பலாமான வேலிகளிலும் உள்ள ஓட்டைகள்
வெள்ளாட்டிற்குத் தெரிந்துவிடுகின்றன
நாட்டின் எல்லை போன்று அத்துணைப் பாதுகாப்பாக
இவை இல்லையே…
5.எந்தக் காலம் என்று தெரியாத பருவத்தில் அடர்வனத்தில்
மாட்டிக்கொண்டு சகதிக்குள் ஆழ்கிறேன்
இது எவ்வகைக் காடு
பலத்த காற்று அடிக்கும் போதெல்லாம்
மரங்கள் அந்தரத்தில் கொடி கட்டி ஊஞ்சலாடுவது
போலுள்ளது
சில சமயம் நானே மரமாகவும் இருக்கிறேன்
அந்தக் கொடியாகவும்
சில நேரங்களில் அந்த மரங்களில் இருந்து விழும்
இலைகளாகவும்
உறுதியாக இது கோடையாக இருக்க முடியாது
காலங்காலமாக புதிது புதிதாகத் தோன்றும்
பருவங்களில் இதுவும் ஒன்று போலும்
பல நேரங்களில் பறவைகளாகவே நாட்கள் கழிகின்றன
என்நேரம் தாழப் பறந்தும்
புதரில் மறைந்திருந்த புலிகளிடம் சிக்காமல்
பறந்து வருகிறேன்
உண்ணிப்பாகப் பார்த்தால் அந்தப் புலி
தீவிர ஆலோசனையில் என்னைப் போன்றே உள்ளது
புலியைப் போல் தனித்திருந்து சிந்திக்கப் பல
சமயங்களில் போர்க் காலத்தின் நாட்டின்
எல்லையோர வீடுகள் கிடைத்துவிடுகின்றன
எதையோ அடையாத அதிருப்தியில்
இறுதியாக சகதிக்குள் முழுமையாக ஆழ்ந்து விட்டேன்.