பெண்ணெழுத்து (1947-க்கு முன்) கட்டுரைகள் – தொகுதி 01
(தேர்வும் தொகுப்பும்) தி. பரமேசுவரி, க. அஸ்வினிகுமாரி
பரிசல் புத்தக நிலையம்
ஆதிக்காலம் முதல் பெண்கள் தன் மனதில் தோன்றுபவற்றை, தன்னைப் பாதித்தவற்றை ஏதோ ஒரு வடிவில் பதிவு செய்திருந்தனர். ஆனாலும், சுமார் நூறு நூற்றைம்பது வருடங்களுக்கு முந்தைய காலகட்டங்களில் பெண்கள் எழுதியவை முறையாக ஆவணப்படுத்தப்படாமல் இருந்ததால், அவர்களைப் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு நிறைய விஷயங்கள் தெரியவில்லை.
1947-க்கு முந்தைய காலகட்டங்களில் நிறையப் பெண்கள் அப்போது வெளிவந்த பத்திரிகைகளான மங்கை, கிரஹலட்சுமி, குடி அரசு, மாதர் மறுமணம், பாரத மணி, சிந்தாமணி, ஜகன்மோகினி, திராவிடன் சக்தி போன்றவற்றில் கட்டுரைகள் எழுதியுள்ளனர். அவையெல்லாம் முறையாகத் தொகுக்கப்படாமலே அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடந்தன. அந்தப் பெண்களின் வாழ்க்கை, சமூகத்தில் அவர்களது நிலை, அவர்களது எழுத்து எல்லாம் முறையாக ஆவணப்படுத்தப்படாமல் இருந்தன. இந்தப் புத்தகத்தில் ஏறத்தாழ 23 பெண்களின் வாழ்க்கையும், அவர்களது திறமையும், அவர்களின் எழுத்துகள் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.
இதற்கான முயற்சியை முன்னெடுத்துச் செய்தவரான தி. பரமேசுவரி கல்வித்துறையில் பணிபுரிகிறார். நிறைய கவிதைத் தொகுப்புகளும், கட்டுரைத் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார். எண்ணற்ற விருதுகள் பெற்றவர். சிலம்புச் செல்வர் திரு. ம.பொ.சியின் பேத்தியாவார். ம.பொ.சியின் நூல்களைத் தொகுத்தும் பதிப்பித்தும் வருவதைத் தன் வாழ்நாள் பணியாகக் கொண்டுள்ளார்.
க. அஸ்வினிகுமாரி மேனிலைப் பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவர். வாசிப்பில் ஆர்வமுடையவர். பெண்ணெழுத்து பற்றிய தேடலில் தீவிர முனைப்புடன் செயல்படுபவர்.
வேதகாலங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகராகத் திகழ்ந்தனர். கல்வி கற்றனர். வேதங்களில் தேர்ச்சி பெற்ற கார்கி, மைத்ரேயி, லோபோ முத்திரை போன்ற பெண்கள் அரசவைகளில் அறிஞர்களுடன் விவாதம் செய்து இருக்கின்றனர். அதன்பின் புராண இதிகாச காலம், சங்க காலம் படிப்படியாகத் தற்போதைய காலம் வரை பெண்களின் நிலையும் உரிமைகளும் கடமைகளும் மாறிக்கொண்டே இருந்தன. தாய்வழிச் சமூகத்தில் இருந்து தந்தைவழிச் சமூகமாக மாறிய பின் அரசியலிலும் சமூக பொருளாதார நிலையிலும் ஆண் தலைமையேற்றுக்கொண்டான். தனக்குக் கீழான நிலையிலே பெண்களை வைக்கத் தொடங்கினான். பெண்கள் ஓர் உடலாகவும், நுகர்வுப் பண்டமாகவும் பார்க்கப்பட்ட நிலையில், தன் உடலைக் கடந்து, தன் மனதையும் சிந்தனைகளையும் விருப்பு வெறுப்புகளையும் நிலைநிறுத்தத் தானே போராடத் தொடங்கினாள்.
இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள 23 பெண்களும் சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் எழுதியவர்கள். மருத்துவம், அரசியல், கல்விப் பணி, விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள். பள்ளிக்குப் போக முடியாவிட்டாலும் அடிப்படைக் கல்வியை வீட்டில் கற்றனர். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தனர். காதல், கலப்பின, சுயமரியாதைத் திருமணங்கள் செய்தவர்கள். மாதர் சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் தோற்றுவித்துப் பெண்கள் சுய தொழில் கற்றுக்கொள்ள வகை செய்தனர்.
காந்தியத் தாக்கம் கொண்டவர்களாக, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தனர். கதராடை அணிவது, மது, தீண்டாமை, சாதி ஒழிப்பு, பால்ய விவாகம் செய்வதைத் தடுக்கும் சட்டங்களுக்காக, விதவைகள் திருமணம், பெண்களின் மேல் திணிக்கப்படும் அர்த்தமற்ற சாதிச் சடங்குகள், பெண்களுக்கான ஓட்டுரிமை எனச் சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவதற்கு எனப் பல வழிகளிலும் போராடினர். இந்தப் புத்தகத்தில் உள்ள பெண் ஆளுமைகளில் பலரைப் பற்றித் தெரிந்திருப்போம். சிலரைப் பற்றி ஓரளவாவது தெரிந்திருப்போம்.. அறியப்படாத பெண்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களின் சாதனைகளைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
முதல் பெண்ணாக வரும் நீலாம்பிகை அம்மையார் மறைமலை அடிகளின் பெண் ஆவார். வடசொல் தமிழ் அகராதித் துறையில் நுழைந்த பெண் என்னும் பெருமை இவருக்கு உண்டு. சைவ மாதர் கழகம் என்னும் பெண்களின் அமைப்பைத் தோற்றுவித்தவர். காதல் மணம் புரிந்த இவர் நிறைய நூல்களை எழுதியுள்ளார்.
நீலாவதி ராமசுப்பிரமணியம் புரட்சிகரமான பெண்ணியவாதி எனப் பெரியாரால் போற்றப்பட்டவர். குஞ்சிதம் குருசாமியின் கலப்புத் திருமணம் பெரியார் முன்னிலையில் நடைபெற்ற முதல் சுயமரியாதைத் திருமணம். பாரதிதாசனின் கவிதைகளை முதன்முதலாகப் பதிப்பித்த பெருமையும் இவருக்கு உண்டு. சிவகாமி சிதம்பரனாரின் திருமணம் பெரியார் நடத்திய முதல் விதவை மறுமணம் என்ற பெருமையைப் பெற்றது. அன்னபூரணி அம்மையாரின் தந்தை அப்பாத்துரை அயோத்திதாசப் பண்டிதரின் நேரடித் தொண்டரும் பெரியாரின் தோழரும் ஆவார். இவரது திருமணமும் சுயமரியாதைத் திருமணம்தான்.
முத்துலட்சுமி ரெட்டி 1912-இல் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றவர். இந்திய மாதர் சங்கத்தின் முதல் தலைவர். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர். 1925-இல் சட்டசபை துணைத் தலைவர். அவ்வை இல்லத்தை உருவாக்கியவர். சென்னையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கியவர்.
வி. பாலம்மாள் வரலாற்று நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர். இவரது நூல்கள் சென்னையிலும் வங்காளத்திலும் பள்ளி மாணவர்களுக்குப் பாட நூல்களாக இருந்தன. மாதர் சேவா ஸ்தாபனம் அமைத்துப் பெண்கள் சுய தொழில் செய்வதை ஊக்குவித்தவர். கி. சாவித்திரி அம்மாள் மொழிபெயர்ப்பாளர் கட்டுரையாளர் சிறுகதை ஆசிரியர் மற்றும் சிறந்த சமூகச் செயற்பாட்டாளர். எஸ். விசாலாட்சி பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சங்கு சுப்பிரமணியத்தின் சகோதரி. மங்கை இதழை எழுத்தாளர் குகப்பிரியையை அடுத்துப் பொறுப்பேற்று நடத்தியவர். நிறைய நூல்கள் எழுதியவர்.
பிரபல எழுத்தாளர் கொனஷ்டையின் மகள் குமுதினி. இரவீந்திரநாத் தாகூரின் யோகாயோக் என்னும் புதினத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர். எஸ். அம்புஜம்மாள் காந்தியின் வார்தா ஆசிரமத்தில் ஓராண்டு காலம் தங்கியவர். ‘எனது சுவீகாரப் புத்திரிகளில் நீயும் ஒருத்தி’ என்று காந்தியால் பாராட்டப்பட்டவர். ஹிந்தி பிரச்சார சபாவின் வளர்ச்சிக்கு உதவியவர். இந்திய அரசு 1984-இல் பத்மஸ்ரீ பட்டம் இவருக்கு வழங்கிக் கௌரவித்தது. தமிழக அரசும் சென்னையில் உள்ள சாலை ஒன்றிற்கு இவரின் பெயரைச் சூட்டிச் சிறப்புச் செய்தது. இவரும் நிறைய நூல்கள் எழுதியுள்ளார்.
வை.மு. கோதைநாயகி அம்மாள் முதன்முதலில் துப்பறியும் நாவல்கள் எழுதிய பெண் எழுத்தாளர். முதல் பெண் பத்திரிகைப் அச்சக உரிமையாளர். ராஜாஜி – காந்திஜியின் பேரனான ராஜ்மோகன் காந்திக்கு அந்தப் பெயரைச் சூட்டியவர். திரைப்படத் தணிக்கைக் குழுவின் உறுப்பினராக இருந்தவர்.
பாரதியின் இளைய மகள் சகுந்தலா பாரதி கடையம் சத்திரம் ஆண்கள் பள்ளியில் முதன்முதலில் படித்த பெண் என்ற பெருமை உடையவர். ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன் அந்தக் காலத்திலேயே அமெரிக்கச் சுற்றுப்பயணக் கட்டுரை நூல்களை எழுதியவர். கர்நாடக மாநில சாகித்ய விருது முதல் நிறைய விருதுகள் வாங்கியவர். நிறைய நூல்கள் எழுதியுள்ளார். வசுமதி ராமசாமியின் புதல்வர் அசோக் லேலண்ட் நிர்வாக இயக்குனர் சேஷசாயி ஆவார். சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒளிபரப்பாளர்களுள் இவரும் ஒருவர். நிறைய புத்தகங்கள் எழுதியவர்.
குகப்பிரியையின் தமையனார் கேசவர்த்தினி கூந்தல் எண்ணெய் நிறுவனத்தின் நிறுவனர். மங்கை என்னும் பெண்கள் இதழைத் தொடங்கியவர். நிறைய நூல்கள் எழுதியவர். டி.கே. பட்டம்மாள் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைத் திரைப்படங்களிலும் மேடைக் கச்சேரிகளிலும் பாடியவர். பத்மபூஷன் விருது முதல் நிறைய விருதுகளைப் பெற்றவர். திரிபுரசுந்தரி என்ற லட்சுமி தென்னாப்பிரிக்காவில் மருத்துவராகப் பணியாற்றியவர். எழுத்தாளரான இவர் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாள் பாரதி பாரதியின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ளார். நிறைய நூல்கள் எழுதியுள்ளார். லட்சுமி கிருஷ்ணமூர்த்தி தமிழின் முதல் பெண் பதிப்பாளர். 1954-இல் வாசகர் வட்டம் என்ற அமைப்பை உருவாக்கிப் பல நல்ல நூல்களை வெளியிட்டவர். தி. ஜாவின் அம்மா வந்தாள், எம். வி. வெங்கட்ராமின் வேள்வித்தீ, நீல. பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம், லா. ச. ராவின் அபிதா போன்றவை வாசகர் வட்டத்திற்காகவே எழுதப்பட்ட நூல்கள். இவர் அறிமுகப்படுத்திய புதிய எழுத்தாளர் சா. கந்தசாமி ஆவார்.
சகோதரி R. S. சுபலட்சுமி அம்மாள் தான் படித்த பிரசன்டேஷன் கான்வென்ட்டில் ஆங்கிலேயர்கள் மட்டுமே பணியாற்றிய அந்தப் பள்ளியின் முதல் இந்து ஆசிரியர் ஆவார். 1913-இல் சாரதா இளம் கைம்பெண்கள் இல்லம் தொடங்கியவர். கே. பி. சுந்தராம்பாள் தன் சொந்த குரலில் பாடி நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்தவர். 1970-இல் பத்மஸ்ரீ விருதினைப் பெற்றவர். அந்தக் காலத்திலேயே ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நபர்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய போது அதில் தீவிரமாக ஈடுபட்டவர். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தேவதாசி முறை ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழகத்தின் அன்னி பெசன்ட் என்று அண்ணாவால் பாராட்டு பெற்றவர்.
பெண்களுக்கான எந்த உரிமைகளோ, சுதந்திரமோ இல்லாத அந்தக் காலத்தில் கூட பெண்கள் கல்வி கற்பதிலும், பிற மொழிகளைக் கற்பதிலும் தீவிர ஈடுபாடு காட்டினர். ஆனால் அந்த வாய்ப்பு பெரும்பாலும் வசதி வாய்ப்பு படைத்தவர்களுக்கே கிடைத்தது. அரசியல் சமூகப் போராட்டங்களில் பங்கெடுத்தனர். பெண்களுக்கான கல்வி, சுய தொழில், தன் காலில் நிற்கும் சுதந்திரம் என்பதன் அருமையை உணர்த்தினர். எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் உள்ள இந்தக் காலத்திலேயே கூட இன்னும் பாலின வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. பாலின சமத்துவம் வேண்டியதாக இருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் வரும் பெண்கள் ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் தங்கள் அடிப்படை உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் போராடியதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளைச் செய்துள்ள அவர்கள் வாழ்வைப் படிக்கும் போதே பிரமிப்பாக உள்ளது. தனிப்பட்ட தங்கள் வாழ்வியல் முன்னேற்றத்தைத் தாண்டிச் சமூகத்தில் உள்ள எல்லாப் பெண்களுக்குமான வளர்ச்சிக்காகவும் போராடினர். நிறைய எதிர்ப்புகளைக் கடந்து தங்கள் லட்சியங்களை அடைவதில் மட்டுமே ஒரே நோக்காகச் செயல்பட்டனர்.
இந்தப் புத்தகம் அந்தக் கால ஆளுமைப் பெண்களைப் பற்றிய ஆவணமாகவும், இன்றைய தலைமுறையினர் தங்களது முன்னோடிகளின் சாதனைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் ஒரு கையேடாகவும் இருக்கிறது.
தொகுப்பாசிரியர்கள் இருவரும் இப்பெண்களைப் பற்றியும் அவர்களின் எழுத்து பற்றியும் விவரங்களைத் திரட்டுவதற்குச் சிரமப்பட்டுச் செய்த பணி மிகவும் பாராட்டுக்குரியது. இன்றைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு.