கவிதையைப் பற்றிப் பாரதியின் வரிகளில் சொன்னால், “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” எனலாம்.
மேலும்,
‘நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்றான்.
அது 2006 ஆம் ஆண்டு என்று நினைவு. இந்தியத் தூதராக, ஒரு தமிழர் (MOH ஃபரூக் மரக்காயர்) அமைந்த நல்வாய்ப்பில் இந்தியத் தூதரக அரங்கில் பாரதி நினைவு நாள் விழாவை ரியாத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்தது. அதில் ‘மகாகவிகள் – ஓர் ஒப்பீடு‘ என்கிற தலைப்பில் அடியேன் எழுதிய ஆய்வுரை வேறொரு நண்பரால் வாசித்தளிக்கப்பட்டு நல்ல பாராட்டைப் பெற்றது.
ஆறுகளாகவும், ஏரிகளாகவும், ஆன்மிகத் தெப்பக்குளங்களாகவும் ஆயிரம் உண்டிங்கு நீர்நிலைகள். ஆயினும் ஒற்றைப் பேரலையில் ஒரு பிரளயத்தையே உண்டாக்குகிற ஆற்றல் மகாசமுத்திரங்களுக்கே உரித்தானது. மகாகவிகளும் அப்படித்தான்.
காலத்தின் கோலத்தைக் கவினுற வரைந்துகாட்டுபவன் கவிஞனென்றால், ஒரு கால மாற்றத்தையே தன் தூரிகையில் மகரந்தம் போல மறைத்துவைத்துள்ளவன் மகா கவிஞன். ஒரு மகா கவிஞனின் மதமாக மனிதம்தான் அமைய முடியும். “உண்மையின் பேர் தெய்வம் என்போம், அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யென்று சொல்வோம்” என்று அதனால்தான் அவனால் சொல்ல முடிகிறது.
தாய்மொழியில் தன்னை அவன் வெளிப்படுத்திக் கொண்டாலும், அவனுடைய மொழி தாயின் மொழி. ஆசிரியனின் மொழி. ஆளுமையின் மொழி.
அவனுக்கு இருக்கலாம் அநேகப் பெயர்கள். கலீல் ஜிப்ரானாக, ரவீந்திரநாத் தாகூராக, அல்லாமா இக்பாலாக, வால்ட் விட்மனாக, ஷெல்லியாக, பைரனாக, மில்டனாக அவனுக்கு இருக்கலாம் ஆயிரம் பெயர்கள். பெயர்க்க இயலாத அவனுடைய குரலோ அகிலங்கள் தோறும் ஒன்றுதான்.
அதனாற்றான், “பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு” என்று பைந்தமிழில் பாரதி பாடுவதும், “சாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்தோஸ்தான் ஹமாரா” என்று அல்லாமா இக்பால் உருதுவில் பாடுவதும் ஒரே உணர்வை நமக்களிக்கிறது.
தனக்கு முந்திய கவிச்செல்வத்தையெல்லாம் தனதாக்கி அதிலே தன்னையுங்கலந்து ஒரு வெள்ளப்பெருக்காக வெளிப்பட்டவன் நம் சுப்பிரமணிய பாரதி.
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்று பாடியதுடன் நில்லாது, தானும் அவற்றிலிருந்து ஆக்கமும் ஊக்கமும் பெற்றான்.
ஒரு சமூகம் இருட்டுப் புதைகுழி நோக்கி இழுத்துச் செல்லப்படும்போதும் கலகம் செய்யத் துணியாத மக்களுக்காகக் கவலைப்பட்டவன் லெபனான் மகாகவி கலீல் ஜிப்ரான் என்றால், ‘தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலைதவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற பாரத நாட்டை வாழ்விக்க வேண்டுமென்று’ நம் பாரதியும் துடித்தான்.
அமெரிக்க நாட்டின் சிறந்த கவிஞருள் ஒருவராக வால்ட் விட்மனைச் சொல்வர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கவிதைக் கொடையாளி அவன். அவனைப் பற்றி நம் பாரதியார், “குடியாட்சி, ஜனாதிகாரம் என்ற கொள்கைக்கு மந்திரி ரிஷிகளில் ஒருவராக இந்த வால்ட் விட்மனை ஐரோப்பிய சமூகத்தார் நினைக்கிறார்கள். எல்லா மனிதரும், ஆணும் பெண்ணும், குழந்தைகளும் எல்லாரும் சமானம் என்ற சத்யத்தைப் பறையடித்த மஹான்களில் இவர் தலைமையானவர். ……” என்று எழுதிப் போற்றி, அதையே தனது கவிதைகள் வாயிலாக,
“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி”
என்றும்,
“அடிமைக்குத் தளையிcalcலை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்றார்”
என்றும் பாரதி பாடும்போது அங்கே ஒலிப்பது விட்மனுடைய குரலுமல்லவா?!
“எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று பாடுவதிலும் அதே குரல் ஒலிக்கத்தான் செய்கிறது.
தன்னுடைய (Starting From Paumanok) ஒரு பாடலிலே அமெரிக்க மாகாணங்கள் ஒவ்வொன்றாக அதன் சிறப்பியல்புகளோடு விட்மன் சொல்லிச் செல்வது போலத்தான் பாரதியின் பாரத தேசம் பாடலிலே வெள்ளிப்பனிமலையும், சேது, வங்கம், சிந்து நதி, சேரநன்னாடு, சுந்தரத்தெலுங்கு, சிங்க மராட்டியர், ராசபுதனத்தாரும் அடுத்தடுத்து வந்து போகின்றனர்.
அதுபோல ‘சாங் ஆஃப் த பேனர் அட் டே பிரேக்’ (Song of the Banner at Daybreak) என்கிற ‘வைகறையிலே கொடிப்பாட்டு’ பாரதியிடம் ‘தாயின் மணிக்கொடி’யாகிறது. தாயினுஞ்சிறந்தது எதுவுமில்லை என்பான் விட்மன். பாரதியும் ‘பெற்ற தாய் நற்றவ வானினும் நனி சிறந்தவள்’ என்கிறான்.
பாரதி தமிழில் கொணர்ந்த வசன கவிதைக்கும் விட்மனே மூலமாகிறான். எனினும் விட்மன் அளவுக்குப் பாரதி யாப்பை முழுதாகப் புறக்கணிக்கவில்லை என்பதும் குறிக்கத்தக்கது.
தொடர்ந்து, ஷெல்லிதாசன் என்று பாரதி புனைபெயர் கொள்ளுமளவு பாரதியை மிகவும் கவர்ந்த ஆங்கிலேய கவியாளுமை பி. பி. ஷெல்லிக்கும் பாரதிக்கும் இருந்த சிந்தனை ஒற்றுமைகளையும் அந்த உரையில் விவரித்திருந்தேன்.
கிரேக்க இதிகாசம் ஒன்றில் மனித ஆற்றலின் குறியீடாகப் புரோமிதியஸ் (Prometheus) என்கிற ஒரு கதாபாத்திரம் உண்டு. வானவர்களிடமிருந்து நெருப்பைக் கவர்ந்து வந்து மனிதனுக்கு அளித்த அந்தப் பாத்திரத்தை முன்வைத்து, ‘கட்டற்ற புரோமிதியஸ்’ (Prometheus Unbound) என்று காவியம் செய்தான் மகாகவி ஷெல்லி. ஷெல்லிதாசனாக இருந்த, செயற்பட்ட பாரதியைத் தமிழ் மறுமலர்ச்சியின் புரோமிதியஸ் என்பார் புதுமைப்பித்தன். உண்மைதானே!
மகாகவிகளின் ஒன்றுபட்ட நற்சிந்தைகளைச் சுட்டுவதே இங்கே நோக்கம்.
(தொடருவோம்)