வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். மயங்கிக் கிடக்கும் மனது என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.
உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:
தூயவளே நீயெந்தன் சுற்றமென ஆனவளே
தோயும் நினைவாகும் தொல்லையாய் -மாய
வயத்தினில் வீழ்ந்தவெனை மீட்டிடுவாய் என்றே
மயங்கிக் கிடக்கும் மனது
இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும், கவிதைகளும்:
சின்னக்கண்ணன்
என்னமோ ஆச்சும்மா ஏதேதோ பல்நினைவு
நன்றாக வந்தே நயமாக – மின்னல்
தயங்காமல் தாக்கிடும் வானம்போல் எண்ணி
மயங்கிக் கிடக்கும் மனது
மாலா மாதவன்
எத்தனை ஆசைகள் இத்தரை வாழ்வினில்
புத்தனோ நாமும் துறந்திட – சொத்தாய்
உயரத் துடிக்கும் உவகையைக் கூட்டும்
மயங்கிக் கிடக்கும் மனது
இப்னு ஹம்துன்
வாலிப யெளவனம் வற்றி யிருப்பினும்
தோலில் சுருக்கமும் தோன்றிடினும் – போலித்
தயக்கமின்றிப் பொங்கிவரும் தாயன்பில் யார்க்கும்
மயங்கிக் கிடக்கும் மனது
சுந்தரராசன்
கடைக்கண்ணால் நோக்கினேன்! கைகூப்பேன்! வாழ்வின்
விடைதேடி உன்வீ டடைந்தேன்! நெடியோய்!
இயக்க மியக்கமின்மை யாவுமுன் னிட்டம்!
மயங்கிக் கிடக்கும் மனது.
பவளமணி பிரகாசம்
பூலோக பாரம் சுமப்பவளும்
பூ வியாபாரம் செய்பவளும்
பேசிக் கொள்ள சேதி இருக்கு
பார்த்தது கேட்டது அவ்வளவு
பொழுது போவது தெரியாது
மயங்கிக் கிடக்கும் மனது
ஹேமா செந்தில்
வியந்து பார்க்கிறேன்
ஆழ்ந்து பார்க்கிறேன்
அமர்ந்து பார்க்கிறேன்
அயர்ந்து பார்க்கிறேன்
நிமிர்ந்து பார்க்கிறேன்
நின்னைப் பார்க்க பார்க்க
ஏனோ தெரியலை
என்னிடமில்லை உன்னிடம்
மயங்கிக் கிடக்கும் மனது.
கண்மணி பாண்டியன்
வார்த்தைகள் இல்லா மொழி
கண்கள் பேசும் இதய ஒலி
எனினும் உனக்கு புரியும் என் வலி
ஆறுதல் தரும் உனது அருகாமை
மயங்கி கிடக்கும் மனது.
வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.