இதய ரத்த நாள அடைப்பில் உயிர்காக்க உதவும் அவசர கால மாத்திரைகளை யாரெல்லாம் கையில் வைத்துக்கொள்ளலாம்?
இதய ரத்த நாள அடைப்பு ஏற்படும்போது ரத்தக்கட்டியைக் கரைத்திட உதவும் ஆஸ்பிரின் + க்ளோபிடோக்ரெல் + அடோர்வாஸ்டேட்டின் மாத்திரைகளை உட்கொள்ளும்போது, ரத்தம் உறைதல் தன்மை மட்டுப்படுத்தப்பட்டு அதன் மூலம் இதய அவசரகால நவீன சிகிச்சைக்குச் செல்லும் காலம் வரை இதயத்தின் தசைகள் இறக்காமல் காக்க முடியும் என்று கூறியிருந்தேன்.
இந்த மாத்திரைகளை யாரெல்லாம் கையில் அவசரத்துக்கு வைத்துக்கொள்ளலாம்? இதை யார் வேண்டுமானாலும் உட்கொள்ள முடியுமா?
முதலில் ஒருவருக்கு ஏற்பட்டிருப்பது ஹார்ட் அட்டாக்தான் என்பது தெரிந்தால், இந்த மாத்திரைகளை உட்கொள்வது உபயோகமானதாக இருக்கும்.
அதாவது இதய சிகிச்சை வசதி குறைவான இடங்களான கிளினிக்குகள் / கிராமத்துச் சுகாதார நிலையங்கள் போன்றவற்றில், ஈசிஜி மூலமாக இதய ரத்த நாள அடைப்பு என்று தெரிந்துவிட்டால், அங்கிருந்து நகரத்தில் இருக்கும் நவீன இதய சிகிச்சை செய்யும் மருத்துவமனையை அடையும் வரை இதயத் தசைகளைக் காக்கும் முகமாக அவசர கால மாத்திரைகள் உபயோகப்படலாம்.
ஏற்கனவே இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டவர்களுக்கு, ஏற்கனவே இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் இதய ரத்த நாள அடைப்பை ஒத்த நெஞ்சு வலி ஏற்பட்டால், அவர்கள் இந்த லோடிங் டோஸ் மாத்திரைகளை உடனே பாவிக்க முடியும்.
எனினும் தற்போது இளம் வயது, நடுத்தர வயது, முதிய வயது என்று பாகுபாடின்றி மாரடைப்பு ஏற்படுவதால், திடீரெனத் தீவிரமான நெஞ்சு வலி ஏற்பட்டுப் படபடப்பு, தலைசுற்றல் போன்றவை ஏற்பட்டால் இதய ரத்த நாள அடைப்பை உறுதி செய்யுமுன்னமே இந்த மாத்திரைகளைப் போட்டுக்கொள்ளலாம். எனினும் சிறார், சிறுமியரிடத்தில் ஓவர் டோஸ் ஆகும் வாய்ப்பு உள்ளது. வயது வந்த மக்கள் தங்களுக்கு இதய ரத்த நாள அடைப்பு சார்ந்த நெஞ்சு வலி ஏற்படுவதாக உணர்ந்தால், இந்த மாத்திரைகளைப் போட்டு உடனே இதய அவசர சிகிச்சை தரும் மருத்துவமனையை நாட வேண்டும்.
இதய ரத்த நாள அடைப்பினால் ஏற்படும் நெஞ்சு வலி என்பது ஒருவருக்கு அரிதாக நிகழும் நிகழ்வு என்பதால், அடிக்கடி அவர் லோடிங் டோஸ் எடுக்கப்போவதில்லை. ஆயினும், அந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் அவர் லோடிங் டோஸ் மாத்திரைகளைப் போடுவது உயிர் வாழ்வதற்கும் இறப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் காட்டக்கூடிய செயலாக இருக்கும்.
எனவே வீட்டில் முதியோர், பல இணை நோய்களுடன் இருப்பவர்கள், அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டால் உடனே லோடிங் டோஸ் கொடுத்துக் காலதாமதம் செய்யாமல் உடனே அருகில் இருக்கும் அரசு மருத்துவக்கல்லூரி, மாவட்டத் தலைமை மருத்துவமனை அல்லது இதய அவசர சிகிச்சை இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, வந்திருப்பது இதய ரத்த நாள அடைப்பா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதை எவ்வளவு விரைவில் செய்கிறோமோ அவ்வளவு சதவிகிதம் அந்த நபர் உயிர் பிழைப்பார்.
- ஆஸ்பிரின் 325mg
- க்ளோபிடோக்ரெல் 300mg
- அடோர்வாஸ்டேட்டின் 80mg
இதுவே உயிர்காக்கும் ரத்த நாள அடைப்பிற்கான லோடிங் டோஸ் ஆகும்.