Home சிறுகதைஜப்பானிய சிறுவர் கதைகள் 19 – மொழியாக்கம்

ஜப்பானிய சிறுவர் கதைகள் 19 – மொழியாக்கம்

0 comments
This entry is part 17 of 17 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

மட்சுயமா கண்ணாடி (松山鏡)

ஜப்பானிய நாட்டின் இச்சிகோமா நிலத்தில் மட்சுயமா என்னும் மலைப்பகுதியில் ஒரு சிறிய கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயியும், அவருடைய மனைவியும், பெண் குழந்தையும் மகிழ்ச்சியாக வசித்தனர். ஒருநாள் விவசாயி நீண்ட பயணம் செல்ல வேண்டி இருந்தது.

அது மட்சுயமாவிலிருந்து கியோட்டோ நகரம் வரையில் செல்லும் பயணம். அந்தக்காலத்தில் அது நீண்ட தூரம். அதனால், தன் மனைவிக்கும் மகளுக்கும் ஆறுதலாக உரையாடினார். பயணத்தை முடித்து வீட்டுக்கு வரும்போது அவர்கள் இருவருக்கும் பரிசுப்பொருட்கள் வாங்கி வருவதாக வாக்குக் கொடுத்தார்.

விவசாயியின் மனைவிக்கும் மகளுக்கும் அவர் வீட்டை விட்டு நீண்ட நாட்கள் பிரிந்திருப்பது சிரமமாக இருந்தது. ஆனாலும், அந்தப் பிரிவை ஏற்றுக் காத்திருந்தனர். பயணத்தை முடித்துவிட்டு விவசாயி வந்தார். அவரை இருவரும் ஆசையுடன் வரவேற்றனர். மனைவி அவருக்கு வீட்டில் சமைத்த உணவைக் கொடுத்தார். மகள் ஆசையுடன் அவருடைய மடியில் அமர்ந்தாள்.

விவசாயி தன்னுடைய மூங்கில் பெட்டியிலிருந்து பரிசுப்பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்தார். ஓர் அழகிய பொம்மையை மகளுக்குக் கொடுத்தார். பளபளப்பான சிறிய பெட்டியில் இருந்த சுவையான ‘கேக்’கையும் மகளுக்குக் கொடுத்தார். மகள் மகிழ்ச்சியடைந்தாள். பொம்மையுடன் விளையாடினாள், கேக்கை அம்மாவிடம் தந்து அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டாள்.

தன் மனைவிக்காக விவசாயி ஒரு அழகிய கைக்கண்ணாடியை வாங்கி வந்தார். அது பாதி முட்டை வடிவத்தில் கைப்பிடியுடன் இருந்த உலோகக் கண்ணாடி. அதில் தெரிகின்ற பிம்பங்கள் உண்மையாகத் தோன்றும் அளவுக்கு வழவழப்பாகத் தேய்க்கப்பட்ட தகடு அது. மனைவி அதுவரையில் கண்ணாடியைப் பார்த்ததே இல்லை. அதிசயமாகப் பார்த்தார். அதில் தெரிவது இன்னொரு பெண் என நினைத்தார்.

விவசாயி மனைவிக்குக் கண்ணாடியைப் பற்றி விளக்கினார். இது நகரத்தில் உள்ள பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்துவது என்றார். மனைவி கண்ணாடியைப் பத்திரமாக ஒரு துணியில் சுற்றித் தன்னுடைய பெட்டிக்குள் வைத்துப் பூட்டினார்.

காலங்கள் பறந்தன. பெண் குழந்தை வளர்ந்தாள். மனைவி நோய்வாய்ப்பட்டார். படுக்கையில் விழுந்த மனைவி எழுந்திருக்கவில்லை. ஒருநாள் அவர் தன் மகளை அழைத்துப் பெட்டியிலிருந்து துணியால் சுற்றப்பட்ட அந்தக் கண்ணாடியை எடுத்து வரச் சொன்னார். அதை அப்படியே மகளிடம் ஒப்படைத்தார்.

“மகளே! இதைப் பத்திரமாக வைத்துக்கொள். எப்போதாவது உனக்குத் துன்பம் ஏற்பட்டால் இதைத் திறந்து பார். இதற்கு உள்ளே நீ என்னைக் காண்பாய்” என்றார்.

சில நாட்களில் மனைவி இறந்துவிட்டார்.

விவசாயி இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். வீட்டுக்கு வந்த பெண் சித்தியாக விவசாயின் மகளைக் கொடுமைப்படுத்தினார். மகள் வருந்தினாள், அழுதாள். சித்தியின் கொடுமைகளை அப்பாவிடம் சொல்வதற்குத் தயங்கினாள். நாளுக்கு நாள் சித்தியின் கொடுமை அதிகமானது.

சித்தியின் கொடுமை எல்லை மீறியபோது, மகள் தன்னுடைய அம்மா கொடுத்த துணியைப் பிரித்து அதனுள்ளே இருக்கும் கண்ணாடியைப் பார்த்தாள். கண்ணாடியில் தன் அம்மாவின் முகத்தைக் கண்டாள். நோய்வாய்ப்பட்டு இறந்த அம்மாவின் முகம் அல்ல; இது அவள் குழந்தையாக இருக்கும்போது கண்ட அம்மாவின் முகம்.

அம்மாவே கண்ணாடியில் இருப்பதாக நினைத்த மகள், ஆறுதலுக்குத் தன் பிம்பத்துடன் பேசினாள். அம்மாவே கண்ணாடிக்குள்ளிருந்து ஆறுதல் சொல்வதாக நினைத்தாள். எப்போதெல்லாம் வருத்தப்படுகிறாளோ அப்போதெல்லாம் கண்ணாடியில் தெரியும் அம்மாவின் பிம்பத்துடன் பேசினாள்.

கொடுமைப்படுத்தினால் அமைதியாக மகள் தன் அறைக்குச் செல்வது சித்திக்குச் சந்தேகத்தைக் கொடுத்தது. ஒருநாள் ஒளிந்திருந்து மகள் செய்வதைக் கவனித்தாள். அவள் கண்ணாடியுடன் பேசுவதைப் பார்த்தாள். மகள் ஏதோ பில்லி சூனியம் வைத்துத் தன்னைக் கொல்வதற்காக மந்திரம் சொல்கிறாள் என நினைத்தாள்.

விவசாயி வீட்டுக்கு வந்ததும், மகள் மீது பழி சுமத்தினாள்.

“இவள் தன் அறைக்குள்ளே இருக்கும் பெட்டியிலிருந்து எதையோ எடுத்து மந்திரம் முணுமுணுக்கிறாள். அது சித்தியான என்னைக் கொல்வதற்காகச் சொல்லும் மந்திரம். இவளை வீட்டை விட்டு வெளியே அனுப்புங்கள்” என்றாள்.

விவசாயிக்குக் கோபம் வந்தது. மகள் தன் சித்தியைக் கொல்ல மந்திரம் போடுகிறாள் என்பதை நம்ப முடியவில்லை. சித்தி சொன்னதற்காக மகளிடம் கோபமாகக் கேள்வி கேட்டார்.

“நீ அவளைக் கொல்ல மந்திரம் போடுகிறாயா? இதை எங்கே கற்றாய்” எனக் கடுமையாகச் சத்தம் போட்டார்.

மகள் தான் மந்திரம் போடவில்லையென்று எவ்வளவோ சொல்லியும் இருவரும் அதை நம்பவில்லை. மகளை வார்த்தைகளால் துன்புறுத்தினர். மகள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நம்பாத அப்பா, மகளை அவளுடைய அறைக்குள் இழுத்துச் சென்று பெட்டியைத் திறக்கச் சொன்னார்.

மகள் பெட்டியைத் திறந்து, உள்ளேயிருந்து கண்ணாடியை எடுத்துக் காட்டினாள். தன்னுடைய வருத்தத்தைச் சொன்னாள்.

“அப்பா, இது நீங்கள் அம்மாவுக்குத் தந்தது. அம்மா சாகும்போது எனக்குத் தந்தார். என்னைச் சித்தி கொடுமைப்படுத்தினால் நான் இதைப் பார்க்கிறேன். இதில் என் அம்மாவைப் பார்க்கிறேன். அம்மா எனக்கு ஆறுதல் சொல்கிறாள்” என்றாள்.

விவசாயி தன் தவறை உணர்ந்தார். மனைவிக்குத் தான் கொடுத்த பரிசுப்பொருள் இப்போது மகளுக்கு ஆறுதல் அளிப்பதைக் கண்டு வருத்தமும் மகிழ்ச்சியும் ஒரே நேரத்தில் அவருக்கு உண்டாயின.

சித்தியைப் பார்த்து, “இந்தக் குழந்தையின் வருத்தமும் நல்ல குணமும் உனக்குப் புரிகிறதா? இவள் உன்னைக் கொல்ல நினைக்கவில்லை. தன் அம்மாவிடம் தனக்கு நேரும் கொடுமைகளைப் பேசுகிறாள். இனிமேல் இவளைக் கடுமையாக நடத்தாதே” என்றார்.

சித்தியும் தன் தவறை உணர்ந்து திருந்தினார்.

அதன் பிறகு மகளும் விவசாயியும் சித்தியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

Series Navigation<< ஜப்பானிய சிறுவர் கதைகள் 17 – மொழியாக்கம்

Author

You may also like

Leave a Comment