அர்ஜுனுக்கு வயது நாற்பத்திரண்டு. போன மாதம்தான் முடிந்தது. பெரிய கொண்டாட்டமெல்லாம் இல்லை. அவனது நாட்காட்டியில் அது வெறும் ஒரு வேலைக்குறிப்பு மட்டும்தான். ‘வழக்கமான சுயபரிசோதனை, முப்பது நிமிடங்கள்’ என்றிருக்கும். பின் அதை முடிந்தது என்று குறியிட்டுவிட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்துவிடுவான்.
அவன் இருப்பது பெங்களூரின் பெல்லந்தூர். பதினைந்தாவது மாடி. எல்லாமே கண்ணாடிச் சுவர்கள். கச்சிதமான சமையலறை. சத்தமே நுழையாத வாசிப்பறை. அவனுக்கு ஒரே ஒரு மனைவி சுசி. அவள் ஒரு மென்பொருள் பயன்பாட்டு ஆய்வாளர். அவளுக்கும் வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டிலிருந்தே வேலை.
இருவரும் கல்யாணத்தின்போதே பேசி முடிவெடுத்திருந்தார்கள். அநாவசியமாகக் குழந்தைகள் வேண்டாம், முடி உதிர்க்கும் செல்லப்பிராணிகள் வேண்டாம் என ஆரம்பித்து பல வேண்டாம்கள். அவர்களின் வேலைகளும் திட்டமிட்ட கணிதச் சூத்திரம்போலப் பிரிக்கப்பட்டிருந்தன.
திங்கள் முதல் புதன் வரை அர்ஜுன் சமையல். வியாழன் முதல் சனி சுசி. ஞாயிறு வெளியிலிருந்து உணவு. அல்லது விரதம். இப்படித்தான் அவர்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது இதுவரைக்கும்.
இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9:45. அர்ஜுன் எதையோ தேடிக்கொண்டிருந்தவன் தனது பழைய நினைவக வட்டைக் (Hard disk) கண்டு அதில் என்ன இருக்கிறது எனப் பழைய நினைவுகளை மீட்கும் முயற்சியில் இருந்தான். ஏறக்குறைய இரண்டாயிரத்துப் பதினொன்றுக்குப் பிறகு கணினியில் அவன் அதைத் தொட்ட நினைவே இல்லை.
உள்ளே முதல் வேலையின் தரவுகள். அதில் ‘காப்பகம்’ என்றொரு அடைவு இருந்தது. அதன் உள்ளே ‘குரல் பதிவுகள் – இரண்டாயிரத்து எட்டு’ என்ற அடைவைத் திறந்தான்.
முதல் கோப்பு இருக்க அதை இரண்டு முறை சொடுக்கித் திறந்தான். அது அவனுடைய சொந்தக் குரல். அப்போது இருபத்தோரு வயது இருந்திருக்கும். குரலில் இலேசான நடுக்கத்துடன்.
“…நான் அவகிட்ட சொல்லியிருக்கணும். ஆனா சொல்லி என்ன பிரயோஜனம்? அவ மேற்படிப்புக்கு டெல்லி போறா. நான் இங்கேயே வேலை பார்க்கப் போறேன். எதிர்காலம்தானே முக்கியம்?”
பிறகு ஒரு நீண்ட அமைதி. மூச்சு வாங்கும் சத்தம். விக்கலுக்கும் அழுகைக்கும் இடைப்பட்ட ஒரு கேவல் ஒலி.
“நான் உன்னை நேசிக்கிறேன் மீனா. இதை நான் உன்னிடம் சொல்லவேயில்லை.”
அந்தக் குரல் பதிவு முடிந்தது. அர்ஜுன் பழைய நினைவுகளில் உறைந்து அமர்ந்திருந்தான். அந்த அறையின் வெளிச்சம் திடீரெனக் கண்களைக் கூசுவது போலிருந்தது.
அடுத்த குரல் பதிவு.
“நான் இன்னொரு ஆண்டு அங்கேயே இருந்திருக்கலாமோ… இல்லை. நான் அதைச் செய்யவில்லை. நான் வேலையைத்தான் தேர்ந்தெடுத்தேன். ஆண்டுக்கு ஆறு லட்சம். எல்லாரும் என்னை அதிர்ஷ்டசாலி என்றார்கள். ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. பயமா இருக்கு.”
மேலும் பன்னிரண்டு பதிவுகள். கேட்கவில்லை, கேட்கும் துணிவில்லை அவனுக்கு.
அங்கே கீழே ஒரு உரைக்கோப்பு இருந்தது. பெயர் – ‘நமது_இடம்_2008’. (our_space_2008.txt)
திறந்தான். அதில் கல்லூரி நாட்களில் திட்டப் பணிகளுக்காக அவர்கள் இருவரும் உருவாக்கிய ஒரு ரகசிய வலைப்பூவின் முகவரியும் அதன் கடவுச்சொல்லும் இருந்தன. கடவுச்சொல் அவனுக்கு அத்துப்படி. அவளது பிறந்த தேதியும் அவனது பெயரின் முதல் எழுத்தும். வழக்கமான காதலர்களின் கடவுச்சொல் பாணிதான் அது.
பதினேழு வருடங்களாக அவன் அந்த வலைப்பக்கத்தைத் திறக்கவே இல்லை. இப்போது இணைய உலாவியில் அந்த முகவரியைத் தட்டச்சு செய்தான். வலைப்பூ இன்னும் உயிரோடு இருந்தது. இணையத்தில் சில விஷயங்கள் அழிவதே இல்லை. உள்ளே பதிவுகள் இருந்தன.
மீனா அதைத் தன் ரகசிய நாட்குறிப்பாகப் பயன்படுத்தி வந்திருக்கிறாள் போல. யாரோ ஒரு நாடோடி விட்டுச் சென்ற சுவடுகளைப் போலப் பல வருடத்துப் பதிவுகள். என்றாவது ஒருநாள் அவன் இதைத் திறப்பான் என்கிற நப்பாசையாக இருக்கலாம்.
இதோ, பன்னிரண்டு அக்டோபர் இரண்டாயிரத்து எட்டு.
“அர்ஜுன், இதை நீ படிப்பியான்னு தெரியல. நான் டெல்லி போறேன். எனக்கு உன்னைப் பிடிக்கும். ஆனா நீ எதிர்காலக் கனவுகள்ல இருக்க. நான் உனக்குத் தடையா இருக்க விரும்பல…”
இடையில் இன்னும் சில அவளது பயணங்கள், கல்யாணத்துக்கான ஆயத்தங்கள் என இருந்தன.
பின்பு இரண்டாயிரத்துப் பன்னிரண்டு.
“உனக்குப் பதவி உயர்வு கிடைச்சதைப் பார்த்தேன். எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. அவர் பெயர் விக்ரம். நாம காலேஜ் கடைசி நாள் நிறைய பேசினோம். நான் சொல்ல வந்ததை நீ கேட்கல. சொல்லப்போனா நீ என்னைப் பத்தி எதுவுமே கவனிக்கல. உன் கனவு, உன் லட்சியம்னு நிறைய பேசிட்டிருந்த. ஆனா உன் கண்கள்…”
கடைசிப் பதிவு, மூன்று மாதங்களுக்கு முன்.
“காலையிலிருந்து வேலைப் பளு. பல சிக்கல்கள். மனசு உடைஞ்சு இருக்கிற மாதிரி இருக்குது. குழந்தைகள் தூங்கிட்டாங்க. எதேச்சையா பழைய நண்பர்கள் கையெழுத்துக் குறிப்பேட்டைப் பார்த்தப்போ உன் கையெழுத்து தட்டுப்பட்டது. கிட்டத்தட்ட பத்து நிமிஷம் அழுதேன். என் கணவன் பார்த்துவிட்டான். ஏதோ சொல்லிச் சமாளித்துவிட்டேன். சில நினைவுகளை அழிக்கவே முடியறதில்லை…”
அர்ஜுன் கணிப்பொறியை மூடினான். நீண்ட நேரம் இருட்டில் அமர்ந்திருந்தான். இரவு ஒன்பது நாற்பத்தேழு. சுசி வந்தாள். இருட்டில் அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்.
“என்ன, பழைய செய்தியா?”
அவன் எல்லாவற்றையும் சொன்னான். பதிவுகள், வலைப்பூ, பதினேழு வருடங்களாக மனதிற்குள் கிடந்த பெரும் பாரம்…
சுசி குறுக்கிடாமல் கேட்டாள். ஒரு நிமிடம் அமைதி.
“அவளுடைய பிறந்த தேதி, உன்னுடைய பெயரின் முதல் எழுத்து – அதே கடவுச்சொல்தானே?” என்றாள்.
அவன் அதிர்ந்தான்.
“அவள் அழுத பதிவை நான் போன வாரமே பார்த்துவிட்டேன். ஆனால் உனக்குத் தெரிந்தால் சங்கடப்படுவாய் என்றுதான் சும்மா இருந்தேன்…” என்றாள்.
அவன் மௌனமாக இருந்தான். சுசி மென்மையானவள், நாகரிகம் தெரிந்தவள். எல்லாவற்றிற்கும் மேல் அவனுக்கு நல்ல தோழி.
“அவகிட்ட நீ பேசப் போறியா?”
“தெரியல.”
மௌனித்தாள்.
“அர்ஜுன், என்கூடத் தொடர்ந்து வாழ உனக்கு இஷ்டம் இருக்கா?”
அந்தக் கேள்வி சவுக்கடி போலிருந்தது.
“என்ன பேசற நீ? நீ இல்லாம நான் எப்படி? மேலும் இதெல்லாம் பழைய விஷயங்கள். சொல்லி உன்னைக் காயப்படுத்த நான் விரும்பல, அதனால்தான் நான் சொல்லல” என ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.
“அது பதிலில்ல.”
அவன் அவளைப் பார்த்தான்.
“நான் உன்னை நேசிக்கிறேன். ஆனா அன்னைக்கு அவளை நேசித்த அந்த வேகத்தோடு இல்லை. ஆனால் கிட்டத்தட்ட அந்த இடத்துக்கு வந்துவிட்டேன் என நினைக்கிறேன். எனக்கு நீ முக்கியம். நீ மட்டும்தான்…”
சுசி மெதுவாகத் தலையசைத்தாள்.
“எனக்குத் தெரியும்.”
மீண்டும் அமைதி. பின் அவள் சொன்னாள்.
“அவளுக்கு ஒரு தகவல் அனுப்பு. பழையதைத் தொடங்க அல்ல; இந்த அத்தியாயத்தை முடித்து வைக்க. இல்லையென்றால் இது உன்னை வாழ்நாள் முழுக்க அரிச்சுக்கிட்டே இருக்கும்.”
“அவள் நிம்மதியா இருந்தா? நான் ஏன் குழப்பணும்?”
“அவளுமே இதே பாரத்தைச் சுமந்துகிட்டிருந்தா? பதிவு வெறும் மூன்று மாதங்களுக்கு முந்திதான் எழுதியிருக்கா என் தோழனே” என்று சுசி எழுந்தாள்.
“சரி, நான் டீ போடுறேன். நீ என்ன முடிவெடுக்கிறியோ எடு. ஆனா இன்னைக்கே எடு. வேண்டாம்னு நீ முடிவெடுத்தாலும் எனக்குச் சம்மதம்தான். ஆனா எந்த ஒரு குழப்பத்தோடும் என்னால வாழ முடியாது.”
சமையலறைக்குச் சென்றாள். அர்ஜுன் அலைபேசியை எடுத்தான். மீனாவின் எண் இன்னும் இருந்தது.
தட்டச்சு செய்தான். “மீனா, நான் அர்ஜுன். இன்னைக்குச் சில பழைய கோப்புகளைப் பார்த்தேன். அன்னைக்கு நான் அமைதியா இருந்ததற்கு மன்னிப்புக் கேட்கிறேன். எனக்கும் அதே காதல் இருந்தது, தைரியம்தான் இல்லை. அதெல்லாம் பழைய கதை. நீ எல்லாத்தையும் மறந்துட்டுச் சந்தோஷமா இருக்கணும்.”
அனுப்புவதற்கு அவன் விரல்கள் நடுங்கின. நான்கு நிமிடங்கள் அதையே வெறித்துப் பார்த்தான். பின் அந்தச் செய்தியை முற்றிலுமாக அழித்தான்.
சமையலறைக்குச் சென்றான். சுசி தேநீர் ஊற்றிக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் நின்றான். தொடவில்லை.
“நான் அனுப்பல.”
அவள் திரும்பினாள். “நீ அனுப்ப மாட்டாய்னு தெரியும். ஆனால் ஏன்?”
“சில செய்திகள் அனுப்பப்படாமல் இருப்பதே நல்லது.”
அவள் கோப்பையை நீட்டினாள்.
“உறுதியாவா?”
“இல்லை. ஆனா உறுதியா இருக்கவே நான் முயல்வேன்.”
அவன் பேசிக்கொண்டிருந்த அதே நேரம் அங்கே கணினித் திரையில், அந்த வலைப்பூவில் புதிய செய்தி உருவாகிக் கொண்டிருந்தது.
“இப்போதுதான் பார்த்தேன். கடைசியாகப் பெங்களூரில் இருந்து இந்த வலைப்பூவுக்குள் நுழைந்திருப்பதாகச் சொல்கிறது. நீ இந்தச் செய்திகளைப் படித்திருப்பாய்….”
கவனிக்காத இருவரும் அமைதியாகக் குடித்தார்கள். வெளியே பெங்களூரு போக்குவரத்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் இயந்திரத்தனமாகச் சத்தமிட்டுக்கொண்டிருந்தது. அர்ஜுன் சுசியைப் பார்த்தான். அவள் அவனைப் பார்த்தாள். இருவரும் சிரிக்கவில்லை. ஆனால் பார்வையை விலக்கிக்கொள்ளவும் இல்லை.
(தொடரும்)