பம்பா நதிக்கரையின் அந்தச் செந்நிறப் பாறை இடுக்குகளில் அந்திப் பொழுது ஒரு மர்மமான நிழலைப் படரவிட்டிருந்தது. நதி நீரின் சலசலப்பு ஏதோ ஒரு எச்சரிக்கையைச் சொல்வது போலத் துரிதப்பட்டது. தூரத்தில் இருந்து அந்த வேடுவ இளைஞனை உற்று நோக்கிய இலக்குவனின் கண்களில் அனல் தெறித்தது.
“அண்ணா, நீங்கள் இங்கேயே இருங்கள். அவன் யாரென்று பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்,” என்று கூறிவிட்டுப் பதிலுக்கும் காத்திராமல் இலக்குவன் அந்த இளைஞனை நோக்கிப் பாய்ந்தான்.
அருகில் சென்றபோதுதான் அவனுக்கு ஓர் உண்மை உறைத்தது. அவன் வெறும் வேடுவச் சிறுவன் அல்ல; ஆஜானுபாகுவான தேகமும், எதனையும் ஊடுருவிப் பார்க்கும் புத்திக் கூர்மையும் கொண்ட ஒரு மகா வீரன் அவன். இலக்குவன் நெருங்குவதைக் கண்ட அந்த இளைஞன், தன் கையில் இருந்த வில்லை நிலத்தில் ஊன்றி அவனைத் தடுத்தான்.
“யார் நீ?” என்று அவன் இலக்குவனை அதட்டினான்.
“இந்த இடம் உங்களுக்கு உகந்த இடமில்லை. இங்கிருக்கும் வளங்களும், அமைதியும் அந்நியர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. இப்போதே விலகிச் செல்லுங்கள்!” என்று எச்சரித்தான்.
அந்த இளைஞனின் அதிகாரம் இலக்குவனின் வீரத்தைச் சீண்டியது. ஆனால், தன் அண்ணனின் நிதானத்தை நினைவில் கொண்டு இலக்குவன் பேசத் தொடங்கினான்.
“இளைஞனே, இந்த உலகில் யாருக்கும் எங்கும் செல்ல அனுமதி உண்டு. தர்மத்தை உணர்ந்த ஓர் ஆன்மாவுக்கு இந்த மண், காற்று, நீர் அனைத்தும் பொதுவானவை. எல்லைகள் என்பவை வெறும் வரைபடங்களில்தான் இருக்கின்றன; அவை மக்களின் உள்ளங்களைக் கட்டுப்படுத்த முடியாது.
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் தனது தேடலுக்காக, தனது இலக்கை நோக்கிச் செல்வதற்கு இந்த பூமியில் முழு உரிமையுண்டு. இந்த உலகம் அத்தகைய தேடலுக்கான ஒரு பெரிய பாதையாக எப்போதும் திறந்தே இருக்கிறது,” என்று இலக்குவன் கூறினான்.
அந்த இளைஞன் இடைமறித்தான். அவனது குரலில் இப்போது ஒரு காட்டு விலங்கின் சீற்றம் தென்பட்டது.
“என் கட்டளை இது. இங்கே தத்துவங்கள் தேவையில்லை. நான் என் தந்தைக்கும் தமையனுக்கும் இணையான ஒரு மகாசக்தியை இங்கே எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இந்த வனம், இங்கிருக்கும் காய்கனிகள் அனைத்தும் அவருக்காகப் பாதுகாக்கப்பட்டவை. மீறி உள் நுழைந்தால்…” அவனது எச்சரிக்கை, உறுதியான கோபமாக மாறியது.
அங்கே தூரத்தில் இராமனுக்கு ஏதோ விபரீதம் நடப்பதாகத் தோன்றியது. இலக்குவன் சென்ற திசையை நோக்கி அவன் விரைந்தான். அப்போதுதான் இராமன் அந்த அதிசயத்தைக் கண்டான்.
அந்தச் சிறு வேடுவ இளைஞனின் உருவம் சட்டென்று மலை போல உயர்ந்து வளர்ந்தது. அவனது தோள்கள் மேகங்களைத் தொட்டன. அவனது இரும்புப் பிடியில் இலக்குவன் ஒரு சிறு பறவையைப் போலச் சிக்கியிருந்தான்.
“பலமுறை சொல்லிவிட்டேன், திருடர்களுக்கு இங்கே அனுமதி இல்லை!” என்று முழங்கிய அந்த அரக்க உருவம், இராமன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இலக்குவனைத் தன் வாயிலிட்டு விழுங்கச் சென்றது.
இராமனின் உள்ளம் கொதித்தது. சீதையைத் தேடும் பயணத்தில் தன் தம்பியை இழக்க அவன் ஒருபோதும் துணியமாட்டான். தன் வில்லை ஏந்தி, அதன் நாணைச் சுண்டி ஒரு பேரொலியை எழுப்பினான்.
“நில்! நில்!” என்ற இராமனின் பெருங்குரல் பம்பா நதிக்கரையையே உலுக்கியது. இராமனின் வில்லிலிருந்து எழுந்த அந்த நாணொலி, அது உலகத்தின் ஒழுங்கை நிலைநாட்டும் ஒரு மகா மந்திரம் போல எதிரொலித்தது. சீற்றத்தோடு இராமன் நின்ற கோலம், பிரளய காலத்து ருத்திரனைக் கண்முன் நிறுத்தியது.
தன் வாயருகே இலக்குவனைக் கொண்டு சென்ற அந்தப் பிரம்மாண்டமான உருவம், அந்த நாணொலியைக் கேட்ட மாத்திரத்தில் அப்படியே சிலையென உறைந்தது. அந்தக் குரலின் தன்மை உணர்ந்து அவன் குனிந்துப் பார்த்தான். அங்கே, தாமரை போன்ற கண்களில் கோபக் கனல் தெறிக்க நின்ற இராமனைக் கண்டான்.
அந்தக் காட்சி அவனது ஆத்மாவை உலுக்கியது. அவன் உள்ளம் நெகிழ்ந்தது.
‘ஒருவேளை இது அவன்தானோ?’ என்று அவனுள் ஒரு மின்னல் வெட்டியது. தான் இத்தனை காலமாக யாருக்காகக் காத்திருந்தானோ, யாருடைய வருகைக்காகத் தன் பசியையும் அடக்கி இந்தக் காய்கனிகள் நிறைந்த வனத்தைப் பாதுகாத்து வந்தானோ, அவர்தானா இதோ என் முன்னே நிற்பது?
அந்த இளைஞனின் செய்கை இப்போது முற்றிலும் மாறியது. அவனது கண்களிலிருந்து அருவியெனக் கண்ணீர் கொட்டியது. பதற்றமும் குற்ற உணர்ச்சியும் மேலிட, அவசரம் அவசரமாகத் தன் வாய்க்குள் சரிபாதிச் சென்றிருந்த இலக்குவனை கீழே இறக்கினான். அந்த வேகத்தில் திமிறிக் கொண்டிருந்த இலக்குவன் கைப்பிடியிலிருந்து விடுபட்டுத் தொப்பென்று கீழே விழுந்து, திகைத்துப் போய் தரையில் அமர்ந்து மூச்சு வாங்கினான்.
வானை முட்டி வளர்ந்திருந்த அந்த உருவம் சடசடவெனச் சுருங்கி, ஒரு சாதாரண, பக்தி நிரம்பிய பழைய காட்டு வேடுவனின் உருவத்தை அடைந்தது. அவனது உடல் பக்திப் பரவசத்தால் ஒரு நிலையில் இல்லாமல் துள்ளத் தொடங்கியது.
“ஐயனே, தாங்கள் யார்? நான் உங்களைப் பார்க்கும்போது பல நாட்களாகப் பழகிய ஓர் உணர்வு ஏற்படுகிறது. என் உடல் கரைகிறது. என் ஆத்மா உங்கள் முன்னே மண்டியிடுகிறது. நீங்கள் யார்? இவர் உங்கள் சகோதரர் போலத் தெரிகிறது. அப்படியானால் நீங்கள் அவர்களாகத்தான் இருக்க வேண்டும்!”
அவன் கால்கள் ஒரு நிலையில் இல்லாது ஒரு தெய்வீக நடனம் ஆடுவதைப் போலத் துள்ளிக் கொண்டிருந்தன. அவன் தொடர்ந்து பேசத் தொடங்கினான்.
“உங்களின் கண்கள் ஏதோ ஒரு தொலைந்த பொக்கிஷத்தைத் தேடி அலையும் மனநிலையைக் காட்டுகின்றன. என் அனுமானம் சரியென்றே தோன்றுகிறது. என் பிழை மன்னித்து, நீங்கள் யார் என்பதை அடியேனுக்குத் தெரிவிக்க வேண்டும்!” என்று பணிந்து நின்றான்.
இராமனின் உள்ளுணர்வு முழுவதுமாக விழித்துக்கொண்டது. அந்த இளைஞனைத் தன் கண்களால் ஆராய்ந்தான்.
இவன் வேடுவனாக இருக்க முடியாது. அணிந்திருக்கும் உடை வேடுவர்களைப் போலக் காட்சியளித்தாலும் அதில் வித்தியாசம் இருந்தது. ஆடையில் கவனம் செலுத்தி உருவாக்கப்பட்ட ஒழுங்கும், அலங்காரமும் இந்தத் தோற்றம் போலி என்பதைப் பறைசாற்றின. அந்த இளைஞனின் நிலைகொள்ளாத் தன்மை மானுடத் தன்மை அல்ல, வானரத் தன்மையைக் காட்டியது.
“இலக்குவா, இவன் வேடுவன் அல்ல என்பதை நீ முதலிலேயே உணர்ந்திருக்க வேண்டும்” என்றான்.
“இளைஞனே, நீ வேடுவனல்ல என்பதை நாங்கள் உணர்கிறோம். உன் தோற்றத்தில் போலித்தன்மை உண்டு. உன் கண்கள் பிறர் மனதின் ஆழத்தில் சென்று ஆராயும் தன்மைகொண்டது. உன்னிடம் மந்திரிக்கு உரிய மதிநுட்பம் இருப்பதை உன் கண்கள் எடுத்துச் சொல்கின்றன. என் ஆணை, உண்மையைச் சொல்” என்றான் இராமன்.
அந்த இளைஞன் தன்னை மறைத்திருந்த வேடுவ ஆடைகளை நீக்கிக்கொண்டு தன் வானர உருவத்தைக் காட்டினான்.
“சற்றே என் பொறுமை இழந்து தங்களிடம் பிழையாக நடந்துகொண்டேன், என்னை மன்னியுங்கள்” என்று இலக்குவனை நோக்கிக் கைக்கூப்பி வணங்கினான்.
பின்பு அவன் குரல் கம்பீரமாக ஒலித்தது. அந்த கம்பீரத்திலும் கூடவே பணிவு இழையோடியது.
“அடியேன், கிஷ்கிந்தையின் முன்னாள் அரசரும், தற்போது அண்ணனால் விரட்டப்பட்டு மதங்க முனிவரின் கண்காணிப்பிற்கு உட்பட்ட புனித இடமான ரிசியமுக மலையில் வசிப்பவருமான சுக்ரீவனின் அமைச்சர்களுள் நானும் ஒருவன்; என் பெயர் அனுமன்” என்று கூறித் தலையைத் தாழ்த்தி ஒரு காலை மடித்து நிலத்தில் ஊன்றியபடி பணிவுடன் சொன்னான்.
உண்மை என்பது தன்னை மூடி வைத்திருக்கும் திரையைக் கிழித்துக்கொண்டு வெளிப்படும்போதுதான், அது பேரொளியாக மாறுகிறது. அந்தப் பேரொளியின் வடிவமாக அனுமன் நின்றான்.
“உங்கள் வரவு தீதின்றி அமையட்டும். உங்களின் தோற்றமும், வலிமையும் நீங்கள் அரசகுலத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பறைசாற்றுகின்றன. மரவுரியில் இருவராக வந்திருக்கிறீர்கள். அப்படி நீண்ட பயணம் செய்பவர்கள் தசரத குமாரர்கள் மட்டுமே என்பது அடியேன் அறிந்த உண்மை.”
இலக்குவன் மலைத்து நின்றான். இவன் சாதாரண வானரனும் அல்ல, இவன் அந்தச் சிவனே மாறுவேடத்தில் வந்திருக்கிறான் போல எனச் சந்தேகித்தான். இராமன் முகத்தில் புன்னகை அரும்பியது.
அனுமன் தொடர்ந்தான்.
“உங்கள் நட்பை வேண்டும் எங்கள் அரசரிடம் உங்களை யார் எனச் சொல்ல வேண்டும்?” என மீண்டும் கேட்டான்.
இராமன் சொன்னான்:
“சொல்லின் செல்வனே, உன் பேச்சைக் கேட்பவர்கள், உன் பேச்சை மட்டுமே கேட்கும் வகையில் இருக்கிறது உன் பேச்சு. ஆம், நீ சரியாகக் கணித்தது போல நாங்கள் தசரத குமாரர்கள்தான். இராமனும் இலக்குவனுமாகிய நாங்கள் சுக்ரீவன் உதவி நாடியே வந்திருக்கிறோம்” என்றான்.
அனுமனின் மலர்ந்த முகம் இராமன் என்ற பெயர் கேட்டதும் இன்னும் மலர்ந்தது.
அங்கே தாரையின் ஒற்றர்களும் தாரைக்கு இந்தச் செய்தியைச் சொல்ல விரைந்தார்கள். கூடவே விதியும் விரைந்தது.
தொடரும்..
பின் குறிப்பு: பில் ராமாயணம் (Bhil Ramayana) மற்றும் சில வட இந்திய நாட்டுப்புறக் கதைகளில் (Mevati Jogi traditions) அனுமன் லட்சுமணனை விழுங்கும் விசித்திரமான சம்பவம் சொல்லப்படுகிறது. இது வால்மீகி ராமாயணத்தில் இல்லாத ஒரு நாட்டுப்புறக் கிளைக்கதையாகும்.
போலவே வனவாசத்தின் போது இராமனும் சீதையும் ஒரு குறிப்பிட்ட கனியைச் (சில இடங்களில் ‘வானரக் கனி’ எனக் குறிப்பிடப்படுகிறது) சாப்பிட்டதால் தற்காலிகமாக குரங்கு உருவம் பெற்றனர் எனவும், அந்த சமயத்தில்.உருவான கருவை வாய் கொண்டு சென்று அஞ்சனையிடம்.சேர்த்ததாகவும் பில்.ராமாயாணம் சொல்கிறது. இராமன் அனுமனின் தகப்பன் என்கிறது பில் ராமாயாணம். அதுமட்டுமில்லாது அனுமன் உள்ளிட்டோர் உண்மையில் பழங்குடி மனிதர்கள், அவர்கள் வானர வேடமிட்டு மறைந்திருந்தார்கள் என்கிறது பில் ராமாயணம்.
கேரளாவின் முள்ளு குரும்பா, அடியா போன்ற பழங்குடி வழக்கங்களில் அனுமன் இராமனைச் சந்தித்தவுடன், இராமன் தும்முகிறான். இராமன் தும்மும் போது (Sneeze) அனுமன் அவருக்கு “தீர்க்காயுசு” (நீண்ட காலம் வாழ்க) என்று வாழ்த்துவார். அந்த நொடியில் இருந்து இராமனை விட்டு நீங்காமல் இருக்கிறார் அனுமான். ஏனென்றால் இராமன் தும்மும் போதும் அனுமன் கூடவே இருக்க வேண்டும் என்பதற்காக.
வங்காள ராமாயணத்தில் இராமனின் கணையாழி கிணற்றில் விழுந்துவிட, அதைத் தேடி அனுமன் செல்ல, அங்கே ஆயிரமாயிரம் கணையாழி இருப்பதைக் காணும் கதை, என நாட்டுப்புறக் கதைகள் விரிகின்றன