Home இதழ்கள்சமன்பாடில்லா சமவெளிப் பயணம் -12 (இறுதிப் பகுதி)

சமன்பாடில்லா சமவெளிப் பயணம் -12 (இறுதிப் பகுதி)

by Padma Arvind
0 comments
This entry is part 12 of 12 in the series பயணக்கட்டுரைத் தொடர்

பனிவிழும் மலர்வனம்

புடாபெஸ்டிலிருந்து திரும்பியது ஒரு முடிவல்ல; ஒரு தொடக்கம். என்னுடைய ஆராய்ச்சி தீவிரமடைந்தது. நல்ல முடிவுகள் வரத் தொடங்கியிருந்தன. UCLA நடத்தும் குளிர்கால மாநாட்டுக்கு அனுப்பிய கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த ஒப்புதல் கடிதத்தைப் படித்தபோது, அது ஒரு சாதாரணக் கடிதமல்ல என்று தெரிந்தது. அமெரிக்கா என்ற வார்த்தை முதல் முறையாக என் பயணத்தின் வரைபடத்தில் தோன்றியது. கான்ஃபிரன்ஸ் செல்வது இன்னொரு புதிய பாதை திறக்கவும் வாய்ப்பாகக் கருதினோம். “கையோடு நிறைய ரெஸ்யுமேவும் கொண்டுபோ” என்றான் அண்ணன். “பேசி, ஒரு போஸ்ட்டாக் வாங்கப்பாரு” என்றாள் அக்கா.

இந்திய அறிவியல் கழகம் பயணச் செலவை ஏற்றுக்கொண்டது. அரசுப் பணத்தில் பயணம் செய்வதால் ஏர் இந்தியா மட்டுமே வழி. அது கட்டாயம்; தேர்வு இல்லை. ஆராய்ச்சி முடிவுகள் எல்லாவற்றையும் அப்போது பிரிண்ட் செய்து கொண்டுவந்தேன். ஒவ்வொன்றையும் ஒரு பெரிய அட்டைத் தாளில் ஒட்டி ஒட்டி ஒரு பெரிய சுவரொட்டியாக்கினேன். கையால் செய்த வேலை. நேர்த்தி இல்லாமலிருந்தாலும், என் ஆராய்ச்சி முழுதும் அதில் இருந்தது. அந்தச் சுவரொட்டியைக் கசங்காமல் சுருட்டி ஒரு “ரப்பர் பாண்ட்” போட்டேன்.

லண்டன் வழியாக டென்வர். டென்வரிலிருந்து ஸ்டீம்போட் ஸ்ப்ரிங்ஸ். ரம்மியமான பெயர். ஸ்டீம்போட் என்றால் ஆவிப்படகு. ஆனால் அந்த ஊர் ஒரு பனிமலைச் சிற்றூர். மாநாடு அங்கே நடைபெற இருந்தது. கழகம் தரும் அறை வாடகைப் பணம் அந்த ஊரின் ஹோட்டல்களுக்குப் போதாது. மாநாட்டு இடத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் சூப்பர் 8 மோட்டல் ஒன்று இருந்தது. அன்று மோட்டல் என்றால் என்ன, ஹோட்டல் என்றால் என்ன என்ற வித்தியாசம் எனக்குத் தெரியாது. “இரண்டு மைல்தானே, நல்ல ஷூ இருக்கிறது, நடந்து போகலாம்” என வீட்டில் பேசி இருந்தோம். மாநாட்டு அரங்கங்கள் காலையும் இரவும். பின் பகல் முழுதும் என்ன செய்யப்போகிறார்கள் எனப் புரியவில்லை.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் திகைத்தேன். கண்முன்னே மூன்று அடி பனி. அதுவரை படங்களில் மட்டுமே பார்த்த பனி. காலில் படர்ந்தது; காற்று கத்தியாக வெட்டியது. நான் குளிருக்கேற்ற ஆடைகள் கொண்டு வந்திருந்தேன். ஆனால் இந்த அளவு என்று தெரியாது. இணையம் இல்லாத காலம். மாநாட்டு அமைப்பாளர்கள் அனுப்பிய தகவல் கடிதம்கூட சரியாக வரவில்லை. ஆனால் சிறிய உருவத்தில் ஒரு பெண் அங்கே நின்றிருப்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர்களும் நானும் ஒரே மாதிரி திகைத்தோம்.

பேருந்தில் மோட்டலுக்கு வந்தேன். உள்ளே நுழைந்ததும் பார்த்தேன் — பெரும்பாலும் பிரம்மாண்டமான 18 சக்கர டிரக்குகளின் ஓட்டுநர்கள். இரவில் வந்து, விடியலுக்கு முன் கிளம்பும் மனிதர்கள். அவர்கள் என்னைப் பார்த்த விதம் ஆச்சரியம் கலந்தது. ‘இந்தியப் பெண் ஒருத்தி இங்கே என்ன செய்கிறாள்?’ என்ற கேள்வி அவர்கள் கண்களில் தெரிந்தது. ஆனால் அந்த ஆச்சரியம் பெரும்பாலும் கவலையாக மாறியது. காலை கிளம்பி வரவேற்பு அறைக்கு வந்தால் என்னளவில் பாதியாக நாய்கள். டாட்டூவும் முரட்டுத் தோற்றமும் கொண்ட ஓட்டுநர்கள். ‘காஃபி? டோனட்?’ என்ற கேள்விக்கு, அது என்ன டோனட் என்ற என் குழப்பம் தெரிந்திருக்க வேண்டும். “இது சாப்பிட இனிப்பாக இருக்கும், சாப்பிடு” எனத் திணித்தார் ஒருவர். பரவாயில்லை போல இருந்தது; இலவச காஃபி. “கான்ஃபிரன்ஸ் இடத்துக்கு எப்படி நடந்து போவது?” எனக் கேட்ட என்னைப் பார்த்துச் சிரித்தார் இன்னொருவர். “நானே கொண்டுவிடுகிறேன்” என்றவர், “ஏறு” எனச் சொல்ல, பயம் பாதி, எப்படி ஏறுவது எனப் புரியாமல் குழப்பம் பாதி என நின்றேன். இன்னொருவர் வந்து எப்படி ஏற வேண்டும் எனக் காண்பித்தார். மறுநாள் காலையிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ஓட்டுநர் தன் டிரக்கில் மாநாட்டு இடத்துக்கு அழைத்துச் சென்றார். இன்னொருவர் இரவில் திருப்பியும் அழைத்து வந்தார். கேட்காமல், தானாக.

பகல் பொழுதில் மாநாட்டில் கலந்துகொண்டேன். இரவில் மோட்டலுக்குத் திரும்பினேன். அனைவரும் பனிச்சறுக்கு மலைகளுக்குச் சென்றுவிட்டனர். ஸ்கி என்பது ஒரு கலாச்சாரக் கொண்டாட்டம் அங்கே. ‘நீயும் வா’ என்று யாரோ கேட்டனர். ‘காப்பீடு இல்லாமல் முயலாதே’ என்று இன்னொருவர் தடுத்தனர். அப்படியே மோட்டல் லாஞ்சில் உட்கார்ந்திருந்தேன். பனிப்பொழிவு பார்க்க அவ்வளவு அழகு. உள்ளே செயற்கையாக உடலுக்கு ஏற்ற வெப்பம். காய்கறி உணவைத் தேடி அலைந்தேன்; கிடைக்கவில்லை. அந்தச் சிற்றூரில் அன்று சைவ உணவு என்பது கனவு.

மாநாட்டில் போஸ்டர்களை வரிசையாக வைத்திருந்தனர். மற்ற பல்கலைக்கழகங்களிலிருந்து வந்தவர்களின் போஸ்டர்கள் — ஒரே அகலமான தாளில் நிறமாகவும் நேர்த்தியாகவும் அச்சடிக்கப்பட்டவை. அவை ஒளிர்ந்தன. என்னுடையதோ சிறிய சிறிய ஸ்லைடுகளால் ஆனது; கொஞ்சம் கசங்கியும் இருந்தது. விமானப் பயணத்தில் அடிபட்டுச் சரியான பாதுகாப்பின்றி வந்தது. அதைப் பார்த்தவர்கள் முகத்தில் ஒரு தயக்கம் தெரிந்தது. ஆனால் என் ஆய்வு முடிவுகளைப் படிக்கத் தொடங்கியவர்கள் நின்றுகொண்டே கேள்விகள் கேட்டனர். சில கேள்விகள் ஆழமானவை.

ஒரு பயணம் என்னவெல்லாம் கற்றுத்தரும்? குளிர் என்னவென்று, பனி என்னவென்று, 18 சக்கர டிரக்கில் ஏறிப் பனிப்பாதையில் செல்வது என்னவென்று, காப்பீடு இல்லாமல் பனிச்சறுக்கு ஆடாமல் இருப்பது என்னவென்று… தாள் நேர்த்தியாக இல்லாமலிருந்தாலும் செய்யும் ஆய்வில் ஆழமும் நேர்த்தியும் இருந்தால் அது கவனம் பெறும். என் ஆராய்ச்சி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு எனக்கு மேல் ஆராய்ச்சிக்கு அழைப்பும் கிட்டியது.

அந்த டிரக் ஓட்டுநர்களின் பெயர்கள் தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் அவர்கள் தாங்களாக முன்வந்து உதவியது — அது ஒரு கோட்பாட்டு மாநாட்டில் கற்றதைவிட ஆழமான பாடம். சமன்பாடில்லா சமவெளியில் இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். மனிதர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள்; ஆனால் சமூகமாக இன்னும் உலகம், பெண்கள் தனியாகப் பயணம் செய்யப் பக்குவப்பட வேண்டும். வசதிகள் பெருக வேண்டும். அதற்கு ஒவ்வொரு தனிமனிதனும் அடுத்தவரை நேசிக்கவும் தன்னைப்போலவே மதிக்கவும் கற்றுக்கொண்டாலே போதும்.

(முற்றும்)

Series Navigation<< சமன்பாடில்லா சமவெளிப் பயணம் – 11

Author

You may also like

Leave a Comment