ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையே!
—– —————————————————————————
ஆங்கிலம் : ஜார்ஜ் பார்க்கர்
தமிழில் : சந்திரா மனோகரன்
ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையே
ஓர் இதயம் மட்டுமே கேட்ட அழைப்பை போல
சொற்களற்ற பாடல்கள் அந்த வெள்ளப்பரப்பில்
எழுகின்றன!
எல்லாவற்றிலும் நிரம்பியிருக்கும் ஆனந்தம்
எழும்புகிறது
ஒரு பட்சியின் சீழ்க்கையொலிபோல
ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையே
நானும் அவற்றைக் கேட்கிறேன்
அந்தச் சுருக்கமான தெய்வீக இசைக்குறிப்புகள்
புலரியின் யாழ்,இலை மீதமர்ந்த நைட்டிங்கேல்
அனைத்தும் ..அனைத்தும் நம் துயரத்தின்
இருளையும் மௌனத்தையும் சிதறடிக்கின்றன
ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையே
நீ அங்கே நிற்பதைக் காண்கிறேன்;
நீர்த்துளிகளும்,மின்மினிப்பூச்சிகளும்
காற்றில் ரீங்கரிக்கும் சிறு குருவிகளும்
எங்கும் நிறைந்திருக்கும் விண்ணுலகை
புகழ்ந்து பாடுகின்றன.
———————————————————————————————-
கைவிடப்பட்ட தோட்டம்
ஆங்கிலம் : பை ஜூயி
தமிழில் :சந்திரா மனோகரன்
நடுவாயில் வழியாக
நான் முற்றத்தினுள் நுழைகிறேன்–
என் சட்டைக்கை கண்ணீரால் நனைந்துள்ளது
முற்றத்தில் பூக்கள் இன்னும்
பூத்துக் குலுங்குகின்றன
தோட்டக்காரன் கடைசியாக வந்த பின்பும்–
இரண்டு நீரூற்றுகள் வடிந்துவிட்ட போதிலும்
சாளரங்களும்,தாழ்வாரமும்,மூங்கில் திரையும்
எப்பொழுதும் போலவே இருக்கின்றன
ஆனால்,வீட்டின் நுழைவாயிலில்
யாரோ ஒருவரைக் காணவில்லை
அது–
நீங்கள்தான்!