Home சிறப்பிதழ்கள்மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் - 2026ஏழாவது பயணம் – ஸ்டானிஸ்லா லெம்

தமிழாக்கம்: குமாரநந்தன்

ஸ்டானிஸ்லா லெம் (Stanisław Lem) போலந்தைத் சேர்ந்த அறிவியல் புனைகதை எழுத்தாளர். இவருடைய படைப்புகள் போலிஷ்சில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்திலிருந்து 40க்கும் மேற்பட்ட மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் இயோன் டிச்சி( Ijon Tichy) என்பவரின் வின்வெளிப் பயண அனுபவங்கள் என்கிற தலைப்பில் தொடர்ச்சியாக பல கதைகள் எழுதி உள்ளார். அதில் ஏழாவது பயணம் என்கிற தலைப்பில் உள்ளது இந்தக் கதை. நகைச்சுவையிம், தத்துவ விசாரமும் கொண்ட இந்த வரிசை கதைகள் தி ஸ்டார் டையரிஸ்( The Star Diaries) என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

அது ஏப்ரல் இரண்டாம் தேதி ஒரு திங்கள் கிழமை. நான் பெடல்ஜீயூஸ் நட்சத்திரம் அருகே பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது பட்டாணி அளவு கூட இல்லாத விண்கல் ஒன்று, ராக்கெட்டின் மேற்புறக் கவசத்தைத் துளைத்து இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பகுதியையும் சுக்கானையும் (rudder) சேதப்படுத்தியது. இதன் விளைவாக ராக்கெட் தன் திசைமாற்றும் திறனை இழந்தது. நான் விண்வெளி உடையை அணிந்து கொண்டு வெளியே வந்து அதைச் சரி செய்ய முயற்சித்தேன். ஆனால் இன்னொருவரின் உதவியில்லாமல் அதைச் சரி செய்ய முடியாது என்பதை அறிந்தேன். ராக்கெட்டை வடிவமைத்தவர்கள் இப்படி முட்டாள்தனமாக அதை வடிவமைத்திருந்தார்கள். ஒருவர் குறடு மூலம் போல்ட்டைப் பிடித்துக் கொள்ள, இன்னொருவர் நட்டை இறுக்க வேண்டும். முதலில் நான் இதை உணரவில்லை. கால்களில் குறடைப் பிடித்துக் கொண்டு கைகளால் நட்டை இறுக்க மணிக்கணக்காக முயற்சித்தேன். ஒன்றும் பலிக்கவில்லை. மதிய உணவு நேரமும் கடந்துவிட்டது. இதோ நான் அதைச் சரிசெய்துவிட்டேன் என்று நினைத்தபோது, குறடு என் கால்களில் இருந்து நழுவி, விண்வெளியில் பறந்தது. ஆக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பது மட்டுமின்றி ஒரு முக்கியமான கருவியையும் இழந்துவிட்டேன். நட்சத்திரங்கள் நிறைந்த வான்வெளியில் அது சிறிதாகிக் கொண்டே செல்வதை எதுவும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் அது மீண்டும் திரும்பி வந்தது. தற்போது அது ராக்கெட்டின் ஒரு செயற்கைக்கோள் போல நீள்வட்டப் பாதையில் வந்தாலும், நான் அதைப் பிடிக்கும் அளவுக்கு அருகில் வரவில்லை. நான் உள்ளே திரும்பிச் சென்று எளிய இரவு உணவைச் சாப்பிட்டபடி, இந்த முட்டாள்தனமான நிலைமையில் இருந்து மீள்வது எப்படி என யோசித்தேன். இதற்கிடையே ராக்கெட் முன்னோக்கிப் பறந்து கொண்டிருந்தது. அந்த விண்கல்லால் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி சேதமடைந்திருந்ததால், ராக்கெட்டின் வேகம் சீரான முறையில் அதிகரித்தபடி இருந்தது. வழியில் இப்போது விண்கல் எதுவும் இல்லையென்றாலும் இந்தக் கட்டுப்பாடில்லாத வேகத்தில் இப்படியே தொடர முடியாது.

என் கோபத்தைச் சற்று நேரம் அடக்கிக் கொண்டேன். ஆனால் இரவு உணவிற்கான பாத்திரங்களைச் சுத்தம் செய்தபோதுதான், இந்த அதீத வெப்பத்தில் பிரீஸரில் வைத்திருந்த அருமையான இறைச்சித் துண்டு கருகிவிட்டதைக் கண்டுபிடித்தேன். (ஞாயிறு உணவுக்காக அதை வைத்திருந்தேன்.) என் வழக்கமான நிதானத்தை இழந்து, சரமாரியாகக் கெட்ட வார்த்தைகளில் திட்டியபடி, சில தட்டுகளை உடைத்தேன். இது எனக்குக் கொஞ்சம் அமைதியைத் தந்தாலும், அதனால் எந்தப் பயனும் இல்லை. மேலும் நான் விண்வெளியில் விட்டெறிந்த அந்த இறைச்சித் துண்டு, விட்டுப் போக மனமில்லாதது போல, இரண்டாவது செயற்கைக்கோளாக, ராக்கெட்டைச் சுற்றிக் கொண்டிருந்தது. அது பதினொரு நிமிடம் நான்கு வினாடிகளுக்கு ஒருமுறை ஒரு குட்டி சூரிய கிரகணத்தை வேறு தோற்றுவித்தது. என்னை அமைதிப்படுத்துவதற்காக, தொலைந்து போன குறடினால், சுற்றுவட்டப் பாதையில் ஏற்படும் குழப்பங்களை மாலை வரை கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். கடைசியாக, குறடுக்கு முன்னும் பின்னுமாக அதை வழி நடத்தியபடி, ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு அந்த இறைச்சித் துண்டு ராக்கெட்டைச் சுற்றிக் கொண்டிருக்கும் என்பதைக் கண்டுபிடித்தேன். இந்தக் கணக்கீடுகளால் சோர்வடைந்து படுக்கையில் விழுந்தேன். நள்ளிரவில், யாரோ என் தோளைப் பற்றி அசைப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. கண் விழித்தபோது, என் படுக்கை அருகே ஒருவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். விந்தையான அந்த முகம் எனக்குப் பரிச்சயமானதாகத் தோன்றினாலும் அது யாராக இருக்கும் என எனக்குத் தெரியவில்லை.

அவன், “எழுந்திரு, இடுக்கியை எடுத்துக் கொள், நாம் வெளியே போய், சுக்கானின் போல்ட்களைச் சரி செய்யலாம்” என்றான்.

“முதலில் உன்னுடைய அணுகுமுறை சரியில்லை. இன்னும் நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகவே இல்லை. மேலும் இங்கே யாரும் இல்லை என எனக்கு நிச்சயமாகத் தெரியும்” என்றேன். நான் இந்த ராக்கெட்டில் இரண்டு வருடங்களாகத் தனியாக இருக்கிறேன். ராம் விண்மீன் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன். எனவே, நீ ஒரு கனவு; அதற்கு மேல் எதுவும் இல்லை.

ஆனாலும் அவன் தொடர்ந்து என் தோள்களை உலுக்கியபடி, நான் அவனுடன் உடனடியாகச் சென்று உபகரணங்களை எடுத்து வர வேண்டும் எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.

நான் எரிச்சலடைந்தேன். இது முட்டாள்தனம். ஏனென்றால் இந்த கனவு சர்ச்சை என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடும். திரும்ப நான் தூங்குவதற்கு எவ்வளவு சிரமம் என்பதை என் அனுபவத்திலிருந்து அறிவேன்.

“இதோ பார், நான் எங்கேயும் வரவில்லை. அதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒரு கனவில் சரி செய்யப்படும் போல்ட் உண்மையில் எதையும் மாற்றாது. தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாமல், ஆவியாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ இங்கிருந்து போய்விடு. இல்லாவிட்டால் நான் கண் விழித்துவிடுவேன்.”

“நீ ஏற்கனவே விழித்துக் கொண்டுதான் இருக்கிறாய். என்னைத் தெரியவில்லையா உனக்கு?” என்றவன் தன்னுடைய இடது கன்னத்தில் ஸ்ட்ராபெர்ரி அளவுக்கு இருந்த இரண்டு பெரிய மருக்களைக் காட்டினான். தன்னிச்சையாக நான் என் முகத்தைத் தொட்டுப் பார்த்தேன். ஆமாம், எனக்கும் அதே இடத்தில் அதே மருக்கள் இருக்கின்றன. திடீரென அந்தப் பிசாசு எனக்குத் தெரிந்த யாரோ ஒருவரை நினைவூட்டியது. என்னுடைய அச்சு உருவம் அது; நான் தான்.

“கடவுளின் பெயரால் என்னை விட்டுவிடு.” நான் அழுதபடி கண்களை மூடிக் கொண்டு தொடர்ந்து தூக்கத்தில் இருப்பதாக நம்ப முயன்றேன். “நீ நானாக இருந்தால் நல்லது. நமக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால் அதுதான் நீ இல்லை என்பதை நிரூபிப்பதாகவும் இருக்கிறது.” இப்படிச் சொல்லிவிட்டு, நான் திரும்பிப் படுத்துக் கொண்டு போர்வையைத் தலைக்கு மேல் இழுத்துவிட்டுக் கொண்டேன். அவன் தொடர்ந்து முட்டாள்தனமாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். நான் எதையும் கண்டுகொள்ளவில்லை. அவன் “இதற்காக நீ மிகவும் வருத்தப்படுவாய். இது ஒரு கனவு இல்லை என்பதை நீ தாமதமாக உணர்வாய்” எனச் சத்தம் போட்டான். நான் அசைந்து கொடுக்கவில்லை.

காலையில்தான் கண்களைத் திறந்தேன். இரவில் நடந்த அந்த ஆர்வமூட்டும் விஷயத்தை நினைவு கூர்ந்தேன். மனம் என்னென்ன விசித்திரமான தந்திரங்களைச் செய்யக் கூடும் எனப் படுக்கையில் அமர்ந்தபடி சிந்தித்தேன். இங்கே ஒரு உயிரினம் கூட இல்லாமல் மன அழுத்தத்தைச் சந்தித்ததால், இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க நான் அந்தக் கற்பனைக் கனவில் என்னை இரண்டாகப் பிளந்து கொண்டேன்.

காலை உணவுக்குப் பிறகு, ராக்கெட் கூடுதல் முடுக்கம் பெற்றிருப்பதை உணர்ந்தேன். இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு என, ராக்கெட் நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை இரவு வரை புரட்டிக் கொண்டிருந்தேன். ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை. எனவே, நட்சத்திர வரைபடத்தை எடுத்து மேசையின் மீது விரித்து, பெடல்ஜியூசின் வெளிச்சத்தில், அதைச் சுற்றிவரும் இறைச்சித் துண்டினால் அடிக்கடி ஏற்படும் இடையூறுக்கு இடையே, விண்வெளியில் நான் எங்கு இருக்கிறேன், வேற்று உலகினரால் எனக்கு ஏதாவது உதவி கிடைக்க வாய்ப்புள்ளதா என ஆராய்ந்தேன். ஆனால், துரதிருஷ்டவசமாக இது முழுக்க ஒரு நட்சத்திர வனாந்திரமாக இருந்தது. அசாதாரணமான ஆபத்துகள் நிரம்பிய பகுதி என்பதால் எந்த விண்கப்பலும் இங்கு வருவதில்லை. ஏனெனில் இங்கு மர்மமான நூற்றி நாற்பத்தேழு ஈர்ப்புவிசைச் சுழல்கள் இருந்தன. அவற்றின் இருப்பு பற்றி ஆறு வானியல் கோட்பாடுகள் மூலம் விளக்கப்பட்டிருந்தன. ஆனால், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருந்தது.

வானியல் ஆண்டுக்கணக்கு நூல், இதன் வழியாக அதிவேகத்தில் செல்லும்போது, கணக்கிட முடியாத சார்பியல் விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்தது. ஆனால் என்னால் செய்யக் கூடியது மிகக் குறைவு. என்னுடைய கணக்குப்படி, பதினொரு மணி அளவில் முதல் சுழலின் விளிம்பை அடைவேன். எனவே, வெறும் வயிற்றுடன் அந்த ஆபத்தை எதிர்கொள்ள விரும்பாமல் வேகமாக மதிய உணவைத் தயாரித்தேன். என்னுடைய தட்டு காலியாகும்போது, திடீரென ராக்கெட் எல்லாத் திசைகளிலும் குலுங்கி ஆடத் தொடங்கியது. சரியாகப் பொருத்தப்படாத பொருட்கள் பனித் தூவல்கள் போல எதிர்புறத்துக்கு மிதந்து சென்றன. ராக்கெட்டின் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால், நான் நாற்காலிக்கு ஊர்ந்து சென்று என்னை அதனோடு பிணைத்துக் கொண்டேன்.

எதிர்ப்புறச் சுவரில் ஒரு மங்கலான பனி மூட்டம் உருவாகத் தொடங்கியது. கழுவும் தொட்டிக்கும் அடுப்புக்கும் இடையே ஏப்ரனுடன் தோன்றிய அந்த உருவம் தவாவில் ஆம்லெட் ஊற்றிக் கொண்டிருந்தது. அந்த உருவம் ஆச்சரியம் இல்லாமல், ஆர்வத்துடன் பார்த்தது. பின் மங்கி மறைந்துவிட்டது. கண்களைத் தேய்த்துக் கொண்டேன். நான் தனியாக இருப்பது வெளிப்படை என்பதால் அந்த காட்சி ஒரு தற்காலிக மாயை என, நினைத்துக் கொண்டேன்.

தொடர்ந்து அந்த நாற்காலியில் உட்கார்ந்து… இல்லை அதனுடன் சேர்ந்து குதித்துக் கொண்டிருந்தபோது, அது ஒரு மாயை அல்ல என்ற புரிதல் பளிச்சென என்னைத் தாக்கியது. பொதுச் சார்பியல் கோட்பாட்டின் ஒரு கணத்த தொகுப்பு அப்போது என் நாற்காலிக்கருகே சுழன்றபடி மிதந்து வந்தது. நான் அதைப் பிடிக்க எம்பி நான்காவது முயற்சியில் பிடித்தேன். அந்தக் கனமான புத்தகத்தைப் புரட்டுவது அந்தச் சூழ்நிலையில் சாத்தியமானதாக இல்லை. பேரழுத்தத்தில் ராக்கெட் ஒரு குடிகாரனைப் போல அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. ஒருவழியாக நான் சரியான அத்தியாயத்தைக் கண்டுபிடித்தேன். அதில் காலச் சுழற்சி (Time loop) பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. அதாவது, மிகுந்த ஈர்ப்புவிசை கொண்ட பரப்பில் காலத்தின் திசை வளைந்துவிடுகிறது. சிலசமயம் இது நிகழ்காலம் முற்றாகப் பின் திரும்புதல் மற்றும் நிகழ்காலத்தின் நகல் ஏற்படுவதற்கும் கூட வழிவகுக்கலாம். நான் இப்போது நுழைந்துள்ள ஈர்ப்புச் சுழல் அவ்வளவு சக்தி வாய்ந்தது அல்ல. ராக்கெட்டின் முனையை விண்மீன் துருவத்தை நோக்கிக் கொஞ்சமாகத் திருப்ப முடிந்தால் கூட, அது பிங்கென்பாக்சி ஈர்ப்புச் சூழல் வெள்ளத்தைக் குறுக்காக வெட்டும் என்பதை நான் அறிவேன். அதில் நிகழ்காலத்தின் இரட்டிப்பு மற்றும் மும்மடங்கு கூட நேர்வதாகப் பலமுறை குறிப்பிட்டிருந்தது.

கட்டுப்பாடில்லை என்பது உண்மைதான் என்றாலும் நான் என்ஜின் அறைக்குச் சென்று நீண்டநேரமாகத் துருவிக் கொண்டிருந்தேன். இதனால் நான் உண்மையிலேயே ராக்கெட்டை விண்வெளித் துருவத்தை நோக்கி கொஞ்சமாகத் திருப்ப முடிந்தது. இதற்குப் பல மணி நேரம் பிடித்தது. இதன் விளைவுகள் என் எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டவையாய் இருந்தன. கிட்டத்தட்ட நள்ளிரவு நேரத்தில் ராக்கெட் ஈர்ப்புச் சுழலின் மையத்துக்குச் சென்றது. பாதுகாப்பு குறித்து நான் பயந்து போகும்படி அதன் ஆதாரக் கட்டமைப்புகள் அதிர்ந்து நடுங்கின. என்றாலும் இந்தச் சோதனையில் இருந்து முழுமையாக வெளியேறி, மீண்டும் பிரபஞ்ச நிசப்தத்தின் ஜீவனற்ற தன்மைக்குள் சுருண்டது. நான் எழுந்து என்ஜின் அறையைவிட்டு வெளியே வந்தேன். ஆனால் நான் படுக்கையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன். உடனடியாக எனக்குப் புரிந்தது. அது முந்தைய நாளின் நான். அதாவது அது திங்கள் கிழமை இரவு. இந்த அரிதான சம்பவத்தின் தத்துவார்த்தப் பக்கத்தை யோசித்துக் கொண்டிருக்காமல் நான் ஓடிச்சென்று தூங்கிக் கொண்டிருந்தவனின் தோளை உலுக்கி எழுந்திருக்கச் சொல்லிச் சத்தம் போட்டேன். இந்தத் திங்கள் கிழமையின் இருப்பு என் செவ்வாய்கிழமைக்குள் எவ்வளவு நேரம் இருக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை. எனவே நாம் இருவரும் வெளியே சென்று எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரேடாரைச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஆனால் உறங்கிக் கொண்டிருந்தவன் ஒரு கண்ணை மட்டும் திறந்து நான் அநாகரிகமாக நடந்து கொள்கிறேன் என்றது மட்டுமல்லாமல், நான் அவனது கனவில் தோன்றிய ஒரு கற்பனை உருவம் மட்டுமே, அதற்கு மேல் ஒன்றுமில்லை என்றும் சொன்னான். நான் பொறுமை இழந்து அவனை வீணாக இழுத்தேன். படுக்கையிலிருந்து அவனை வலுக்கட்டாயமாக இழுத்துத் தள்ளவும் முயன்றேன். அவன் அசையாமல் இதுவெல்லாம் ஒரு கனவு என்று பிடிவாதமாகத் திரும்பத் திரும்பச் சொன்னான். நான் அவனைத் திட்டினேன். ஆனால் கனவில் இறுக்கப்படும் போல்ட்கள், பகல் வெளிச்சத்தில் சுக்கானை இறுக்கிப் பிடிக்காது என அவன் தர்க்கரீதியாகச் சுட்டிக்காட்டினான். அவன் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறான் என்று நான் உறுதியாகச் சொன்னேன். கெஞ்சியும் திட்டியும் பார்த்தேன், ஆனால் எந்தப் பயனும் இல்லை. என் மருக்கள் கூட அவனை நம்பவைக்கவில்லை. அவன் எனக்கு முதுகைக் காட்டித் திரும்பிப் படுத்துக் கொண்டு குறட்டை விடத் தொடங்கினான்.

நான் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து, எண்ணங்களை ஒருமுகப்படுத்தவும், நிலைமையைச் சீர்தூக்கிப் பார்க்கவும் முயன்றேன். முதலில் திங்கட்கிழமை அந்தத் தூங்குபவனாகவும், பிறகு செவ்வாய்க்கிழமை அவனை எழுப்ப முயற்சி செய்து தோல்வியடைந்தவனாகவும் இந்தச் சூழலை நான் இப்போது இரண்டு முறை கடந்துவிட்டேன். திங்கட்கிழமை நான் அந்த இரட்டை உருவத்தின் உண்மையை நம்பவில்லை, ஆனால் செவ்வாய்க்கிழமை அது ஒரு நிதர்சனம் என்பதை அறிந்திருந்தேன். இது ஒரு சாதாரண ‘காலச் சுழல்’ மட்டுமே. அப்படியென்றால், அந்தச் சுக்கானைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்? திங்கட்கிழமை நான் தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்ததால், காலை வரை எந்தத் தொந்தரவும் இன்றித் தூங்கியது எனக்கு நினைவிருந்தது. அவனை எழுப்ப எடுக்கும் எந்த முயற்சியும் வீண் என்பதை உணர்ந்தேன். இன்னும் பல பெரிய ஈர்ப்புச் சுழல்கள் (gravitational vortices) முன்னால் இருப்பதை விண்வெளி வரைபடம் காட்டியது, எனவே அடுத்த சில நாட்களில் தற்போதைய நிலை மீண்டும் பலமடங்காக உருவாவதை நம்பலாம் எனத் தெரிந்திருந்தது. நான் எனக்கே ஒரு கடிதம் எழுதி, அதைத் தலையணையோடு வைக்க முடிவு செய்தேன். இதன் மூலம் திங்கட்கிழமை நான் விழித்தெழும் போது, அது வெறும் கனவல்ல என்பதை அவனே உணர்ந்து கொள்ள முடியும்.”

ஆனால், நான் பேனாவையும் காகிதத்தையும் எடுத்துக்கொண்டு மேசையில் அமர்ந்த உடனேயே, என்ஜினில் ஏதோ சத்தம் கேட்கத் தொடங்கியது. அதனால் நான் அங்கே விரைந்து சென்றேன். அதிக வெப்பமடைந்த அணு கலன் மீது விடிய விடிய தண்ணீர் ஊற்றினேன். அதே சமயம், திங்கட்கிழமை நான் அவ்வப்போது உதடுகளை நக்கிக் கொண்டு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்; அது எனக்கு எல்லையில்லா எரிச்சலைத் தந்தது. ஒரு நொடிகூடத் தூங்காமல், பசியுடனும் தூக்கக் கலக்கத்துடனும் இருந்த நான், காலை உணவு தயாரிக்கத் தொடங்கினேன். பாத்திரங்களைத் துடைத்துக்கொண்டிருந்தபோது, ராக்கெட் அடுத்த ஈர்ப்புச் சுழலுக்குள் விழுந்தது. செவ்வாய்க்கிழமை நான் ஆம்லெட் தயாரித்துக்கொண்டிருந்தபோது, திங்கட்கிழமை நான் நாற்காலியில் கட்டப்பட்டிருந்ததைப் போலத் திகைப்புடன் அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். பின்னர் ஒரு குலுக்கல் என்னை நிலைதடுமாறச் செய்தது; எல்லாம் இருட்டானது; நான் கீழே விழுந்தேன். எனக்கு நினைவு திரும்பியபோது, உடைந்த பீங்கான் துண்டுகளுக்கு நடுவே கிடந்தேன். என் முகத்திற்கு அருகே, நின்றுகொண்டிருந்த ஒரு மனிதனின் ஷூ தெரிந்தது.

“எழுந்திரு,” என்றபடி, என்னைத் தூக்கிவிட்டவன், “நலமாக இருக்கிறாயா?” என்றான்.

“அப்படித்தான் நினைக்கிறேன்,” என்றேன், என் தலை இன்னும் சுற்றிக்கொண்டிருந்ததால் கைகளைக் கீழே ஊன்றியபடியே. “நீ வாரத்தின் எந்த நாளிலிருந்து வருகிறாய்?” என்றேன்.

“புதன்கிழமை,” என்றவன், “வா, வாய்ப்பு இருக்கும்போதே அந்தச் சுக்கானைச் சரிசெய்துவிடுவோம்” என்றான்.

“ஆனால் திங்கட்கிழமை நான் எங்கே?” என்று கேட்டேன்.

“அவன் போய்விட்டான்,” என்றவன், “அப்படியென்றால், நீதான் அவன் என்று நினைக்கிறேன்.” என்றான்.

“அது எப்படி?”

“அதாவது, திங்கட்கிழமை இரவு இருந்த ‘திங்கட்கிழமை நான்’, செவ்வாய்க்கிழமை காலையில் ‘செவ்வாய்க்கிழமை நானாக’ மாறிவிட்டான். இப்படியே இது தொடர்கிறது.” என்றான்.

“எனக்கு ஒன்றும் புரியவில்லை.” என்றேன்.

“பரவாயில்லை போகப் போக உனக்குப் புரிந்துவிடும். சீக்கிரம் வா, நாம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்!” என்றான்.

“ஒரு நிமிடம்,” தரையில் அமர்ந்தபடியே நான் பதிலளித்தேன். “இன்று செவ்வாய்க்கிழமை. இப்போது நீ ‘புதன்கிழமை நான்’ என்றால், புதன்கிழமை அந்த நேரத்தில் கூட இன்னும் அந்தச் சுக்கான் சரிசெய்யப்படவில்லை என்றுதானே அர்த்தம்? அப்படியென்றால் நாம் அதைச் சரிசெய்வதை ஏதோ ஒன்று தடுக்கிறது என்றுதானே பொருள்? இல்லையென்றால், புதன்கிழமை நீ, இப்போது செவ்வாய்க்கிழமை என்னிடம் வந்து அதைச் சரிசெய்ய உதவி கேட்க வேண்டிய அவசியம் இருக்காதே! அப்படியிருக்க, நாம் வெளியே சென்று ஆபத்தை எதிர்நோக்காமல் இருப்பதே நல்லது அல்லவா?” என்றேன்.

“முட்டாள்தனம்!” என்று அவன் கூச்சலிட்டான். “இதோ பார், நான் ‘புதன்கிழமை நான்’, நீ ‘செவ்வாய்க்கிழமை நான்’. விண்கலத்தின் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை, சில இடங்களில் புதன்கிழமை நிலவுகிறது. இந்த ராக்கெட்டில், காலம் அங்கும் இங்குமாக ஒட்டுப் போடப்பட்டிருக்கிறது. ஒருவேளை கொஞ்சம் வியாழக்கிழமை கூட இருக்கலாம். இந்த ஈர்ப்புச் சுழல்கள் வழியாகச் செல்லும்போது காலம் அப்படியே ஒன்று கலந்து குழம்பிப் போய்விட்டது. ஆனால் அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? நாம் இப்போது இரண்டு பேர் இருக்கிறோம், எனவே அந்தச் சுக்கானைச் சரிசெய்ய நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அது போதாதா?” என்றான்.

“இல்லை, நீ சொல்வது தவறு!” என்றேன். “நீ ஏற்கனவே இருக்கும் புதன்கிழமையில், அதாவது செவ்வாய்க்கிழமை முழுவதையும் கடந்து வந்து, இப்போது செவ்வாய்க்கிழமை உனக்கு பின்னால் கடந்த காலமாக இருக்கும் நிலையில், புதன்கிழமை அந்தச் சுக்கான் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்றால், அதிலிருந்து நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். அதாவது, செவ்வாய்க்கிழமை அது சரிசெய்யப்படவில்லை என்பதுதான் அது. ஏனெனில், இப்போது எனக்குச் செவ்வாய்க்கிழமை; நாம் உடனே சென்று அந்தச் சுக்கானைச் சரிசெய்தால், அந்த ‘உடனே’ என்பது உனக்கு ‘நேற்றைய பொழுதாக’ இருக்கும், அப்படியென்றால் இப்போது உனது புதன்கிழமையில் சரிசெய்ய எதுவுமே இருந்திருக்காதே! அதன் விளைவாக…”

“அதன் விளைவாக, நீ ஒரு கோவேறு கழுதையைப் போலப் பிடிவாதமாக இருக்கிறாய்” என்று அவன் உறுமினான். “இதற்காக நீ வருந்துவாய். எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் என்னவென்றால், நான் இப்போது எப்படி ஆத்திரத்தால் கொந்தளிக்கிறேனோ, அதேபோலப் புதன்கிழமையை அடையும்போது, உன் முட்டாள்தனமான பிடிவாதத்தைக் கண்டு நீயே கடுங்கோபம் கொள்வாய் என்பதுதான்.”

“கொஞ்சம் பொறு,” நான் கத்தினேன், “அப்படியென்றால், புதன்கிழமையன்று நீயாக இருக்கும் நான், செவ்வாய்க்கிழமை நானை, நீ இங்கே செய்வதைப் போலவே சமாதானப்படுத்த முயற்சிப்பேன் என்கிறாயா? ஆனால், எல்லாம் தலைகீழாக மாறிவிடும். வேறுவிதமாகச் சொன்னால், நீ நானாகவும் நான் நீயாகவும் இருப்போம்; அப்படித்தானே? அதுதான் காலச் சுழற்சியை உருவாக்குகிறது. இப்போது எனக்குப் புரிகிறது…”

ஆனால் நான் தரையிலிருந்து எழுவதற்குள், நாங்கள் ஒரு புதிய சுழலுக்குள் விழுந்தோம்; அதன் பயங்கரமான முடுக்கம் எங்களைக் கூரையோடு சேர்த்து அழுத்தியது. செவ்வாய் முதல் புதன் வரையிலான அந்த இரவு முழுவதும், அந்தப் பயங்கரமான குலுக்கலும் ஏற்ற இறக்கமும் ஒருமுறை கூட நிற்கவில்லை. பிறகு, இறுதியாகச் சத்தம் சற்று அடங்கியபோது, பொதுச் சார்பியல் கோட்பாடு பற்றிய புத்தகம் அறை முழுவதும் சுற்றிப் பறந்து வந்து என் நெற்றியில் அவ்வளவு வேகத்துடன் மோதியதில், நான் சுயநினைவை இழந்தேன். நான் கண்களைத் திறந்தபோது, உடைந்த தட்டுகளையும் அவற்றுக்கு இடையில் ஒரு மனிதன் விழுந்து கிடப்பதையும் கண்டேன். நான் துள்ளியெழுந்து, “எழுந்திரு, நீ நலமாக இருக்கிறாயா?” என்று கத்திக்கொண்டே அவனைத் தூக்கினேன்.

“அப்படித்தான் நினைக்கிறேன்,” அவன் கண்களைக் கொட்டியபடி பதிலளித்தான். “நீ வாரத்தின் எந்த நாள்?” என்றான்.

“புதன்,” என்றேன் நான், “சரி, வாய்ப்பு இருக்கும்போதே அந்தச் சுக்கானைச் சரிசெய்துவிடுவோம்.” என அழைத்தேன்.

“திங்கட்கிழமை நான் எங்கே?” அவன் எழுந்து உட்கார்ந்தபடி கேட்டான். அவனுக்குக் கண்ணில் காயம் ஏற்பட்டிருந்தது.

“போய்விட்டான்; அப்படியென்றால் நீதான் அவன்” என்றேன்.

“அது எப்படி?”

“திங்கட்கிழமை இரவு இருந்த திங்கட்கிழமை நான், செவ்வாய்க்கிழமை காலை செவ்வாய்க்கிழமை நானாகிறான். இப்படியே இது தொடர்கிறது.”

“எனக்குப் புரியவில்லை.”

“பரவாயில்லை நீயாகப் புரிந்துகொள்வாய். சீக்கிரம், நாம் நேரத்தை வீணடிக்கிறோம்!” இப்படிச் சொல்லிக்கொண்டே, நான் கருவிகளைத் தேடிக்கொண்டிருந்தேன்.

அவன் இருந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட நகராமல், “ஒரு நிமிடம்,” என்று இழுத்தான். “இன்று செவ்வாய்க்கிழமை. இப்போது, நீ ‘புதன்கிழமை அன்று இருக்கப்போகும் நான்’ என்று வைத்துக்கொள்வோம்; அன்று அந்த நேரத்திலும் ராக்கெட்டின் திசைதிருப்பி சரிசெய்யப்படாமல் இருக்கிறது என்றால், அதைச் சரிசெய்வதிலிருந்து நம்மைத் தடுக்கும் ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்றே அர்த்தம். ஏனெனில், அப்படித் தடுக்கும் ஏதும் நிகழாமல் இருந்திருந்தால், புதன்கிழமை நானாகிய நீ, செவ்வாய்க்கிழமை நானாகிய என்னிடம் வந்து அதைச் சரிசெய்ய உதவுமாறு கேட்டிருக்க மாட்டாய் அல்லவா? அப்படியென்றால், நாம் வெளியே செல்வது எனும் ஆபத்தை மேற்கொள்ளாமல் இருப்பதே மிகச் சிறந்ததாக இருக்கும், இல்லையா?”

“முட்டாள்தனம்!” என்று நான் என் பொறுமையை இழந்து கத்தினேன். “பார், நான் புதன்கிழமை நான்; நீ செவ்வாய்க்கிழமை நான்.”

இவ்வாறாக, எதிரெதிர் நிலையில் நின்று நாங்கள் வாக்குவாதம் செய்தோம்; அந்தச் சமயத்தில், அவன் என்னை அதீத ஆத்திரத்திற்கு உள்ளாக்கினான். ராக்கெட்டின் சுக்கானைச் சரிசெய்ய எனக்கு உதவுவதற்கு அவன் தொடர்ந்து மறுத்துக்கொண்டே இருந்தான்; அவனை முரட்டுப் பன்றி என்றும், பிடிவாதக் கழுதை என்றும் திட்டிப் பார்த்தும் ஒரு பயனும் இல்லை. ஒருவழியாக நான் அவனைச் சம்மதிக்க வைத்தபோது, நாங்கள் அடுத்த ஈர்ப்புச் சுழலுக்குள் பாய்ந்தோம். இப்போது நாங்கள் இந்த ‘காலச் சுழலுக்குள்’ அகப்பட்டு, என்றென்றும் ஒரே நிகழ்வை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக்கொண்டே வரக்கூடும் என்ற எண்ணம் மனதில் தோன்றியதால், எனக்குக் குளிர் சுரம் வருவதைப் போல இருந்தது. ஆனால் நல்லவேளையாக, அப்படி எதுவும் நிகழவில்லை. விண்கலத்தின் வேகம் குறைந்து, நான் எழுந்து நிற்கும் அளவிற்கு நிலைமை திரும்பியபோது, நான் மீண்டும் அந்த அறையில் தனியாக நின்றிருந்தேன். சமையலறைத் தொட்டியின் அருகே இதுவரை நிலைத்திருந்த ‘செவ்வாய்க்கிழமையின் இருப்பு’, இப்போது மறைந்துபோய், மீளப்பெற முடியாத கடந்த காலத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டிருந்தது. நான் வரைபடத்தை நோக்கி விரைந்தேன்; மற்றொரு ‘காலப் பிறழ்வை’ நிகழ்த்துவதன் மூலம், எனக்கு உதவக்கூடிய ஒரு துணையை மீண்டும் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில், ஏற்றதான ஒரு ஈர்ப்புச் சுழலைத் தேடினேன்.

உண்மையில் அங்கே ஒரு சுழல் இருந்தது; அது மிகவும் நம்பிக்கையளிப்பதாகவும் இருந்தது. மிகுந்த சிரமத்திற்கு இடையே என்ஜின்களைக் கையாண்டு, அந்தச் சுழலின் மையப்பகுதியைச் சரியாக ஊடுருவும் வகையில் ராக்கெட்டைத் திசைதிருப்பினேன். வரைபடத்தின்படி பார்த்தால், அந்தச் சுழலின் வடிவம் சற்று வழக்கத்திற்கு மாறாகவே இருந்தது. அதற்கு அருகருகே அமைந்த இரண்டு மையங்கள் இருந்தன. அந்த விசித்திரத்தைப் பற்றியெல்லாம் கவலைகொள்ள முடியாத அளவிற்கு, அப்போது நான் மிகுந்த அவசரத்திலும் பதற்றத்திலும் இருந்தேன்.

என்ஜின் அறையில் பல மணிநேரம் பரபரப்பாகப் பணியாற்றியதால் என் கைகள் அழுக்காகியிருந்தன. அந்தச் சுழலுக்குள் நுழைவதற்கு இன்னும் நிறைய நேரம் இருந்ததால், கைகளைக் கழுவிக்கொள்ளச் சென்றேன். குளியலறை தாழிடப்பட்டிருந்தது. உள்ளிருந்து யாரோ வாய் கொப்பளிக்கும் சத்தம் கேட்டது.

“யாரது?!” நான் திகைத்துப்போய்க் கத்தினேன்.

“நான்தான்,” என்று ஒரு குரல் பதிலளித்தது.

“அது எந்த நான்?!”

“இஜோன் டிச்சி.”

“எந்த நாளிலிருந்து?”

“வெள்ளிக்கிழமையிலிருந்து. உனக்கு என்ன வேண்டும்?”

நான் இயந்திரத்தனமாக, “என் கைகளைக் கழுவ வேண்டும்…” என்றேன். அதே சமயம் மிகத்தீவிரமாக யோசித்தேன்: இது புதன்கிழமை மாலை; அவன் வெள்ளிக்கிழமையிலிருந்து வந்திருக்கிறான். எனவே ராக்கெட் இப்போது ஊடுருவிச் சென்ற ஈர்ப்புச் சுழல், காலத்தை வெள்ளிக்கிழமையிலிருந்து புதன்கிழமைக்கு வளைத்திருக்கும்; அந்தச் சுழலுக்குள் என்ன நடக்கும் என்பதை என்னால் எந்த வகையிலும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. குறிப்பாக, வியாழக்கிழமை எங்கே இருக்கும் என்ற கேள்வி ஆர்வத்தைத் தூண்டியது. இதற்கிடையில், நான் விடாப்பிடியாகக் கதவைத் தட்டியபோதும், வெள்ளிக்கிழமை நான் சாவகாசமாகத் தன் நேரத்தை எடுத்துக்கொண்டு, இன்னும் என்னைக் குளியலறைக்குள் அனுமதிக்கவில்லை.

“கொப்பளிப்பதை நிறுத்து!” நான் பொறுமையிழந்து கத்தினேன். “ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்றது; உடனே வெளியே வா, நாம் சுக்கானைச் சரிசெய்ய வேண்டும்!” என்றேன்.

“அதற்கு நான் தேவையில்லை,” கதவின் பின்னாலிருந்து உணர்ச்சியற்ற குரலில் சொன்னான். “வியாழக்கிழமை நான் இங்கே எங்காவதுதான் இருக்க வேண்டும், அவனைக் கூட்டிப் போ.”

“என்ன, வியாழக்கிழமை நானா? அது சாத்தியமில்லை.”

“நான் ஏற்கனவே வெள்ளிக்கிழமையில் இருப்பதால், அது சாத்தியமா இல்லையா என்று எனக்குத்தான் தெரிந்திருக்க முடியும். நான் உன்னுடைய புதன்கிழமையையும் அவனுடைய வியாழக்கிழமையையும் கடந்துவிட்டேன்…”

தலை சுற்றியது போல் உணர்ந்த நான், கதவிலிருந்து பின்னால் துள்ளிக் குதித்தேன். கேபின் அறையில் ஏதோ சத்தம் கேட்டது: அங்கே ஒருவன் நின்று கொண்டு, கட்டிலுக்கு அடியிலிருந்து கருவிப் பெட்டியை வெளியே இழுத்துக் கொண்டிருந்தான்.

அங்கே ஓடிச் சென்று, “நீதான் அந்த வியாழக்கிழமை நானா?!” என்று கத்தினேன்.

“ஆமாம், வந்து ஒரு கை பிடி.” என்றான்.

அவனுடன் சேர்ந்து அந்தக் கனமான பெட்டியை வெளியே இழுத்தவாறே கேட்டேன். “இந்த முறை நம்மால் சுக்கானைச் சரிசெய்ய முடியுமா?”

“எனக்குத் தெரியாது, வியாழக்கிழமை அது சரிசெய்யப்படவில்லை; வெள்ளிக்கிழமை நானிடம் கேள்.”

அட, இது எனக்குத் தோன்றவே இல்லையே? நான் குளியலறைக் கதவை நோக்கி வேகமாக ஓடினேன். “ஏய், வெள்ளிக்கிழமை நான்! சுக்கான் சரிசெய்யப்பட்டுவிட்டதா?”

“வெள்ளிக்கிழமை வரை இல்லை,” என்று பதிலளித்தான்.

“ஏன்?”

“இதனால்தான்,” என்று கதவைத் திறந்தபடியே அவன் சொன்னான். அவன் தலையில் ஒரு துண்டு சுற்றப்பட்டிருந்தது; அதில் முட்டை அளவுக்கு இருந்த வீக்கத்தைக் குறைக்க, கத்தியின் தட்டையான பகுதியை நெற்றியில் வைத்து அழுத்திக்கொண்டிருந்தான். இதற்கிடையே, வியாழக்கிழமை நான் கருவிகளுடன் வந்து என் அருகில் நின்றான்; கட்டியுடன் இருந்தவனை அமைதியாக உற்று நோக்கினான்; அவன் இன்னொரு கையில் இருந்த சோடா பாட்டிலை, அலமாரியில் வைத்துக்கொண்டிருந்தான். அவன் கொப்பளித்துக் கொண்டிருக்கிறான் என நான் நினைத்தது, அந்தச் சோடாவின் சத்தம்தான் போல.

“உனக்கு இது எதனால் வந்தது?” என்று பரிவுடன் கேட்டேன்.

“எதனால் அல்ல, யாரால் என்று கேள், அந்த ஞாயிற்றுக்கிழமை நானால்” என்று பதிலளித்தான்.

“ஞாயிற்றுக்கிழமை நானா? ஆனால் ஏன்… அப்படி இருக்க முடியாது!” என்று நான் கத்தினேன்.

“அது ஒரு பெரிய கதை…”

“அதனால் பரவாயில்லை சீக்கிரம், வெளியே போகலாம்” என்று வியாழக்கிழமை நான், என்னை நோக்கிக் கூறினான்.

“ஆனால் ராக்கெட் எந்த நிமிடத்திலும் சுழலுக்குள் விழுந்துவிடும். அந்த அதிர்ச்சி நம்மை விண்வெளியில் தூக்கி எறிந்துவிடும்; அத்தோடு நாம் முடிந்தோம்.” என்றேன் நான்.

“முட்டாளே, மூளையை உபயோகி,” என்று வியாழக்கிழமை நான் சீறினான். “வெள்ளிக்கிழமை நான் உயிரோடுதானே இருக்கிறான்; நமக்கு எதுவும் ஆகாது. இன்று வியாழக்கிழமை தானே” என்றான்.

“இது புதன்கிழமை,” என்று நான் ஆட்சேபித்தேன்.

“ஏதோ ஒன்று; எப்படியிருந்தாலும் நான் வெள்ளிக்கிழமை உயிருடன் இருப்பேன், நீயும் இருப்பாய்.”

“ஆம், ஆனால் உண்மையில் நாம் இருவர் இல்லை; அப்படித் தெரிகிறது” என்று நான் குறிப்பிட்டேன். “உண்மையில் இருப்பது ஒரே ஒரு நான்தான்; வெவ்வேறு நாட்களில் இருந்து வந்திருக்கிறோம் அவ்வளவுதான்…”

“சரி, சரி, இப்போது கதவைத் திற…”

ஆனால் எங்கள் இருவருக்கும் சேர்த்து ஒரே ஒரு விண்வெளி உடைதான் இருந்தது. அதனால் நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் ராக்கெட்டை விட்டு வெளியேற முடியவில்லை; அதன் காரணமாகச் சுக்கானைச் சரிசெய்யும் எங்கள் திட்டம் முற்றிலும் பாழானது.

“சே!” என்று நான் கோபமாகக் கருவிப் பையைக் கீழே எறிந்துவிட்டு கத்தினேன். “நான் முதலில் விண்வெளி உடையை அணிந்து அதை அப்படியே வைத்திருந்திருக்க வேண்டும். நான் அதை நினைக்கவே இல்லை. ஆனால் வியாழக்கிழமை நான் என்ற முறையில், அதை நீ நினைவில் வைத்திருந்திருக்க வேண்டும்!”

“விண்வெளி உடை என்னிடம் இருந்தது, ஆனால் வெள்ளிக்கிழமை நான் அதை எடுத்துக்கொண்டான்,” என்றான் அவன்.

“எப்போது? ஏன்?”

“ஊம், அதைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை,” என்று அவன் தோள்களைக் குலுக்கிவிட்டு, திரும்பி அறைக்குச் சென்றான். இப்போது வெள்ளிக்கிழமை நானும் இங்கே இல்லை; குளியலறையைத் திரும்பிப் பார்த்தேன், அது காலியாக இருந்தது.

“வெள்ளிக்கிழமை நான் எங்கே?” என்று நான் உள்ளே சென்று கேட்டேன். வியாழக்கிழமை நான் ஒரு கத்தியால் நிதானமாக முட்டையை உடைத்து, சூடான வெண்ணெயில் ஊற்றினான்.

“எங்காவது இருப்பான்,” என்றவன் அலட்சியமாகப் பதிலளித்தபடி, முட்டையை வேகமாகப் புரட்டினான்.

“மன்னிக்க வேண்டும். நீ ஏற்கனவே புதன்கிழமை சாப்பிட்டு விட்டாய். திரும்பவும் ஒரு இரவு உணவைச் சாப்பிடலாம் என்று எப்படி நினைக்கிறாய்?” என நான் ஆட்சேபித்தேன்.

“இந்த உணவுப் பங்கீடுகள் உன்னுடையது போலவே என்னுடையதும் கூட,” முறுகலான முட்டையின் ஓரத்தைக் கத்தியால் தூக்கித் திருப்பியபடி, அமைதியாகக் கூறினான். “நான்தான் நீ, நீ நான்; அதனால் எந்த வித்தியாசமும் இல்லை…” என்றான்.

“என்னவொரு தர்க்கப் பிழை! இவ்வளவு வெண்ணெயா? உனக்கென்ன பைத்தியமா? இத்தனை பேருக்குப் போதுமான உணவு என்னிடம் இல்லை!”

சமையல் பாத்திரம் அவன் கையிலிருந்து நழுவிப் பறந்தது; நானும் ஒரு சுவரில் மோதிச் சாய்ந்தேன்; நாங்கள் ஒரு புதிய காலச் சுழலுக்குள் சிக்கிக்கொண்டிருந்தோம். காய்ச்சலில் நடுங்குவது போல ராக்கெட் மீண்டும் குலுங்கியது; என் சிந்தனை முழுவதும், விண்வெளி உடை தொங்கிக்கொண்டிருந்த இடத்தை அடைந்து, அதை அணிந்துகொள்வதில் மட்டுமே இருந்தது. ஏனெனில் புதன்கிழமை கடந்து வியாழக்கிழமை விடியும்போது, ‘வியாழக்கிழமை-நானாக’ இருப்பவன் அந்த விண்வெளி உடையை அணிந்திருப்பான். அந்த உடையை ஒரு நிமிடம் கூடக் கழற்றாமல் இருந்தால் (அப்படிச் செய்யக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்), வெள்ளிக்கிழமையன்றும் நான் அந்த உடையை அணிந்திருப்பேன். எனவே, வியாழக்கிழமை நானும் வெள்ளிக்கிழமை நானும் என இருவருமே விண்வெளி உடை அணிந்திருப்போம்; ஒரே நிகழ்காலத்தில் நாங்கள் சந்திக்கும்போது, அந்தச் சுக்கானைச் சரிசெய்வது ஒருவழியாகச் சாத்தியமாகும்.

ஈர்ப்பு விசையின் அழுத்தம் அதிகரித்ததால் என் தலை கிறுகிறுத்தது. நான் கண்களைத் திறந்தபோது, சில கணங்களுக்கு முன்பு நான் இருந்ததைப் போல இடதுபுறத்தில் இல்லாமல், ‘வியாழக்கிழமை-நானின்’ வலதுபுறத்தில் கிடப்பதை உணர்ந்தேன். விண்வெளி உடை குறித்து திட்டமிடுவது எளிதாக இருந்தாலும், அதைச் செயல்படுத்துவது மிகக் கடினமாக இருந்தது. ஏனெனில், அதிகரித்துக்கொண்டே இருந்த ஈர்ப்பு விசையின் காரணமாக என்னால் நகரவே முடியவில்லை. ஈர்ப்பு விசை சற்றுத் தணிந்ததும், கேபின் கதவை இலக்காகக் கொண்டு, தரையில் மெல்ல ஊர்ந்து நகரத் தொடங்கினேன். அதே வேளையில், ‘வியாழக்கிழமை நானும்’ என்னைப் போலவே அந்தக் கதவை நோக்கி, வயிற்றால் ஊர்ந்தபடி வருவதைக் கவனித்தேன். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இறுதியாக அந்தக் காலச் சுழல் தன் உச்சகட்ட விரிவை அடைந்திருந்த தருணத்தில் நாங்கள் இருவரும் அந்தக் கதவருகே சந்தித்தோம். ஈர்ப்பு விசையின் அழுத்தத்தால் தரையோடு தரையாகப் படுத்திருந்தோம். அப்போது எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது: “கதவின் கைப்பிடியை எட்டிப் பிடிப்பதற்காக நான் ஏன் சிரமப்பட வேண்டும்? அந்த வேலையை வியாழக்கிழமை நானே செய்யட்டுமே!” அந்த கணத்தில் சில விஷயங்கள் என் நினைவுக்கு வந்தன. அவை இப்போது வியாழக்கிழமை நானாக இருப்பவன் நானே தவிர அவன் அல்ல என்பதைத் தெளிவாக உணர்த்தின.

அதை உறுதிப்படுத்திக் கொள்ள, “நீ எந்த நாளைச் சேர்ந்தவன்?” என்று அவனிடம் கேட்டேன். என் முகவாய்க்கட்டையைத் தரையில் அழுத்தியவாறே, நான் அவன் கண்களை நேராகப் பார்த்தேன். மிகுந்த சிரமத்திற்கு இடையே அவன் வாயைத் திறந்தான்.

“வியாழன்… நான்…” என்றவன் முனகினான். அது மிகவும் விசித்திரமாக இருந்தது. எல்லாவற்றையும் மீறி, நான் இன்னும் புதன்கிழமை நான் ஆகவே இருக்கிறேனோ? அண்மையில் நடந்த நிகழ்வுகளை அசைபோட்டுப் பார்த்தபோது, அது சாத்தியமே இல்லை என்ற முடிவுக்கு நான் வர வேண்டியதாயிற்று. அப்படியென்றால், அவன் நிச்சயமாக வெள்ளிக்கிழமை நான் ஆகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், அவன் எனக்கு ஒரு நாள் முன்னதாகத் தோன்றியிருந்தால், இப்போது அவன் என்னைவிட ஒரு நாள் முன்னால் இருப்பான் என்பது உறுதி.

அவன் கதவைத் திறப்பான் என்று நான் காத்திருந்தேன்; ஆனால், அவனோ நான் கதவைத் திறப்பேன் என்று எதிர்பார்ப்பது போல் தெரிந்தது. ஈர்ப்பு விசை இப்போது குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருந்தது. எனவே நான் எழுந்து, நடைபாதையை நோக்கி ஓடினேன். நான் விண்வெளி உடையைப் பற்றிக்கொண்ட அதே கணத்தில், அவன் என் காலை இடறி, என் கைகளிலிருந்து அந்த உடையைப் பிடுங்கிக்கொண்டான்; நான் குப்புறத் தரையில் விழுந்தேன்.

“அட நாயே! உன்னையே நீயே ஏமாற்றிக்கொள்வதா? இது மிகவும் இழிவான செயல்” என்று நான் கத்தினேன். அவன் என்னைச் சற்றும் பொருட்படுத்தாமல், நிதானமாக அந்த விண்வெளி உடையை அணிந்தான். அவனது இந்த வெட்கமற்ற செயல் எனக்குப் பேரதிர்ச்சியை அளித்தது. திடீரென்று ஒரு விசித்திரமான விசை அவனை அந்த உடைக்குள்ளிருந்து வெளியே தூக்கி வீசியது. உண்மையில், அந்த உடைக்குள் ஏற்கனவே வேறொருவன் இருந்திருக்கிறான் என்பது அப்போதுதான் தெரியவந்தது. ஒரு கணம் நான் தடுமாறிப்போனேன். இங்கே யார் யார் எந்த நாளைச் சேர்ந்தவர்கள் என்பதை இனியும் என்னால் பிரித்தறியவே முடியவில்லை.

“ஏய், புதன்கிழமை!” என்று விண்வெளி உடை அணிந்திருந்தவன் என்னைக் கூப்பிட்டான். “வியாழனை அடக்கி வை, வந்து எனக்கு உதவு” என்றான்.

வியாழக்கிழமை நான் அவனிடமிருந்து அந்த விண்வெளி உடையைப் பறிக்க முயன்றுகொண்டிருந்தான். “உடையைக் கொடு” என்று அவனிடம் மல்லுக்கட்டிக் கொண்டு கர்ஜித்தான்.

“போடா! என்ன செய்ய முயற்சிக்கிறாய்? அது உனக்கல்ல, எனக்குத்தான் சொந்தம் என்பது உனக்குப் புரியவில்லையா?!” என்று மற்றவன் அலறினான்.

“ஏன் அப்படி?”

“அதற்குக் காரணம், உன்னை விட நான் சனிக்கிழமைக்கு அருகில் இருக்கிறேன்; எனவே நான் அணிந்தால் தான் சனிக்கிழமை நம்மில் இருவர் இந்த உடையில் இருப்போம்” என்றான்.

அவர்கள் வாக்குவாதத்தில் குறுக்கிட்டு, “அபத்தம்,” என்றேன். “அதிகபட்சம், சனிக்கிழமையன்று நீ அந்த உடையில் தனியாக, ஒரு முழு முட்டாளைப் போல இருப்பாய்; உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த உடையை என்னிடம் கொடு. நான் இப்போது அதை அணிந்தால், வெள்ளிக்கிழமையன்று நீ அதை அணிந்திருப்பாய், நானும் அதை அணிந்திருப்பேன்; ஆக, அப்போது நாம் இருவரும் இருப்போம்; அதுவும் இரண்டு உடைகளுடன்… வா, வியாழனே, எனக்கு உதவு”

நான் அவனிடமிருந்து அந்த விண்வெளி உடையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியபோது, ​​”நில்,” என்று வெள்ளிக்கிழமை நான் ஆட்சேபித்தான். “முதலாவதாக, நள்ளிரவு கடந்துவிட்டதால், நீ ‘வியாழக்கிழமை நான்’ ஆகிவிட்டாய்; இரண்டாவதாக, நான் இந்த விண்வெளி உடையில் இருப்பதுதான் நல்லது. இந்த விண்வெளி உடையால் உனக்குக் கொஞ்சமும் நன்மை ஏற்படாது.”

“ஏன் இல்லை? நான் இன்று அதை அணிந்தால், நாளைக்கும் அணிந்திருப்பேன்.”

“நீயே பார்ப்பாய்… எப்படியிருந்தாலும், வியாழக்கிழமையன்று நான் நீயாக இருந்தேன்; இப்போது வியாழக்கிழமை கடந்துவிட்டது, அதனால் எனக்குத்தான் தெரியும்.”

“பேசியது போதும். இந்த நொடியே அதை விட்டுவிடு!” என்று நான் உறுமினேன். ஆனால் அவன் அதை என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ஓடினான். நான் அவனைத் துரத்திக்கொண்டு, முதலில் இயந்திர அறை வழியாகவும் பின்னர் கேபினுக்குள்ளும் சென்றேன். எப்படியோ, இப்போது நாங்கள் இருவர் மட்டுமே அங்கே இருந்தோம். முன்பு நாங்கள் கருவிகளை எடுத்துக் கொண்டிருந்தபோது, என்னிடம் வெள்ளிக்கிழமை நான் அவனிடமிருந்து விண்வெளி உடையை எடுத்துக்கொண்டதாக ஏன் சொன்னான் என்பது திடீரென்று எனக்குப் புரிந்தது: ஏனென்றால், அதற்குள் நானே வியாழக்கிழமை நானாக மாறிவிட்டேன்; இங்கே வெள்ளிக்கிழமை நானாக உண்மையில் அதை நான் தான் எடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. ‘கொஞ்சம் இரு, உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்’ என்று நினைத்துக்கொண்டு, நான் தாழ்வாரத்திற்கு ஓடினேன்; அங்கிருந்து இயந்திர அறைக்குச் சென்றேன். அணு கலனில் எரிக்கப் பயன்படும் ஒரு கனமான குழாய் அங்கே தரையில் கிடப்பதை நான் முன்பே கவனித்திருந்தேன். அதை ஒரு ஆயுதமாக எடுத்துக்கொண்டு, மீண்டும் கேபினுக்கு ஓடினேன்.

அங்கே மற்றொரு நான் தலைக்கவசத்தைத் தவிர மற்ற விண்வெளி உடையை ஏற்கனவே அணிந்திருந்தான்.

“உடையைக் கழற்று!” என இரும்புக் குழாயை மிரட்டும் விதமாக இறுக்கிப் பிடித்துக் கொண்டு கத்தினேன்.

“வாய்ப்பே இல்லை.”

“கழற்று, நான் சொல்கிறேன்!!”

பிறகு அவனை அடிக்கலாமா வேண்டாமா என்று யோசித்தேன். குளியலறையில் நான் கண்ட அந்த வெள்ளிக்கிழமை நானைப் போல, இவனுக்குக் கண்ணில் காயமோ தலையில் வீக்கமோ இல்லை என்பது சற்று கலக்கமளித்தது. ஆனால், இது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நான் திடீரென்று உணர்ந்தேன். அந்த வெள்ளிக்கிழமை நான் இப்போது சனிக்கிழமை நானாக மாறியிருந்தான். ஒருவேளை ஞாயிற்றுக்கிழமைக்கு அருகாமையில் எங்கோ அலைந்து கொண்டிருக்கலாம். ஆனால், விண்வெளி உடையில் இருக்கும் இந்த வெள்ளிக்கிழமை நான், சமீபத்தில்தான் வியாழக்கிழமையில் இருந்து மாறியிருக்கிறான். நள்ளிரவுக்குப் பின், நானும் வியாழக்கிழமை நானாக மாறியிருந்தேன். இப்படியாக, அடிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை நான், அடிபட்ட வெள்ளிக்கிழமையாக மாறும் அந்த இடத்தை நோக்கி, காலச் சுழற்சியின் சரிவான வளைவில் நான் நகர்ந்து கொண்டிருந்தேன். ஆனால், அதைச் செய்தது ஞாயிற்றுக்கிழமை நான் என்று அவன் அப்போது சொன்னானே? ஆனால், இதுவரை அவனுடைய எந்தத் தடயமும் இல்லை. நானும் அவனும் அந்த அறையில் தனியாக நின்றோம். அப்போது திடீரென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

“விண்வெளி உடையிலிருந்து வெளியே வா!” என்று உறுமினேன்.

“தொலைந்து போ, வியாழக்கிழமை!” என்று அவன் கத்தினான்.

“நான் வியாழக்கிழமை இல்லை, நான் ஞாயிற்றுக்கிழமை!” என்று கத்தியவாறே அவனை நெருங்கினேன். அவன் என்னை உதைக்க முயன்றான். ஆனால் விண்வெளி உடையின் காலணிகள் மிகவும் கனமாக இருந்ததால், அவன் காலைத் தூக்குவதற்குள், நான் அவன் தலையில் ஓங்கி அடித்தேன். நிச்சயமாக, அவ்வளவு கடுமையாக இல்லை, ஏனென்றால், இறுதியில் நான் வியாழக்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமையாக மாறும்போது, பதிலுக்கு நான்தான் இந்த அடியை வாங்குவேன் என்பது எனக்கு ஓரளவுக்குத் தெரிந்திருந்தது; மேலும் என் மண்டையை நானே உடைத்துக்கொள்ளும் எண்ணத்தில் நான் இல்லை. வெள்ளிக்கிழமை நான் தலையைப் பிடித்தபடி ஒரு முனகலுடன் கீழே விழுந்தான்; நான் மூர்க்கத்தனமாக அந்த விண்வெளி உடையை அவனிடமிருந்து பிய்த்தெடுத்தேன். அவன் தள்ளாடும் கால்களுடன், “பஞ்சு எங்கே… சோடா எங்கே” என்று முணுமுணுத்தபடி குளியலறையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான்.

நான் அந்த உடையை வேகமாக அணியத் தொடங்கினேன், அப்போது கட்டிலுக்கு அடியிலிருந்து ஒருவனின் கால் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். மண்டியிட்டு, உற்றுப் பார்த்தேன். அங்கே கட்டிலுக்கு அடியில் ஒருவன் படுத்திருந்தான்; அவன் மெல்லும் சத்தத்தை அடக்க முயன்றபடி, அவசரமாக விழுங்கிக்கொண்டிருந்தான். அது ஒரு அவசர காலத்திற்காக நான் சூட்கேஸில் பத்திரமாக வைத்திருந்த மில்க் சாக்லேட். அந்த அயோக்கியன் சாக்லேட்டில் சுற்றிய வெள்ளித்தாள் உதடுகளில் ஒட்டிக்கொண்டு பளபளக்க, அதை வேகவேகமாக விழுங்கினான். “அந்த சாக்லேட்டை அப்படியே விடு” என்று அவன் காலைப் பிடித்து இழுத்தபடியே கத்தினேன். “நீ யார், வியாழக்கிழமை நானா?…” என்று திடீரென ஒரு சந்தேகம் என்னைப் பற்றிக்கொள்ள, குரலைத் தாழ்த்திக் கேட்டேன். ஒருவேளை நான் ஏற்கனவே வெள்ளிக்கிழமை நானாக இருக்கலாம் என்றும், முன்னதாக நான் கொடுத்ததை விரைவில் திரும்பப் பெற வேண்டியிருக்கும் என்றும் எனக்குத் தோன்றியது.

“ஞாயிறு நான்,” வாய் நிறைய சாக்லேட்டை குதப்பிக்கொண்டு அவன் முணுமுணுத்தான். எனக்கு உடல் தளர்ந்துபோனது. இப்போது, ஒன்று அவன் பொய் சொல்கிறான் – அப்படியென்றால் கவலைப்பட எதுவுமில்லை; அல்லது அவன் உண்மையைச் சொல்கிறான் என்றால், எனக்கு நிச்சயம் ஒரு தர்ம அடி காத்திருக்கிறது. ஏனெனில், இந்த ‘ஞாயிறு நான்’தானே ‘வெள்ளி நான்’ ஐத் தாக்கியவன்? நிகழ்வு நடப்பதற்கு முன்பே அவன் என்னிடம் அதைச் சொல்லியிருந்தானே. பின்னர், நான் அந்த ‘ஞாயிறு நான்’ போல வேடமிட்டு அந்த இரும்புக் குழாயைக் கொண்டு அவனைப் பதம் பார்த்திருந்தேன். ஆனால் அவன் ‘ஞாயிறு நான்’ ஆக இல்லாவிட்டாலும் கூட, அவன் என்னைவிடப் பிற்காலத்தைச் சேர்ந்த ஒரு ‘நான்’ ஆக இருப்பதற்குப் போதுமான சாத்தியக்கூறுகள் உள்ளன. அவன் என்னைவிடப் பிற்காலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால், நான் செய்யும் அனைத்தையும் அவன் நினைவில் வைத்திருப்பான்; எனவே, நான் அந்த ‘வெள்ளி நான்’இடம் பொய் சொன்னேன் என்பது அவனுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஆகையால், அதே பாணியில் அவனும் என்னை ஏமாற்றக்கூடும். ஏனெனில், என் தரப்பில் அந்தச் செயல் ஒரு கணநேரத் தந்திரமாக அமைந்திருந்தாலும், அவனுக்கு இப்போது அது வெறும் ஒரு நினைவாக மட்டுமே இருக்கிறது; அவன் மிக எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரு நினைவாக. இத்தகைய குழப்பமான நிலையிலேயே நான் உறைந்து நின்றிருக்க, அவன் மீதமிருந்த சாக்லேட்டைச் சாப்பிட்டு முடித்துவிட்டு, கட்டிலுக்கு அடியிலிருந்து வெளியே ஊர்ந்து வந்தான்.

சட்டென ஒரு எண்ணம் பளிச்சிட, “நீதான் ஞாயிற்றுக்கிழமை நான் என்றால், உன் விண்வெளி உடை எங்கே?” என்று கத்தினேன்.

“ஒரு நிமிடத்தில் கொண்டு வருகிறேன்,” என்று அவன் அமைதியாகச் சொன்னான்; பிறகுதான் அவன் கையில் இருந்த இரும்புக் குழாயை நான் கவனித்தேன். அடுத்து நான் பார்த்தது, ஒரே நேரத்தில் பல டஜன் சூப்பர்நோவாக்கள் வெடிப்பது போன்ற ஒரு பிரகாசமான ஒளிக்கீற்று; அதன்பிறகு நான் சுயநினைவை இழந்தேன்.

எனக்கு நினைவு திரும்பியபோது, குளியலறைத் தரையில் அமர்ந்திருந்தேன். யாரோ கதவைத் தட்டிக்கொண்டிருந்தார்கள். நான் என் காயத்திற்கும் வீக்கத்திற்கும் சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன், ஆனால் அவன் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருந்தான்; அது புதன்கிழமை நான் என்பது தெரியவந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, நான் அவனிடம் என் அடிபட்ட தலையைக் காட்டினேன்; பின் அவன் வியாழக்கிழமை நானோடு கருவிகளை எடுக்கப் போய்விட்டான். பிறகு நிறைய ஓட்டமும் விண்வெளி உடையைக் கழற்றுவதும் பிடுங்குவதும் நடந்தது; இதிலிருந்தும் ஏதோ ஒரு வகையில் நான் உயிர் பிழைத்தேன். சனிக்கிழமை காலை சூட்கேஸில் ஏதாவது சாக்லேட் மீதம் இருக்கிறதா என்று பார்க்க கட்டிலுக்கு அடியில் ஊர்ந்து சென்றேன். சட்டைகளுக்கு அடியில் நான் கண்டெடுத்த கடைசி சாக்லேட் கட்டியைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, யாரோ என் காலை இழுக்க ஆரம்பித்தார்கள்; அவன் யார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனாலும் அவன் தலையில் ஓங்கி அடித்து, அவனிடமிருந்து விண்வெளி உடையைக் கழற்றி அணியப் போனபோது, அந்த ராக்கெட் அடுத்த சுழலுக்குள் விழுந்தது.

எனக்கு மீண்டும் நினைவு திரும்பியபோது, விண்கல அறை ஆட்களால் நிரம்பி வழிந்தது. அசையக் கூட இடமில்லை. கூடியிருந்தவர்கள் அனைவரும் நானேதான். வெவ்வேறு நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்களைச் சேர்ந்த ‘நான்’கள் அவர்கள். அவர்களில் ஒருவன் அவனது கூற்றுப்படி, அடுத்த ஆண்டைச் சேர்ந்தவன். அவர்களில் பலருக்கு உடலில் காயங்களும், கண்களைச் சுற்றிக் கருப்புத் தழும்புகளும் இருந்தன. கூடியிருந்தவர்களில் ஐந்து பேர் விண்வெளி உடை அணிந்திருந்தனர். ஆனால், அவர்கள் விண்கலத்திற்கு ஏற்பட்ட சேதத்தைச் சரிசெய்வதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டும், வாக்குவாதம் செய்துகொண்டும் இருந்தனர்; யார் யாரை எப்போது தாக்கினார்கள் என்பதுதான் அதற்குக் காரணம். நிலைமை இன்னும் சிக்கலானது; இப்போது காலை நேரத்து ‘நான்’களும், பிற்பகல் நேரத்து ‘நான்’களும் அங்கே தோன்றியிருந்தனர். நிலைமை இப்படியே போனால், விரைவில் நான் நிமிடங்கள் மற்றும் நொடிகள் எனப் பிரிந்துவிடுவேனோ என்று அஞ்சினேன். அதோடு, அங்கே கூடியிருந்த ‘நான்’களில் பெரும்பாலோர் அப்பட்டமாகப் பொய் பேசிக்கொண்டிருந்தனர். அதனால், வியாழன், வெள்ளி மற்றும் புதன்கிழமைகளைச் சேர்ந்த ‘நான்’களுக்கு இடையே முக்கோண வடிவில் அந்தச் சண்டை நடந்தபோது, உண்மையில் நான் யாரைத் தாக்கினேன், யார் என்னைத் தாக்கினார்கள் என்பது குறித்து இதுவரை எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில், அந்த மூன்று ‘நான்’களுமே மாறி மாறி நானாகவே இருந்தேன். வெள்ளிக்கிழமை நானிடம், ஞாயிற்றுக்கிழமை நான் என்று பொய் சொன்னதால், காலண்டர் கணக்குப்படி எனக்குக் கிடைக்க வேண்டியதைவிடக் கூடுதலாக ஒரு அடி விழுந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஆனால், இத்தகைய விரும்பத்தகாத நினைவுகளை நான் இனிமேலும் அசைபோட விரும்பவில்லை; ஒரு வாரம் முழுவதும் வேறு எந்த வேலையும் செய்யாமல், தன் தலையிலேயே மாறி மாறி குத்திக்கொண்டிருக்கும் ஒருவனுக்குப் பெருமைப்பட ஏதுமில்லை.

வாக்குவாதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன. இந்தச் செயலற்ற தன்மையையும், விலைமதிப்பற்ற நேரம் வீணடிக்கப்படுவதையும் கண்டு எனக்குப் பெரும் விரக்தி ஏற்பட்டது. அதே வேளை ராக்கெட் கண்மூடித்தனமாக வேறொரு ஈர்ப்புச் சுழலுக்குள் பாய்ந்தது. இறுதியாக, விண்வெளி உடை அணிந்திருந்தவர்கள், அவ்வுடை அணியாதவர்களுடன் கைகலப்பில் இறங்கினர். அந்த முழுமையான குழப்பத்திற்குள் ஏதேனும் ஒரு ஒழுங்கைக் கொண்டுவர நான் முயன்றேன்; இறுதியில், மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடும் முயற்சிகளுக்குப் பிறகு, ஒரு ‘கூட்டம்’ போன்ற ஒன்றை என்னால் ஒழுங்கமைக்க முடிந்தது. அந்தக் கூட்டத்தில் வயதில் மூத்தவன் என்ற அடிப்படையில் அடுத்த ஆண்டைச் சேர்ந்த ‘நான்’ ஒருமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

பின்னர் நாங்கள் தேர்தல் குழு, நியமனக் குழு, புதிய அலுவல்களுக்கான ஒரு குழு ஆகியவற்றை நியமித்தோம்; அடுத்த மாதத்தைச் சேர்ந்த எங்களில் நான்கு பேர் ஆயுதப் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கிடையில், நாங்கள் ஒரு எதிர்மறைச் சுழலைக் கடந்து சென்றிருந்தோம்; அது எங்கள் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்தது. அதனால், முதல் வாக்கெடுப்பிலேயே எங்களுக்குப் போதுமான உறுப்பினர்கள் இல்லாததால், சுக்கான் பழுதுபார்ப்பவர் பதவிக்கான வேட்பாளர் வாக்கெடுப்புக்கு முன், நாங்கள் துணை விதிகளை மாற்ற வேண்டியிருந்தது. வரைபடம் மேலும் சுழல்கள் வருவதைக் காட்டியது; இவை நாங்கள் இதுவரை சாதித்த அனைத்தையும் பாழாக்கின: தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் காணாமல் போனார்கள்; பின்னர் செவ்வாய்க்கிழமை நான், தலையில் துண்டைக் கட்டியிருந்த வெள்ளிக்கிழமை நானுடன் சேர்ந்து தோன்றி ஒரு அவமானகரமான காட்சியை உருவாக்கினர். வலுவான ஒரு நேர்மறைச் சுழலைக் கடந்தபோது, நாங்கள் அறையிலும் நடைபாதையிலும் ஒட்டிக்கொண்டு கஷ்டப்பட்டோம். மேலும் கருவிப் பெட்டியைத் திறப்பது என்பது முடியாத காரியமாக இருந்தது. எல்லாவற்றிலும் மோசமான விஷயம் என்னவென்றால், இந்தக் கால இடப்பெயர்வுகளின் வீச்சு அதிகரித்துக்கொண்டே இருந்தது. நரைத்த முடியுடன் கூடிய சில ‘நான்’கள் ஏற்கனவே தோன்றியிருந்தனர்; அங்கொன்றும் இங்கொன்றுமாக, குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடிகளோடு, குழந்தைகளைக்கூட நான் ஒரு கணம் கண்டேன்; அவர்கள் நிச்சயமாக நான்தான். இன்னும் சரியாகச் சொல்வதானால் அவர்கள் என் சிறுபருவ பொற்காலத்து ‘நான்’கள்.

நான் இன்னும் ஞாயிற்றுக்கிழமை நான்தானா, அல்லது ஏற்கனவே திங்கட்கிழமை நான் ஆகிவிட்டேனா என்று என்னால் சரியாக நினைவுகூர முடியவில்லை. அது ஒரு பொருட்டல்ல என்பது வேறு விஷயம். கூட்டத்தில் நசுக்கப்படுவதாகக் குழந்தைகள் விம்மி அழுது, தங்கள் அம்மாவைக் கூப்பிட்டனர். தலைவராக வரவிருக்கும் அடுத்த ஆண்டைச் சேர்ந்த டிச்சி சரமாரியாகச் சாபமிட்டார்; ஏனென்றால், சாக்லேட்டைத் தேடி கட்டிலுக்கு அடியில் ஊர்ந்து சென்ற புதன்கிழமை நானின் விரலை, தற்செயலாக அவர் மிதித்தபோது, அவன் அவரது காலைக் கடித்துவிட்டான். இவையெல்லாம் மோசமாகத்தான் முடியும் என்பதை நான் கண்டேன்; இப்போது ஆங்காங்கே நரைத்த தாடிகள் தென்படத் தொடங்கின. 142-வது மற்றும் 143-வது சுழல்களுக்கு இடையில் நான் வருகைப் பதிவேட்டைச் சுற்றுக்கு விட்டேன். ஆனால், வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் ஏமாற்றுவது தெரியவந்தது. முக்கியப் புள்ளிவிவரங்களைத் தவறாகக் கொடுத்துக்கொண்டிருந்தனர்; ஏன் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். ஒருவேளை நிலவிய சூழல் அவர்களின் அறிவைக் குழப்பியிருக்கலாம். அந்த இரைச்சலும் குழப்பமும், முழு பலத்துடன் கத்தினால் மட்டுமே மற்றவர்களுக்குப் புரியவைக்க முடியும் என்ற அளவுக்கு இருந்தது.

ஆனால், கடந்த ஆண்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு அருமையான யோசனை தோன்றியது. அதாவது, நம்மில் வயதில் மூத்தவர் தனது வாழ்க்கைக் கதையைச் சொல்ல வேண்டும் என்பதுதான் அது. அதன் மூலம், சுக்கானை யார் சரிசெய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். ஏனெனில், நம்மில் வயதில் மூத்தவர் தனது கடந்தகால அனுபவத்தில், அங்கு இருந்த மற்ற அனைவரின் வாழ்க்கையையும், அவர்களின் பல்வேறு மாதங்கள், நாட்கள் மற்றும் வருடங்களின் அடிப்படையில் நினைவில் வைத்திருப்பார் என்பது வெளிப்படை. எனவே, லேசான நடுக்கத்துடன் மூலையில் நின்றுகொண்டிருந்த, நரைத்த முடியுடைய ஒரு பெரியவரை நாங்கள் நாடினோம். அவரிடம் கேட்டபோது, அவர் தனது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளைப் பற்றி நீண்ட நேரம் பேசத் தொடங்கினார்; பின்னர் தனது அண்டப் பயணங்களுக்குத் தாவினார். தனது தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் அவர் எண்ணற்ற அண்டப் பயணங்களை மேற்கொண்டிருந்தார். ஆனால், இப்போது எங்களுக்கு ஆர்வமூட்டிய ஒரே நிகழ்வைப் பற்றி, அந்த முதியவருக்கு அவரது இயல்பான மிடுக்கு மற்றும் அதீத கிளர்ச்சி காரணமாகச் சிறிதும் நினைவில்லை. ஆனால், அதை ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்குக் கர்வம் மிக்கவராக இருந்தார்; மேலும், தனது உயர் தொடர்புகள், விருதுகள் மற்றும் பேரக்குழந்தைகளைப் பற்றியே மீண்டும் மீண்டும் பிடிவாதமாகப் பேசிக்கொண்டே இருந்தார். இறுதியில் நாங்கள் கூச்சலிட்டு அவரை அடக்கி, வாயை மூடிக்கொள்ளும்படி கட்டளையிட்டோம்.

அடுத்த இரண்டு சுழல்கள் எங்கள் படையை இரக்கமின்றி குறைத்தன. மூன்றாவது சுழலுக்குப் பிறகு, இடம் அதிகரித்தது மட்டுமல்லாமல், விண்வெளி உடைகள் அணிந்திருந்த அனைவரும் கூட மறைந்து போயிருந்தனர். ஒரு உடை மட்டும் எஞ்சியிருந்தது; அதைத் தாழ்வாரத்தில் தொங்கவிட நாங்கள் தீர்மானித்தோம்; பின்னர் எங்கள் ஆலோசனைகளுக்குத் திரும்பினோம். பிறகு, அந்த விலைமதிப்பற்ற உடையின் உடைமைக்காக மற்றொரு கைகலப்பைத் தொடங்கினோம். ஒரு புதிய சுழல் வந்ததில், திடீரென்று அந்த இடம் வெறிச்சோடியது. உடைந்த மரச்சாமான்கள், கிழிந்த துணிகள், புத்தகங்கள் ஆகியவற்றால் நிறைந்த விசித்திரமான, விசாலமான என் அறையில், வீங்கிய கண்களுடன் நான் தரையில் அமர்ந்திருந்தேன். தரை முழுவதும் வாக்குச்சீட்டுகள் சிதறிக் கிடந்தன. வரைபடத்தின்படி, நான் இப்போது ஈர்ப்புச் சுழல்களின் முழு மண்டலத்தையும் கடந்துவிட்டேன். இனி நகல் ஆக்கத்தை நம்பியிருக்க முடியாது என்பதாலும், ஏற்பட்ட சேதத்தைச் சரிசெய்ய முடியாததாலும், நான் விரக்தியில் மூழ்கினேன்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து, நான் நடைபாதையை எட்டிப் பார்த்தபோது, பெரும் வியப்பளிக்கும் வகையில், அந்த விண்வெளி உடை காணாமல் போயிருந்தது. அப்போது எனக்கு லேசாக ஒன்று நினைவுக்கு வந்தது. ஆம், அந்தக் கடைசிச் சுழலுக்குச் சற்று முன்னதாக, யாருக்கும் தெரியாமல் நடைபாதைக்குள் நழுவிச் சென்ற இரண்டு சிறுவர்கள் அந்த விண்வெளி உடையை இருவருமாகச் சேர்ந்து அணிந்துகொண்டிருக்க முடியுமா?

திடீரென ஒரு யோசனை தோன்ற, நான் கட்டுப்பாட்டுக் கருவிகளை நோக்கி ஓடினேன். சுக்கான் வேலை செய்தது! அப்படியானால், பெரியவர்கள் நாங்கள் முடிவில்லாத கருத்து வேறுபாடுகளில் சிக்கித் தவித்த வேளையில், அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகள் அதைச் சரிசெய்துவிட்டார்கள். அவர்களில் ஒருவன் தன் கைகளை அந்த விண்வெளி உடையின் கைப்பட்டையிலும், மற்றவன் கால்பகுதியிலும் நுழைத்திருப்பான் என்பதை நான் கற்பனை செய்கிறேன். அப்படியானால், சுக்கானின் இருபுறமும் ஒரே நேரத்தில் வேலை செய்து, குறடு கொண்டு நட்டையும் போல்ட்டையும் இறுக்கியிருக்க முடியும். காலியான விண்வெளி உடையை நான் கருவிப் பெட்டி மூடிக்குப் பின்னால் இருந்த ஏர் லாக் அருகே கண்டெடுத்தேன். வெகு காலத்திற்கு முன் நானாக இருந்த அந்தத் துணிச்சலான சிறுவர்களுக்காக என் இதயம் எல்லையற்ற நன்றியால் நிறைந்திருக்க, அதை ஒரு புனிதப் பொருளைப் போல ராக்கெட்டிற்குள் எடுத்துச் சென்றேன்! இவ்வாறு, நிச்சயமாக மிகவும் அசாதாரணமான சாகசங்களில் ஒன்று முடிவுக்கு வந்தது. நான் குழந்தையாக இருந்தபோது வெளிப்படுத்திய தைரியம் மற்றும் சமயோசித புத்திக்கு நன்றி, நான் எனது இலக்கைப் பாதுகாப்பாக அடைந்தேன்.

பிற்காலத்தில், இக்கதை முழுவதையும் நானே கற்பனையாகப் புனைந்ததாகப் பேசிக்கொண்டார்கள்; இன்னும் சற்று வஞ்சக எண்ணம் கொண்டவர்களோ, எனக்கு மதுவின் மீது சபலம் இருந்ததாகவும், பூமியில் இருக்கும்போது கவனமாக அதை மறைத்து வைத்திருந்தாலும், நீண்ட மற்றும் தனிமையான விண்வெளிப் பயணத்தின் போது தாராளமாக மது அருந்தினேன் என்றும் கூறும் அளவுக்குச் சென்றார்கள். இவ்விஷயம் குறித்து வேறு என்னென்ன வதந்திகள் பரவியுள்ளன என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். மனிதர்களின் இயல்பு அப்படித்தான்; மிகவும் அபத்தமான, நம்பவே முடியாத உளறல்களை அவர்கள் மனதார நம்புவார்கள். ஆனால் நான் இங்கே முன்வைத்திருக்கும் இந்த எளிய உண்மையை யாரும் நம்பமாட்டார்கள்.

Author

  • சிறுகதை எழுத்தாளர். பூமியெங்கும் பூரணியின் நிழல், நகரப் பாடகன், மகாமாயா, நிகழவுகளை மாற்றி அமைப்பவன் ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவர் மொழிபெயர்த்துள்ள முதல் சிறுகதை இது.

You may also like

Leave a Comment