தமிழில்: கார்குழலி
கீ டூ மோப்பஸான் (Guy de Maupassant) 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு எழுத்தாளர், கவிஞர். சிறுகதை, நாவல், நாடகம், பயணக் கட்டுரை, கவிதை எனப் பல வகைமைகளை இயற்றியுள்ளார். ஆன்டன் செக்காவைப் போலவே சிறுகதை வடிவத்தின் ஆசான் என்று கொண்டாடப்பட்டவர். விதியின் பிடியிலும் சமூக விசைகளின் அழுத்தத்திலும் சிக்கி உழலும் நடுத்தர, கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையை இயல்பான நடையில் எழுதினார். கதைமாந்தர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் குறைந்த சொற்களில் துல்லியமாக வடிப்பதில் வல்லவர். 1880களில் முதல் சிறுகதையை வெளியிட்டார் என்றாலும் 1893க்குள் 300 சிறுகதைகள் 6 நாவல்கள் கூடவே பல பயணக்கட்டுரைத் தொகுதிகள், நாடகங்களையும் எழுதி முடித்தார். அவருடைய இரண்டாவது நாவலான பெல் அமி நான்கு மாதங்களில் 37 பதிப்புகளைக் கண்டது.
அன்று சந்தை நாள் என்பதால் சுற்றியிருந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் அவர்களின் மனைவியரும் கோடர்வீலை நோக்கி வந்துகொண்டிருந்தனர். நீண்ட வளைந்த கால்கள் எட்டிவைத்த ஒவ்வொரு அடிக்கும் உடல் முழுவதையும் முன்னால் நகர்த்தியபடி மெல்ல நடந்தனர் ஆண்கள். ஏரைத் தள்ளித்தள்ளி இடது தோள் உயர்ந்து ஒரு பக்கமாகச் சாய்ந்திருந்தது; பயிரை அறுவடை செய்கையில் காலை அகட்டி ஊன்றி நிற்கவேண்டும்; மொத்தத்தில் அவர்களின் உடல் உருக்குலைந்திருந்தது. மெருகெண்ணை பூசப்பட்டதைப்போலப் பளபளப்பாக, கழுத்துப்பட்டையிலும் மணிக்கட்டிலும் சின்ன பூவேலைப்பாடுகளோடு கஞ்சிபோட்டு விறைத்த நீலச் சட்டைகள் அவர்களின் மெலிந்த தேகத்தைச் சுற்றி உப்பியிருந்தன; பார்க்க வானில் பறக்கத் தயாராக இருக்கும் பலூன்களை ஒத்திருந்தன; அவற்றின் உள்ளிருந்து இரண்டு மெலிந்த கைகளும் கால்களும் துருத்திக்கொண்டிருந்தன.
கயிற்றில் கட்டியிருந்த கன்றுக்குட்டியையோ பசுவையோ இழுத்து வந்தனர் சிலர். விலங்கின் பின்னால் வந்த அவர்களின் மனைவியர் வேகத்தைக் கூட்டுவதற்காக இலையடர்ந்த கிளையொன்றினால் அதன் பின்புறத்தில் அடித்தபடி நடந்தனர். அவர்கள் சுமந்து வந்த பெரிய கூடைகளுக்கு உள்ளிருந்து கோழி அல்லது வாத்துத் தலைகள் வெளியே நீண்டன. பெண்கள் ஆண்களைக் காட்டிலும் விரைவாகவும் தெம்புடனும் நடந்தனர். வளையாமல் நிமிர்ந்திருந்த அவர்களின் வற்றிய உடலைச் சுற்றியிருந்த சின்னஞ் சிறிய சால்வையைத் தட்டையான மார்பின் மேல் ஊசியால் இணைத்திருந்தனர். தலையைச் சுற்றி வெள்ளைத் துணியும் அதன்மேல் தொப்பியும் அணிந்திருந்தனர்.
அந்தப் பக்கம் கடந்துசென்ற கிழட்டுக் குதிரை பூட்டப்பட்ட நீளமான வண்டியில் உட்கார்ந்திருந்த இரண்டு ஆண்களும் வினோதமாகக் குலுங்கினர். வண்டியின் கீழ்ப்பகுதியில் உட்கார்ந்திருந்த பெண் அந்தக் குலுக்கலைச் சமாளிப்பதற்காக அதன் பக்கங்களை இறுகப் பற்றியிருந்தாள்.
கோடர்வீல் சந்தையில் எண்ணற்ற மனிதர்களும் விலங்குகளுமெனப் பெருங்கூட்டம் கூடியிருந்தது. அந்தக் கடலின் மேற்புறத்தில் மாடுகளின் கொம்புகளும் வசதிமிக்க விவசாயிகளின் நீண்ட வெல்வெட்டுத் தொப்பிகளின் முனைகளும் பெண்களின் தலைத்துணிகளும் மிதந்தன. தொடர்ந்து ஒலித்த கூர்மையான கிரீச்சிடும் குரைக்கும் குரல் கலவையின் காட்டுக் கூச்சலையும் தாண்டி உடல்திடமும் களிப்புமிக்க விவசாயி ஒருவரின் நீண்ட நகைப்பொலியோ ஏதோவொரு வீட்டின் சுவற்றில் இழுத்துக் கட்டப்பட்ட பசுவின் நீடித்தொலிக்கும் முழக்கமோ அவ்வப்போது கேட்டது.
தொழுவம், பால், வைக்கல், வியர்வை எனக் கிராமத்து மக்களுக்கே உரிய பாதி மனிதன், பாதி விலங்கு என எல்லாமும் கலந்த வாசனையை நுகர முடிந்தது.
ப்ரௌட்டைச் சேர்ந்த மேட்ர ஹாஷ்கார்ன் அப்போதுதான் கோடர்வீலுக்கு வந்துசேர்ந்திருந்தார். சதுக்கத்தை நோக்கி நடக்கையில் நிலத்தில் துண்டுக் கயிறொன்று கிடைப்பதைக் கவனித்தார். மேட்ர ஹாஷ்கார்ன் உண்மையான நார்மன், மிகவும் சிக்கனமானவர் என்பதால் எப்போதாவது எதற்காவது பயன்படும் எதையும் எடுத்துவைத்துக்கொள்வது மதிப்பான செயல் என்று எண்ணினார். கீல்வாத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் சிரமப்பட்டுக் குனிந்து கயிற்றை எடுத்தார். கீழேயிருந்து எடுத்த மெல்லிய கயிற்றைச் சுருட்டத் தொடங்கியபோது மேட்ர மாலாண்டான் சேணப் பட்டறையின் வாயிலில் நின்றபடி உற்றுப் பார்ப்பதைக் கவனித்தார். முன்பொரு சமயம் சேணம் ஒன்று குறித்து இருவரும் சண்டைபோட்டிருந்தனர். அதிலிருந்து ஒருவர்மீது ஒருவர் வன்மம் கொண்டிருந்தனர்.
தெருவில் கிடந்த கயிற்றை எடுத்ததைத் தன்னுடைய எதிரி பார்த்தது மேட்ர ஹாஷ்கார்னுக்கு அவமானமாக இருந்தது. உடனடியாக அதைச் சட்டைக்குள் ஒளித்து, பிறகு கால்சட்டைப் பைக்குள் நழுவவிட்டார். அப்புறம் தரையில் எதையோ தேடுவதுபோலவும் அது கிடைக்காததுபோலவும் நடித்தார். இறுதியில், முன்னே நீண்டு குனிந்த தலை, கீல்வாதத்தினால் இரண்டாக மடிந்த உடலோடு சந்தையை நோக்கி நடந்தார்.
உரத்த குரலில் பேரம் பேசிக்கொண்டும் வாக்குவாதம் செய்துகொண்டும் மெதுவாக நகர்ந்த கூட்டத்துக்குள் நுழைந்ததும் தொலைந்துபோனார். குடியானவர்கள் மாடுகளைச் சோதனைசெய்தார்கள், போனார்கள், வந்தார்கள், ஏமாற்றப்படுவோமோ என்ற பயத்தில் துணிச்சலாக முடிவெடுக்காமல் விற்பனையாளரின் கண்களைப் பார்த்து மனிதனின் வித்தைகளையும் விலங்கின் குறைகளையும் கண்டுபிடிக்க முயன்றார்கள்.
பெண்கள் பெரிய கூடைகளைக் காலருகே வைத்திருந்தனர்; காலிரண்டும் கட்டப்பட்டு, பயந்த கண்களையும் சிவந்த கொண்டைகளையும்கொண்ட கோழிகளை வெளியே எடுத்துத் தரையில் கிடத்தியிருந்தனர். வாங்குவோர் சொல்லும் விலையைக் கேட்டு முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தாங்கள் ஒரு விலையைச் சொன்னார்கள். பிறகு கிளம்பிப் போக எத்தனித்த வாடிக்கையாளரை வாய்விட்டுக் கூப்பிட்டு அவர்கள் கொடுக்கும் குறைவான விலையையே ஏற்றுக்கொண்டனர்.
“சரி, நீங்கள் கேட்ட விலைக்கே தருகிறேன், மேட் அந்திமே.”
சிறிது சிறிதாக, சதுக்கம் காலியானது. நண்பகல் நேரத்தை அறிவிக்க ஏஞ்சலஸ் மணி அடித்தபோது தூரத்தில் வசித்தவர்கள் உணவுவிடுதிகளுக்குள் நுழைந்தனர்.
ஜூர்டானில் இருந்த பெரிய அறை முழுவதும் உணவுண்பவர்கள் நிறைந்திருந்தனர். அதைப்போலவே வெளியே முற்றத்தில் சரக்கு வண்டி, இருசக்கர ஒற்றைக் குதிரை வண்டி, நீண்ட உலாப்பயண ஊர்தி, ரேக்ளா வண்டி இவற்றோடு இன்னும் எண்ணற்ற மஞ்சள் களிமண் அப்பிய, நெளிந்த, ஒட்டுப்போட்ட வண்டிகள் நின்றன. அவற்றின் சுழல் தண்டுகள் வானை நோக்கி நீட்டப்பட்ட இரண்டு கைகளைப்போலவோ மூக்கு தரையில் முட்டி அந்தரத்தில் நிற்கும் பின்னம்பகுதிபோலவோ தோற்றமளித்தன.
உணவுண்ணும் மேசைக்கு எதிர்ப்புறத்தில் இருந்த பெரிய கணப்பின் பளீரென்ற தீச்சுவாலை வலப்பக்கம் அமர்ந்திருப்பவர்களின் முதுகைச் சூடேற்றியது. கோழி, புறா, ஆடு என இறைச்சி குத்தப்பட்ட இரும்புக் கம்பிகள் சுழன்றுகொண்டிருந்தன. வறுபடும் இறைச்சியின் கரகரப்பான பழுப்புத் தோலின்மீது வழிந்தோடிய இறைச்சிச் சாற்றின் இன்பமூட்டும் நறுமணம் அடுப்பிலிருந்து எழும்பிக் களிப்பைக் கிளர்த்தி வாயில் நீரூறச் செய்தது.
உயர்மட்டக்குடியைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் அனைவரும் மேட்ர ஜூர்டானின் உணவுவிடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு காலத்தில் குதிரைகளை விற்றவன், புத்திக்கூர்மையுள்ளவன், பெருஞ்செல்வத்தை ஈட்டியிருந்தான்.
உணவுப் பாத்திரங்களும் மஞ்சள் வண்ண ஆப்பிள் பழ மது தாங்கிய சாடிகளும் அடுத்தடுத்த நபர்களிடம் கைமாறி விரைவில் காலியாகின. ஒவ்வொருவரும் என்ன வாங்கினோம் எதை விற்றோம் என்ற தகவல்களை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர். விளைபயிர் குறித்த செய்திகளைப் பேசினர். தற்போதைய வானிலை பச்சைக் காய்கறிகளுக்கு உகந்தது, ஆனால் பயிர்களுக்கு அதிக ஈரமானது.
திடீரென உணவுவிடுதியின் முற்றத்தில் முரசு ஒலிக்கத் தொடங்கியது. எதிலும் நாட்டமில்லாத சிலரைத் தவிர மற்ற அனைவரும் வாயில் உணவோடும் கையில் கைதுடை துண்டோடும் எழுந்து கதவுக்கும் ஜன்னலுக்கும் ஓடினார்கள்.
தண்டோராக்காரன் முரசடித்து முடித்துவிட்டு ஏற்ற இறக்கமான குரலில் தவறான இடங்களில் இடைவெளிவிட்டுத் தகவலைச் சொன்னான்:
”இதன்மூலம் கோடர்வீலின் குடிமக்களுக்கும் சந்தையிலிருக்கும் எல்லா மக்களுக்கும் பொதுவாகத் தெரிவிப்பது என்னவென்றால் இன்று காலை ஒன்பது முதல் பத்து மணிக்குள்ளாக போஸ்வீல் சாலையில் 500 ப்ராங்க்கும் வியாபார ரசீதுகளும் அடங்கிய தோலாலான கறுப்பு பணப் பையொன்று தொலைந்துபோனது. அதை மேயரின் அலுவலகத்திலோ மான்னிவீலைச் சேர்ந்த மேட்ர ஃபோர்ட்சூன் ஹோல்ப்ரீக்கிடமோ திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இதற்குச் சன்மானமாக 20 ப்ராங்க் தரப்படும்.”
பிறகு அந்த ஆள் அங்கிருந்து போய்விட்டான். சற்றுத் தொலைவிலிருந்து சன்னமான முரசொலியும் தண்டோராக்காரனின் குரலும் மீண்டும் கேட்டன. எல்லோரும் இந்த நிகழ்வு குறித்தும் மேட்ர ஹோல்ப்ரீக் தன்னுடைய பணப் பையைக் கண்டுபிடிக்கும் அல்லது கண்டுபிடிக்காமல் போகும் சாத்தியத்தைப் பற்றியும் பேச ஆரம்பித்தனர்.
உணவுண்பது தொடர்ந்தது. அவர்கள் காப்பி அருந்தும்போது காவல்படையின் சிற்றலுவலர் வாசலுக்கு வந்தார்.
”ப்ரௌட்டைச் சேர்ந்த மேட்ர ஹாஷ்கார்ன் இங்கே இருக்கிறாரா?” எனக் கேட்டார்.
மேசையின் எதிர்ப்பக்கம் அமர்ந்திருந்த மேட்ர ஹாஷ்கார்ன் பதில் சொன்னார்.
“இங்கே இருக்கிறேன், இங்கே இருக்கிறேன்.”
எழுந்து சிற்றலுவலரின் பின்னால் சென்றார்.
நாற்காலியில் அமர்ந்தபடி அவருக்காகக் காத்திருந்தார் மேயர். அவர் அந்தப் பகுதியின் சான்றுறுதி அலுவலரும்கூட. உயரமான தோற்றம் கொண்டவர், கடுமையானவர், படாடோபமாகப் பேசுபவர்.
”மேட்ர ஹாஷ்கார்ன், இன்று காலை போஸ்வீல் சாலையில் கிடந்த மான்னிவீலைச் சேர்ந்த மேட்ர ஹோல்ப்ரீக்கின் பணப்பையை நீங்கள் எடுத்ததைப் பார்த்தார்கள்,” என்றார்.
எதனால் மேயர் முன்கூட்டியே தன்மீது சந்தேகப்படுகிறார் என்பது தெரியாவிட்டாலும் திகைப்புடனும் அச்சத்துடனும் பார்த்தார் அந்தக் கிராமத்து மனிதர்.
“நான்… நான் பணப் பையை எடுத்தேனா?”
“ஆமாம், நீங்கள்தான்.”
“அதைப் பற்றிச் சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது.”
“உங்களைப் பார்த்தார்கள்.”
“என்னைப் பார்த்தார்களா.. என்னையா? யார் பார்த்தது?”
“மேட்ர மாலாண்டான், சேணம் செய்பவர்.”
அப்போதுதான் கிழவரின் நினைவுக்கு வந்தது; விஷயம் புரிந்ததும் கோபத்தில் சிவந்தார்.
“ஓ, அவன் என்னைப் பார்த்தானா? அந்தப் போக்கிரி? அவன் இந்தக் கயிற்றை எடுப்பதைத்தான் பார்த்தான் மொசியூ லெ மேயர்.”
கால்சட்டைப் பைக்குள் கையைவிட்டுத் துழாவி அந்தச் சிறிய கயிற்றை வெளியே இழுத்தார்.
மேயர் நம்பிக்கையின்றித் தலையை ஆட்டினார்.
“மேட்ர மாலாண்டானுடைய வார்த்தையை எப்போதும் நம்பலாம். அவர் இந்தக் கயிற்றைப் பணப் பை என்று தவறுதலாக எண்ணிவிட்டார் என்று என்னை நீங்கள் நம்பவைக்க முடியாது மேட்ர ஹாஷ்கார்ன்.”
குடியானவர் தன்னுடைய உண்மைநிலைக்குச் சான்றளிப்பதுபோலச் சீற்றத்தோடு கையை நீட்டித் தரையில் துப்பினார்.
“கடவுள்மீது சத்தியமாகச் சொல்கிறேன் மொசியூ லெ மேயர். இதோ! என் ஆன்மாவின் விமோசனத்தின்மீது சபதமிட்டுத் திரும்பவும் சொல்கிறேன்.”
மேயர் தொடர்ந்தார்:
”பேசப்படும் பொருளை எடுத்த பிறகு அதிலிருந்து பணம் ஏதாவது வெளியே விழுந்துவிட்டதா எனச் சிறிது நேரம் நிலத்தில் தேடினீர்களே.”
அவமானமும் அச்சமும் அந்த நல்லவரை மூச்சுமுட்டச் செய்தன.
“எப்படிச் சொன்னார்கள். ஒரு நேர்மையான மனிதனின்மீது பழிபோடும் பொய்களை எப்படிச் சொன்னார்கள்? எப்படிச் சொன்னார்கள்?”
அவருடைய மறுப்புகள் வீணாகின. அவரை யாரும் நம்பவில்லை.
மேட்ர மாலாண்டான் அவரை நேருக்குநேர் எதிர்கொண்டு தன்னுடைய சாட்சியத்தை மீண்டும் வலியுறுத்திச் சொன்னான். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் ஒருவரையொருவர் கடுமையாக ஏசிக்கொண்டனர். மேட்ர ஹாஷ்கார்ன் கேட்டுக்கொண்டபடி அவரைத் தேடினார்கள். அவரிடம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியில் மேயர் குழம்பிப்போய் அவரை விடுவித்தார். அரசு வழக்கறிஞரிடம் உத்தரவு பிறப்பிக்குமாறு சொல்லப்போவதாக எச்சரித்து அனுப்பிவைத்தார்.
அதற்குள்ளாகச் செய்தி பரவிவிட்டது. மேயரின் அலுவலகத்திலிருந்து கிழவர் கிளம்பியபோது அவரைச் சூழ்ந்துகொண்டு ஆர்வத்துடன் கேள்விகேட்டனர். அவமானப்படுத்தும் நோக்கமின்றி ஆளைப் பொருத்து ஆர்வத்துடன் உண்மையாகவோ கிண்டலாகவோ கேட்டனர். அவரும் துண்டுக் கயிற்றின் கதையைச் சொல்லத் தொடங்கினார். அவரை அவர்கள் நம்பவில்லை. சிரித்தனர்.
வழியில் பார்த்தவர்கள் எல்லாம் நிறுத்திக் கேட்டனர். தனக்கு அறிமுகமானவர்களை அவரே நிறுத்தித் தன் கதையையும் மறுப்பையும் முதலிலிருந்து திரும்பத் திரும்பச் சொன்னார். கால்சட்டைப்பையை உள்வெளியாகத் திருப்பி எதுவுமில்லை என்பதை நிறுவினார்.
“கிழட்டு அயோக்கியனே!” என்று கூறினர்.
கோபம் அதிகமாகிக் கொதிநிலைக்குப் போனார். தன்னை யாரும் நம்பவில்லையென விரக்தியடைந்தார். தன் கதையைச் சொல்லிக்கொண்டே இருந்தார்.
இரவு வந்தது. வீட்டுக்குப் போகும் நேரமானது. அண்டைவீட்டார் மூன்று பேருடன் கிளம்பினார். கயிற்றைக் கண்டெடுத்த இடத்தை அவர்களிடம் காட்டினார். போகும் வழி நெடுக தன்னுடைய சாகசத்தைப்பற்றி மட்டுமே பேசினார்.
அன்று மாலை எல்லோரிடமும் சொல்லவேண்டும் என்பதற்காக ப்ரௌட் கிராமம் முழுவதும் சுற்றிவந்தார். ஆனால் அவரை நம்புவோர் எவருமில்லை.
இரவு முழுவதும் அதை நினைத்து நினைத்து ஏங்கிப் போனார்.
மறுநாள் மதியம் ஒரு மணிவாக்கில் ஈமோவீலைச் சேர்ந்த மேட்ர ப்ரெட்டன் என்ற தோட்ட உரிமையாளாரின் வேலையாள் மாரியஸ் போமெல் பணப்பையையும் அதனுள்ளிருந்த பொருட்களையும் மேன்வீலைச் சேர்ந்த மேட்ர ஹோல்ப்ரீக்கிடம் திருப்பித்தந்தான்.
தெருவில் கண்டெடுத்ததாகவும் எழுதப் படிக்கத் தெரியாததால் வீட்டுக்கு எடுத்துப்போய் எஜமானரிடம் கொடுத்ததாகவும் அந்த ஆள் சொன்னான்.
செய்தி அக்கம்பக்கத்தில் பரவியது. மேட்ர ஹாஷ்கார்னுக்குத் தகவல் கூறப்பட்டது. உடனே தன்னுடைய கதையையும் அதன் எதிர்பாராத முடிவையும் சொல்லத் தொடங்கினார். வெற்றிக் களிப்போடு இருந்தார்.
”எனக்கு நடந்த விஷயத்தைப் பற்றி வருத்தமில்லை, புரிந்ததா. நான் பொய்சொல்கிறேன் என்று சொன்னதுதான் வருத்தம். பொய் சொல்வதைப்போன்ற அவமானம் தரும் விஷயம் எதுவுமேயில்லை,” என்றார்.
நாள் முழுவதும் தன்னுடைய சாகசத்தைப் பற்றிப் பேசினார். சாலையில் தன்னைக் கடந்து செல்வோரிடம் கூறினார். கேளிக்கை விடுதியில் அருகே உட்கார்ந்து மது அருந்தியவர்களிடம் சொன்னார். அந்த ஞாயிறன்று தேவாலயத்திலிருந்து அவரோடு திரும்பி வந்தவர்களிடம் கூறினார். இப்போது லேசாகி இருந்தது என்றாலும் இன்னதென்று இனம்காணமுடியாத ஏதோ ஒன்று அவரை வருத்தியது. அவர் சொன்னதைக் கேட்டவர்கள் கிண்டல் செய்யும் பாவனைகொண்டனர். அவர் கூறியதை முழுவதுமாக நம்பவில்லை. அவருக்குப் பின்னால் அவர்கள் பேசியவற்றை உணர்ந்தார்.
அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமையன்று தன்னுடைய கதையைச் சொல்லவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகக் கோடர்வீல் சந்தைக்குப் போனார். கடை வாசலில் நின்றிருந்த மாலாண்டான் அவர் கடந்து செல்கையில் சிரிக்க ஆரம்பித்தான். எதனால்?
க்ரீகட்டோவைச் சேர்ந்த விவசாயி ஒருவனை எதிர்கொண்டபோது அவர் சொல்ல வந்ததை முடிக்கவிடாமல் நடு வயிற்றில் குத்துவிட்டு முகத்தைப் பார்த்துக் கத்தினான்: “ஓ, நீ பெரிய போக்கிரி!” பிறகு திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து சென்றான்.
மேட்ர ஹாஷ்கார்னுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அவருடைய தவிப்பு அதிகமாகிக்கொண்டே போனது. எதற்காகத் தன்னைப் ‘பெரிய போக்கிரி’ என்று அழைத்தார்கள்?
ஜூர்டானின் மதுக்கூடத்தில் அமர்ந்திருக்கையில சம்பவத்தைப் பற்றி மீண்டும் விளக்கத் தொடங்கினார்.
மாண்டிவில்லியர்ஸைச் சேர்ந்த குதிரை வியாபாரி அவரைப் பார்த்துக் கத்தினான்:
“வெளியே போ, அயோக்கியனே! வெளியே போ. உன் துண்டுக் கயிற்றைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்.”
ஹாஷ்கார்ன் தடுமாறினார்:
”ஆனால் அதற்குப் பிறகு, அதை, அந்தப் பணப்பையைக், கண்டுபிடித்துவிட்டார்களே!”
அந்த ஆள் தொடர்ந்தான்:
“நாக்கை அடக்கு, அப்பனே! ஒருத்தன் கண்டெடுப்பானாம். இன்னொருத்தன் திருப்பிக் கொடுப்பானாம். மற்றவன் எல்லாம் முட்டாள் பாரேன்.”
விவசாயி வாயடைத்துப் போனார். இறுதியில் எல்லாம் புரிந்தது. அவருடைய கூட்டாளியைவிட்டுப் பணப்பையைத் திருப்பிக் கொடுக்கச் செய்ததாகக் குற்றம் சாட்டினார்கள்.
எதிர்ப்புத் தெரிவிக்க முயன்றார். ஆனால் மேசையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
எல்லோரும் அவரைக் கிண்டல் செய்த காரணத்தால் உணவை முடிக்க இயலாமல் அங்கிருந்து கிளம்பினார்.
கோபத்துடன் வீட்டுக்குச் சென்றார், ஆங்காரமும் குழப்பமும் தொண்டையை அடைத்தன. அவருடைய நார்மன் கள்ளத்தனத்தினால் அவர்கள் குற்றம்சாட்டிய விஷயத்தை அவர் செய்திருக்கக்கூடும் என்பதாலும் அதை ஒரு தந்திரமான செயலாகச் சொல்லிப் பெருமை பீற்றிக்கொள்ளக்கூடும் என்பதாலும் தன்னுடைய களங்கமின்மையை நிறுவமுடியாது என்பதும் அவருக்குப் புரிந்ததாலும் துயரம் அழுத்தியது. அந்த அநியாயமான சந்தேகம் அவருடைய இதயத்தையே நொறுக்கியது.
தன்னுடைய கதையைப் புதுப்பித்துக்கொண்டே இருந்தார். அவருடைய ஒப்புவித்தல் ஒவ்வொரு நாளும் நீண்டுகொண்டே போனது. புதிய சான்றுகள், வலுவான பறைசாற்றுதல்கள், புனிதமான சத்தியங்கள் என ஒவ்வொரு நாளும் பல மணிநேரத் தனிமையில் யோசித்துத் தயார்செய்தவற்றைச் சொல்லத் தொடங்கினார். அவருடைய மனம் முழுவதையும் கயிற்றின் கதை மட்டுமே ஆக்கிரமித்திருந்தது. அவர் அதை அதிகமாக மறுத்துப் பேசப் பேச, அதிகத் திறமையோடு வாக்குவாதம் செய்யச் செய்ய, அவர் சொல்வதை நம்புவது குறைந்துபோனது.
“அவையெல்லாம் பொய்யனுடைய சான்றுகள்,” என்று அவருடைய முதுகுக்குப் பின்னால் பேசினார்கள்.
அவர் அதை உணர்ந்தார். அது அவரைக் கொன்றது. பலனற்ற முயற்சிகளால் களைப்படைந்தார்.
அவர் தளவுற்றுப் போனது வெளிப்படையாகத் தெரிந்தது.
போருக்குச் சென்ற ராணுவ வீரனைப் போர்க்களத்தைப் பற்றிய கதையைச் சொல்லச் சொல்வதைப்போலவே சில கோமாளிகள் பொழுதைப்போக்குவதற்காக துண்டுக் கயிறு பற்றிய கதையைச் சொல்லுமாறு அவரிடம் கேட்பார்கள். அவருடைய உள்ளம் பலகீனமடைந்ததால் டிசம்பர் மாத இறுதியில் படுக்கையில் விழுந்தார்.
ஜனவரி மாதத் தொடக்கத்தில் இறந்துபோனார். மரண வேதனையில் சிக்கித் தவித்தபோது தன்னுடைய குற்றமின்மை குறித்துப் பிதற்றிக்கொண்டே இருந்தார்: ”சின்னத் துண்டுக் கயிறு—சின்னத் துண்டுக் கயிறு. இதோ பாருங்கள், மொசியூ லெ மேயர்