Home கவிதைஇன்றும் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும்

ஆங்கில மூலக்கவிஞர்: ஃபிலிப் லெவின்

தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன்


ஃபிலிப் லெவின் (1928-2015) மிகவும் புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர்களில் ஒருவராவார். பதின்ம வயதில் மிச்சகன் மாகாண கார் தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர். Assembly Line எனப்படும் உழைப்பாளர்கள் உடலையும், மனதையும் சோர்வடையச் செய்யும் கடினமான உற்பத்தி முறையைக் கண்டு மனம் வெதும்பியவர். தொழில்துறை மையப்பகுதியின் கவிஞர் எனவும் அழைக்கப்பட்டார்.

பணி முடிந்தது
மரத்தடியில் நிற்கின்றோம்
என்ன செய்ய வேண்டுமென்ற
கட்டளைக்குக் காத்து நிற்கின்றோம்
ஆனால் பணி முடிந்து விட்டது

வானிலிருந்து கிளைகளின் ஊடே
மையிருள் கசிந்து விழுகிறது
ஆனால் வான்மதி இன்னும்
நடை உலா வரவில்லை

விண்மீன்கள் தவழும் வானிருக்க
சட்டென தீக்குச்சியொன்று ஒளிர
நாமிருவர் மட்டும் இருக்கக் காண்கின்றேன்

விரிந்த பெரு இரவுலகின் அறையில்
நீயும் நானும் தனியாய் துணையாய்
இரு தொழிலாளிகள் செய்வதற்கு ஏதுமில்லாது இருக்கின்றோம்

சிறுசுடரினைக் குனிந்து நோக்கி
புகைச்சுருட்டைப் பற்றவைத்து
நன்றி தோழா என்கின்றேன்
இருளில் மீண்டும் நாம்

வருங்காலம் இப்போது
கணிக்கின்றேன் கேள்:
வருடங்கள் ஈராயிரம் கடந்திருக்கும்
நமக்கு வயதாகியிருக்கும்
தொழிலாளர்களின் நிலையற்ற
அவதாரத் தளைகள் நீங்கியிருக்கும்

தென் மிச்சிகன் மண்ணிலிருந்து
நாம் எழுச்சியோடு உயர்ந்திருப்போம்
சீன எல்ம் மரங்களின்
பின்னல் வேர்களின் வழியாக
அல்லது
பழங்கால ரோஜாப் புதர்களின்
மணமான காற்றை உள்ளிழுத்தபடியே

நஞ்சினை உறிஞ்சும் இலைகளாகி
எந்த இருண்ட பாதையினிலிருந்து
தப்பி வந்தோமோ அங்கே
சுத்தமானக் காற்றை அனுப்புவோம்

ஈராயிரம் ஆண்டு ஒரு கணப்பொழுதில்
ஏறி மறைந்து போயிருக்கும்
அன்று மரத்தடியில் நாம் ஏற்றிய
தீக்குச்சி வெளிச்சச் சுடரிருக்கும்

அன்று நீயும் நானும்
பயந்த தொலைந்த
சிறுவர்களாய் நின்றோம்
உள்ளே சூடாய் பயனின்றி
பெயர்களுடன் வெவ்வேறு முகங்களுடன்.

Author

  • கவிஞர் நளினி சுந்தரராஜன் வட அமெரிக்காவில் வசிக்கிறார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதும் இவர், அமெரிக்காவில் தமிழ்ச்சங்கப்பேரவை, கவியரங்கங்கள் மற்றும் உலகத்திருக்குறள் மாநாட்டில் கவிதைகள் வாசித்திருக்கிறார். "Face in Face" இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல். "திக்குகளின் புதல்வியர், உறைபனி உதிர்த்த இறகு, வலசை சென்ற வண்ண மயில்கள்" ஆகிய தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

You may also like

Leave a Comment